Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 26

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 26

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

இவன் அவனாகும் அத்தியாயம்

'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!’

- கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை’ தொகுப்பில் இருந்து)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான்? அவன் இன்னும் தன்னைச் சின்னப் பையனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறானா என்ன? அவனிடம் யாராவது போய், 'நீ சிறுபிள்ளை இல்லை; உனக்கு வயதாகிவிட்டது’ என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அவனது பால்ய காலத்தைப் படம் வரைந்து காட்டி அந்த மாயக்கோட்டுக்குள் உங்களையும் இழுத்து விடுவான்.

பால்ய கால நினைவுகள் மிகவும் சிக்கலானவை. உண்மையில், கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தைத்தான் விரும்பிப் பார்க்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களை மட்டுமா பார்க்கிறீர்கள்? தயவுசெய்து இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் கண்ணாடியில் உங்கள் பிம்பத்தை உற்றுப் பாருங்கள்.

பிம்பம் என்பது என்ன? அது நினைவுகளின் நிழற்கூடு. எந்த நினைவுகளும் அற்று உங்கள் பிம்பத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. அந்தப் பையனின் பால்ய வலையில் இருந்து நீங்கள் தப்பித்துவிட்டீர்கள். ஆனால் அப்படி எல்லாம் நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால், நீங்கள் அவனைக் காப்பாற்ற வந்திருக்கிறீர்கள், தப்பித்து ஓட அல்ல. அவனுக்கு இருக்கும் முதல் பிரச்னையே, அவன் எதற்கெடுத்தாலும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறான். கன்னங்களில் நீர்க்கோடு வந்து விழுகிறது.

அவன் எதற்கு அழுகிறான் என்ற காரணத்தை நீங்கள் அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. அதுபோலவே அவன் எதற்குச் சிரிக்கிறான் என்பதையும். முதல்முறையாக அவன் தாய் இறந்தபோது, அந்த வலி தெரியாமல் அழுதான். அதற்குப் பிறகு அவன் ஸ்கேல், ரப்பர், பென்சில், நெல்லிக்காய் சேர்த்து வைத்திருந்த ஜாமென்ட்ரி பாக்ஸ் தொலைந்தபோது தெரிந்து அழுதான். ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி இறந்ததற்கு அழுததையும், புத்தகத்தில் மறைத்துவைத்த மயில் இறகைப் போல் முதல் காதல் தொலைந்ததற்கு அழுததையும், கல்லூரியின் இறுதி நாளில் பிரியத்துக்குரிய நண்பர்களைப் பிரிந்ததற்கு அழுததையும், அவன் அழுகையின் கணக்கில் சேர்க்காதீர்கள். அது எல்லோருக் குமான அழுகை.

வேடிக்கை பார்ப்பவன் - 26

அவன் பிரச்னையே வேறு. பால்கனி ரோஜாச் செடி பட்டுப்போனால் அழுவான். அவன் பிள்ளை, இவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து, 'நீங்கதான்ப்பா இந்த உலகத்திலேயே பெஸ்ட் அப்பா’ என்று சொன்னால் அழுவான். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு மறைந்த இயக்குநர் இராசுமதுரவனின் 'மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தை ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அவன் அழுதுகொண்டே இருந்தான். 'இந்தப் படத்தைப் பார்க்காதீங்க. அழுவீங்கனு சொன்னேன்ல’ என்று மனைவி முறைத்ததும், அவன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

இப்படி... பல படங்களைப் பார்த்து அழுவதும், அவன் மனைவி முறைப்பதும் அவர்களுக்கு வாடிக்கை. ஊரின் டென்ட் கொட்டாயில் மணல் குவித்து அமர்ந்து படம் பார்க்கையில் அத்தைகளுடனும், பக்கத்து வீட்டு அக்காக்களுடனும் அழுத அனுபவங்களை அவன் இன்னும் நெஞ்சில் சேர்த்து வைத்திருக்கிறான். அவன் தகப்பன் இறந்தபோது அழுத கதை தனிக் கதை. அது தீராக் கதை.

ண் பிள்ளைகள் அழக் கூடாது என்று யாரும் அவனுக்கு அறிவுரை சொல்லிவிடாதீர்கள். ஏனென்றால், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய அவன் கோபப்படக்கூடியவனாகவும் இருக்கிறான்.

'கண்ணீரில் ஆண்பால், பெண்பால் என்று ஒன்று உண்டா?’ என்று கிறுக்குத்தனமாகக் கேட்டு உங்கள் மேல் எரிந்து விழுவான்.

வேடிக்கை பார்ப்பவன் - 26

ஆண்கள் அழும் தருணங்களைப் பட்டியலிட்டுச் செல்வான். 'ஆண், பெண் என்று எல்லாக் குழந்தைகளுமே பூமிக்கு வருகிறபோது அழுதுகொண்டேதான் வருகின்றன. அது புரியாத முட்டாள் உலகம், அவர்களைச் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது’ என்று தத்துவம் பேசுவான். 'ஷாஜகானின் புன்னகையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஷாஜகானின் கண்ணீர்த்துளிகள்தான் வரலாற்றில் தாஜ்மகாலானது’ என்று கவிதை பேசுவான்.

அவனிடம் கவனமாக இருங்கள். உங்கள் சகோதரியோ, மகளோ, திருமணமாகி உங்களைவிட்டுப் பிரிந்த தருணத்தில், மொட்டைமாடித் தனிமையிலோ, தோட்டத்து மாமரத்தின் அடியிலோ மௌனமாகக் கதறி அழுத உங்கள் கண்ணீர்த்துளிகளை, அவன் கண்ணாடியாக்கி உங்கள் முன் காட்டுவான்.

இது சம்பந்தமாக அவன் இன்னொரு கவிதை சொல்வான். அதைக் கேட்டால் நீங்கள் மீண்டும் அழுவீர்கள். எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த 'சந்தால்’ பழங்குடி இனப்பெண் எழுதிய கவிதை அது. அந்தக் கவிதையில் ஒரு பெண் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று தன் தகப்பனிடம் சொல்கிறாள்:

  'அப்பா,
  உன் ஆடுகளை விற்றுத்தான்
  நீ என்னைப் பார்க்க வர முடியும்
  என்ற தொலைதூரத்தில்
  என்னைக் கட்டிவைக்காதே!
 மனிதர்கள் வாழாமல்
  கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில்
  மணம் ஏற்பாடு செய்யாதே!
காடுகள் ஆறுகள் மலைகள் இல்லா ஊரில்
செய்யாதே என் திருமணத்தை!
நிச்சயமாக
எண்ணங்களைவிட வேகமாய்
கார்கள் பறக்கும் இடத்தில்
உயர் கட்டடங்களும் பெரிய கடைகளும் உள்ள இடத்தில் வேண்டாம்!
கோழி கூவி பொழுது புலராத
முற்றமில்லாத வீட்டில்
கொல்லைப்புறத்திலிருந்து சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதைப் பார்க்க முடியாத வீட்டில்
மாப்பிள்ளை பார்க்காதே!
இதுவரை ஒரு மரம்கூட நடாத,
பயிர் ஊன்றாத,
மற்றவர்களின் சுமையைத் தூக்காத,
'கை’ என்ற வார்த்தையைக்கூட எழுதத் தெரியாதவன் கையில் என்னை ஒப்படைக்காதே!
எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில்
நடந்தே திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை!
இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் கேட்டு
நீ வர வேண்டும்!’

கவிதையைப் படிக்கையில் கனத்த மௌனம் கண்ணீர்த்துளியாக விழியோரம் திரள்கிறதா? உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.

வேடிக்கை பார்ப்பவன் - 26

'ஒவ்வொரு அடகுக்கடை கம்மல்களிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியமில்லாமல் கழட்டிக்கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி’

என்று அவன் எப்போதோ எழுதிய கவிதையைப் போலவே அவனது நெஞ்சிலும் ஏராளமான கண்ணீர்த்துளிகள் உலர்ந்துகொண்டிருக்கின்றன.

அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான். அவன் இன்றும் தன்னைச் சின்னப் பையனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறானா என்ன? அவனிடம் போய் யாராவது 'நீ சிறு பிள்ளை இல்லை. உனக்கு வயதாகிவிட்டது’ என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். அவனது பால்ய காலத்தைப் படம் வரைந்து காட்டி அந்த மாயக்கோட்டுக்குள் உங்களையும் இழுத்துவிடுவான்!

- வேடிக்கை பார்க்கலாம்...