Published:Updated:

ஆறாம் திணை - 84

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 84

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:

'டாக்டர் கூகுள்’... மருத்துவர்களுக்குச் சவாலாக அவதரித்துள்ள நவீன அவதாரப் புருஷன். தோசை மாவு அரைக்க அரிசிக்கு உளுந்து எவ்வளவு பங்கு என்பது முதல், நாஸ்டாக் பங்கு விவரம் வரை எதைக் கேட்டாலும் பதில் சொல்வார் கூகுளார்.

கிளி ஜோசியம், கிளியோபாட்ரா வயசு, கிளிமாஞ்சாரோ உயரம், எம்.ஹெச்.370 விமான ஸ்டேட்டஸ், எம்.பி.தேர்தல் ஹேஷ்யங்கள், ஏழாம் இடத்தில் இருக்கும் சனி எப்போது நகரும்?, ஏழுமலையான் அப்பாயின்ட்மென்ட் சனிக்கிழமை கிடைக்குமா..? இப்படி இணையத்துடன்தான் பலரின் பொழுதுகள்  விடியும்... முடியும்!

அதேசமயம், 'சார்... போன வாரம் நீங்க எழுதிக்கொடுத்த மாத்திரையை இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலை. நெட்ல பார்த்தா, பேங்கிரியாடைடிஸ் வரும்னு போட்டிருக்கு. அதான் உங்களை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்’னு எனப் பம்மிப் பதுங்கியோ அல்லது ரைட் ராயலாக நுனிநாக்கு ஆங்கிலத்திலோ 'ஃபேமஸ் டாக்டர்’களிடம் கேட்கத் தொடங்கிவிட்டார்கள் நம் நெட்டிசர்கள். அந்த ஃபேமஸ் மருத்துவரோ, 'அப்ப நெட்லயே வைத்தியம் பண்ணிக்கோங்க.. இங்க ஏன் வர்றீங்க?’ எனச் சிரித்துக்கொண்டே (உள்ளுக்குள் செம எரிச்சலுடன்) பதில் அளிக்க, தேமே என்று குழம்பி நிற்பவர்கள் அதிகம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 84

'அப்படி என்ன தப்பாக் கேட்டுட்டோம்? இன்டர்நெட்ல நல்ல சைட்ல பார்த்துத்தானே சந்தேகம் கேட்கிறோம். அதுக்கு ஏன் இப்படிக் கோபிச்சுக்கணும்?’ - 'ஃபேமஸ் மருத்துவரின்’ பரிந்துரையில் திருப்தி இல்லாத நவீன நோயாளிகள் ஒரு பக்கம். 'ஐந்து வருடப் பட்டப்படிப்பு, மூன்று வருட முதுகலை, இன்னொரு மூன்று வருட சிறப்புப் பாண்டித்தியம், 10 வருட பயிற்சி அனுபவம்... என அனைத்தையும் வைத்து கேள்விகள் கேட்டு, உடலில் நோய் பாதித்த இடங்களையும் தொட்டு முழுமையாகச் சோதித்து, நிறையவே யோசித்து உனக்கான மருந்தை நான் பரிந்துரைக்கிறேன். அதில் குற்றம் கண்டுபிடிக்கும் கூகுளுக்கோ கோகுலுக்கோ நான் எதற்குப் பதில் சொல்ல வேண்டும்?’ எனும் கோபத்தில் குமுறும் மருத்துவர் கூட்டம் இன்னொரு பக்கம்.

இந்த இரு தரப்புகளுக்கும் நடுவில் ஒருவரை கொஞ்ச நாட்களாகக் காணோம். அவர்தான் ஃபேமிலி டாக்டர். ஃபேமஸ் டாக்டர்களை மட்டுமே தேடும் உலகில் அவர் காணாமலே போய்விட்டார். குடும்ப மருத்துவர் இருந்திருந்தால், 'டாக்டர் கூகுள்’ அவர்களின் ஆதிக்கம் நிறையவே குறைந்திருக்கும்.

நம்பிக்குறிச்சி வயக்காட்டில் விளைந்த கொல்லாம் பழத்தையும் மாம்பழத்தையும் மஞ்சள் பையில் போட்டுக்கொண்டு, சாத்தான்குளம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில், நவநீதன் டாக்டரிடம் தாத்தாவுடன் சென்று மருந்து வாங்கும்போது ஏகக் கூட்டத்துக்கு நடுவிலும், 'என்ன... மக புள்ள பேரனா இவன்? கடைசிப் பய ஸ்டேஷன் மாஸ்டர் ஆயிட்டான் போல. சண்முகமும் நானும் கிரிக்கெட் மேட்ச் பார்க்க அடுத்த வாரம் மெட்ராஸுக்குப் போறோம்’ என உரையாடிக்கொண்டே வலிக்காமல் ஊசி போட்ட எங்கள் குடும்ப மருத்துவர், 35 வருடத்துக்குப் பிறகு இன்றும் நினைவில் நிற்கிறார். வீட்டில் கல்யாணம், காது குத்து, வரப்புச் சண்டை... என எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் அந்த டாக்டர் மாமா வருவார். அப்படி அன்னியோன்னியமாக இருந்த மருத்துவர்-நோயாளி உறவு, இப்போது அவசர உலகில் அநேகமாகக் காணாமல் போனதில்தான், கூகுள் மாமா ஸ்டதெஸ்கோப் மாட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டார்!

ஆறாம் திணை - 84

கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர் எனக் கொண்டாடிய மரபு நம்முடையது. இப்போது இரண்டு பேரையுமே கொஞ்சம் அலசிப்பார்க்கும் பகுத்தறிவைப் பெற்றதில், கடவுள் கம்பெனி பப்ளிக் லிமிடெட் நடத்துவோருக்கும், மருத்துவர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நடத்துவோருக்கும் கோபம் அதிகம்.

ஆறாம் திணை - 84

'தலை பயங்கரமா வலிக்குதே’ என இணையத்தில் தட்டச்சினால், அது 'அஸ்ட்ரோ சைட்டோமா’ எனும் மூளைப்புற்றுக் கட்டியாக இருக்கலாம் என அடுத்த நொடியே பதற வைக்கிறது. ஆனால், தலைவலிக்கான காரணம், முந்தைய நாள் கணவர் கடுகடுத்த வார்த் தைகள்தான் என்பதை இணையம் புரிந்துகொள்ளச் சாத்தியம் இல்லை. ஆனால், வீட்டின் உறவுகள் அதன் விரிசல்கள் தெரிந்த குடும்ப மருத்துவர் இந்த மன உளைச்சலைப் புரிந்துகொள்வார்.

'நல்லாத் தூங்கினயா? வீட்ல என்ன பிரச்னை?’ என்று சிநேகபாவத்துடன் ஆரம்பிப்பார். 'போன வாரமும் இதே தலைவலினு வந்தியே... அப்போ ஜலதோஷமும் இருந்துச்சே. இப்பவும் ஜலதோஷம் இருக்கா? தலைவலியோட வாந்தியும் வருதா?’ என நம் உடலில் முந்தைய வரலாற்றுடன் குடும்பப் பின்னணியைப் புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்க்க முற்படுவார்.

சமீபத்திய ஆய்வில், மருத்துவ ஆலோசனைகளுக்குக் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தவறான வழிகாட்டுதலைத் தருவதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது இணையம். இதன் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிச் செல்லும் அடுக்குமாடி பெரு மருத்துவ மனையின் பிரபல மருத்துவருக்கு, நம் குடும்ப விவரங்களை எல்லாம் யோசிக்கவே நேரம் இருக்காது. 'எதுக்கும் எம்.ஆர்.ஐ. எடுத்துப் பார்த்திரலாமே!’ என்பதில்தான் அவரின் கரிசனம் தொடங்கும்.

பெரிய மருத்துவமனையின் வணிகக் கணக்குகளில் 100 படுக்கை மருத்துவமனை கட்ட, 100 கோடி முதலீடு தேவையாம். ஒரு படுக்கைக்கு ஒரு கோடி கணக்கு. ஒரு நோயாளியிடம் ஒரு நாளைக்கு அந்த முதலீட்டுக்கான வட்டியும் முதலும் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில், 'Evidence based medicineன் சூத்திரங்கள் அடிப்படையில்தான் நோயாளிகளுக்குச் சிகிச்சை

ஆறாம் திணை - 84

அளிக்கிறோம்’ என பெரிய மருத்துவமனை நிறுவனங்கள் சொல்ல, அந்தச் செலவைச் சமாளிக்க முடியாதவர்களும் கூகுள் மாமாவிடம்தான் சரண்டர் ஆகிறார்கள்.

உலகச் சுகாதார நிறுவனம், '1,000 பேருக்கு ஒரு மருத்துவராவது குறைந்தபட்சம் இருக்க வேண்டும்’ என சொல்ல, 'வல்லரசு படிக்கட்டில் கால் வைத்துவிட்டோம்’ எனத் தம்பட்டம் அடிக்கும் இந்தியாவில், இன்னும் 2,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். அதிலும் பெருவாரியானவர்கள் நகர்ப்புறத்தில் மட்டும் செயல்படுகிறார்கள். இந்த அத்தனை நெருக்கடிகளும் சேர்ந்து, வணிக உலகில் குடும்ப மருத்துவரைக் காணாமல் செய்துவிட்டன. இப்போது இணையத்தில் மருத்துவத்தைத் தேடுவதை விட்டுவிட்டு, அறம் சார்ந்து மருத்துவம் செய்யும் மருத்துவரைத் தேடுவதுதான் காலத்தின் கட்டாயம். அந்தக் குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலில் நம் மருத்துவத் தேடல் தொடங்குவது மட்டுமே, சுபமான நல்வாழ்வுக்கான தொடக்கமாக இருக்கும்!

- பரிமாறுவேன்...