Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 25

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 25

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

குட்டிப் புத்தரின் கேள்வி

''வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.''

- எழுத்தாளர் வண்ணநிலவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது இவன் மகன் இவனிடம் வந்து, ''எப்ப பார்த்தாலும் என்னமோ எழுதிட்டே இருக்கீங்களேப்பா. அப்படி என்னதான் எழுதுறீங்க?'' என்று கேட்க, இவன் அவன் தலையை அன்பாகக் கோதிவிட்டு, ''அப்பா, என்னோட வாழ்க்கை வரலாறை எழுதிட்டு இருக்கேன்'' என்றான்.

''புரியலப்பா. வாழ்க்கைன்னா என்னா? வரலாறுன்னா என்ன?'' என்று மகன் கேட்கவும் இவன் உண்மையில் திடுக்கிட்டுப்போனான்.

என்ன பதில் சொல்வது? என்று இவன் திணறிக்கொண்டிருக்கையில், எல்லாப் பிள்ளைகளையும் போலவே கேட்ட கேள்வியை மறந்துவிட்டு விளையாடப் போனான் மகன்.

கல் எறிந்த குளம் போல அலை அலையாக இவனுக்குள் சிந்தனை வட்டம் விரிந்துகொண்டே இருந்தது. உண்மையில், வாழ்க்கை என்பதுதான் என்ன? வரலாறு என்பதுதான் என்ன?

'இருப்பதற்காக வருகிறோம்
இல்லாமல் போகிறோம்’

என்று எழுத்தாளர் நகுலன் சொன்னதுதான் வாழ்க்கையா? அல்லது 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற மௌனியின் குரல்தான் வாழ்க்கையா? அல்லது ''I think, therefore I am' என்று ஃபிரெஞ்சு பேரறிஞன் ரெனே டெஸ்கார்த்தே சொன்னதுதான் வாழ்க்கையா?

வேடிக்கை பார்ப்பவன் - 25

சட்டென்று 'சிறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்று ஈழத் தமிழ்க் கவிஞன் பிரமிள் எழுதியதும் நினைவுக்கு வந்தது.

''ஏய் இக்பால்! சாகும் வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்'' என்ற உருதுக் கவிஞன் இக்பால் வரிகளில் மூழ்கி இவன் மேலும் குழம்பினான்.

வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும்போதே இப்படித் தடுமாறும்போது, வரலாற்றைப் பற்றி இவன் என்ன யோசிக்க?

இவன் என்ன வாழ்ந்தான்? இவனுக்கு என்ன வரலாறு? இதையெல்லாம் எழுதி இன்று ஆகப்போவது என்ன? என்னும் பல கேள்விகளை மகன் கிளப்பிவிட்டு, கடவுளைப் போல உறங்கிக்கொண்டிருந்தான். இவன் பேப்பரையும் பேனாவையும் ஒதுக்கிவிட்டு, கடவுளின் கால்களை அமுக்கப் போனான்.

வேடிக்கை பார்ப்பவன் - 25

''சார்... இந்த வார சேப்ட்டர் இன்னும் வரல. இப்ப அனுப்பினாத்தான் ஓவியம் வரைஞ்சு லே-அவுட் பண்ண வசதியா இருக்கும்'' என்று விகடன் நிருபரின் குரல் இடைவிடாது தொலைபேசியில் ஒலிக்க, இவன் மீண்டும் இந்த அத்தியாயத்துக்குத் திரும்பினான்.

பி.கே.பி. கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'பரமபதம்’ என்ற அந்தத் தொடரை, நடிகை குட்டிபத்மினியின் அண்ணன் வெங்கடேஷ் சக்கரவர்த்தி இயக்கினார். நடிகர் சிவகுமார், முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருந்தார். சினிமா தொடர்பான கதை அது. தினமும் அந்தத் தொடரின் கதாபாத்திரங்களான குமரகுரு, அவருக்கு வில்லத்தனம் செய்யும் ரவிராஜ் என்று யோசிப்பதிலேயே இவன் காலம் கழிந்தது.

மெகா தொடருக்கு கதை எழுதுவது, ராட்சஸ இயந்திரத்துக்குத் தீனி போடுவது போல. ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கதாபாத்திரங்களை யோசிக்க வேண்டும். தொடர் முடிகையில் சஸ்பென்ஸில் நிறுத்த வேண்டும். பி.கே.பி., துப்பறியும் நாவல்களில் கரை கண்டிருந்ததால் அதைத் திறம்படச் செய்தார். அன்றைய நாளின் வேலையை எப்படிப் பிரித்துக்கொள்வது, அவற்றை நேர அட்டவணைக்குள் எப்படி முடிப்பது என்பதை எல்லாம் அவரிடம் இருந்துதான் இவன் கற்றுக்கொண்டான்.

ஒரு பக்கம் இவன் படித்துக்கொண்டிருந்த எம்.ஏ., தமிழ் இலக்கியத்துக்கான தேர்வு நெருக்கடிகள். மறுபக்கம் 'பரமபதம்’ தொடருக்கான காட்சி விவரணைகள் என இரண்டும் சேர்ந்து இவனை விரட்டிக்கொண்டே இருக்க, ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்கும் வலியை மீண்டும் உணர்ந்தான்.

ஒரு வெயில் நாள் காலையில் (அது மழை நாளாகவும் இருக்கலாம்) இவன் பி.கே.பி-யிடம், ''சார்... நான் வேலையைவிட்டு நிக்கலாம்னு இருக்கேன். எக்ஸாம் வருது. படிக்கணும்'' என்றான். இவன் திடீரென்று விலகுவது அவருக்கு வருத்தமாக இருந்தும், ''பெஸ்ட் ஆஃப் லக்'' என்றார்.

பின்னாட்களில், இவன் பாலுமகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது பி.கே.பி. எழுதிய இவனுக்கு மிகவும் பிடித்த நான்கைந்து சிறுகதைகளை டைரக்டரிடம் படிக்கக் கொடுத்தான். அவருக்கும் அந்தக் கதைகள் பிடித்துப்போக, பி.கே.பி-யை வரவழைத்து இயக்குநரிடம் அறிமுகப்படுத்தினான். அந்தக் கதைகள் அவர் இயக்கிய 'கதைநேரம்’ தொடரில் ஒளிபரப்பானது.

வேடிக்கை பார்ப்பவன் - 25

இஷ்டப்பட்டு வேலையை விட்ட பின்பு, இவன் இரவு-பகலாகப் படிக்கத் தொடங்கினான். கவிதைப் போட்டி, கதை விவாதம், மாலையில் அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தில் பாட்டுப் பயிற்சி என்றே இவன் நேரம் ஓடிக்கொண்டிருந்ததால், கம்பனும், வள்ளுவனும், தொல்காப்பியனும் இவனைவிட்டுத் தற்காலிகமாக விலகியிருந்தார்கள். ஏற்கெனவே இவன் எம்.ஏ., முதலாம் ஆண்டில் எந்தத் தேர்வும் எழுதவில்லை. திரும்பவும் அவர்களின் கைபிடித்து கவிதை வழி நடக்க, இவன் படாத பாடுபட்டான். தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தன.

தமிழ்த் துறைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் இவனைப் பார்த்து அக்கறையுடன் கேட்டார், ''கவிதை, கதைன்னு படிக்காம விட்டுட்ட... முதல் ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 10 பேப்பர். பாஸ் ஆயிடுவியா?''

''நிச்சயம் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆவேன் சார்'' என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னான். இவன் சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே இவனால் காப்பாற்ற முடியவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது ஃபர்ஸ்ட் கிளாஸுக்குப் பதிலாக கல்லூரியிலேயே முதல் மாணவனாக இவன் தேர்ச்சி பெற்றிருந்தான்.

- வேடிக்கை பார்க்கலாம்