Published:Updated:

புதிய அறிமுகம் பல்சர் 160 NS-ல் என்ன ஸ்பெஷல்? #Pulsar160NS

புதிய அறிமுகம் பல்சர் 160 NS-ல் என்ன ஸ்பெஷல்? #Pulsar160NS
புதிய அறிமுகம் பல்சர் 160 NS-ல் என்ன ஸ்பெஷல்? #Pulsar160NS

புதிய அறிமுகம் பல்சர் 160 NS-ல் என்ன ஸ்பெஷல்? #Pulsar160NS

ஹோண்டாவைப் போலவே, சத்தமில்லாமல் தனது புதிய பல்ஸர் பைக்கைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். மும்பை - புனே நெடுஞ்சாலைகளில் நீண்ட நாள்களாக டெஸ்ட்டிங்கில் இருந்த NS160 பைக்தான் அது! கடந்த ஆண்டிலேயே லத்தின் அமெரிக்கா மற்றும் டர்க்கியில் அறிமுகமான இந்த பைக், ''எப்போ இந்தியாவுக்கு வரும்?'' என்கின்ற பைக் ஆர்வலர்களின் கேள்விக்குச் சரியான பதிலாக, 3 கலர்களில் (Red, Blue, White) 82,400 ரூபாய்க்கு (புனே எக்ஸ்ஷோரூம் விலை) வெளிவந்துவிட்டது. பஜாஜ் நிறுவனம் சார்பாகவும், அவர்களின் இணையதளத்திலும் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை இல்லை என்றாலும், பல டீலர்களில் இந்த பைக்கின் புக்கிங் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், சில டீலர்களுக்கு பைக்குகளை ஏற்கெனவே அனுப்பிவிட்டது பஜாஜ். ஜூலை 1, 2017 முதலாக நாடெங்கும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வர இருப்பதால், அதன்பின்பு பைக்கின் புக்கிங் மற்றும் விலை குறித்த விவரங்களை, பஜாஜ் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலம் சென்ற பல்ஸர் AS150 பைக்குக்கு மாற்றாக, பல்ஸர் NS160 பைக் பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 176 மிமீ என்பதால், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை மக்களே! 

AS150 பைக்கில் இருந்த 149.5 சிசி, 4 வால்வு  Dts-i இன்ஜினையே, NS160 பைக்கில் 160.53 சிசி BS-IV இன்ஜினாக பஜாஜ் ரீ-டியூன் செய்து பொருத்தியிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஆனால், அதற்காக Bore X Stroke-ல் செய்யப்பட்ட மாற்றம் குறித்த விவரங்கள், இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால், NS160-ல் அதே  5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருக்கிறது என்றாலும், புதிதாக ஆயில் கூலர் இடம்பிடித்திருப்பது ப்ளஸ். இந்த இன்ஜின் 15.5bhp@8,500rpm பவரையும், 1.46kgm@6,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது AS150 பைக்கைவிட 1.5bhp பவர் குறைவாகத் தெரிந்தாலும், அதைவிட 1.5nm கூடுதல் டார்க் கிடைப்பது கவனிக்கத்தக்கது. இன்ஜினுடன் கிக்கர் லீவரும் இருக்கிறது. பல்ஸர் NS200 பைக்கில் இருக்கும் அதே Perimeter Frame, பாடி பேனல்கள், வசதிகள், சஸ்பென்ஷன் ஆகியவைதான், பல்ஸர் NS160 பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. எனவே, பைக்கின் அளவுகளும் அதேதான். ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஸ்ப்ளிட் சீட் & கிராப் ரெயில், LED டெயில் லைட் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.  ஆனால், பவர் அதைவிடக் குறைவு என்பதால், எதிர்பார்த்தபடியே டயர், பிரேக், ஸ்விங் ஆர்ம் அளவுகளில் மாற்றம் தெரிகிறது.  

முன்பக்கத்தில் MRF 80/100 R17 ட்யூப்லெஸ் டயர் - 240மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் MRF 110/80 R17 ட்யூப்லெஸ் டயர் - 130மிமீ டிரம் பிரேக் ஆகியவை, பல்ஸர் NS160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சில வித்தியாசங்களால், பல்ஸர் NS200 பைக்கைவிட 10 கிலோ எடை குறைவான பைக்காக இருக்கிறது பல்ஸர் NS160. எனவே, நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் பைக்கை வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும் என்பதுடன், துடிப்புமிக்க கையாளுமையையும் எதிர்பார்க்கலாம். டெக்னிக்கல் விவரங்கள் மற்றும் விலையை வைத்துப் பார்க்கும்போது, பல்ஸர் 180 Dts-i பைக்குக்குச் சமமான தயாரிப்பாக பல்ஸர் NS160 இருக்கிறது. என்றாலும், யமஹா FZS-FI v2.0, ஹோண்டா CB ஹார்னெட் 160R, சுஸூகி ஜிக்ஸர் ஆகிய பிரீமியம் 150 - 160சிசி பைக்குகளுடன் போட்டி போடுகிறது, பஜாஜ் பல்ஸர் NS160. ஆனால், அவற்றில் தடிமனான பின்பக்க டயர் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் இருக்கும் நிலையில், இதெல்லாம் இல்லாத NS160 பைக், எப்படி அவற்றை வெல்லும் என்பதை, காலம்தான் உணர்த்தும்! 

அடுத்த கட்டுரைக்கு