Published:Updated:

முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

பிரீமியம் ஸ்டோரி
முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, பாவேந்தரின் மகன் மன்னர் மன்னன் தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

பாவேந்தருடன் பழகிய நண்பர்கள், அவரது ஆசான்கள், ஃபிரெஞ்சு ஆட்சியில் இருந்த பாண்டிச்சேரியின் அந்தக் கால நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் காலத்திய பெரியவர்கள் பலரது புகைப்படங்களை எல்லாம் மிகுந்த முயற்சியுடன் தேடி வெளியிடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்த நூலில் இருந்து சில பகுதிகள்...

இளமை காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலை ஒன்றை இப்படிச் சொல்வார் பாவேந்தர்:

''கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் நான் ஆசிரியராகப் பணிபுரியப் போனேன். அந்த ஊருக்குப் போவதற்கு முன்பே என்னைப் பற்றிய 'கீர்த்தி’ எட்டிவிட்டது போலும்! புதுவையின் அரசியல் கட்சிக்காரர்கள், என்னைப் பற்றி ஒரு வரலாற்றைக் கூறி வைத்திருந்தார்கள். இந்த நிலையில், வேலை செய்யும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் என்னிடம் பேசவே அஞ்சினர். ஊரில் சிற்றுண்டி விடுதி இல்லாத காலம். தங்குவதற்கு எவரும் இடம் கொடுக்க முன்வரவில்லை. பள்ளி வகுப்பு முடிந்த உடனே, தோப்புப் பக்கம் போய்விடுவேன். இருட்டிய உடனே கோயில் பக்கம் போவேன். அங்கே இருந்த வெற்றிலைபாக்குக் கடை ஒன்றில், யாரும் அறியாமல் முறுக்கு வாங்குவேன்.

முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

காலணாவுக்கு 10 முறுக்கு கொடுப்பார்கள். முறுக்கை எடுத்துக்கொண்டு கோயில் குளக்கரைக்குச் செல்வேன். முறுக்கை ஒவ்வொன்றாகத் தின்று முடித்து, குளத்து நீரையும் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் வரை குளத்துப் படிகளில் படுத்திருப்பேன். பின்னர் பள்ளிக்கு எதிரில் உள்ள தோப்பிலோ, பள்ளிக்கூடத்தின் ஓரத்திலோ படுத்திருப்பேன். விடியலில் மீண்டும் தோப்புக்கு உலா. அங்கேயே குளியல்... விடிவதற்கு முன்னரே, அடுத்த சிற்றூர் சென்று, கடைக்காரர் விற்கும் கிழங்கு அல்லது ஆப்பக்காரம்மாவிடம் தோசை, ஆப்பம் ஒன்றிரண்டு தின்றுவிட்டுத் திரும்புவேன். பகலில் பெரும்பாலும் முறுக்கு, வடை இப்படி ஏதாவது தின்பேன்.

இந்த நிலை பல மாதங்கள் நீடித்தது. இதற்குள் ஊர் மக்களிடையே உண்மை துலங்கலாயிற்று. பின்னர் நிலையாக ஒருவர் வீட்டில் உணவு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

கூனிச்சம்பட்டு சிற்றூரில் முதல்முறையாக நான் தமிழாசிரியராக வந்தபோது ஏற்பட்ட இந்தத் துயரம் தேவலாம். இரண்டாவது தடவையாக நான் கூனிச்சம்பட்டுக்கு வரும்போது திருமணமாகி, நான்கு குழந்தைகளோடு வந்தேன். அப்போது ஏற்பட்டது சொல்லொணாத் துயரம்!''

நூலாசிரியர் மன்னர் மன்னன் குறிப்பிடுகிறார், ''அப்போது எனக்கு ஐந்து வயது. என் தமக்கையும், எனக்குப் பின்னர் தங்கையர் இருவரும்! என் இளைய தங்கை ரமணி கைக்குழந்தையாக இருக்கையில் அன்னையார் கருவுற்றிருந்தார். பேறுகாலம் நெருங்கிவிட்டது. தலைமையாசிரியரின் மனைவி எப்போதாவது வந்து கருவுற்றிருந்த அன்னைக்கு ஏதாவது அறிவுரை கூறிச் செல்வதுண்டு. வீட்டில் பெண்மணி ஒருத்தி அன்றைக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டிருந்தாள். அவளின் உதவியோடு குழந்தையும் பிறந்துவிட்டது. மருத்துவச்சியை அழைத்துவரப் போன தந்தையார் அந்த உதவி கிடைக்க வழியில்லை என்று திரும்பிவிட்டார். இரண்டு நாளில், அந்தப் பிஞ்சுக் குழந்தை இறந்தேவிட்டது. அன்னையார் துடிதுடித்தார். தந்தையார் ஆறுதல் கூறி, குழந்தையை இடுகாட்டில் அடக்கம் செய்யும் ஏற்பாட்டில் இறங்கினார்.

தலைமையாசிரியர், ஒரு நாள் விடுமுறையில்  தம் துணைவியரோடு வெளியூர் போய்விட்டார். உடன் பணியாற்றிய ஆசிரியர்கள், தம் வகுப்பு வேலைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கப் போனார்கள்! ஊரில் எல்லோ ருக்கும் ஏதோ தலை போகிற வேலை இருந்தது அன்று! எவரின் துணையும் வேண்டாம். குடிப்பிள்ளை என்று சிற்றூரில் இருப்பான் இல்லையா? அவனைத் தேடினார். அவனும் வேறு எங்கோ போயிருந்தான்!

முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

தந்தையார், பக்கத்துச் சிற்றூர் மக்கள் இருவருடைய உதவியோடும் திருபுவனை எனும் பக்கத்துச் சிற்றூரில் கணக்கராக இருந்த நண்பர் ஆனந்த கிராமணி என்பவரின் ஒத்துழைப்போடும், பிஞ்சுக் குழந்தையின் சடலத்தைத் தாமே எடுத்துக்கொண்டு இடுகாட்டில் இட்டுவிட்டுத் திரும்பினார். மறுநாள் வேலைக்காரப் பெண்மணி வந்தபோதுதான் தெரிந்தது, சுப்புரத்தின வாத்தியாருக்கு எந்த வகையான உதவியும் எவரும் செய்யலாகாது என்ற கட்டுப்பாடு ஒன்று ஊரில் போடப்பட்டிருந்ததாம்!

ஊரைவிட்டு மாறியே அலுத்துப்போகாத கவிஞருக்குப் புது வீடு மாற்றுவது பெரிய சங்கதியா என்ன?

தே தெருவில் இன்னொரு வீடு. அதற்கு உரிமையாளரை 'மொந்தம்பழம்’ செட்டியார் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். ஓட்டு வீடு. எல்லா இடமும் ஒழுகல். பழுதுபார்த்துத் தரும்படி எத்தனை தடவை சொல்லியும் நடைபெறவில்லை. நேரில் வந்து பார்க்கிறேன் என்று சொல்வார்; வாடகை வாங்கிக்கொண்டு போய்விடுவார்!

முறுக்கும் குளத்து நீரும்தான் உணவு!

அடை மழை பிடித்து, வீட்டின் தோட்டத்தில் இருந்த தென்னை மரம் சாய்ந்து சமையலறை ஓட்டுக்கூரை மீது விழுந்துவிட்டது. பல தடவைகள் சொல்லியும் பலன் இல்லை. இரு மாத வாடகையை நிலுவையில் வைத்து விட்டோம். வீட்டுக்கு உரிமையாளர், ஆவேசமாக வந்து 'பாக்கியை வைத்துவிட்டு வீட்டைக் காலி பண்ணு’ என்றார். சினம் பொங்கிவிட்டது கவிஞருக்கு... 'வெளியில் போ!’ - கத்திவிட்டார் தந்தையார். செட்டியார் நேரே நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்துவிட்டார். வாடகை நிலுவை இருந்தால் குடியிருப்பவர் தோற்பதுதான் வழக்கம். ஆனால், கவிஞர் இன்னும் சற்று ஊன்றிப்போனார்.

ஒரு வீட்டிலே குடியிருக்கிறவன், சமையலறை இல்லாமல், மழை ஒழுகும் படியான நிலையில் வாடியிருக்கிறான்; குடும்பம் தொல்லைப்பட்டிருக்கிறது; வீட்டு உரிமையாளரோ பழுதுபார்த்துத் தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வாடகை தர மறுக்கிறார்.

கவிஞரின் அறவழி நோக்கு சரிதான்! சட்டம் எப்படி?

நீதிமன்றம் சென்றார். நிலைமையை நேரில் நீதிபதி வந்து பார்க்கச் சிறுதொகையும் கட்டினார். வந்து பார்த்த நீதிபதி, 'ஆறு மாத வாடகை தர வேண்டியது இல்லை. வீட்டைக் காலி பண்ண வேண்டியது இல்லை’ என்றும் தீர்ப்பளித்தார். திருதிருவென விழித்த மொந்தம்பழம் செட்டியார், தாம் யார் பேச்சையோ கேட்டு இப்படி அவதிப்பட்டதாக வருந்தினார்!''

- அகஸ்டஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு