FA பக்கங்கள்
Published:Updated:

புதிரோடு விளையாடு !

அருணா எஸ்.சண்முகம் ஓவியம்: பிள்ளை

புதிரோடு விளையாடு !

1. பிக்னிக்

 சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.

புதிரோடு விளையாடு !

''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!

2. பரிசல் பயணம்!

அந்த ஊர் ஆற்றைக் கடக்க, ஒரே ஒரு பரிசல்தான் இருந்தது. அதை ஓட்டும் மருது, ஏடாகூடம் பிடித்த ஆள். காலில் காயம்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான் ராகவன். பரிசல் ஓட்டுபவரிடம், ''அண்ணே, அந்தக் கரையில் நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும்'' என்றான்.

புதிரோடு விளையாடு !

ஏற்கெனவே ஒரு சிறுமியுடன் அங்கே நின்றிருந்த ஒரு பெண், ''என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. அங்கே போக இவர், நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அங்கே போய்விட்டு திரும்பி வரும்போது, யாராவது சவாரியோடுதான் வருவாராம். உடனே ஆள் கிடைக்கலைனா, ஒரு சவாரிக் காசை சேர்த்துத் தரணுமாம். குழந்தைங்க ஏறினால்,  நான்கில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏறவும் கூடாதாம்.'' என்று பொரிந்துதள்ளினாள்.

சிறிது யோசித்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள். அது எப்படி?

   3. ராமனும் அனுமனும்!

 சாக்கு மூட்டையுடன் சைக்கிளில் சென்ற வேலனைத் தடுத்து நிறுத்திய அவனது நண்பன், ''எங்கே போகிறாய்?'' என்று கேட்டான்.

புதிரோடு விளையாடு !

''வயல்காட்டுக்குக் கிளம்பின என் அப்பா, முக்கியமானதை மறந்துட்டார். அதைக் கொடுக்கப்போறேன். ராமன் கையில் இருக்கும் முதல் எழுத்தையும், அனுமன் கையில் இருப்பதன் கடைசி எழுத்தையும் எடுத்துக்க. அதோடு, அரிசிக்கு முந்திய நிலையைச் சேர்த்துக்க. அதுதான் பையில் இருக்கு'' என்று சொல்லிவிட்டுச்  சென்றான்.

நண்பனுக்குத் தெரிந்துவிட்டது. உங்களுக்கு?

4. எ... எ... எக்ஸாம்!

புதிரோடு விளையாடு !

''அடுத்த வாரம் தேர்வுகள் ஆரம்பிக்கப்போகுது. நீ எப்படி ஃபீல் பண்றே?'' என்று கேட்டான் ஷங்கர். அதற்கு ரவி, ''அதை வாயால் சொல்லப் பயமா இருக்கு. நான் சொல்றதை வெச்சுக் கண்டுபிடி. முதல் இரண்டு எழுத்துகள் விழியைக் குறிக்கும். 1, 2 மற்றும் 4 -ம் எழுத்துகளைச் சேர்த்தால், கர்னாடக சங்கீதத்தில் பயன்படுத்தும் ஒரு இசைக் கருவியின் பெயர் வரும். என்ன அது?'' என்று கேட்டான். சிறிது நேரம் யோசித்த ரவி, ''ஓஹோ... ஹா...ஹா'' என்று சிரித்தான்.  அதைக் கண்டுபிடித்து நீங்களும் சிரியுங்களேன்!

 விடைகள்

1. சேகருடன் செல்கிற நண்பர்கள் 8, மிதிவண்டிகள் 6.

2. முதலில் நாயும் சிறுமியும் சென்றார்கள். நாயை, மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, அதே பரிசலில் திரும்பினாள் சிறுமி. பிறகு, ராகவனும் சிறுமியும் சென்றார்கள். ராகவன் இறங்கிக்கொள்ள, சிறுமி திரும்பிவந்தாள். அம்மாவும் சிறுமியும் சென்றபோது, நாய்க்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு ராகவன் திரும்பிவிட்டான்.

3. ராமன் கையில் இருப்பது: வில், அனுமன் கையில் இருப்பது: கதை, அரிசிக்கு முந்தைய நிலை: நெல். வேலன் எடுத்துச்சென்றது: விதைநெல்.

4. கண்டம்