Published:Updated:

ஆறாம் திணை - 83

மருத்துவர் கு.சிவராமன், படம்: ஆ.முத்துக்குமார்

ஆறாம் திணை - 83

மருத்துவர் கு.சிவராமன், படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

வாண்டர்மியர் - இங்கிலாந்தின் வட பகுதியில் ஏரிகள் நிறைந்த ஊர். வழியெங்கும் டாஃபடில்ஸ்  மலர்கள் பூத்து, ஸ்பிரிங் பருவத்தின் வருகையை அறிவித்து நிற்கின்றன. ''இந்த வருடம் பனிப்பொழிவு குறைவுதான். கிறிஸ்துமஸில்கூட பனி இல்லை. இதோ பாருங்கள், ராபின் பறவை கூடு கட்டிக் குடும்பம் நடத்த குச்சி தேடி வந்திருக்கிறது. ராபினின் வருகை, பருவ மாற்றத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது'' என்கிறார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள்.

ஆறாம் திணை - 83

உலகையே உலுக்கிய 'மௌன வசந்தம்’ எனும் சுற்றுச்சூழல் நூலில், பூச்சிக்கொல்லிகளால் ராபின் பறவையின் வருகை குறைந்ததைச் சுட்டிக்காட்டியிருப்பார் நூலாசிரியர் ரேச்சல் கார்சன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெக்னோலியா பூத்திருக்கும் மரத்தில் ராபினும், பிரிம்ரோஸ் மலர்களுக்கு இடையே கருங்குருவிகளும் ஓடியாடிச் சென்றதை, இங்கி லாந்துவாசிகள் பருவ மாற்றத்தின் தொடக்கமாகக் கருதினார்கள்.

'தென்றல் வீசும்; ஆந்தை அலறும்; அன்றில் திரியும்...’ என்று இளவேனிலின் வருகையை நம்மவரும் அப்படித்தான் பதிந்திருந்தனர். இன்ன பருவத்துக்கு இன்ன வாழ்வியல், இதுதான் அதற்கான உணவு என்றும் வகைப்படுத்தி இருந்தனர். உக்கிரமான கோடை காலத்துக்கு என எண்ணெய்க் குளியலுடன் சம்பா அரிசி வகைகளையும், எள்ளையும், உளுந்தையும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், சூழல் மீது நாம் நடத்தும் வன்முறைகளால், புவியின் வெப்பம் உயர்ந்து உயர்ந்து, இப்போதைக்கு 'இங்கிலாந்தில் ராபினையும் காணோம்; நம் ஊரில் சாரஸ் நாரையையும் காணோம்’ என்று அலறுகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் 'மாலத்தீவுகளைக் காணோம்; நியூஸிலாந்தைக் காணோம் என்று சொல்லும் நிலை வரலாம்’ என்கிறார்கள் சூழலியலாளர்கள். வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் பூமியையும் காப்பாற்றியாக வேண்டும்.

கோடையை, இப்போதெல்லாம் அன்றில் வந்து அறிவிப்பது இல்லை; குளிர்பான கம்பெனிகள் தான் கூவிக்கூவி அறிவிக்கின்றன. கோடையில், நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டைஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரில் கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, உப்புடன் கூடுதல் சுவையூட்டியாக எவருக்கும் தெரியாத ரசாயன அடிமைப்படுத்தும் 'வஸ்து’வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது.

'வெளியே போ’ என உடல் விரட்டும் வாயுவை, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப் பிறகு அருந்தும் பழக்கம் இருக்கும் வரை, நம்மை ஏப்பமிடும் வணிகமும் இருந்துகொண்டேதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டில் இருந்து ஏன்ஜைனாபெக்டாரிஸ் எனும் இதயவலியையும் தரும் என்கிறது உணவு அறிவியல்.

நமக்கான கோடைக் கேடயங்கள்... பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே. உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கரும்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத்தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளி கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. ஆனால், இப்போது அது அம்மன் கோயில் பிரசாதமாகிவிட்டது.

ஆறாம் திணை - 83

கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னிநட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருள்கள், வெம்மையால் வரும் அம்மைநோயையும் தடுக்கும்.

உக்கிரக் கோடையில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள்  விருந்தாளிகளாக வந்துபோகலாம். இருப்பினும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் கடைப் பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்கலாம்.

வாரம் இரண்டு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன் தொலி உளுந்து சாதம், கம்பங்கூழ் சிறிய வெங்காயத்துடன், வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங்களி, வெந்தயக்களி, (தொலி) முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள்.

ஆறாம் திணை - 83

தர்பூசணிச் சாறுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணியுங்கள். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது. தூக்கத்துக்கு முன் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போகத் தேய்த்துக் குளியுங்கள்.

பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பரியம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை ஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டிவிட்டு, நாம் உடல் சூடு தணிக்க, 'குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா?

புவி மீதான நம் அக்கறை அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத வேகத்தில் அந்த மலைவாசஸ்தலங்களும் மரணித்துவிடும்.  அதனால், கோடை காலத்தில் 'இந்த உள்ளம் கேட்குமே மோர்’ என்று கேட்டு வாங்கிப் பருகுவோம் நீர் மோரையும் பானகத்தையும்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism