Published:Updated:

ரியல்லி...!?

ரியல்லி...!?

டி.வி-யைக் காலையில் ஆன் செய்தால், எல்லா சேனல்களிலும் தென்படும் அழுவாச்சி சீரியல் நடிக நடிகையர்கள் கூவிக்கூவி நம்மை அழைக்கிறார்கள். சரி போலாமே ஊர்கோலம் என அவர்கள் ஏற்பாடு செய்த 'ஸைட் ஸீயிங்’குக்குச் சென்றேன். என்னா அடி!

'சென்னைக்கு மிக அருகே செங்கல்பட்டு நகராட்சிக்கு மிக அருகில் வீட்டுமனை விற்பனை’னுதான் அந்த விளம்பரத்தில் சொல்லி இருந்தாங்க. ஆனா, கிண்டி கத்திப்பாராகிட்ட எல்லோரையும் ஏத்திட்டுப் போக ரெடியா நின்ன வேன்ல 'திண்டிவனம் நகராட்சியில் வீட்டுமனை அதிரடி சலுகை’ என பேனர் தகதகத்தது. 'ஏங்க... போன்ல செங்கல்பட்டுனு சொன்னீங்க?’ எனக் கேட்டபோது, 'செங்கல்பட்டுதாங்க... பேனர் வேற இல்லை. அதான் பழைய பேனரைக் கட்டிட்டோம். சும்மா வாங்க’னு சொன்னார் பயணத்துக்கு ஏற்பாடு செய்தவர். செங்கல்பட்டைத் தாண்டியும் வண்டி சென்று கொண்டிருந்தபோதுதான் வண்டியில் சலசலப்பு.

சயின்டிஸ்ட்போல் வெண் குறுந்தாடியோடு இருந்த ஒருவர், ''திண்டிவனம் சைட்டைப் பாருங்க. பிடிச்சா உடனே புக் பண்ணிடலாம். சதுர அடி 99 ரூபாதான் சார்.  நேஷனல் ஹைவேயில் இருந்து ஒரு கிலோ மீட்டர்தான். ஃப்ரீயாத்தான் கூட்டிட்டுப் போறோம்'' என ஆசை வார்த்தை காண்பித்தார். தன் நிறத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத கலரில் சேலை கட்டிவந்த ஒரு ஆன்ட்டி தன் கணவரைப் பார்த்து, ''சரி. ஃப்ரீயாத்தானே கூட்டிட்டுப் போறாங்க. சும்மா ஒரு எட்டுப் பார்த்திட்டு வந்திடலாம்'' என தன் கணவரை இடித்தது. எல்லோரும் ஏக மனதாக ஆமோதிக்க வண்டி அச்சரப்பாக்கம் தொழுப்பேடு தாண்டி சீறிப் பாய்ந்து விழுப்புரம் மாவட்ட எல்லையைத் தொட்டும் போய்க்கொண்டிருந்தது. திண்டிவனத்துக்கு முன்பு கிளையாகப் பிரியும் மலையனூர் போகும் லோக்கல் சாலையில் குலுங்கிக் குலுங்கிச் சென்று ஒரு பனங்காட்டுக்குள் நின்றது. நல்லவேளை நிறுத்தினார்களே என நினைத்தால் வண்டி பிரேக்டவுனாம்.

ரியல்லி...!?

கொஞ்ச நேரம் கழித்து வண்டி கிளம்ப அடுத்த பத்தாவது நிமிடம் சைட் வந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள் எதுவும் இல்லை. இது தமிழ்நாடா இல்லை சுடுகாடா என நினைக்கவைத்தது. பெயின்டில் குளிப்பாட்டிய கற்களை ஊன்றி வைத்தும் ஜெனீவா மாநாடு போல கலர்கலர் கொடிகளை அந்த அத்துவானக் காட்டுக்குள் ஊன்றிவைத்து ரியல் எஸ்டேட் ஃபீல் கொடுத்திருந்தார்கள்.

விழுப்புரத்திலிருந்து வந்த ஒரு மினி வேனில் துணிக் குடைகளும் ஒரு காரில் சைட் மேனஜர் ஒருவரும் வந்து வெல்கம் வைத்தார்கள். ''ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டாங்களேய்யா'' என சிலர் வெறியாக... சிலரோ வெயில் வெறியேற்றியதால், ''செங்கல்பட்டு சைட்டைக் காட்டலைனா போலீஸுக்குப் போவோம்'' என மிரட்ட, அரண்டுபோனார்கள் ரியல் எஸ்டேட் பார்ட்டிகள். ''நெக்ஸ்ட் வீக் கிளியரன்ஸ் டெல்லியில்(?) இருந்து வந்திடும். இப்போ இந்த சைட் பிடிச்சாப் பாருங்களேன். வேணும்னா ஆக்சுவல் ரேட்ல பாதியை லெஸ் பண்ணிக்கலாமே சார்'' என்று இறங்கி வந்தார்கள்.

எல்லோரும் முறைப்போடு வேனில் ஏறி உட்கார, வேறு வழி இல்லாமல் சென்னைக்கே கொண்டுவந்து விட்டார்கள். வரும் வழியில் ஒரே முணுமுணுப்பு. ''நான்தான் சொன்னேன்லடி...இதெல்லாம் ரியல் எஸ்டேட் கெடையாது. ஃபிராடு எஸ்டேட்டுனு. வீட்டுல சும்மா உட்கார்ந்துட்டு சீரியல் பார்க்கிறதை விட்டுட்டு... இனி கண்டதையும் பார்த்து என் மண்டையைக் கழுவாதே... உன்னால இன்னிக்குப் பொழுதே இப்படிப் போச்சு'' என ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி கத்த ஆரம்பித்தார்.

சென்னைக்கு பிழைக்க வந்தது தப்பாய்யா? எங்களுக்கு ஆசையைக் காட்டி திண்டிவனத்தைத் தாண்டி குடியேறவைக்கிறதுலேயே ஏன்யா எல்லோரும் குறியா இருக்கீங்க?

- ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு