Published:Updated:

அறிவிழி - 60

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 60

அண்டன் பிரகாஷ்

Published:Updated:

ந்த வரியை உங்களது ஸ்மார்ட்போனில் படித்தீர்கள் என்றால், சற்றே கவனமாக அந்தச் சாதனத்தைப் பாருங்கள். அதை இயக்கத் தேவையான motherboard, தகவல்களைச் சேகரிக்கத் தேவையான மெமரி, சார்ஜிங் செய்யும், ஆடியோ கேட்க/பேசத் தேவையான துளைகள் என்ற அடிப்படையான ஹார்டுவேருடன், கேமரா, ரேடியோவுக்கான ஆன்டெனா, WiFi, புளூடூத், NFC வசதிகள் போன்றவை அதனுடனே இணைக்கப்பட்டு ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கும். இதில் பல்வேறு வசதிகளை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அவற்றை அலைபேசியில் வைத்திருக்கத்தான் வேண்டும். அதோடு, அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும்.

இதற்குப் பதிலாக, அடிப்படையான வசதிகள் கொண்ட அலைபேசி ஒன்றை முதலில் வாங்கிக்கொண்டு, தேவையான கூடுதல் வசதிகளை, தனித்தனி பகுதிகளாக வாங்கிப் பொருத்த முடிந்தால் எப்படி இருக்கும்?

Modular Smartphone என்று ஐடியா அளவில் இருந்த அலைபேசி சாதனம், விரைவில் சந்தைக்கு வருகிறது. அதைக் கொண்டுவரும் முதல் நிறுவனம் கூகுள். சில வருடங்களாகவே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்திய கூகுள், 'இப்போது வணிகரீதியில் இந்தச் சாதனத்தை அடுத்த வருடத்தில் கொண்டுவந்துவிடுவோம்’ என அறிவித்திருக்கிறது. Ara என பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சாதனத்தைப் பற்றிய அதிக விவரங்களுக்கு... www.projectara.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி - 60

கூகுளில் தொடங்கியதால், சென்ற வாரத்தில் நடந்த அதைச் சார்ந்த இன்னொரு செய்தியையும் பதிவு செய்கிறேன்.

கண்ணாடி அணிய விரும்பாதவர்கள் கண்ணில் அணிந்துகொள்ளும் கான்டாக்ட் லென்ஸுக்குள் இயங்கும் இரண்டு வசதிகளை, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறது கூகுள். முதலாவது கண்ணில் சேகரமாகும் நீரில் இருந்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கண்டறியும் தொழில்நுட்பம்.

கண்களை மூடித் திறக்கும்போது புகைப்படம் எடுக்கும் கேமராவைக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் இரண்டாவது!

இவை இரண்டும் எந்தச் சாதன வடிவில் வரும் என்பதை கூகுள் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அணிந்துகொள்ளும் தொழில்நுட்பப் பிரிவில் எந்தப் பாகத்தையும் கூகுள் விட்டுவைக்காது என்பது தெரிகிறது.

அறிவிழி - 60

கூகுள் கிளாஸ் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து, பிரைவசி பற்றிய கேள்விகள் ஃபேஸ்புக்கிலும் whatsApp-லும் கேட்கப்படுகின்றன. பிரைவசி பற்றி கவலைகொள்பவர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு புறம் இருக்க, பாதுகாப்பாகத் தகவல் பரிமாறிக்கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

நாம் அனுப்பும் தகவல்களைப் பெற்றுக்கொள்பவர்களது சாதனங்கள் திருடப்பட்டுவிட்டால், நமது தகவல்கள் தெரிய வந்துவிடுமே என்ற கவலைகொள்பவர்களுக்கு பல்வேறு அலைமென்பொருள்கள் வந்தபடி இருக்கின்றன. சமீபத்தில் பிரபலமாகி வருவது Wickr என்ற அலைமென்பொருள். ஆப்பிளின் iOS  சாதனங்களிலும், கூகுளின் Android  சாதனங்களிலும் தரவிறக்கிக்கொள்ள முடிகிற இந்த இலவச அலைமென்பொருள், தகவல் பாதுகாப்பை உச்சகட்டமாகக் கருதுகிறது.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ததும் உங்களுக்கென நீங்கள் உருவாக்கும் கணக்கில் கொடுக்கப்படும் கடவுச்சொல் முதற்கொண்டு அனைத்தும் encrypt செய்யப்படுகிறது. மற்ற தளங்களில் இருப்பது போல், கடவுச்சொல்லை மறந்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி Wickrல் கிடையாது. காரணம், உங்களது அலைபேசி சாதனத்தில் மட்டுமே கடவுச்சொல் சேமித்து வைக்கப்படுகிறது. ஒருவேளை மறந்துவிட்டீர்கள் என்றால், வேறொரு இ-மெயிலைப் பயன்படுத்திப் புதிய கணக்கைத்தான் உருவாக்க வேண்டும்.

Wickr மென்பொருளின் பயனீடு பிரமிக்கவைக்கிறது. யாருக்குத் தகவல் அனுப்ப வேண்டுமோ, அதை எழுத்து வடிவிலோ, புகைப்படமாகவோ அனுப்பலாம். அதைப் பெற்றுக்கொள்பவர்கள் விரலை வைத்து வார்த்தை வார்த்தையாகப் படிக்க முடியும். படித்து முடித்து சில நொடிகளில் அந்தத் தகவல் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும்.

அறிவிழி - 60

அமெரிக்க அரசாங்கத்தின் NSA போன்ற அமைப்புகள் எவ்வளவு முயன்றாலும், Wickr  மூலமாகப் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களைத் திருடுவது என்பது இயலாத காரியம் என்கிறது அவர்களது வலைதளம். இந்தத் தொழில்நுட்பத்தை உங்களது சாதனத்துக்குத் தரவிறக்கம் செய்துகொள்ள... www.mywickr.com

டெக் உலகம் மட்டுமல்லாமல், வணிக உலகமே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் அலிபாபா நிறுவனம் பொதுச் சந்தைக்கு வரும் IPO நிகழ்வு விரைவில் நிகழ்ந்துவிடும் போல தெரிகிறது. 70 சதவிகிதத்துக்கும் அதிகமான சீன மக்களைப் பயனீட்டாளர்களாகக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், நினைக்க முடியாத அளவுக்கு வணிக வளர்ச்சியை அடைந்திருக்கிறது. உலகில் இதுவரை நடந்த IPO-க்களைவிட இது பெரியதாக அமைந்து வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிகழ்வு, சில பில்லியனர்களையும் நூற்றுக்கணக்கான மில்லியனர்களையும் ஒரே நாளில் உருவாக்கப்போகிறது. அலிபாபாவின் 24 சதவிகித உரிமையாளராக இருப்பதால், மிகப் பெரிய புன்னகையுடன் IPO-ஐ வரவேற்க இருகரம் நீட்டித் தயாராகும் நிறுவனம்... யாஹூ!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism