Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 24

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 24

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

துப்பறிந்த காலம்

'நீங்கள் இயக்கிய 'சைக்கோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு, ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!’ என்று ஒரு தாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன், 'தயவுசெய்து உங்கள் மகளை சலவைக்குப் போடுங்கள்’!

- ஹாலிவுட் இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ணையாழி பத்திரிகையின் அடுத்த இதழின் அட்டையிலேயே இவன் புகைப்படத்தை வெளியிட்டு, சுஜாதா, இவனுடைய 'தூர்’ கவிதையைப் படித்த விழாவைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அந்த வாரத்தில் இவன் கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஒரு மழை நாள் (வெயில் நாளாகவும் இருக்கலாம்) காலையில், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இவனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

வேடிக்கை பார்ப்பவன் - 24

'பி.கே.பி.’ என்று வாசகர்களால் அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை, ஏற்கெனவே இவன் நன்கு அறிவான். பட்டுக்கோட்டை பிரபாகரும் எழுத்தாளர்கள் சுபாவும் சேர்ந்து நடத்திய 'உங்கள் ஜூனியர்’, 'உல்லாச ஊஞ்சல்’ பத்திரிகைகளில் இவன் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இணைந்து தயாரித்த தொலைக்காட்சி நாடகத்துக்கு அருண்மொழிதான் இயக்குநர். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த அந்தத் தொலைக்காட்சி நாடகத்துக்கு இவன் உதவி இயக்குநர். அதன் பணிகளுக்காகவும் இவன் அடிக்கடி அவருடன் பழக நேர்ந்தது.

பட்டுக்கோட்டை பிரபாகர் இவனிடம் தொலைபேசியில் கேட்டார், 'உங்களைச் சந்திக்கணுமே முத்துக்குமார். வீட்டுக்கு வர முடியுமா?’ -இவன் சந்தித்தான்.

'நான் ஒரு படம் டைரக்ட் பண்ணப்போறேன். என்கிட்ட அசிஸ்டென்டா சேர்றீங்களா?’

இவனுக்கு, கல்லூரி வகுப்பு நினைவுக்கு வந்தது. 'நான் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படிச்சிட்டு இருக்கேன் சார். அதான் யோசிக்கிறேன்’ என்றான்.

'அதைப் பத்தி கவலைப்படாதீங்க. இப்பதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கேன். ஷூட்டிங் போக நிறைய டைம் இருக்கு. அதுவரைக்கும் கிளாஸ் போயிட்டு மதியத்துக்கு மேல டிஸ்கஷனுக்கு வந்தா போதும்’ என்று பெருந்தன்மையுடன் சொன்னதும், வாழ்க்கை இவனை மீண்டும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வைத்தது.

பி.கே.பி-யின் அலுவலகம் திருவான்மியூரில் இருந்தது. காலையில் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு, அமைந்தகரையில் இருந்து சைக்கிளில் சைதாப்பேட்டை வழியாக திருவான்மியூர் செல்வான் இவன். இன்று போல் போக்குவரத்து நெரிசல் இல்லாத காலம் அது. இவன் எழுதிய பல கவிதைகள், இப்படியான சைக்கிள் பயணத்தில்தான் பிறந்திருக்கின்றன.

பி.கே.பி., இயக்குநர் கே.பாக்ய ராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த வர். பாக்யராஜ் சாரிடம் வேலை செய்த பவானி ரங்கராஜும், இவர்களுடன் கதை விவாதத்தில் கலந்து கொண்டார். 'முந்தானை முடிச்சு’ திரைப் படத்தில் முருங்கைக்காய் காமெடி சீனில் வருவாரே அவர்தான் அந்த ரங்க ராஜ். 'சின்னவீடு’ திரைப்படத்தில் திரை யரங்குக் காட்சியில், பாக்யராஜுக்கும் கல்பனாவுக்கும் நடுவில் இருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தவரும் இவர்தான்.

பி.கே.பி-யும் ரங்கராஜும், பாக்யராஜிடம் கற்ற திரைக் கதையின் பல பாடங்களை இவனுக்குக் கற்றுத்தந்தார்கள். இயல்பாகவே இவன் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால், பி.கே.பி., அவர் எழுதிய ஆயிரத்துக்கும் மேற் பட்ட பாக்கெட் நாவல்களை இவனிடம் கொடுத்து ஒவ்வொரு நாவலையும் படித்துவிட்டு ஒரு பக்கத்துக்குள் 'synopsis’ எனப்படும் கதைச் சுருக்கத்தை எழுதச் சொன்னார். ஒரு நாளைக்கு ஐந்து நாவல்கள் என்று இவன் எழுதித்தள்ளினான்.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விதம்; அநேகமாக எல்லா நாவல்களிலும் பரத்தும் சுசீலாவும் துப்பறிந்தார்கள். பி.கே.பி-க்கு, எழுத்தாளர் சுஜாதாவைப் போல வசீகரமான மொழிநடையும், வார்த்தைச் சிக்கனமும் கைவந்திருந்ததால், வாசகர்கள் மத்தியில் சக்கைப் போடு போட்ட நாவல்கள் அவை.

இவனது பள்ளிப் பருவத்தில் 'அன்னை நூலகம்’ என்ற பெயரில், இவன் தந்தை வாடகை நூல் நிலையம் ஒன்றை காஞ்சிபுரத்தில் நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஆசிரியராக வேலை பார்த்ததால் மாலை நேரத்திலும், விடுமுறை நாளிலும் மட்டுமே நூலகம் இயங்கும். சனி, ஞாயிறுகளில் இவனும் அப்பாவும் அந்த வாரத்தில் வந்த வார, மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் போன்றவற்றை ஒயர் கூடையில் சுமந்தபடி சைக்கிளில் சென்று உறுப்பினர்களின் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வார்கள். சுஜாதாவும், பாலகுமாரனும், பி.கே.பி-யும் பரபரப்பாகப் படிக்கப்பட்ட காலம் அது.

வேடிக்கை பார்ப்பவன் - 24

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்ததைப் போல, சுவாரஸ்யம் மிக்க வணிக எழுத்துக்களே வாசகர்களிடம் இன்றும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருக்கின்றன. உயரங்களை நோக்கிச் செல்வதற்கும் ஏதோ ஓர் ஏணியின் முதல் படிக்கட்டு வேண்டி யிருக்கிறது அல்லவா? நாம் எவ்வளவுதான் படித்தாலும் கரும்பச்சை சிலேட்டில் கைபிடித்து 'அ’னா 'ஆ’வன்னா எழுதச் சொல்லிக்கொடுத்த முதல் வகுப்பு ஆசிரியர்களை மறக்காததைப் போலத்தான் 'pulp fiction’ எனப்படும் இந்த வகை எழுத்துக்களை இவன் பார்க்கிறான்.

னவுகளின் தொடர் சங்கிலியின் ஒரு கண்ணியாக, சிறு வயதில் இவன் ஒரு துப்பறிவாளனாக மாற ஆசைப்பட்டான். அதற்குக் காரணம் இவன் பார்த்த 007 ஜேம்ஸ்பாண்ட் படங்களும், படித்த பாக்கெட் நாவல்களும்தான். இப்படித்தான் இவன் வடுவூர் துரைசாமி ஐயங்காருடன் துப்பறிந்தான். தமிழ்வாணனின் சங்கர் லாலைச் சந்தித்தான். தேவனின் சாம்புவுடன் உலா போனான். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கை பிடித்தான். புஷ்பா தங்கதுரையின் சிங் குடன் சிநேகமானான். ராஜேஷ்குமாரின் விவேக், ரூபலாவின் ரசிகன் ஆனான். சுபாவின் நரேன், வைஜயந்தியின் வழித்தடங்களைத் தொடர்ந்தான். அந்த வாசிப்பு அனுபவம்தான் இவனை பரத்-சுசிலாவுடன் பி.கே.பி.யிடம் பணியாற்ற வைத்தது.

பி.கே.பி எழுதும் முறை அன்று இவனுக்கு வியப்பாகத் தெரிந்தாலும், அனுபவத்தால் அந்த லாகவம் இன்று இவனுக்கு வசப்பட்டு இருக்கிறது. கதை விவாதத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, 'நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருங்க. விகடனுக்கு தொடர் அனுப்பணும். இன்னிக்குதான் டெட் லைன். அரை மணி நேரத்தில் வந்துடறேன்’ என்று கூறிவிட்டு பி.கே.பி. எழுதத் தொடங்குவார். ஒவ்வொரு வாரத்திலும் இப்படி பல அரை மணி நேரங் களை இவன் சந்தித்திருக்கிறான்.

வேடிக்கை பார்ப்பவன் - 24

சினிமா என்பது, ஏணிகளும் பாம்புகளும் அடுத்தடுத்து வரும் ஒரு ராட்சஸ பரமபதம். பி.கே.பி. எடுக்க நினைத்த அந்தப் படம், ஏதோ சில காரணங்களால் நின்றுபோனது. தொலைக்      காட்சியில் மெகா தொடர் அறிமுகம் ஆன காலம் அது. தூர்தர்ஷனில் 'ஜுனூன்’ எனும் இந்தி டு தமிழ் டப்பிங் தொடர், தமிழர்களின் உரையாடலை மாற்றியமைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், 'வாப்பா வந்துட்ட... அதுவும் காலைல. சாப்பிடலாம் காபி ரொம்ப சூடா...’ என்றும், 'கூப்புடற நீ... அதுவும் அன்பா! சொல்ல மாட்டேன் நான் வரலேன்னு’ என்றும் உரையாடிக்கொண்டார்கள். இப்படியாக செந்தமிழ், சங்கத் தமிழுக்குப் பிறகு, ஜுனூன் தமிழ் கோலோச்சியது.

ஜுனூன் தமிழைத் தாண்டி, ஜில்லாத் தமிழில் நெடுந்தொடர் தயாரிக்க யு-டி.வி. நிறுவனம் முடிவெடுத்தது. அதற்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை பி.கே.பி. ஏற்று, பிள்ளையார் சுழி போட்டார். அந்தத் தொடரில் வரும் கதா பாத்திரங்களான ரவிராஜும் குமர குருவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவன் கனவுகளில் வந்து துரத்தப்போகிறார்கள் என்று இவன் அன்று அறியவில்லை!

- வேடிக்கை பார்க்கலாம்...