Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 22

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 22

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
வேடிக்கை பார்ப்பவன் - 22

பௌர்ணமி காலம்

என்ன நடக்கிறது என்று தெரியவில்லை
என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டாம்
மேஜையில் விளிம்பு வரை ததும்பும்
தேநீர் கோப்பையைப்
பதனமாய் வைக்கிறேன்
நடனமாய் மாறியபடி’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கவிஞர் தேவதச்சன் 'இரண்டு சூரியன்’ தொகுப்பில் இருந்து

ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வேலை இருந்தாலும் மகனுக்காக ஒதுக்கிவிடுவான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகனிடம் இவன் சொன்னான், ''நான்தான் பிஸ்கட் பாய்''.

மகன் கேட்டான், ''ஏம்பா நீங்க பிஸ்கட் பாய்?''

''ஏன்னா... நான் வாசனையா இருப்பேன்.''

''அப்ப நான் யாருப்பா?''

''நீயா... ம்... நீ சாக்லேட் பாய்.''

''சூப்பர்ப்பா.''

''எங்கப்பா வந்து டைகர் பாய்.''

''எதுக்குப்பா தாத்தா மட்டும் டைகர் பாய்?''

''ஏன்னா, அவரு வீரமா இருப்பாரு.''

''அது சரி. உங்க அம்மா எந்த கேர்ள்னு சொல்லவே இல்லியே.''

''அதுவா... அவங்க வந்து ஃப்ரூட்டி கேர்ள். ஏன்னா ஸ்வீட்டாப் பேசுவாங்க.''

''அப்ப எங்கம்மா?'' என்று மகன் கேட்க, இவன் மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, ''உங்கம்மாவா? ம்... உங்கம்மா வந்து சில்லி கேர்ள்'' என்றான்.

''சில்லி கேர்ள்னா என்னப்பா?'' என்று மகன் கேட்க, ''சில்லி கேர்ள்னா எப்பவுமே கோபமா, காரமா இருப்பாங்க'' என்று இவன் பதில் சொன்னான்.

''உங்கம்மா மட்டும் ஃப்ரூட்டி கேர்ள், எங்கம்மா மட்டும் சில்லி கேர்ளா?'' என்று மகன் தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கேட்கவும், இவன் மூச்சுத் திணறியபடி ''இல்லடா ராஜா, தெரியாம சொல்லிட்டேன்'' என்றான்.

''அப்ப எங்கம்மாவை ஐஸ்க்ரீம் கேர்ள்னு சொல்லுங்க. அப்பத்தான் கைய எடுப்பேன்'' என்று மகன் மிரட்டவும், ''சரிடா உங்கம்மா ஐஸ்க்ரீம் கேர்ள்தான்'' என்று இவன் ஒப்புக்கொண்டான். பின்பு கணிப்பொறியில் வீடியோ கேம்ஸ் விளையாடிவிட்டு, ''அப்பா... ஏதாவது விடுகதை சொல்லுப்பா'' என்று திரும்பி வந்தான்.

''எங்க வீட்டுக் கிணத்துல வெள்ளிக் கிண்ணம் மிதக்குது! அது என்ன?'' என்று இவன் கேட்டதும்,

''என்னப்பா அது?'' என்றான் மகன்.

''நிலாடா'' என்றான்.

''அது எப்பிடிப்பா கிணத்துல மிதக்கும்?'' என்று மகன் ஆச்சரியப்பட,

''அடுத்த வாரம் காஞ்சிபுரம் போகும்போது நேர்ல காட்டுறேன்'' என்று அப்போதைக்கு சமாதானப்படுத்தினான். கிணறே இல்லாத மாநகரத்தில் நிலவின் பிம்பத்துக்கு இவன் எங்கே போவான்?

வேடிக்கை பார்ப்பவன் - 22

டுத்த வாரம் மகன் ஞாபகப்படுத்தி மீண்டும் கேட்க, இவன் காஞ்சிபுரத்தின் கிராமத்து வீட்டுக்கு அழைத்துச்சென்றான். பூர்வீக வீட்டின் கிணற்றடியில் நிலா மேலே வந்து தண்ணீரில் மிதக்கும் வரை அப்பனும் பிள்ளையும் காத்திருந்தார்கள். நிலா வந்ததும் கிணற்றில் மிதக்கும் வெள்ளிக்கிண்ணத்தை மகனுக்குக் காட்டினான். மகனை உறங்கவைத்துவிட்டு மீண்டும் கிணற்றடிக்கு வந்து, நிலவின் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் மகனும் இவனும் நிலவின் பிம்பத்தை எட்டிப்பார்த்த அதே கிணற்றை, இவன் தகப்பனும் இவனும் 30 வருடங்களுக்கு முன்பு எட்டிப் பார்த்திருக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒருமுறை அந்தக் கிணற்றில் தூர் வாருவதற்காகப் படிக்கட்டுகளில் கால் வைத்து, இவன் அப்பா உள்ளே குதித்து பெரும் பெரும் ஆச்சரியங்களை கயிற்றில் தொங்கும் வாளியின் மூலமாக இவனுக்குச் சேற்று சகதியுடன் வெளியே அனுப்பிவைப்பார். கிராமத்தில் மட்டுமல்ல, இன்னும் நகரத்தில் அந்நிய ஆள் வீட்டுக்குள் வந்தால், பெண்கள் கதவுக்குப் பின்னிருந்தே பேசுவதை இவன் கவனித்து இருக்கிறான். இரண்டையும் இணைத்து 'தூர்’ என்றொரு கவிதை எழுதினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 22

அந்தக் கவிதை...

தூர்

'வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி
துருப்பிடித்தக் கட்டையோடு உள் விழுந்த
ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
'சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூர் எடுக்க’

மேற்கண்ட கவிதையைக் பச்சையப்பன் கல்லூரி நாட்களில் கணையாழி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு வகுப்புக்குச் சென்றிருந்தான். அடுத்த மாத கணையாழி இதழில் அந்தக் கவிதை வெளிவந்திருந்தது. அது கணையாழியின் 33-வது ஆண்டு மலர். 'கணையாழி தசரா அறக்கட்டளை’ என்ற அமைப்பிடம் கைமாறிய இதழ் அது. முனைவர் மா.ராஜேந்திரன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த ஆண்டு மலரை, சென்னை ராணி சீதை மன்றத்தில் ஒரு விழா எடுத்து வெளியிட தீர்மானித்து இருந்தார்கள். அதற்கான அழைப்பிதழ் இவன் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

ன்று காலையில் இருந்தே இவனுக்குக் காய்ச்சல் கொதித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கணையாழி விழாவுக்குப் போக ஆசைப்பட்டான். தட்டுத்தடுமாறி எழுந்து, விழாவுக்குச் சென்று, எட்டாவது வரிசையில் ஏதோ ஓர் இருக்கையில் அமர்ந்தான். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.கஸ்தூரிரங்கன், சுஜாதா, இன்குலாப்,  பாரதி கிருஷ்ணகுமார், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள விழா தொடங்கியது.

விழாவில் எழுத்தாளர் சுஜாதா பேசும்போது ''கணையாழி இதழ்ல வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இதை ஒரு சுகமான சுமையா ஏத்துக்கிட்டு செய்யறேன். தமிழ்க் கவிதைகளின் அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சிகளைத் தெரிஞ்சுக்க இது எனக்கு உதவியா இருக்கு. இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த 25 கவிதைகளைப் பட்டியலிடச் சொன்னால், நிச்சயம் இந்தக் கவிதையை அதில் நான் சேர்ப்பேன்!'' என்று சொல்லத் தொடங்க, இவன் யாரோ ஒருவரின் கவிதையைப் படிக்கப்போகிறார் என்று காய்ச்சலின் சோர்வுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

''அந்தக் கவிதையைக் கணையாழி வாசகர்களுக்குப் படித்துக்காட்ட விரும்புகிறேன்'' என்று சுஜாதா தொடர்ந்ததும், இவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அந்த நொடியில்தான் இவன் வாழ்க்கையை மாற்றிப்போட்ட சம்பவம் நிகழ்ந்தது. சுஜாதா இவனது 'தூர்’ கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். வாசித்து முடித்ததும் அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. சுஜாதா மேலும் உற்சாகமாகி ''கணையாழி, யார் எழுதுறாங்க? எந்த ஊரு... அப்படியெல்லாம் பார்த்து கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது இல்லை. பிரபலம், அறிமுக எழுத்தாளர் என்ற வேறுபாடு கணையாழிக்குக் கிடையாது. படைப்பின் தரம்தான் முக்கியம். இந்தக் கவிதையை முத்துக்குமார்னு ஒரு கவிஞர் எழுதியிருக்காரு. இவரு யாரு எங்க இருக்காருனுகூட எனக்குத் தெரியாது'' என்று சொல்ல, விழா முடிந்ததும் அவரைத் தனியே சந்தித்து 'அந்தக் கவிதையை எழுதினது நான்தான்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பிய இவன், பார்வையாளர் வரிசையில் இருந்து கையை உயர்த்தினான். அதைக் கவனித்த சுஜாதா, ''நீங்களா இந்தக் கவிதையை எழுதினது?'' என்றார். இவன் 'ஆமாம்’ என்றபடி தலையாட்டினான். சுஜாதா மேலும் பரவசமாகி ''கை தட்டுங்கள் இந்தக் கவிஞனுக்கு!'' என்று குதூகலித்தார். அரங்கம் மீண்டும் அதிர்ந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 22

முன் வரிசையில் அமர்ந்திருந்த கோட் சூட் போட்டிருந்த ஒருவர், மேடைக்குச் சென்று சுஜாதாவின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க, சுஜாதா உணர்ச்சிவசப்பட்டு, ''இந்தக் கவிதை எழுதிய முத்துக்குமாருக்கு இவர் 1,000 ரூபாய் கொடுக்கிறார். வாங்க முத்துக்குமார்! வந்து வாங்கிக்கங்க!'' என்று இவனை அழைக்க, இவன் மேடை ஏறினான். பெயர் தெரியாத அந்த அன்பர், இவன் கையில் 50 ரூபாய் நோட்டுகள் 20 கொடுத்தார். இவன் அந்த நோட்டுகளை எண்ண ஆரம்பித்தான்.  

'அன்பளிப்பாகக் கொடுத்தப் பணத்தை எண்ணுகிறானே!’ என்று அரங்கம் அதிர்ச்சியானது. அதிலிருந்து தனியே 500 ரூபாயைப் பிரித்தெடுத்து, மைக் முன் சென்று ''நான் கணையாழி பத்திரிகையோட வாசகன். கணையாழியோட வளர்ச்சி நிதிக்காக இந்த 500 ரூபாயை நன்கொடையாகக் கொடுக்கிறேன்'' என்று அறிவித்தபோது, பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். இவன் எழுத்தாளர் சுஜாதாவை நன்றியுடன் பார்த்தான். அவர், இவனை ஆரத் தழுவிக்கொண்டார்!

- வேடிக்கை பார்க்கலாம்...