Published:Updated:

“அது ரஜினி சாரின் சதி!”

“அது ரஜினி சாரின் சதி!”

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

“அது ரஜினி சாரின் சதி!”

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

Published:Updated:
“அது ரஜினி சாரின் சதி!”

சிவநாராயணன், மதுரை.

'' 'ரஜினி - கமல் இணைந்து நடிப்பது பற்றி விவாதித்ததே இல்லை’ என்றீர்கள். சரி... சுவாரஸ்யமான ஒரு சவால்... இருவரும் இணைந்து நடிப்பதற்கான படத்தின் ஒன்லைன் சொல்லுங்கள்..!''

''அவங்க 'சேர்ந்து நடிக்க ரெடி’னு சொல்லட்டும் சிவா... அந்த ஒன்லைனை அவங்ககிட்டயே சொல்லி ஓ.கே. வாங்கிடுறேன். அதை எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்? அந்த ஒன்லைனோட வேல்யூ தெரிஞ்சா, நீங்க விகடன் மேடையில் இவ்ளோ பப்ளிக்கா அதைப் பத்திக் கேக்கமாட்டீங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருண்குமார், வந்தவாசி.

''நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது வாரத்துக்கு நான்கு சினிமா எடுத்து, அதில் கோடிகளைக் கொட்டி, ஒருத்தரை ஒருத்தர் எப்போதும் புகழ்ந்துகொண்டு... இதனால் மக்களுக்கு பைசா பிரயோஜனம் இருக்கிறதா?''

''அதேதான் நானும் சொல்றேன்... நாட்ல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது, வாழ்க்கை முழுக்க அதை நினைச்சு நினைச்சு அழுதுட்டே இருக்க முடியாது; அப்படி இருக்கவும் கூடாது. அதுக்காகத்தான் சினிமா, நாடகம், புத்தகம், இசை... மாதிரியான பொழுதுபோக்குகள்.

நம்மைச் சுத்தி இருக்கிற பிரச்னைகளை ரெண்டரை மணி நேரம் மறக்கவெச்சு, வேற உலகத்துக்கு அழைச்சுட்டுப் போயிட்டு வர்ற மேஜிக்தான் சினிமா. அந்த மேஜிக்... சினிமா, நல்ல புத்தகம், ரசனையான இசை, சாகச சுற்றுலானு பல விஷயங்கள்ல இருக்கு. அந்த மேஜிக் வேணும்கிறவங்க தங்களுக்குப் பிடிச்ச விதத்துல அதை என்ஜாய் பண்றாங்க. சினிமா பிடிச்சா சினிமா, கோயில் பிடிச்சா கோயில். இதுல எதுக்கு மத்தவங்களை நாம குத்தம் சொல்லணும். சந்தோஷமும் கொண்டாட்டமும் நம்ம வாழ்க்கையில் முக்கியம் அருண்!''

“அது ரஜினி சாரின் சதி!”

பவித்ரா, தஞ்சை.

 '' 'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்’ எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், சினிமாவில் மட்டும் ஏன் இன்னமும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?''

'இது எனக்கான கேள்விதான்! நகரத்தைவிட கிராமங்கள் இன்னைக்கு ரொம்ப வேகமா மாறிட்டு வருது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்கும் தம்பி, பெத்தவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கும் பிள்ளைகள், விவசாயம், கிராமக் கட்டுப்பாடு... இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலைமையில் இருக்கு.

சென்னைலயே வளர்ந்த எனக்கு முதல்முறையா கிராமத்துல தங்கியிருந்தப்போ, அதெல்லாம் ஆச்சரியமா இருந்தன. அதனாலேயே கிராமங்கள் இப்பவும் எனக்கு இஷ்டம். ஆனா, அந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காலாவதி ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதான், 'இப்படி எல்லாம் இருந்திருக்காங்கனு இப்போதைய தலைமுறைக்கு ரீ-க்ரியேட் பண்ணிக் காட்டணும்’னு நினைச்சேன். அதனாலதான் அந்த மாதிரி படங்கள் எடுக்கிறேன். தவிர சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடினு மசாலா தூவுறதுக்கும் கிராமத்து சப்ஜெக்ட்லதான் பெரிய ஸ்கோப் இருக்கு!''

சந்தோஷ், நாமக்கல்.

 ''தங்கள் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு தொந்தரவு செய்பவர்களை எப்படிச் சமாளிப்பீர்கள்?''

''முடிஞ்ச வரை சிரிச்ச முகத்தோட சமாளிக்கப் பார்ப்பேன். ரொம்பத் தொல்லை கொடுத்தா, கடுகடுனு கடுப்புக் காட்டிருவேன்.

ஒரு அம்மா சான்ஸ் கேட்டு என் ஆபீஸுக்கு நாலைஞ்சு தடவை வந்திருக்காங்க. 'ஷூட்டிங் நடக்கும்போது சொல்றோம்’னு ஆபீஸ்ல சொல்லியிருக்காங்க. ஆனா, என்னைப் பார்த்துட்டுத்தான் போவேன்னு விடாப்பிடியா உட்கார்ந்திருக்காங்க. நான் போய்ப் பார்த்தா, என் கை, காலைப் பிடிச்சுட்டு விடவேமாட்டேனு சொல்லிட்டாங்க. 'நடிக்க சான்ஸ் தர்றேன்னு சத்தியம் பண்ணுங்க. உங்க பெர்சனல் போன் நம்பர் தாங்க. இல்லைன்னா வீட்டு அட்ரஸ் கொடுங்க’னு தொல்லை கொடுத்தாங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு; கேக்கலை. ஒரு கட்டத்துல ஆபீஸ்ல உள்ளவங்களை அசிங்கமாத் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் போலீஸ்ல புகார் கொடுத்து அழைச்சிட்டுப் போகச் சொன்னேன்.

சான்ஸ் கேட்டு வர்றவங்களுக்குப் பொருத்தமான கேரக்டர் இருந்தா நடிக்க வாய்ப்பு கொடுத்திருவேன். செட் ஆக மாட்டாங்கனா, ஒரு டைரக்டரா இருந்தாலும் என்னால என்ன பண்ண முடியும்... நீங்களே சொல்லுங்க?''

“அது ரஜினி சாரின் சதி!”

பாலகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி.

''உங்க வாழ்க்கையில் நீங்க சாதிச்ச மூணு முக்கியமான விஷயங்கள்னு கேட்டா, எதெல்லாம் சொல்வீங்க?''

''கே.சுப்ரமணியம்... எங்கப்பா. 'மணி முதலியார்’னா சென்னையில் பிரபலம். சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நாலு வயசா இருக்கும்போது அவங்கப்பா, அதாவது எங்க தாத்தா இறந்துட்டார். அப்ப இருந்து கஷ்டப்பட ஆரம்பிச்சவர் ஒரு கட்டத்துல ரயில்வே வேலை, பிறகு மெக்கானிக் ஷாப்னு காலம் பூரா உழைச்சுட்டே இருந்தவர். பெருசா சொந்தத் தொழில் ஆரம்பிச்சு அந்த உழைப்புல நாலு அக்காக்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சார். எங்க குடும்பத்துக்கே அவர்தான் நாட்டாமை. இங்கே நான் குடும்பம்னு சொல்றது, ஆயிரம் பேருக்கும் மேல உள்ள நிறையக் குடும்பங்களை. ஆனா, அப்பா யார் வீட்லயும் போய் தங்கினதே இல்லை. மாமியார் வீட்டுக்குப் போனாக்கூட ஒண்ணு, ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவார். அப்பேர்ப்பட்டவர் வெளியில போய் ஒரு வீட்ல தங்கினார்னா, அது என் வீட்லதான்.

நாங்க அப்ப எல்லாரும் கூட்டுக் குடும்பமா மந்தைவெளியில் இருந்தோம். பசங்க ஒவ்வொருத்தருக்கும் கல்யாணம் ஆக ஆக தனித்தனியா வீடு கட்டிக் கொடுத்து தனியாப் போகச் சொல்லிட்டார். பிறகு பசங்க நாங்க எல்லாரும் வசதி வாய்ப்பா வந்த பிறகும்கூட யார் வீட்லயும் போய் தங்க மறுத்துட்டார். அப்படிப்பட்டவரை நான் கெஞ்சிக் கூத்தாடி என் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன். அவரோட கடைசிகாலத்துல மூணு வருஷம் அவரை நான் பார்த்துக்கிட்டதுதான் வாழ்க்கைல நான் சாதிச்ச பெரிய சாதனைனு நினைக்கிறேன்.

சினிமா கேரியர்லனு பார்த்தா, நான் ரசிச்ச சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், நாகேஷ்... இவங்க எல்லாரையும் இயக்கியது. இதுக்குமேல நான் எதையும் சாதிக்கலை. அந்த மூணாவது சாதனைக்கு இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்!''

தமிழ்ச்செல்வி, குமாரபாளையம்.

''உங்க குரு விக்ரமன்கிட்ட இருந்து நீங்க கத்துக்கிட்ட பாடம் என்ன?''

''விக்ரமன்கிட்ட நான் சேர்ந்த கதையே ஒரு மிராக்கிள் ஸ்டோரி.

ராஜேந்திர குமார்னு என் நண்பர், ஒரு படம் இயக்குறப்ப அவரோட உதவி இயக்குநர்கள்ல ஒருத்தர் மணி. அந்த சமயம் '10 வருஷமா சினிமால அசிஸ்டென்ட் டைரக்டராவே இருந்துட்டோம். வயசாகுதே தவிர படம் கிடைக்க மாட்டேங்குதே’னு நினைச்சு வெறுப்புல சினிமாவைவிட்டு விலகிட்டேன்.

கே.ஆர்.பிளாஸ்டிக்ஸ்னு சொந்தமா ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்தேன். டயனோரா, சாலிடர்னு அப்ப இருந்த டி.வி. கம்பெனிகளுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிச்சு அனுப்பும் வேலை. பிரமாதமா பிக்கப் ஆகி, போயிட்டு இருந்துச்சு. அப்போ ராஜேந்திர குமார் ஒருநாள் வந்து, 'என் அசிஸ்டென்ட் மணி ஒரு படம் இயக்குறார். அதுல வேலை பார்க்க என்னைக் கூப்பிடுறார். என்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தவர்கிட்ட எப்படி வேலை பார்க்கிறதுனு எனக்கு யோசனையா இருக்கு. அந்தப் படத்துல நீ வேலை பாரு’னு சொன்னார். நான் உடனே முடியாதுனு சொல்லிட்டேன். ஆனா, விடாம திரும்பத் திரும்பக் கேட்டுட்டே இருந்தார்.

அவரைத் தவிர்க்கணுமேனு சில நிபந்தனைகள் போட்டேன். 'முதல் கண்டிஷன், டைரக்டர்கிட்ட கதை கேட்பேன். கதை பிடிச்சிருந்தாத்தான் வொர்க் பண்ணுவேன். ரெண்டாவது கண்டிஷன், நான் சிகரெட் பிடிப்பேன். டைரக்டர் இருக்காரேனு ஒவ்வொரு முறையும் ஒளிஞ்சு மறைஞ்சு என்னால சிகரெட் பிடிக்க முடியாது. டைரக்டர் எதிர்க்கவே பிடிப்பேன். இதுக்குலாம் ஓ.கே-னா சொல்லு... அந்தப் படத்துல வேலை பார்க்கிறேன்’னு சொன்னேன். தமிழ் சினிமா சூழல்ல ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் இப்படிச் சொல்லவே முடியாது. ஆனா, நான் சொன்னேன். அதெல்லாம் திமிர்ல சொல்லலை; அவரைத் தவிர்க்கணும், அந்த புராஜெக்ட்ல இருந்து விலகணுமேனு அப்படிச் சொன்னேன். அதுவும் போக நான் ஏற்கெனவே அசிஸ்டென்டா வேலை பார்த்த படங்கள் ஓடாததுக்கு அதோட கதை சரி இல்லாததுதான் காரணம். அதனாலதான் அந்த கண்டிஷன்லாம் போட்டேன். ஆனா, எதிர்பார்க்காத ஆச்சரியமா மணி எல்லா கண்டிஷனுக்கும் ஓ.கே. சொல்லிட்டார்னு வந்து நின்னார் நண்பர். அந்த மணிதான்... விக்ரமன்.

சொன்னா நம்புவீங்களா..? ரொம்பத் திமிராப் பேசுறானேனு நினைப்பீங்க. விக்ரமன் என்கிட்ட 'புது வசந்தம்’ கதை சொன்னப்ப, சிகரெட் பிடிச்சுக்கிட்டேதான் அதைக் கேட்டேன். அப்போ 'புது வசந்தம்’ நிச்சயம் புது சிந்தனை. அந்தக் கதையைக் கேட்டுட்டு வீட்டுக்கு வந்ததும் 'காலம் மாறிப்போச்சு’னு நான் எழுதி வெச்சிருந்த கதைகளை எல்லாம் கிழிச்சுப் போட்டேன். அந்தக் கதை, ஸ்க்ரீன்ப்ளே, கதை சொன்ன விதம் எல்லாம் பிடிச்சுப்போய், பிறகு விக்ரமன் முன்னால சிகரெட் பிடிக்கிறதைக் குறைச்சுக்கிட்டேன். ரெண்டு பேரும் ஃப்ரெண்டாத்தான் இருந்தோமே தவிர, ஒரு அசிஸ்டென்ட் போல விக்ரமன் என்னை நடத்தவே இல்லை. இன்னைக்கு நாங்கள்லாம் சொல்லித்தான் இயக்குநர் சங்கத்துக்கு அவர் தலைவரானார். 'நீதான் துணைத் தலைவரா இருக்கணும்’னு அவர் கேட்டுக்கிட்டதால, நான் துணைத் தலைவர் ஆனேன்!''

விஷ்வா, நாகர்கோவில்.

''முன்னாடி எல்லாம் ஒரு சீன், ரெண்டு சீன்ல தலை காட்டிட்டு, 'படையப்பா’ல மட்டும் ரஜினிகூட டான்ஸ் ஆடணும்னு எப்படித் தோணுச்சு?''

''அது ரஜினி சாரின் திட்டமிட்ட சதி. முழுக் கதையையும் சொல்றேன்... கேளுங்க!

'படையப்பா’ கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு. 'ஓஓஓஓ.... கிக்கு ஏறுதே’ பாட்டும் மட்டும் பாக்கி. 'உங்க எல்லா படத்துலயும் தலை காட்டிருவீங்க. இதுல இன்னும் நடிக்கலையே ரவி?’னு ரஜினி சார் கேட்டார். 'சென்ட்டிமென்ட்டுக்கு வந்து நிக்கணும், அவ்வளவுதானே. நாளைக்குப் பின்னால நிக்கிற குரூப் டான்ஸர்ல நானும் ஒரு ஆள்’னு சொல்லிட்டேன். 'அதெல்லாம் இல்லை. பாட்டுல ஒரு பிட் ஆடுறீங்க’ன்னார். 'சரிவராது சார்’னு சொல்லிட்டு எடிட்டிங் போயிட்டேன்.

மறுநாள் ஸ்பாட்டுக்குப் போறேன், 'சார்... உங்களை ரஜினி சார் காஸ்ட்யூம் மாத்திட்டு வரச் சொன்னார்’னு சொன்னாங்க. ஒண்ணும் புரியாம உள்ளே போய் பார்த்தா, அவர் காஸ்ட்யூம் இருந்துச்சு. 'யோவ்... அவர் காஸ்ட்யூமை எதுக்கு என்கிட்ட தர்றீங்க?’னு சத்தம் போட்டேன். 'இல்ல சார்... அவர் மாதிரியே உங்களுக்கும் காஸ்ட்யூம் பண்ணச் சொன்னார்’னு சொன்னாங்க. ஷூ, கோட், சூட்னு எல்லாம் அச்சு அசல் ரஜினி சார் காஸ்ட்யூம்.

“அது ரஜினி சாரின் சதி!”

'சரி... இதுல இருந்து தப்பிக்க முடியாது’னு புரிஞ்சுபோச்சு. கொஞ்ச நேரம் ரிகர்சல் பண்ணேன். என்னையும் ரஜினி சாரையும் ஆடவெச்சு அந்த பி.ஜி.எம்-க்கு 12 டேக் எடுத்தாங்க. எனக்கு வியர்த்து விறுவிறுத்துடுச்சு. ஆனா, ரஜினி சார் கூலா நிக்கிறார். 'ஃபர்ஸ்ட் டேக்கே ஓ.கே. சார்’னு சொல்றார் டான்ஸ் மாஸ்டர். 'அப்புறம் எதுக்குய்யா 12 டேக் போனீங்க?’னு நான் மூச்சு வாங்க கேட்டேன். 'நான் ஃபர்ஸ்ட் டேக்கே ஓ.கே. சொல்லிட்டேன். ரஜினி சார்தான் அமைதியா, 'ஒன்மோர்... ஒன்மோர்’ சொல்லிட்டே இருந்தார்’னு சொன்னார் டான்ஸ் மாஸ்டர். 'முழுப் படத்துலயும் எங்களைப் போட்டுக் கசக்கிப் பிழிஞ்சு எப்படி வேலை வாங்கினீங்க! அந்தக் கஷ்டம் உங்களுக்கும் புரியட்டும்னுதான் இப்படிப் பண்ணோம். ஃபர்ஸ்ட் டேக்கே சூப்பர். அதையே வெச்சுக்கலாம்’னு சிரிச்சுட்டே சொல்றார் ரஜினி சார். இதுதான் மக்களே நடந்தது!''

- ஷாட் பிரேக்...

• ''கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றால், அதில் இயக்குநரின் பங்கு பெயரளவு மட்டுமே! மற்றபடி படம் முழுக்க கமலின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று ஒரு பேச்சு இருப்பது உண்மையா?''

• ''உங்களிடம் உதவி இயக்குநராக சேர என்னென்ன தகுதிகள் அவசியம்?''

• ''சினிமா மேக்கிங்கில் உங்கள் சென்ட்டிமென்ட் என்ன?''

- அடுத்த வாரம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism