Published:Updated:

i KNOW... i KNOW... ரகசியம்!

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

i KNOW... i KNOW... ரகசியம்!

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

Published:Updated:

சுகுமார், சென்னை.

'' 'தசாவதாரம்’ படப்பிடிப்பில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்...''

''அந்தப் படத்தைப் பத்தி எழுதுறதா இருந்தா, பக்கம் பக்கமா எழுதிட்டே இருக்கலாம். இப்பவும் 'தசாவதாரம்’ படப்பிடிப்பின் ஒவ்வொரு ஷாட்டும் சீனும் எனக்கு நேத்து நடந்த மாதிரி ஞாபகத்துல இருக்கு. ஏன்னா, ஒவ்வொரு எபிசோடும் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் பிடிச்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரே காட்சியில அஞ்சு கமல் வரணும். ஒருத்தர் குள்ளம், இன்னொருத்தர் உயரம், ஒருத்தர் பின்னால் இருப்பார், இன்னொருத்தர் முன்னால் இருப்பார். எல்லாரும் முன்னபின்ன நடந்துட்டே இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கணும். இது எல்லாத்தையும் தனித்தனியா ஷூட் பண்ணி ஒண்ணாக்கணும். அப்புறம் பின்னணி. குள்ளமான ஆளுக்கு செட்டைப் பெருசாக்கணும். உயரமானவருக்குச் சின்ன செட்ல வெச்சு ஷூட் பண்ணணும். அதுலயும் ஓப்பனிங் சாங் தண்ணில எடுக்கணும். பத்தும் பத்தாததுக்கு சுனாமி எஃபெக்ட். இப்போ நினைச்சுப் பார்த்தாலும் நாமதான் அதெல்லாம் பண்ணினோமானு மலைப்பா இருக்கு!

அந்தப் படத்துல எல்லாமே சவால்தான். அதை சச்சஸ்ஃபுல்லா சமாளிச்சோம்கிற பூரிப்பு இன்னமும் என் மனசுல இருக்கு!''

i KNOW... i KNOW... ரகசியம்!

தீபா, வட நெம்மேலி.

''அனைவராலும் கவரப்பட்ட மறைந்த நடிகர் ரகுவரனைப் பற்றி..?''

''ரகு, கிரேட் பெர்ஃபார்மர். அவரோட இடத்தை இன்னும் யாரும் ரீப்ளேஸ் பண்ணலை. அவர் இப்போ இல்லை. அதனால அவரைப் பத்தி தப்பா சொல்லக் கூடாது. ஆனா, எந்த மாதிரியான சூழ்நிலையில், அவ்வளவு பிரமாதமா அவர் நடிச்சார்னு சொல்லலாம்.

'புரியாத புதிர்’ சமயத்துல அவர் கொஞ்சம் அப்செட்ல இருந்தார். எதையாவது யோசிச்சிட்டே இருப்பார். எதைச் சொன்னாலும் மறந்துடுவார். அது என் முதல் படம். 30 நாளுக்குள்ள எடுக்கணும்னு கான்ட்ராக்ட். ஆனா, ரகு நடிக்கிற காட்சிகளைக் கடகடனு எங்களால ஷூட் பண்ண முடியலை. ஒவ்வொரு ஷாட்டுக்கு வரும்போதும், 'என்ன கதை?’னு கேட்பார். 'இதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு, இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்?’னு தினமும் கதை கேட்பார்.

படத்துல அவருடைய கழுத்து கத்தியால் வெட்டுப்பட்டு, ரத்தம் வடியக்கிடக்கணும். அந்த ரத்த மேக்கப், செட் ஆகவே இல்லை. அதனால நிஜ கத்தியை வெச்சு, ரகுவே கழுத்துல ரத்த அடையாளத்துக்கு ஜாமைத் தடவ ஆரம்பிச்சார். அதைப் பார்த்து அதிர்ச்சியாகி, ரகு கையில இருந்த கத்தியைப் புடுங்கிட்டேன். ஏன்னா, கத்தியின் கூர்முனையை வெச்சு அவர் ஜாமைக் கழுத்துல தடவிட்டு இருந்தார். 'இல்ல சார்... கத்தி பின்பக்கத்துலதான் ஜாம் தடவினேன்’னு அவர் சொன்னார். இதுதான் அவரோட அன்றைய நிலை.

அப்புறம் ஒரு பெரிய சீன். அதை அரை நாள்ல முடிச்சுட்டு வேற வேற சீன் எடுக்கணும்னு பிளான். ஆனா, ரகு அன்னைக்கு லேட். ஆறேழு பக்கம் வசனம் இருக்கு. இதை எப்படி அவர்கிட்ட விளக்கி நடிக்கவைக்கிறதுனு யோசிச்சு, வசனத்தைக் குறைக்கலாம்னு பேப்பரை வாங்கினேன். அதுல மூணாவது பக்கத்துல இருந்த 'i know’ங்கிற ரெண்டு வார்த்தையைப் படிச்சதும் ஒரு ஃப்ளாஷ். படத்துல கதைப்படி ரகு, தன் மனைவி ரேகாவைச் சந்தேகப்படுவார். ரேகா, சொல்ற எந்த விளக்கத்தையும் நம்பாம, பதிலுக்குப் பதில் சாடிஸ்ட் கணக்கா ரகு, பேசிட்டே இருக்கணும். இதுதான் சீன்.

ரேகா சொல்ற எல்லா விளக்கத்துக்கும், 'i know... i know...’னு ரகு சொல்லிட்டே இருக்கிற மாதிரி நான் சீனை மாத்திட்டேன். ரகு வந்தார். 'வெறும் 'i know’தான் டயலாக்கா... அதெப்படிச் சொல்ல முடியும்?’னு கேட்டார்.

'நடிச்சுக் காட்டுறேன்... பாருங்க’னு சொல்லிட்டு ரேகா, ஆனந்த்பாபுவை வரச்சொல்லி, ஸ்பாட்டுக்கு லைட்டிங் பண்ணச் சொன்னேன். பிறகு கேமராமேனைக் கூப்பிட்டு, 'நான் எங்கே போனாலும் ஃபாலோ பண்ணிக்கங்க’னேன். டேப்ரிக்கார்டர் போட்டு எத்தனை முறை 'i know’ சொல்றேனு எண்ணிக்கச் சொன்னேன். சிரிச்சுக்கிட்டு, அழுதுக்கிட்டு, தெனாவட்டா, கோபமா, நக்கலா... நான் 65 முறை 'i know’ சொன்னேன். ரகு, ஷார்ப்பாக் கவனிச்சுக்கிட்டார். ஆனா, ஷாட்ல 35 தடவைதான் அவரால சொல்ல முடிஞ்சது. 36-வது முறை 'i know’வுக்குப் பதிலா சிகரெட்டைக் கீழே போட்டுட்டு 'கட்’னு கத்திட்டார். அந்த 'கட்’டைக்கூட டப்பிங்ல 'i know’னு மாத்திட்டேன்.

ஒரு சவாலா எடுத்துக்கிட்டு ரகு, அந்தக் காட்சியில் இன்வால்வ் ஆகிப் பண்ணதாலதான், அந்த சீன் இப்பவும் பேசப்படுது. ஆனா, படம் ரிலீஸான சமயம் ரகுவரன் எதுவும் சொல்லலை.

நான் ஏழெட்டுப் படங்கள் பண்ணின பிறகு, ஒருநாள் பேசினார். 'ரவி, 'புரியாத புதிர்’ பார்த்தேன். எப்படி என்னை வெச்சு இவ்வளவு அருமையா எடுத்தீங்க? அந்தச் சமயம் நான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருப்பேனே?’னு கேட்டார். 'அதெல்லாம் இல்லைங்க..’னு சொல்லிட்டுப் பல கதைகள் பேசிட்டு இருந்தோம்.

அப்புறம் 'முத்து’ படத்துல அவர்கூட வேலை பார்த்தேன். 'திவான்’னு ஒரு சப்ஜெக்ட். ரகுவுக்கும் சரத்குமாருக்கும் ஈக்குவல் ரோல் கொடுத்து எடுக்கலாம்னு திட்டம் இருந்துச்சு. ஆனா, அது முடியாமப்போச்சு. ரகுவை நான் இப்பவும் மிஸ் பண்றேன்!''

சண்முகசுந்தரம், நாமக்கல்.

''என்னதான் பணம், புகழ், செல்வாக்கு... என சினிமாக்காரர்கள் பெற்றாலும், சராசரி சினிமா ரசிகனால் 'அவன், இவன்’ என்று ஒருமையில்தான் அழைக்கப்படுகிறார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?''

''இந்தக் கேள்வி, ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவத்தை எனக்கு நினைவுபடுத்துது. என் கல்லூரிக் காலத்தில், கிழக்கு அபிராமபுரத்துல எனக்கு நிறைய நண்பர்கள். அவங்களோட தினமும் நாகேஸ்வர ராவ் பூங்காவுல உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருப்பேன். அப்பவே நாகேஷ் சார் எனக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட். எங்களை அங்கே பார்த்தா வண்டியை நிறுத்தி கொஞ்ச நேரம் பேசிட்டுப் போவார்.

அப்படி ஒரு தடவை நாகேஷ் எங்களோட பேசிட்டு இருந்தப்ப, அங்கே வந்த ஒரு சின்னப்பையன் ஒரு கெட்டவார்த்தை சொல்லி, 'தோடா நாகேஷ§’னு சொல்லிட்டான். நான் கோபத்துல அவனை அடிச்சிட்டேன். அவன் அழ, உடனே பக்கத்து குடிசையில இருந்து அவனோட அப்பா ஓடிவந்துட்டார். 'என்னய்யா தப்பு? அவனுக்கு நாகேஷைப் புடிச்சிருக்கு. அப்படிச் சொல்லியிருக்கான்’னு சண்டைக்கு வந்துட்டார். கூட்டம் கூடிடுச்சு.

நாங்க எல்லாரும், 'அவன் என்னா சொன்னான் தெரியுமா... அவன் என்ன சொன்னான் தெரியுமா?’னு அவன் சொன்ன கெட்டவார்த்தையைச் சொல்லி நடந்ததைத் திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தோம். ஒருவழியா சமாதானமாகி கூட்டம் கலைஞ்ச பிறகு, நாகேஷ் மெதுவாகச் சொன்னார்... 'டேய், அவனாவது அந்தக் கெட்டவார்த்தையை ஒரு தடவைதான்டா சொன்னான். நீங்க, 'என்ன சொன்னான் தெரியுமா... என்ன சொன்னான் தெரியுமா?’னு 10, 15 தடவை சொல்லிட்டீங்களேடா’ன்னார்.

ரசிகர்கள், கலைஞர்களை அவங்க வீட்ல ஒருத்தனாத்தான் நினைக்கிறாங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி... மாதிரி அவனுக்குப் பிடிச்ச ஒரு உறவாகிடுறோம். அதனால அப்படிச் சொல்றாங்கனு எடுத்துக்க வேண்டியதுதான்.

கடவுளை 'ஆண்டவர்’னு மரியாதையாகவும் கும்பிடுறோம். சமயங்கள்ல, 'ஏண்டா முருகா... ஏண்டாப்பா என்னை இப்படிச் சோதிக்கிற?’னு உரிமையாவும் கோச்சுப்போம். அப்படிக் கடவுளுக்குச் சமமா மதிக்கிறாங்கனும் நினைச்சுக்க வேண்டியதுதான்!''

i KNOW... i KNOW... ரகசியம்!

மகேஷ், பெரியபாளையம்.

''உங்களின் ஆதர்ச இயக்குநர்கள் யார்? ஏன்?''

''ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா. இவங்க பாணியில் நான் படங்கள் பண்ணலை. இவங்களை நான் காப்பி அடிச்சதும் இல்லை. ஆனா, இவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.''

வத்சலா, கோவை.

 '' 'ஒவ்வொரு சினிமாவும் பெரும் உழைப்பு. அதைத் திருட்டு டி.வி.டி-யில் பார்க்காதீர்கள்’னு சினிமா துறையினர் சொல்லிட்டே இருக்கீங்க. ஆனா, கொள்ளக்காசு கொடுத்து தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் அனுபவம் எவ்வளவு மோசமாக இருக்கிறது தெரியுமா? மிகச் சில தியேட்டர்களைத் தவிர்த்து பெரும்பாலான தியேட்டர்களில் படம் பார்ப்பது நரக வேதனை. அதைச் சரிசெய்ய சினிமா துறையினர் ஏன் மெனக்கெடுவதே இல்லை?''

''இப்பல்லாம் எத்தனையோ நல்ல மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் வந்துடுச்சு. ரசிகர்களுக்கு ஒழுங்கான வசதிகளைக் கொடுக்காத தியேட்டர்களை, ஒண்ணு இடிச்சுக் கட்டணும்; இல்லைன்னா மூடிரணும். முன்னாடி எல்லாம் அடிக்கடி, 'தியேட்டரை மூடிட்டாங்க. குடோன் ஆக்கிட்டாங்க. கல்யாண மண்டபமாகிடுச்சு’னு நியூஸ் வரும். ஆனா, இப்பல்லாம் குடோன் மாதிரி இருந்த ஒரு பெரிய தியேட்டரை இடிச்சுட்டு அஞ்சாறு தியேட்டர் இருக்கிற மல்ட்டிபிளெக்ஸ்தான் திறக்கிறாங்க.

ஒருகாலத்துல சென்னை சத்யம் தியேட்டருக்குக் கூட்டமே வராது. ஆனா, அக்கம்பக்கம் தியேட்டர்கள்ல கூட்டம் அள்ளும். தியேட்டர் பேர்கூட விளம்பரங்கள்ல சத்யம் மூணாவதாத்தான் வரும். ஆனா, படிப்படியா சத்யம் தியேட்டரின் வசதிகளை அதிகரிச்சு, அதை இப்போ சென்னையின் நம்பர் ஒன் தியேட்டர் ஆக்கிட்டாங்க. காரணம், உழைப்பும் தொழில்நுட்ப வசதிகளும்தான்.

இப்படிக் காலப்போக்கில் அவங்களாவே குறைகளைச் சரிபண்ணிடுவாங்க. நல்ல தியேட்டர்களைத் தேடிப் போய் ரசிகர்கள் படம் பாருங்க. அப்பதான் எங்கள் உழைப்பின் முழு உற்சாகத்தையும் உணர முடியும். ஆனா, இது மாதிரி எந்த நொண்டிச்சாக்கையும் சொல்லிட்டு திருட்டு டி.வி.டி-யில் தயவுசெஞ்சு படம் பார்க்காதீங்க!''

திவ்யா, மருதூர்.

''சினிமாவில் இருந்து நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''

''பெற்றது, பேர், புகழ். இழந்தது என் தனிமை. நினைச்ச மாத்திரத்துல எங்கேயும் போயிட்டு வர முடியாது.

நிறைய உதாரணங்கள் இருக்கு. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். அப்ப ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்த சமயம். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஜிம்முக்குப் போயிட்டு வெளியே வந்துட்டு இருந்தேன். அப்ப ஒரு ஹீரோயின், டின்னர் சாப்பிடுறதுக்காக அவங்க அப்பா-அம்மாவோட உள்ளே வந்தாங்க. மூணாவது நாள் பேப்பர்ல, 'நட்சத்திர ஹோட்டலில் இரண்டு எழுத்து நடிகையுடன் குமார இயக்குநர் கும்மாளம்’னு ஒரு துணுக்கு. இது மாதிரி நிறைய வலிகள்!''

- ஷாட் பிரேக்...

•  '''ரஜினி - கமல் இணைந்து நடிப்பது பற்றி விவாதித்ததே இல்லை’ என்றீர்கள். சரி... இப்போது சுவாரஸ்யமான சவால். இருவரும் இணைந்து நடிப்பதற்கான படத்தின் ஒன்லைன் சொல்லுங்கள்!''

•  ''நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது வாரத்துக்கு நான்கு சினிமா எடுத்து, அதில் கோடிகளைக் கொட்டி, ஒருத்தரை ஒருத்தர் எப்போதும் புகழ்ந்துகொண்டு... இதனால் மக்களுக்கு பைசா பிரயோஜனம் இருக்கிறதா ரவி?''

•  '' 'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்’ எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், இன்னமும் சினிமாவில் மட்டும் ஏன் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?''

- அடுத்த வாரம்...

கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

i KNOW... i KNOW... ரகசியம்!

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism