Published:Updated:

“ராஜ வாக்கு பலித்தது!”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

விமலராஜன், ஃபேஸ்புக்

''உங்கள் குரல் கரெக்டா செட் ஆவது கமலுக்கா அல்லது ரஜினிக்கா? மனம் திறந்த பதில் ப்ளீஸ்...''

''இது எனக்குப் பெரிய கௌரவம்! எம்.ஆர்.ராதா சார், தேங்காய் சீனிவாசன் சார், சுருளிராஜன் சார்... அந்த மாதிரி வித்தியாசமான குரல்கள் உள்ளவங்களுக்குப் பாடும்போது, அவங்க குரலை மனசுல வெச்சு லைட்டா மிமிக்ரி பண்ணுவேன். அது பொருத்தமா இருந்தது. ஆனா, ஹீரோக்கள்ல எம்.ஜி.ஆர். அவர்களுக்கோ, சிவாஜி சாருக்கோ, ரஜினி, கமல்ஹாசனுக்கோ... நான் பாடுற மாதிரிதான் பாடுவேன்.

“ராஜ வாக்கு பலித்தது!”

ஒரு பாட்டு, ஒரு நடிகருக்கு ரொம்ப நல்லாப் பொருந்துச்சுனா, அது அந்தப் பாடகனுக்கு மட்டும் உரிய பெருமை இல்லை. உதாரணமா ரஜினி சாருக்குனு ஒரு பாடிலாங்வேஜ் இருக்கும். பேசும்போது அவருக்கு வித்தியாசமான ஒரு டைமிங் இருக்கும். அதையெல்லாம் மனசுல வெச்சு நான் பாடணும். அதுக்கு ஏத்த மாதிரி டியூன் அமையணும். வார்த்தைகளும் அழகாப் பொருந்தி நிக்கணும். இது எல்லாத்தையும்விட சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதுக்குத் தகுந்த மாதிரி பிரமாதமா பெர்ஃபாம் பண்ணணும். ஒரு பாட்டு 'ஹிட்’ ஆகிறதுல இவ்வளவு விஷயங்கள் இருக்கு.

'ரஜினி, கமல்... ரெண்டு பேர்ல யாருக்கு ரொம்பக் கச்சிதம்?’னு மனசுவிட்டுச் சொல்லச் சொன்னா, மோகன் அவர்களுக்கும் சிவகுமார் சாருக்கும் பாடும்போதும் என் குரல் அவங்களுக்கும் பொருத்தமாத்தானே இருந்தது?

இந்திய இசையுலக மகான் முகமது ரஃபி சார் பேசுறதைக் கேட்டீங்கனா, 'இவர் எப்படி பாட்டுப் பாடுவார்?’னு தோணும். அவ்வளவு சாஃப்ட்டா பேசுவார். ஏன்னா, அவருக்கு லோயர் ஃப்ரீக்வன்சி ரொம்பக் கம்மி. பேஸ் கிடையாது. மிட் ரேஞ்சுல இருந்து மேல் ரேஞ்சுல நிறையப் பாடுவார். ஆனா, அவர் பாடாத ஆர்ட்டிஸ்டே இல்லை.

தேவானந்த், அமிதாப் பச்சனுக்கு எல்லாம் கிஷோர்குமார் பாடினாத்தான் நல்லா இருக்கும்னு நினைச்ச காலகட்டத்துல, முகமது ரஃபி அவங்களுக்குப் பாடினார். கண்ணை மூடிக்கிட்டு பாடலை மட்டும் கேட்டா, சம்பந்தப்பட்ட நடிகர்களே பாடுற மாதிரி இருக்கும். அதுக்கு முக்கியமான காரணம், அனுபவிச்சு லயிச்சுப் பாடக்கூடிய அந்த டெடிகேஷன்.

நமக்குத் தெரியாமலேயே நமக்குள்ள ஒரு ஆர்ட்டிஸ்ட் இருப்பான். அவன், தான் நடிக்கிற மாதிரியே நினைச்சுட்டுத்தான் ஒவ்வொரு பாடலையும் பாடுவான். அந்த ஆத்மார்த்தமான முயற்சியை சம்பந்தப்பட்ட நடிகர்களும் புரிஞ்சுக்கிட்டு கேமரா முன்னால குரலுக்கு ஏத்த மாதிரி நடிப்பாங்க. இந்தக் கூட்டு முயற்சிதான் எங்களைப் போலப் பின்னணிப் பாடகர்களுக்கு அந்தப் பாராட்டுகளைக் குவிக்குதுனு நினைக்கிறேன்!''

பரணீதரன் விஸ்வா, ஃபேஸ்புக்

''உலகைப் பல முறை சுற்றியவராயிற்றே நீங்கள்... உங்களுக்குப் பிடித்த நாடு எது... ஏன்?''

''அப்படி எல்லாம் நினைக்காதீங்க... நான் பார்க்காத நாடுகளே இன்னும் நிறைய இருக்கு! ஜப்பான், ரஷ்யா, இத்தாலி, பல ஐரோப்பிய நாடுகளுக்கு நான் இன்னும் போனதே இல்லை. இதெல்லாம் பார்க்காம உலகத்துலயே பிடிச்ச நாடுனு நான் எப்படிச் சொல்ல முடியும்?

ஆனா, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுற்றுப்புறத்தைச் சுத்தமா வெச்சிருக்கிற நாடுகள்ல நியூசிலாந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்கு முதல் காரணம், கல்வி அறிவு. இன்னொண்ணு அங்கே ஜனத்தொகை ரொம்பக் கம்மி. தண்ணியை, பசுமையை அவங்க பாதுகாக்கிற விதம் நாம எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம். அந்த நாடு எவ்வளவு சுத்தமா இருக்குனா, நாம நடந்தா அந்த இடத்துல ஏதாவது கறை விழுந்துடுமோனு பயப்படற அளவுக்குச் சுத்தமா இருக்கும்! புறத்தொல்லைகள் இருக்காதுனு தவம் பண்றதுக்கு மகான்கள் பனிமலைச் சார்ந்த பகுதிகளுக்குப் போவாங்களே... பட்சிகளின் சத்தங்கள், ஆறு சலசலக்கும்¢ சத்தம், மூங்கிலுக்குள்ள காத்து புகுந்து வரும் கீதம்னு... அப்படியான சூழலை நியூசிலாந்து, சுவிட்சர்லாந்தில் உணர்ந்திருக்கேன். மத்தபடி, எங்கே போனாலும், அந்த ஊர் எப்படி இருந்தாலும் திரும்ப நம்ம ஊருக்கு வர்ற சந்தோஷமே தனிதான்!''

“ராஜ வாக்கு பலித்தது!”

செங்குட்டுவன் கந்தசாமி, ஃபேஸ்புக்

''எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர்... இருவர் குரலின் சிறப்புகளை, சாமானியர்களான எங்களுக்கும் புரியும் வகையில் உதாரணத்துடன் சொல்லுங்களேன்..!''

''ஜானகியம்மா என்கிட்ட பகிர்ந்துகொண்ட சில அனுபவங்களை மனசுல வெச்சுட்டுச் சொல்லும்போது அவங்களுக்கும் லதா மங்கேஷ்கர் ஒரு ரோல்மாடலா இருந்திருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம். சின்ன வயசுல லதாம்மா பாடல்களைத்தான் மேடை கள்ல தத்ரூபமாப் பாடுவாங்களாம் ஜானகியம்மா. 'அப்படியே பாடுறேம்மா’னு பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணியிருக்காங்கனு ஜானகியம்மா சொல்லக் கேட்டிருக்கேன்.

பொதுவா, இந்திப் படங்களுக்குப் பாடும்போது குரல் ரொம்ப சிம்பிளா இருக்கணும். இங்கே மாதிரி கமகம், இம்ப்ருவைசேஷன் பண்ண வேண்டாம்னு அங்கே சொல்லிடுவாங்க. ஏன்னா, சினிமா பாட்டு ரொம்ப ஸ்ட்ரெயிட்டா இருந்தாத்தான் அதைக் கேட்கும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப அவங்களே அந்தப் பாடல்களைப் பாடுவாங்க. அப்பத்தான் நிறையப் பேருக்குப் பாடல் ரீச் ஆகும்னு அங்கே ஒரு நம்பிக்கை. அதனால் பாடல் வரிகள்ல ரொம்ப இன்வால்வ் ஆகி எக்ஸ்பிரஷன் கொடுக்க வேணாம். மியூசிக்கலா இருந்தாப் போதும்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட காலகட்டத்துல இசையமைப்பாளர்கள் சொல்ற மாதிரி லதாம்மா ஆணி அடிச்சது போலப் பாடுவாங்க. ஆனா, இயல்பா, ரொம்ப இயற்கையா அவங்க குரல்ல அதிஅற்புதமான ஒரு தேஜஸ் இருக்கும். அது மொழி புரியாதவங்களைக்கூட இம்ப்ரஸ் பண்ணும்.  

ஆனா, இங்கே சவுத்ல வார்த்தைகள் ரொம்ப எக்ஸ்பிரஷிவா இருக்கணும். யார் நடிக்கிறாங்களோ அவங்களை மனசுல வெச்சுக்கிட்டுப் பாடணும்னு எதிர்பார்ப்பாங்க. அந்தச் சூழ்நிலையில் எனக்குத் தெரிஞ்சு ஜானகியம்மா அளவுக்கு ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவிச்சுப் பாடுறவங்க வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. ஒரு எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்கும் நடுவுல இருக்கிற எக்ஸ்பிரஷனில்கூட ஜானகியம்மா குரல் ஸ்பஷ்டமா இருக்கும். அது எப்படினு இப்போ வரை எனக்கு ஆச்சரியம்தான்! இத்தனைக்கும் அவங்க பாடும்போது பார்த்தா, அவங்ககிட்ட சின்ன அசைவுகூட இருக்காது. ஏதோ ஒரு சிலை மைக் முன்னால நிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா, அவங்க குரல்ல கொடுக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் அதிசயமானது!

இங்கே ஒரு விஷயம் நிச்சயம் சொல்லணும்... பாடவேண்டிய சூழ்நிலையை வெச்சுத்தான் இந்த இரண்டு இமயங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனா, இவங்களை ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாதுனு நான் சொல்வேன். யாரும் யாருக்கும் கம்மி இல்லை; யாரும் யாருக்கும் ஜாஸ்தியும் இல்லை!''

“ராஜ வாக்கு பலித்தது!”

அ.ஜெயராஜ், திருமுக்காடு

''எந்தத் துறையிலும் அறிமுகமாகும் வாரிசு அவரது முன்னோரோடு ஒப்பிடப்படும் சவாலை எதிர்கொண்டே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் வாரிசு சரண் எப்படி?''

 ''நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. என் பையன் சரண் பாட வந்தப்ப, நான் பாட ஆரம்பிச்சு 10 வருஷம் கழிச்சு பண்ண சாதனைகளை அவன் முதல் பாட்டுலயே படைக்கணும்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. 'எஸ்.பி.பி. பையனுக்கு அவர் திறமையில 90 சதவிகிதமாச்சும் இருக்காதா...’னு பேசினாங்க. அது மட்டுமில்லாமல் அவன் குரலும் என் குரல் மாதிரியே இருக்கிறது, ஒரே சமயத்துல ப்ளஸ்ஸாகவும் மைனஸாகவும் இருந்தது. 'சார், அவர் அவங்க அப்பா மாதிரியே பாடுறாரே’னு சரணைப் பத்தி சில இசையமைப்பாளர்கள் சொல்லியிருக்காங்க!

சரண், பெரிய இசைமேதைனு சொல்ல மாட்டேன். ஆனா, அவனுக்கு இருக்கிற திறமைக்கு அவனுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் வரலைங்கிற ஏக்கம் எங்க ரெண்டு பேருக்குமே உண்டு. அதே சமயம், அது சரணோ, ஷைலஜாவோ யாருக்குமே நான் வாய்ப்புகளுக்காகச் சிபாரிசு பண்ணதே இல்லை. சரண், ஒரு நேர்முகத் தேர்வுக்கான க்யூவில் 11-வது ஆளா நின்னான்னா, எஸ்.பி.பி. மகனா அவன் அந்த க்யூவை கட் பண்ணிட்டு முதல் ஆளா தேர்வில் கலந்துகொள்ள வேணும்னா வாய்ப்பு கிடைக்கலாம். ஆனா, இன்டர்வியூவில் அவனோட சொந்தத் திறமையினால்தான் ஜெயிக்கணும்.

இதுதான் வாரிசுகள் எதிர்கொள்ளும் பிரஷர். அதையெல்லாம் தாண்டி வர்றது சாதாரண விஷயம் இல்லை. பாடுறது போல சரண் நிறைய விஷயங்கள்ல ஈடுபாடு வெச்சிருக்கான். ஒரு தயாரிப்பாளரா நிறையப் புதுமுகங்களை சினிமாவின் பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்தியிருக்கான். ஏதோ ஒருவிதத்தில் அவன் சினிமாவில் தொடர்ந்து இயங்கிட்டே இருக்கிறது எனக்குச் சந்தோஷம்!''

வீ.இளையராஜா, ஃபேஸ்புக்

''இளையராஜாவுக்கும் உங்களுக்குமான நட்பில் மறக்க முடியாத விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!''

''எத்தனையோ சம்பவங்கள் இருக்கே! ஆனா, அதெல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அப்புறம் அவர் பிஸி ஆகிட்டார். ரிக்கார்டிங் தவிர மத்த நேரங்கள்ல சந்திக்க வாய்ப்பு கிடைக்காமப் போயிருச்சு. ஆனா, ஒரு சம்பவம் இப்பவும் ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு.

மறுநாள் திங்கட்கிழமை. அவர் வெஸ்டர்ன் இசை சம்பந்தப்பட்ட எய்த் கிரேடு பரீட்சை எழுத வேண்டியிருந்தது. அதுக்கு முந்தின நாள் நான் பொள்ளாச்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஒப்புக்கிட்டேன். பரீட்சை காரணமா அந்த நிகழ்ச்சிக்கு வரலைனு ராஜா சொல்லிட்டார். 'போகும்போது டிரெயின்ல போயிடலாம். பொள்ளாச்சிக்கு வண்டி கொண்டுவரச் சொல்றேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் பொள்ளாச்சியில் இருந்து கார்ல புறப்பட்டு விடியற்காலை சென்னை வந்துடலாம். நீங்க பரீட்சை எழுதிடலாம்’னு சொன்னேன். ஏன்னா, அவர் இல்லாம அப்ப நிகழ்ச்சி பண்றது எனக்கு ரொம்பக் கஷ்டம். அப்படிப்பட்ட கிரேட் ஹார்மோனிஸ்ட் அவர். என் பேண்ட் லீடர்!

'சரி’னு ஒப்புக்கிட்டு வந்தார். நிகழ்ச்சி முடிஞ்சு என் அம்பாஸிடர்ல நான், இளையராஜா, மூன்று இசைக் கலைஞர்கள், டிரைவர்னு மொத்தம் ஆறு பேர் சென்னைக்குக் கிளம்பினோம். 'நீங்க இப்ப தூங்கி ரெஸ்ட் எடுங்க. நான் கொஞ்ச நேரம் ஓட்டுறேன். அப்புறம் நீங்க ஓட்டலாம்’னு சொல்லி நான் டிரைவ் பண்ணிட்டு வந்தேன். வழியில் காபி சாப்பிட வேலூருக்குள்ள போனோம். கிளம்பும்போது டிரைவர் வண்டி ஓட்ட ஆரம்பிச்சார். வெளியே வந்தப்ப ஒரு பையன் திடீர்னு குறுக்கே வந்துட்டான். அவன் மேல மோதாம இருக்க, டிரைவர் வண்டியை சட்டுனு திருப்ப, அது எலெக்ட்ரிக் கம்பம் மேல மோதி ரெண்டு, மூணு முறை உருண்டு பக்கத்துல இருந்த ஏரியில விழுந்து அப்பளமா நொறுங்கிடுச்சு. கண்ணாடியை உடைச்சிட்டு நாங்க வெளியே வந்தோம். தபேலா பிளேயர் மதுவுக்கு மட்டும் சின்ன அடி. மத்த அஞ்சு பேருக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

மறுநாள் சென்னையில் கோடம்பாக்கம் குவாலிட்டி ஹோட்டல்ல எங்கக் குழுவுல இருக்கிற எல்லாருக்கும் ராஜா ஒரு பார்ட்டி தந்தார். அன்னைக்கு அவர் சொன்ன வார்த்தை இன்னைக்கும் நல்லா ஞாபகம் இருக்கு. 'யோவ்... நாம அந்த ஆக்சிடெண்ட்ல பொழச்சதே பெரிய விஷயம். கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இதைப் பண்ணியிருக்கார். நாளையில இருந்து நம்ம முன்னேற்றம் ரொம்ப அமர்க்களமா இருக்கும். இதுக்கு அப்புறம் நமக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்’னு சொன்னார். அவர் சொன்னமாதிரி அவருக்கு, எனக்கு, எங்க டீம்ல இருந்த எல்லாருக்குமே நல்ல வாழ்க்கை, பெரும் புகழ் கிடைச்சது. அந்த விபத்தும் இளையராஜாவின் வேதவாக்கும் இப்பவும் என் மனசுல அடிக்கடி மின்னி மறையும்!''

- நிலாவுடன் பேசலாம்...

• ''பாடல் போட்டி ஒன்றில் ஒரு பெண் குழந்தை, 'டாடி மம்மி வீட்டில் இல்லை...’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்ததுமே கடுமையாகக் கண்டித்தீர்கள். உங்கள் ஆரம்ப காலப் பாடல்கள் பலவும் இரட்டை அர்த்தப் பாடல்கள்தானே... இப்போது மட்டும் ஏன் இந்தக் கோபம்?''

• ''புதிய தலைமுறை பாடகர்களில் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்கள் யார்... யார்?''

• ''பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இன்ட்ரோ சாங்ஸ் நீங்கதான் பாடுறீங்க. இது ரஜினி சென்ட்டிமென்ட் என நினைக்கிறேன். அதன் சுவாரஸ்யப் பின்னணி என்ன?''

- அடுத்த வாரம்...

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்’,  ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு