Published:Updated:

“நீங்கள் ராஜா... நான் சக்கரவர்த்தி!”

திருவாவடுதுறை விசிட் இசையில் சிறந்தவன் எல்லோரிலும் சிறந்தவன்!

“நீங்கள் ராஜா... நான் சக்கரவர்த்தி!”

திருவாவடுதுறை விசிட் இசையில் சிறந்தவன் எல்லோரிலும் சிறந்தவன்!

Published:Updated:
“நீங்கள் ராஜா... நான் சக்கரவர்த்தி!”

27.8.1898- 'அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தேதி. வரும் வாரம் அந்த மாமேதைக்கு நூறாவது ஆண்டு!

அது ஒரு வாழ்க்கை. நாடெல்லாம் மழை பொய்த்து, தரைப்பாளம் பல்லிளித்தாலும் தான் மட்டும் கொஞ்சூண்டு தூறலாவது சம்பாதித்துக்கொண்டுவிடுகிற தஞ்சாவூர் ஜில்லா. போகம் போகமாக விளையும் தானியங்கள் கொடுத்த மிராசுத்தனமான வாழ்க்கை. அத்தர், வெற்றிலை, சீவல், பன்னீர் புகையிலை மணக்க, 'ததரினனா’ என்று முணு முணுக்கும் குரல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமருகல் என்ற ஊரில் பிறந்து திருவாவடுதுறைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்த பையன், ராஜரத்தினம். ரத்தத்தில் ஹீமோகுளோபினோடு ஏழு ஸ்வரங்களும் கலந்து ஓட, எந்த நேரமும் வாயில் பாட்டு ததும்பிக்கொண்டேயிருக்கும். சின்னப் பையனாக இருந்தபோதே, கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாக இருந்த நடேசப் பிள்ளையின் நிழல் கிடைத்தவுடன் தனது ஜீவன் இந்த நீண்ட, கறுத்த நாகஸ்வரம் என்கிற வாத்தியத்தில்தான் இருக்கிறது என்று கண்டுகொண்டான் பையன்.

அப்புறமென்ன, வாழ்க்கை முழுக்க ஆரோகணம்... அதாவது ஏறுமுகம்தான். போன இடமெல்லாம் சிறப்பு. அதனால் வந்த கித்தாய்ப்பு. ''ராஜரத்தினமா, பெரிய கலாட்டாப் பேர்வழியாச்சே...'' என்று ஆரம்பிப்பவர்கள்கூட, ''சரி... சரி... அவனையே கூப்பிடுங்கோ... கச்சேரி முழுக்க காதில் தேனை வாரின்னா ஊத்தறான்...'' என்று முடிக்கும்படியான வித்தை. ''ராஜரத்தினத்துக்கு என்ன... அர்ஜுன மகாராஜா. ஊருக்கு நூறு ரசிகாள். ஜில்லாவுக்கு ஒரு பொண்டாட்டி'' சக வித்வான்களின் சந்தோஷ விமரிசனம் இது. கலைஞனாவதற்கு முதல் தகுதி ரசிகனாக இருப்பது. ராஜரத்தினம் அபார ரசிகர். இவருக்கு ஐந்து மனைவிகள்! தனக்கான எல்லா வெற்றிகளையும் தன் வாத்தியமே தனக்குப் பெற்றுத் தரும் என்பதில் ஏக நம்பிக்கைகொண்டிருந்தவர் ராஜரத்தினம். இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் காணும் 'அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’ என்கிற அடைமொழியை அவர் பெரு விருப்பத்தோடு உபயோகித்துக்கொள்வார்.

'இசையில் சிறந்தவன் எல்லோரிலும் சிறந்தவன்’ என்று அவர் நம்பியதற்கு ஊர்ப் பக்கம் போனால் நிறைய உதாரணக் கதைகள் சொல்கிறார்கள்.

ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன்னாராம். ''ஏம்ப்பா... நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?''

“நீங்கள் ராஜா... நான் சக்கரவர்த்தி!”

கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ''கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு'' என்றாராம். உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்காரரே... பணத்தை வாங்கும்'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!

இதுபோன்ற - இருக்க வேண்டிய - திமிர்க்குணத்தாலேதான் அவர் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக்கொண்டதும், அக்ரஹாரத்தில் ஆனாலும் அரண்மனையில் ஆனாலும் செருப்பு போட்டுக்கொண்டு நடந்ததும்!

இந்தக் குணம் கொஞ்சம் எல்லை மீறியபோதுதான் இவர் ஒப்புக்கொண்ட இடங்களுக்கு கச்சேரிக்குப் போகாததும், 'லைட்’ ஆக 'சுதி’ ஏற்றிய நிலையிலேயே எல்லாரையும் தூக்கியெறிந்து பேசியதும் நடந்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு வருவதாகச் சொன்ன இடத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குப் போவார். ஜனம் இவரைச் சபித்தபடி உட்கார்ந்திருக்கும். போய் மேடையில் பக்கவாத்தியத் தோரணைகளோடு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்ததும் மோகனாஸ்திரம் விழுந்த லாகிரியில் மயங்கிக்கிடக்கும் ஊர். விடிகாலை ஏழோ, எட்டோ கச்சேரி முடிந்ததும், கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போகும்.

'ராஜரத்தினம் பிள்ளை’ என்றதும், அவருக்கு நெருக்கமானவர்களின் முதுமையில் தளர்ந்த கண்கள் இப்போதும் பிரகாசமாகிவிடுகின்றன.

''சுதந்திரம் கிடைச்ச நாள். குடியரசுத் தலைவர் மாளிகையில் கொடியேறிய நாளன்று நேருவின் முன்னிலையில் நாகஸ்வரம் வாசிச்சார் பிள்ளைவாள். சொக்கிப் போயிட்டார் நேரு...'' என்று பெருமையாக ஆரம்பித்தார் திருவிடைமருதூரில் வசிக்கும் டி.எஸ்.மகாலிங்கம் பிள்ளை. அந்த விழாவில், பிள்ளை வாசித்த நாகஸ்வரத்துக்கு இவர்தான் தவில்.

''பிள்ளைவாளோட வாசிப்பைக் கேட்ட நேரு, 'உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டார். உடனே ராஜரத்தினம் பிள்ளை, 'எங்க ஊரிலே திருட்டுப் பயம் ஜாஸ்தி, கரன்ட் வேணும்’னு சொன்னார் ராஜரத்தினம் பிள்ளை. நாங்க நிகழ்ச்சி முடிஞ்சு ஊருக்கு வரும்போது திருவாவடுதுறை முழுக்க லைட் எரிஞ்சது. நேருவைப் பாத்துட்டு வந்ததுக்கப்புறம் அந்த மாதிரி ஷெர்வானி, ஓவர்கோட், ஷூனு இவர் தன்னோட தோற்றத்தையே கொஞ்ச நாள் மாத்திக்கிட்டது வேற விஷயம்'' என்றார் மகாலிங்கம் பிள்ளை.

ராஜரத்தினம் பிள்ளை தன் கைப்பட 'கெவுர்மென்டார் இவரை ஆதரித்து தகுந்த ஏற்பாடு செய்து தரவேணும்’ என்று நற்சாட்சிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப்பது, நாகஸ்வரம் தயாரிக்கும் 80 வயசு ரங்கநாத ஆச்சாரிக்கு. இவர் நரசிங்கன்பேட்டையில் இருக்கிறார். பொதுவாக அந்தக் காலத்தில் 'திமிரி’ என்கிற - அளவில் சிறிய - நாகஸ்வரம்தான் புழக்கத்தில் இருந்தது. திருவிழாவில் வாசித்தால் ஆறு மைல் தூரத்துக்கு அப்பாலும் கேட்கும். அந்த அசுர வாத்தியத்தில் நளினம் சேர்த்து அதை ராஜ வாத்தியமாக்க விரும்பினார் ராஜரத்தினம் பிள்ளை. ரங்கநாத ஆச்சாரியுடன் உட்கார்ந்து விதவிதமான சோதனைகள் செய்து 'பாரி’ என்கிற - அளவில் பெரிய - இனிய சத்தம் எழுப்பும் நாகஸ்வரத்தை வடிவமைத்தார். ''அவரு எழுதிக் குடுத்த நற்சாட்சிப் பத்திரத்தை பத்திரமா வெச்சிருக்கேன்!'' என்றார் ரங்கநாத ஆச்சாரி.

'திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்’ வளைவுக்குள் நுழைந்து வளைந்து நெளிந்து போனால் ராஜரத்தினம் பிள்ளை வாழ்ந்த வீடு. தன் பழமையை இழந்து புதுப் பூச்சுகளோடு நிற்கிறது.

“நீங்கள் ராஜா... நான் சக்கரவர்த்தி!”

திருவாவடுதுறை மடத்தோடு நேர்ந்த ஏதோ சிறு மனக்கசப்பின் காரணமாக புதுவீடு கட்டிக் குடியேற விரும்பிய பிள்ளை, ஏராளமான ஆட்களை நியமித்து ஐந்தே நாட்களில் முழு வீட்டையும் கட்டி முடித்துவிட்டார். அது சில மாதங்களுக்குள்ளேயே இடிந்து மறுபடி புதுசாகக் கட்டவேண்டி வந்தது.

ஆனால், மடத்தை விட்டுக்கொடுக்காமல் இவர் நடந்துகொண்ட சம்பவமும் உண்டு. 'பண்டார சந்நிதி (மடத்துத் தலைவர்) வீதி உலா வரும்போது அதைத் தடுக்க வேண்டும்’ என்று சுயமரியாதைக் கட்சிக்காரர்கள் திட்டம் போட்டார்கள். ''நீங்க வீதி உலா போங்க... நான் பாத்துக்கிறேன்'' என்றார் பிள்ளை.

சுயமரியாதைக்காரர்கள் நின்றிருந்த இடத்தை ஊர்வலம் நெருங்கும்போது, எங்கிருந்தோ வந்த ராஜரத்தினம் தடாலென பண்டார சந்நிதி பல்லக்கின் முன்பு விழுந்து கும்பிட்டார். ''ராஜரத்தினம் பிள்ளையே வந்து கால்ல விழறாரு. இந்தப் பண்டார சந்நிதி உண்மையிலேயே மகான்தான் போலிருக்குது'' என்று போராட்டக்காரர்கள் கலைந்து போய்விட்டார்கள்.

அப்போதெல்லாம் ரயில் இவரது ஊரில் நிற்காது. அதனால் வெளியூர் சென்று திரும்பும் சமயம் தன் வீட்டின் பின்புறமாக ரயில் ஓடும்போது அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி 50 ரூபாய் அபராதம்  கட்டிவிட்டு வீட்டுக்குப் போவது இவருடைய வழக்கம்.

''யாராயிருந்தாலும் வித்தை இருந்தா மதிப்பார் ராஜரத்தினம் மாமா'' என்றார் சீனியர் மோஸ்ட் ஃப்ளூட் கலைஞர் நவநீதத்தம்மாள். ''ஒருநாள் என்னைப் பாத்து 'காம்போதி வாசி நாயே’ என்றார். வாசிச்சேன். என் அம்மாவைக் கூப்பிட்டுக் கும்பிட்டார். 'உன்னைக் கும்பிடலை. இந்தக் குழந்தையைச் சுமந்துதே உன் உந்திக்கமலம். அதைக் கும்பிடறேன்’ அப்படின்னார்'' என்கிறார் நவநீதத்தம்மாள்.

ராஜரத்தினம் பிள்ளையின் மருமகன் கக்காயி நடராஜ சுந்தரத்தின் மைத்துனரும் கலைவிமர்சகருமான தேனுகா. முத்தாய்ப்பாகச் சொன்னார்; ''நயாகரா மாதிரி பிருகாக்களைப் பொழியும் ராஜரத்தினத்தின் மேதமையை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. இசைப் புலமையைப் போலவே அவரது மன உருவமும் (Psychic Landscape) அதீதமானது. அதனால்தான் அவரது குணத்தைப் பற்றி சுவாரசியமான இவ்வளவு கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.''

- ரமேஷ் வைத்யா

படங்கள்: தஞ்சை இளங்கோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism