Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 27

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 27

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

பட்டாம்பூச்சி விற்ற கதை

''ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!''

- தி.க.சிவசங்கரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்’ நூலில் இருந்து...)

வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியில் பின் இணைப்பாக 'கவிதைப் புத்தகம் வெளியிட்டுப் பார்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்று, இவனுடைய கவிதைப் புத்தகங்களை வெளியிட நிறைய பதிப்பகங்கள் இவனை அணுகுகின்றன. முன்புக்கும் முன்பு இவன் ஏறி இறங்காத பதிப்பகங்கள் இல்லை.

''கவிதைப் புத்தகம் வெளியிடுவதைவிட ரெண்டு கழுதை வாங்கி நிறுத்துனா, புத்தக மூட்டையையாவது சுமக்கும். இதுல எல்லாம் லாபம் இல்லே தம்பி; பேசாம கவிதை எழுதுறதை விட்டுட்டு சமையல் குறிப்பு, ஜோதிடக் குறிப்பு, மருத்துவக் குறிப்புனு எழுதிட்டு வாங்க. தாராளமா நம்ம பதிப்பகத்திலேயே வெளியிடலாம்'' என்று ஒரு பதிப்பாளர், முகத்தில் அறைந்ததுபோல் சொன்னார்.

வெந்நீர் தயாரிப்பதைத் தவிர, இவனுக்கு வேறு எந்தச் சமையலும் தெரியாது. இவன் கட்டம் வரைந்தால் அது வட்டமாகவும், வட்டம் வரைந்தால் அது சதுரமாகவும் மாறிவிடுவதால் ஜோதிடக் குறிப்பைத் தவிர்த்து விட்டான். மருத்துவக் குறிப்புகள் என்று தலைப்பிட்டு அடிக்கோடிட்டபோது அறையெங்கும் மருந்து வாசம் கசிவதைக் கண்டு மிரண்டுபோய் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும் கவிதைக்கே திரும்பினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 27

வன் 10-ம் வகுப்புப் படிக்கும்போது அதுவரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'தூசிகள்’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடும் ஆசை வந்தது. அது ஆசை அல்ல, பேராசை என்று ஒவ்வொரு பதிப்பகமும் இவனுக்கு நிரூபித்தன. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, பச்சைக்கிளியின் கழுத்து சிமிழுக்குள் இவனுக்கான பணப்பையைப் பதிப்பாளர்கள் தொலைத்துவிட்டிருந்தனர்.

இன்று கவிதைப் புத்தகங்கள் ஓரளவுக்கு விற்கின்றன. கவிதைப் புத்தகங்களை வெளியிட, நிறைய பதிப்பகங்கள் உற்சாகமாக முன்வருகின்றன. 80-களில், பிரபலம் அல்லாதவர் கவிதைத் தொகுப்பை வெளியிடுவது தற்கொலைக்குச் சமம்.

பொண்டாட்டி, பிள்ளைகளின் நகைகளை அடகுவைத்து, ஆடு-மாடுகளை விற்று, வட்டிக்கு வாங்கி... என நிறைய கவிஞர்கள் தங்கள் முதல் தொகுப்பைச் சொந்தமாக வெளியிட்டு, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தது போக, விற்காத புத்தகங்களை, கட்டுக்கட்டாக வீட்டில் அடுக்கி வைத்திருப்பதை இவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான்.

வேடிக்கை பார்ப்பவன் - 27

ஆசை யாரை விட்டது? இவன் அப்பாவிடம் நச்சரிக்கத் தொடங்க, அவர் வட்டிக்குக் கடன் வாங்கி, நகைகளை அடகுவைத்து 'தூசிகள்’ என்ற இவன் முதல் கவிதைத் தொகுப்பை அச்சிட்டு, காஞ்சி இலக்கிய வட்டம் மூலமாக வெளியீட்டு விழாவும் நடத்தினான். உண்மையில் அந்தப் புத்தகம்தான் இவனுக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது.

அப்போது எல்லாம் இவன் 'காஞ்சி. நா.முத்துக்குமரன்’ என்ற பெயரில் எழுதுவான். உள்ளங்கை அளவுக்குச் சிறியதாக இருந்த இவன் முதல் புத்தகத்தில், இவ்வளவு நீளமான பெயரை அட்டையில் வைக்க இடம் இல்லை என்று அச்சுக்கோப்பவர் இவன் பெயரை நா.முத்துக்குமார் என்று சுருக்கியிருந்தார். இப்படியாக அந்தப் புத்தகம் இவனுக்குப் பேர் வாங்கிக் கொடுத்துவிட்டு, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்தது போக கட்டுக்கட்டாக வீட்டின் பரண் மேல் கிடந்தது. உண்மையில் தூசிகளின் இருப்பிடம் பரண்கள்தானே!

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., முடித்த பிறகு, மீண்டும் இவன் இரண்டாவது கவிதைத் தொகுப்பை வெளியிட நினைத்தான். எழுத்தாளர் சுஜாதா இவனது 'தூர்’ கவிதையை வாசித்த பிறகு, பரவலாகப் பல பத்திரிகைகளில் இவனது கவிதைகள் வெளிவந்து கவனிக்கப்பட்டன. அவற்றுக்கு எல்லாம் 'பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற தலைப்பிட்டு ஒரு சில பதிப்பங்களை அணுகினான். காலம், அப்போது முன்னேறியிருந்ததால் கவிதைகளை விட்டுவிட்டு 'கணிப்பொறி கற்பது எப்படி?’ என்று எழுதித் தரச் சொன்னார்கள். எலிப்பொறியின் தொழில்நுட்பம்கூடத் தெரியாத இவன், 'கணிப்பொறியை எப்படிக் கற்றுத்தரப் போகிறோம்?’ என்று மலைத்துப்போனான்.

''கவலைப்படாதே தம்பி, என்னுடைய 'சாரல்’ பதிப்பகம் மூலமாக உன் புத்தகத்தை வெளியிடுகிறேன். கொஞ்சம் காத்திரு'' என்று அறிவுமதி அண்ணன் ஆறுதல் சொன்னார். அவரது நிதிநிலைமையும் அப்போது மோசமாகத் தான் இருந்தது.

அறிவுமதி அண்ணன் கொஞ்சம் பணம் கொடுக்க, கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நந்தலாலா, ''பேப்பர் வாங்கும் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று சொல்ல, அறிவுமதி அண்ணன் நண்பரும், இவன் கவிதைகளின் ரசிகருமான, 'பூவுலகின் நண்பர்கள்’ தேவநேயன், இவனை தன் பைக்கில் அமரவைத்தது அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று கழுத்துச் சங்கிலியைக் கழட்டிக் கொடுக்க, கல்லூரி கவியரங்கத் தோழன் தமீம் அன்சாரி தன் சொந்த அச்சகத்தில் கடனுக்கு அச்சடித்துக் கொடுக்க, 'பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகம் வெளியானது.

'சமர்ப்பணம், 'புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு...’ என்று அதன் முதல் பதிப்பில் இவன் வலியுடன் குறிப்பிட்டிருந்தான்.

ரு பைசா செலவு செய்யாமல், 'பட்டாம்பூச்சி விற்பவன்’ வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடந்தது. அதற்குக் காரணம், இவனது குரு பாலுமகேந்திரா. ''இந்தப் புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டால் நன்றாக இருக்கும்'' என்று சொல்லி இயக்குநர் இமயம் பாரதிராஜா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இவனை அறிமுகப்படுத்த, ''பாலு... அன்னைக்கு 'தூர்’ கவிதையைப் படிச்சப்போ, 'யார் இந்த முத்துக்குமார்?’னு விசாரிச்சேன். கண்டிப்பா நான் வந்து வெளியிடுறேன். இந்த வெளியீட்டு விழாவுக்கான எல்லா செலவையும் நானே பார்த்துக்கிறேன்'' என்று இயக்குநர் பாரதிராஜா இவனை ஆச்சரியங்களுக்குள் தள்ளினார்.

வேடிக்கை பார்ப்பவன் - 27

புத்தகத்தை வெளியிட்டு, இவன் கவிதைகளைப் பற்றி, ''எங்கள் ஊர்ப் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து ஜோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும்; சிலருக்கு கெட்டது வரும், இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள்தான் வரும். அதிலும் அக்கா-தங்கை உறவைப் பற்றி ஒரு கவிதையில் படிக்கும்போது, எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்திருச்சு'' என்று கண் கலங்கி அவர் பேசியதை இவனால் மறக்க முடியாது.

புத்தகத்தின் பிரதியைப் பெற, மேடைக்கு வந்த இவன் அம்மாவைப் பெற்ற ஆயா, பாரதிராஜாவிடம் ''எம் பேரன்தாங்க, பத்திரமாப் பார்த்துக்கங்க'' என்று சொல்ல, ''இந்தக் கவிஞனின் பாட்டி என்னைக் கண்கலங்க வைத்துவிட்டாள். இதுதான் நம் தமிழ் மண்ணின் பாசம்'' என்று மேலும் உணர்ச்சிவசப்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையிலேயே ''எனக்கு 200 புத்தகங்கள் வேணும்'' என்று அதற்கான காசோலையை பாரதிராஜா கொடுத்தபோது, இவன் மேலும் ஆச்சரியப்பட்டான். அன்பின் அடைமழையை சின்னஞ்சிறு குடை எப்படித் தாங்கும்? அதற்கு அடுத்த வாரத்துக்குள் அவரது அலுவலகத்துக்கு வந்த அத்தனை இயக்குநர்களுக்கும் இவன் புத்தகத்தில் கையெழுத்திட்டு இயக்குநர் பாரதிராஜா கொடுக்க... இவன் கவிதை, திரையுலகில் உலா வரத் தொடங்கியது.

இன்று வரை விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் ஆணிவேருக்கு இத்தனை கரங்கள் நீர் ஊற்றியிருக்கின்றன.

-வேடிக்கை பார்க்கலாம்...