Published:Updated:

வெண்புள்ளிக்கு இலவச மருந்து!

வழங்குகிறார் மருத்துவர் உமாபதி சா.வடிவரசு, படம்: பா.ஓவியா

லக அளவில் 2% பேரும், இந்தியாவில் 4% பேரும் வெண்புள்ளியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய, அவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை முன்னுதாரணமாக விளங்குகிறார், உமாபதி.

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலிகை தயாரிப்புக்கான பட்டயப் படிப்பைப் படித்து, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவராக தன்னைப் போல் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் நோக்கத்தோடு, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலமாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்பு உணர்வு, ஆலோசனை மற்றும் மருந்துகளையும் வழங்கி வரும் ஹோமியோபதி மருத்துவர்தான் இந்த உமாபதி. இவரை, சென்னை, தாம்பரத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.

வெண்புள்ளிக்கு  இலவச மருந்து!

''பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில். சிறுவயதில் சருமத்தில் எந்த மாறுபாடுகளும் இல்லை. திருமணத்துக்குப் பின், சின்னச் சின்னதாக உடம்பில் வெண்புள்ளிகள் வர ஆரம்பித்தன. என் குடும்பத்தினர் பெரிது படுத்தவில்லை என்றாலும், சமுதாயத்தில் என்னை வித்தியாசமாக, வேடிக்கையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால், 'நமக்கு ஏன் இப்படி வந்திருக்கிறது’ என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சிகளில் இறங்கி னேன். இன்டர்நெட் வசதி இல்லாத அந்தக் காலத்தில், இது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி அலைந்து படித்தபோது, இது ஒரு நோயே இல்லை... உடலில் ஏற்படும் நிறமி இழப்பு என்பதை தெரிந்துகொண்டேன். இன்னும் விரிவாகத் தெரிந்துகொண்டு, ஆதாரப்பூர்வமாக மற்றவர்களுக்கு விளக்க விரும்பினேன்...'' என்றவர், அதற்காகவே வெண்புள்ளி குறித்த மருத்துவப் படிப்பை படித்திருக்கிறார்.

''கொஞ்சம் கொஞ்சமாக வந்த வெண்புள்ளிகள் அதற்குப்பிறகான காலகட்டத்தில், படிப்படியாக அதிகரித்து, உடல் முழுவதும் வெள்ளையாகிவிட்டது. நான் கற்றுக்கொண்ட இந்த மருத்துவத்தின் மூலம், என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ வேண்டும்  என்று முடிவெடுத்தேன். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலரையும் தேடி சந்தித்து, இதுகுறித்துப் பேசினேன். பிறகு, சிலருடன் சேர்ந்து, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்ற அமைப்பை 96-ம் ஆண்டில் தொடங்கினோம்.

கடந்த 17 வருடங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று, வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து, பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில், குடும்பங்களில் என அவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு மருத்துவத் தீர்வுகளும், மனத்தீர்வுகளும் தந்தோம். சுயம்வரம்கூட நடத்திவருகிறோம்...'' என்றவர்,

''எங்களிடம் வந்தவர்களில் அதிகமா னோர்... வெண்புள்ளி காரணமாக கணவன், மனைவியைப் புறக்கணிப்பதும்... மனைவி, கணவனைப் புறக்கணிப்பதும் தெரிய வந்தது. சிலருக்கு திருமணத்துக்கு முன்பே வெண்புள்ளி பாதிப்பு வந்ததால் திருமணம் நடப்பதிலும் பிரச்னை. இப்படிப்பட்டவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் தொடங்கி... மருந்து, தொடர் தீர்வு, சுயம்வரம் என்று தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் அமைப்பு மூலமாக இலவசமாக செய்து வருகிறோம். இதனால் இன்று ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், இதற்கான மருந்து தருகிறோம் என்று சொல்லி ஏகமாக பணம் கறக்கப்படுகிறது. அதையெல்லாம் நம்பி ஏமாறாதீர்கள்'' என்றவர், வெண்புள்ளி பற்றிய மருத்துவ விளக்கமும் தந்தார்.

''வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒரு நோயே கிடையாது. இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காக தற்போது 'மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ மருந்தினை கண்டுபிடித்துள்ளது. அதனால், இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்'' என்ற உமாபதி, ஆரம்பத்தில் 'வெண்குஷ்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதிப்பை, 'வெண்புள்ளிகள்’ என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து, 8 ஆண்டு தொடர்முயற்சிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்.

''வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கும், தற்கொலைவரை கூட போவதற்கும் காரணம், அதைப் பற்றி இங்கு பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள்தான். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரையும் இந்த சமூகம் ஒதுக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கு வதே எங்கள் நோக்கம். அதற்கான விழிப்பு உணர்வுக்கு தொடர்ந்து செயல்படுவோம்!'' என்று நம்பிக்கையோடு முடித்தார் உமாபதி!

வெண்புள்ளிக்கு  இலவச மருந்து!
அடுத்த கட்டுரைக்கு