Published:Updated:

“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

Published:Updated:
“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

ராமநாதன், ஆரணி.

''டி.எம்.எஸ்., கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன் போன்றவர்களின் குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். அந்தப் பிரத்யேக ஈர்ப்பு இளம் தலைமுறைப் பாடகர்களிடம் மிஸ்ஸிங் என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?''

''ஆமா சார்... நீங்க சொல்றது உண்மைதான். இப்போதைய பாடகர்களிடம் ஒரு பிரத்யேக ஐடென்டிஃபிகேஷன் இல்லை. ஆனா, அதுக்காக அவங்க யாருக்கும் டேலன்ட்ல குறைச்சல்னுசொல்லக் கூடாது. ரொம்ப அழகாப் பாடுறாங்க பசங்க. ஆனா, ஏன்னு தெரியலை... எல்லாரும் ஒரே மோடுக்குள் போயிடுறாங்க. பேர் சொன்னாத் தவிர பாடுறது யார்னு தெரிய மாட்டேங்குது. குரல்லயே ஒரு கேரக்டர் இருக்கணும். சீனியர்ஸ்ல சங்கர்மகாதேவன், ஹரிஹரன்... இப்ப யங்ஸ்டர்ஸ்ல கார்த்திக், திப்புனு சிலர் குரல்களை ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் இப்ப நிறையப் பாடல்கள் கேட்கிறது கிடையாது. கேட்கக் கூடாதுனு இல்லை; கேட்கத் தூண்டுறது இல்லை. கேட்டா, ரொம்பக் கஷ்டமா இருக்கு. வேற பாட்டு கேட்கலாமேனு யோசிக்கத் தோணுது. நீங்க கேட்ட மாதிரி அந்த ஐடென்டிஃபிகேஷனோட பாடகர்கள் உருவாகவே இல்லையோனு நினைக்கத் தோணுது.

'இப்ப இதுக்கு என்ன செய்யலாம்?’னு கேள்வி தோணுது இல்லியா... அதுக்கும் நானே பதில் சொல்லிடுறேன். 'வெரைட்டி வேணும்’னு ஒரே படத்தில் ஒரு ஹீரோ நடிக்கும் ஆறு பாடல்களுக்கு ஆறு வெவ்வேறு பாடகர்களைப் பாட வெக்கிறாங்க. அப்புறம் சமயங்கள்ல ஒரே பாட்டை மூணு பேர் பாடுறாங்க. இதுல என்ன வெரைட்டி இருக்குனு எனக்குப் புரிய மாட்டேங்குது. ஒரு புது இசையமைப்பாளர், ஆறு புதுப் பாடகர்கள், ஒரு புதுக் கவிஞர் இவங்க ஒரே படத்துக்குள் என்ன எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்க முடியும்?

“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

இதுக்கு என்ன பண்ணணும்? நானே ஒரு உபாயம் சொல்றேன். இப்ப நாலு நல்ல பாடகர்கள், அதாவது ரெண்டு பாய்ஸ், ரெண்டு கேர்ள்ஸ் இருக்காங்கனா, அவங்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கணும். சீனியர்ஸோட பாடக்கூடிய அவகாசம் அதிகம் தரணும். நல்ல மியூசிக் டைரக்டர்ஸோட வேலை செய்யக்கூடிய வாய்ப்பு அதிகமா தரணும். அப்பத்தான் கத்துக்க முடியும். என் முதல் பாட்டே சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீநிவாஸ் சார்கூடப் பாடினேன். மைக் முன்னால் எப்படி நிக்கிறாங்க, கச்சேரினா இப்படி, ரிக்கார்டிங்னா அப்படி, ஆர்க்கெஸ்ட்ரானா இப்படினு கத்துக்கிறதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது.

ஆனா, இப்போ புதுசாப் பாட வர்றவங்ககிட்ட, 'ஏற்கெனவே பல ஆர்கெஸ்ட்ராவுல பாடியிருப்பீங்க. அப்படியே பாடிருங்க’னு ஹெட் போனை தலையில் மாட்டி தனி ரூம்ல தள்ளிக் கதவைச் சாத்தி, 'வாய்ஸ் மிக்ஸ் பண்ணு’ங்கிறாங்க. இந்த பேட்டர்ன் நல்ல பாடகர்களை உருவாக்காது. அவங்களுக்குப் பயிற்சி பண்ண நிறைய வாய்ப்பு கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்!''

கவிதா, காஞ்சிபுரம்.

'' 'குரல் பாதுகாப்புக்கு என எந்தப் பராமரிப்பும் பண்ண மாட்டேன்’ என்று அடிக்கடி சொல்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியம்?''

''சத்தியமா ஒண்ணுமே கிடையாது மேடம். அதுதான் ஆச்சரியம்! இன்னைக்குக் காலையிலகூட ஒரு ரசிகர் நான் பாடின ஒரு பாட்டை அனுப்பியிருந்தார். அதை எப்ப பாடினேன்னுகூட ஞாபகம் இல்லை. 'எப்படி இவ்வளவு அழகா என்னால் பாட

முடிஞ்சது’னு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. இதை நான் பெருமைக்காகச் சொல்லலை. 'எப்படிப் பாட முடிஞ்சது?’னு நானே என்கிட்ட கேள்வி கேட்கக் காரணம், 'நமக்கு ஏ,பி,சி,டி-யே தெரியாதே... அப்புறம் எப்படி இங்கிலீஷ்ல கவிதை எழுத முடிஞ்சுது?’ங்கிற மாதிரியான ஆச்சரியம். அதனால்தான் எனக்குக் கடவுள் மேல ரொம்ப நம்பிக்கை வருது.

என் மேல அக்கறை இருக்கிற ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் என்ன சொல்லுவாங்கனா, 'சாப்பிடுற பண்டங்களுக்கும் குரல் வளத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது’னு. ஆனா, குரல் எங்கே பாதிக்கும்னா தப்பான பழக்கங்கள்ல இருந்துதான். முதல் தப்பு ஸ்மோக்கிங். அடுத்து தூசி. ஆனா, இந்தியாவுல டஸ்ட் பத்தி நாம குத்தம் சொல்ல முடியாது. ஒருவிதத்தில் தூசிக்கு நம்ம இம்யூன் ஆகிட்டோம். ஆனா, ஸ்மோக்கிங் ரொம்பத் தப்பு. ஆனாலும் செயின் ஸ்மோக்கர்ஸா இருந்த சிலர், பிரமாதமான பின்னணிப் பாடகர்களா இருந்திருக்காங்க.

தலத் மஹ்மூத் என்கிற பாப்புலர் கஸல் சிங்கர். 'ரிக்கார்டிங்ல பாடும்போது பேக்ரவுண்ட் மியூசிக் வர்றப்போ அவர் வெளியே போய் ரெண்டு தம் அடிச்சிட்டு வருவார்’னு லதாம்மா சொல்லுவாங்க. 90 வயசு வரை இருந்த மன்னாடே, 60 வயசு வரை ஸ்மோக்கர். ஸ்மோக்கிங் நிச்சயம் பிரச்னை கொடுக்கும். ஆனா, இவங்களுக்குக் கொடுக்கலை. ஏன்னா, வித்தியாசமா விதிவிலக்கா சிலர் இருப்பாங்கள்ல.

நான் ஒருத்தருக்கும் தெரியாம ஹை ஸ்கூல் டேஸ்ல இருந்து 35 வயசு வரை ஸ்மோக் பண்ணிணேன். பிறகு, ஒட்டுமொத்தமா நிறுத்திட்டேன். அதே போல ஆல்கஹால்... தொண்டைக்கு மட்டும் இல்லை, உடம்புக்கே கெடுதல். ஆனா, நான் சோஷியல் டிரிங்கர். I enjoy my drink and i know my limitation. அதே சமயம் என் தொழில் எனக்குத் தெய்வம். இருக்கிற ஃபிரேமுக்குள்ள நம்ம வாழ்க்கையை அழகா அனுபவிக்கணும்.

உடனே, 'அட... பாலுவே இப்படில்லாம் இருந்திருக்கார். நாம பண்றது ஒண்ணும் தப்பில்லை’னு யாரும் நினைச்சுடக் கூடாது. இறைவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வரம் கொடுத்திருக்கான். எனக்கு இறைவன் கொடுத்த வரம், என் குரல் வளம்!''

“தாய்க்கும் தாய்மொழிக்கும் ஒரே மரியாதை கொடுங்க..!”

நவநீதகிருஷ்ணன், புதுக்கோட்டை.

''நீங்கள் இசையமைத்த அனைத்து படங்களும் மியூசிக்கல் ஹிட். ஆனாலும், ஏன் தொடர்ந்து இசையமைக்கவில்லை?''

''தமிழ்ல 'சிகரம்’, ரஜினி சார் நடிச்ச 'துடிக்கும் கரங்கள்’, 'தையல்காரன்’னு நாலைஞ்சு படங்கள்தான் மியூசிக் பண்ணியிருப்பேன். ஆனா, எல்லா மொழிகள்லயும் சேர்த்து சுமார்

70 படங்கள் மியூசிக் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறேன். இதுல, நெஞ்சு மேல கை வெச்சு சொல்றேன், எந்த ஒரு படத்திலுமே மியூசிக் சரியில்லைன்னு யாரும் சொன்னது இல்லை.

தமிழ்ல நான் பண்ணினதுல 'சிகரம்’ எனக்கும் இசை ரசிகர்களுக்கும் பிடிச்ச படம். அனந்து சார் இயக்கத்துல பாலசந்தர் சார் தயாரிச்ச படம் அது. அதுல கே.பி. சார்தான் வற்புறுத்தி என்னை மியூசிக் பண்ணவெச்சார். படம் சரியா ஓடலைனாலும், 'நல்ல இசை’னு அங்கீகாரம் கிடைச்சுது. அந்தச் சமயத்தில் தினமும் ஒரு நாளைக்கு அஞ்சு ஆறு பாட்டு பாடிட்டு இருந்தேன். அதனால ராத்திரி     9 மணிக்கு மேலதான் உட்கார்ந்து மியூசிக் கம்போஸ் பண்ண முடியும். இப்படியே நாலைஞ்சு நாள்ல எல்லாப் பாட்டுக்கும் ரிக்கார்டிங் பண்ணிட்டோம்.

அடுத்து கே.பி. சார் 'அழகன்’ படத்துக்கும் என்னையே மியூசிக் பண்ணச் சொன்னார். ஆனா, மியூசிக் கம்போஸிங்குக்கு அவரோட உட்கார்ந்து பேச நேரம் இல்லாம ஓடிட்டு இருந்தேன். அனந்து சார்கிட்ட உரிமையா நேரம் கேட்ட மாதிரி, கே.பி. சார்கிட்ட கேட்க முடியாது. அவர் எப்ப உட்கார்றாரோ நானும் அப்ப உட்காரணும். எனக்குப் பயமா இருந்துச்சு. என் கஷ்டத்தைச் சொன்னேன். 'அப்ப நீயே வேற யாராவது ஒருத்தரை சஜஸ்ட் பண்ணு’னு சொன்னார். நான் மரகதமணியை சஜஸ்ட் பண்ணேன். பிரமாதமான பாடல்கள் தந்தார் மரகதமணி. இப்படி நேரம் கிடைக்காத காரணத்தால்தான் நான் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்க முடியலை!

இன்னொண்ணு, ஒரு ஹிட் படம்தான் நல்ல இசையை ரசிகர்களிடம் இன்னும் ரீச் பண்ண வைக்கும். நான் நல்ல மியூசிக் தந்திருந்தாலும் பெரிய வெற்றிப் படங்களுக்கு மியூசிக் பண்ணலை. அதனாலும் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம்!''

ஆரோக்கியதாஸ், தூத்துக்குடி.

''சினிமாவுக்குப் பாடுவது, டப்பிங் பேசுவது, பக்திப் பாடல் ஆல்பம் வெளியிடுவது, டி.வி. ஷோக்களில் இளம் பாடகர்களை ஊக்குவிப்பது... எஸ்.பி.பி-யை எது இப்படி இயங்கவைத்துக் கொண்டே இருக்கிறது?''

''பாடுறது, மியூசிக் பண்றது, டப்பிங், நடிப்பு... எதையுமே நான் என்ஜாய் பண்ணிப் பண்றேன். 18 வருஷமா தெலுங்கில் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு ஆங்கர் பண்ணிட்டு இருக்கேன். அது குழந்தைகள் பங்கெடுக்கும் மியூசிக் ஷோ. அந்த நிகழ்ச்சியில் இருக்கும்போது குழந்தைங்களோட குழந்தையா ஆகிடுவேன். என் எல்லாப் பழைய பாடல்களையும் அவங்க ரீவைண்ட் பண்றாங்க. 'நான் என்னென்ன தப்புகள் பண்ணியிருக்கேனோ, அதை நீங்க பண்ணாதீங்க’னு சொல்லி அவங்களுக்குக் கத்துக்கொடுக்கிறேன். அவங்ககிட்ட இருந்தும் கத்துக்கிறேன். அவங்க பாடுற மாதிரி என்னால சில பாடல்களைப் பாட முடியலை. நான் பாடின பல பாடல்களை அவங்க அவ்வளவு அழகா இம்ப்ரூவைஸ் பண்ணிப் பாடுறாங்க. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கிடைக்கும் எனர்ஜியை வெச்சு சில நாள்களை ஓட்டிருவேன்!

உடம்புல சக்தி இருக்கும்போது வேலை கிடைக்காது; வேலை கிடைக்கும்போது உடம்புல சக்தி இருக்காது. ஆனா, இந்த வயசுல எனக்குக் கடவுள் சக்தியும் கொடுத்திருக்கார்; வேலையும் கொடுத்திருக்கார். இதைவிட ஒரு மனுஷனுக்கு வேற என்ன சார் வேணும்? நான் பாட ஆரம்பிச்சு இந்த 48 வருஷத்துல, தவறான  விமர்சனம் எதுவும் இல்லாம, யார்கிட்டயும் ஒரு கெட்ட வார்த்தை வாங்காம இப்பவும் பாடிட்டு இருக்கிறதுக்கு... நான் வரம்தான் வாங்கி வந்திருக்கேன்.

'சரி... அடுத்து என்ன?’னு கேட்டா, இன்னும் ரெண்டு வருஷம் பாடணும். அதாவது 50 வருஷம் வரைக்கும் பாடினால் போதும்கிறது என் ஆசை. அப்புறமும்கூடப் பாடலாம்... ஆனா, அப்ப நான் கொஞ்சம் அப்படி, இப்படிப் பாடினால்கூட அறிமுக இசையமைப்பாளர்கள், 'சார் ரொம்ப அழகா இருக்கு’ - என, என் சீனியாரிட்டியை மனசுல வெச்சு கரெக்ஷன் சொல்லச் சங்கடப்பட்டு ஓ.கே. சொல்லிட்டா... அது பெரிய கொடுமை இல்லையா? நம்ம பாட்டு மத்தவங்க ளுக்குக் கரகரப்பாக் கேட்கிறதுக்குள்ள நிப்பாட்டிடணும்னு வேண்டிட்டு இருக்கேன்!''

நவீன், சென்னை.

''வட இந்தியப் பாடகர்கள், தமிழ் மொழியைக் கடித்துக் குதறுவது போல பாடும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?''

'' 'பாம்பே சிங்கர்ஸ் ஏன் தமிழ்ல பாடுறாங்க?’னு நீங்க கோபப்பட்டா நான் பதில் சொல்லியிருக்க மாட்டேன். ஏன் நாங்க வெவ்வேறு மொழிகளில் பாடலையா? உலகம் முழுக்க இருக்கும் பிரமாதமான பாடகர்கள் நம்ம மொழியில் பாடுறது நல்ல விஷயம்தான். யாரை வேணும்னாலும், எங்கே இருந்து வேணும்னாலும் கூட்டிட்டு வந்து பாட வைங்க. ஆனா, அவர் பாடுற பாட்டு நம்ம மொழியில் சுத்தமா இருக்கணும். யாரோ ஒருத்தர் வந்து நம்ம வீட்டு ஹால்ல அசிங்கம் பண்ண அனுமதிப்போமா?

இது எவ்வளவு முக்கியமான பிரச்னைனா, வீட்ல அம்மா சேலை கட்டி குங்குமப்பொட்டு வெச்சு பாந்தமா இருப்பாங்க. பார்த்தவுடனே கையெடுத்துக் கும்பிடுறோம். அவங்க தூங்கும்போதும் சரி, மார்க்கெட்டுக்குப் போகும்போது சரி அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, ஒரு வித்தியாசத்துக்கு அம்மாவை ஸ்விம் சூட்ல பார்க்கணும்னு ஆசைப்படலாமா? அதை 'வெரைட்டி’னு சொல்ல முடியுமா? அப்படி தாய்க்கு கொடுக்கிற மரியாதையை, தாய்மொழிக்கும் நாம கொடுக்கணும். ஒவ்வொரு மொழியும் இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து இத்தனை கோடி மக்கள்கிட்ட புழங்குறதுக்கு எத்தனை பேர் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருப்பாங்க. அந்த மொழிக்கு நம்ம பங்குக்கு கௌரவம் கொடுக்கணும். அது முடியலைனாலும் அசிங்கப்படுத்தாம இருக்கிறதே பெரிய கடமைதானே!''

- நிலாவுடன் பேசலாம்...

• ''உங்கள் பாடல் கரெக்டாக செட் ஆவது கமலுக்கா அல்லது ரஜினிக்கா? உங்கள் மனம் திறந்த பதில்...''

''உலகைப் பலமுறை சுற்றியவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன், இந்த உலகில் உங்களுக்குப் பிடித்த நாடு எது... ஏன்?''

''எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர்... இருவரும் குரலின் சிறப்புகளை சாமானியர்களான எங்களுக்கும் புரியும் வகையில் உதாரணத்துடன் சொல்லுங்களேன்..!''

- அடுத்த வாரம்...

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism