Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 28

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 28

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

அவையிடத்து முந்தியிருப்பச் செயல்

'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை
தந்தை மகனாக இணைத்தது!’

- எழுத்தாளர் ஓரான் பாமுக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தான். சேர்ந்த ஒரு மாதத்திலேயே இவன் எப்போதோ எழுதியிருந்த தேர்வுக்கான முடிவு வந்திருந்தது. 'யுனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷன்’ எனப்படும் யு.ஜி.சி. தேர்வில் இவன் ஃபெல்லோஷிப்புடன் தேர்வு பெற்றிருந்தான். இவன் பி.ஹெச்டி., ஆய்வு செய்வதற்கு, ஐந்து வருடங்களுக்கு யு.ஜி.சி. ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது.

முதல் மூன்று வருடங்களுக்கு ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பாக மாதம் 5,400 ரூபாய், கடைசி இரண்டு வருடங்களுக்கு சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பாக மாதம் 6,000 ரூபாய் என இவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. சென்னையில் கால் ஊன்றவும், கனவுகளின் கரம் பிடிக்கவும் இவன் கற்ற கல்வி மீண்டும் இவனுக்குக் கை கொடுத்தது.

பச்சையப்பன் கல்லூரியில் பி.ஹெச்டி., செய்வதைவிட, சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்தால் ஸ்காலர்ஷிப் கிடைப்பது இன்னும் சுலபமாக இருக்கும் என்று தமிழ்த் துறைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் இவனை வழிநடத்தினார். மேலும்,  சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவர் டாக்டர் வ.ஜெயதேவன் அவர்களிடம் தரச்சொல்லி, சிபாரிசு கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

வேடிக்கை பார்ப்பவன் - 28

இவனுடைய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்த வ.ஜெயதேவன், அவரது மேற்பார்வை யிலேயே இவனை பி.ஹெச்டி., செய்யச் சொன்னார். ஆய்வுக்கான புத்தகங்கள் தொடங்கி குண்டூசி வாங்குவது வரை யு.ஜி.சி. இவனுக்கு நிதி உதவி அளித்தது.

'தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பைப் பதிவுசெய்து, ஆய்வு செய்யத் தொடங்கினான். பேசும்படம் காலம் தொடங்கி, 2000 ஆண்டு வரையிலான பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டான். ஊர் ஊராகச் சென்று பழைய பாடல் புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினான். மூட்டை மூட்டையாக இவன் அறையில் பாட்டுப் புத்தகங்கள் குவிந்தன. தமிழின் முதல் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி கவிஞர் பழநிபாரதி வரை இவன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் பாடல்கள் எழுதியிருந்தனர்.

தேசபக்திக் காலகட்டம், புராணப் படங்கள் மிகுந்த தெய்வபக்திக் காலகட்டம், சமூகப் படங்கள் காலகட்டம்... என ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்பட்ட பாடல்களையும் பாடலாசிரியர்களையும் அவதானிக்கத் தொடங்கினான். எத்தனை எத்தனை கவிஞர்கள்! அவர்களின் பாடல் வரிகளில்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்! குடும்பம், இயற்கை, தத்துவம், காதல்... என பல்வேறு சூழல்களில், 'பாடல்’ எனும் பேராறு இவனைக் கை நீட்டி அழைத்தது. இவன் அதனுள்ளே குதித்து மூழ்கிப்போனான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறை கட்டடம் கடற்கரையைப் பார்த்தபடி இருக்கும். அதுவரையில் மாலையில் மட்டுமே பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கடலை, பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு காலையிலும் இவன் தரிசிக்கத் தொடங்கினான்.

கடலுக்குத்தான், எத்தனை முகங்கள்; எத்தனை வடிவங்கள்! காலையில் பொன் அள்ளி இறைப்பதும், நண்பகலில் கானல் நீரில் தகிப்பதும், பிற்பகலில் மௌனங்களை இறைச்சலாக மொழிபெயர்ப்பதுமாக கடலை, அருகில் இருந்து அறிந்து கொண்ட காலங்கள் அவை.

மிழ் மொழித் துறைத் தலைவரும், இவனது ஆய்வு வழிகாட்டியுமான வ.ஜெயதேவன், தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவர். அகராதி இயல் துறையில் பெரும் புலமைகொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகத்துக்காக நிறைய அகராதிகளைப் புதுப்பித்திருக்கிறார். அவர், இவன் ஆய்வுக்கு மட்டுமல்ல; இவன் ஆளுமைக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

வேடிக்கை பார்ப்பவன் - 28

இவன் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவன். சிறு வயதில் இருந்தே தாய் இல்லாமல் தனியே வளர்ந்ததால் தயங்கித் தயங்கித்தான் பேசுவான். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் நாளே, இவனது தயக்கத்தை தெரிந்துகொண்ட வ.ஜெயதேவன், இவனைத் தனியாக அழைத்து, ''தம்பி. நாளையில இருந்து எம்.ஏ., முதலாம் ஆண்டு தமிழ் மாணவர்களுக்கு, நீங்கள் 'படைப்புக் கலை’ பற்றி வகுப்பு எடுக்கிறீங்க. வகுப்பறையில் மாணவர்க ளோட பேசப் பேச உங்க கூச்சம் காணாமல் போயிடும். உங்களால் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் கவிஞர்களா மாறினா, அது பல்கலைக் கழகத்துக்குப் பெருமைதானே!'' என்று உற்சாகப்படுத்தினார்.

10 மாணவர்கள் இல்லை... இவன் அங்கு வகுப்பு எடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 மாணவர்கள், கவிஞர்கள் ஆனார்கள். முதலில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி வகுப்பு எடுத்தான். எழுத்துக் காலகட்டம், வானம்பாடி காலகட்டம், கவியரங்கு காலகட்டம் என ஒவ்வொரு காலகட்டத்தையும் உதாரணங்களோடு விளக்கினான்.

ரியலிசம், நியோ-ரியலிசம், ஸ்ட்ரெக்சரலிசம், சர்ரியலிசம், போஸ்ட்மார்டனிசம், மேஜிக்கல் ரியலிசம்... என ஒவ்வொரு இசங்களையும் வகுப்பில் விளக்கினான். அதற்கான உதாரணக் கவிதைகளை வாசித்துக்காட்ட மாணவர்கள் உற்சாகமானார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கவிஞர் என எடுத்துக்கொண்டு, அந்தக் கவிஞர் பற்றிய குறிப்புகளைச் சொல்லி, அவர் எழுதிய அத்தனை கவிதைகளையும் வாசித்துக் காட்டுவான். இப்படி நிறைய நவீனக் கவிஞர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான்.

வாரத்தில் ஒரு நாள் கவிதை நேரம். இவன் ஒரு தலைப்பு கொடுப்பான். அந்தத் தலைப்பில் மாணவர்கள் கவிதை எழுத வேண்டும். அப்படி ஒருநாள் 'கயிறு’ என்று தலைப்புக் கொடுத்ததும், ஒரு மாணவன் எழுதிய கவிதையை இவனால் மறக்க முடியாது. அந்தக் கவிதை...

'பின்னேறுவதால்
முன்னேறுகிறார்கள்
கயிறு திரிப்பவர்கள்!’

ருநாள் இவன் தமிழ்த் துறையில் இருந்து வகுப்பு எடுக்கக் கிளம்பிக்கொண்டிருந்தபோது எதிரே இவன் அப்பா வந்துகொண்டிருந்தார். ''இங்க என்னப்பா பண்றீங்க?'' என்றான் இவன். ''சும்மா ஒரு மீட்டிங் விஷயமா மெட்ராஸ் வந்தேன். நீ கிளாஸ் எடுக்கிறேன்னு கேள்விப்பட்டேன். எப்படி நடத்துறேனு பார்க்க வேண்டாமா?'' என்று அவர் சிரித்தபடி சொல்ல, இவன் கை-கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அதைக் கவனித்த இவன் தந்தை, ''சும்மா சொன்னேன்டா. பயப்படாத, நீ கிளாஸ் முடிச்சிட்டு வா. நான் லைப்ரரியில வெயிட் பண்றேன்'' என்று சிரித்தபடி கடந்து போனார்.

காலச்சக்கரம் பின்னோக்கி சுழல, இவன் மீண்டும் சிறுவனானான். மூன்றாம் வகுப்புப் படிக்கையில் டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு இவன் வீட்டில் இருந்த காலம். காய்ச்சல்விட்டு உடல் ஓரளவுக்குத் தேறிக்கொண்டிருந்தது. ஆசிரியரான இவனது தந்தை அவரது பள்ளிக்கூடத்துக்குக் கிளம்ப, ''இன்னிக்கு நானும் உங்ககூட உங்க ஸ்கூலுக்கு வரப் போறேன்'' என்று அடம்பிடித்து சைக்கிளில் ஏறி அமர்ந்தான்.

அப்பாவின் பள்ளிக்கூடம், இவன் பள்ளிக்கூடத்தைவிடச் சிறியது. வாசலில் நின்றிருந்த செங்கொன்றை மரத்தில் இருந்து உதிர்ந்துகிடந்த பூக்களும், பள்ளியின் பின்பக்கம் விரிந்துகிடந்த பனைமரக் காடுகளுமாக அப்பாவின் பள்ளிக்கூடம் அப்பாவைப் போலவே அழகாகவும் நெருக்கமாகவும் இருந்தது.

'தமிழ் ஐயாவோட பையன்டா!’ என்று மாணவர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அப்பா எல்லோரையும் அதட்டிவிட்டு, வகுப்பு எடுக்கத் தொடங்கினார். முன் பெஞ்சில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். கை விரல்களிலும், மூக்கின் நுனியிலும், காதோரத்து முடிகளிலும் சாக்பீஸ் துகள் படிந்த அப்பா, இன்னும் இவனுக்கு நெருக்கமானார்.

காலச்சக்கரம் முன்னோக்கி சுழல, இவன் பல்கலைக்கழகத்து வகுப்பறைக்குள் நுழைந்தான். அப்பா, நூலகத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்ற பதற்றத்துடனே அன்றைய வகுப்பு முடிந்தது.

நூலகத்தில் இருந்த அப்பாவை, கேன்டீனுக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தான். ''வாடா, கொஞ்சம் காலாற கடற்கரை வரைக்கும் நடந்துட்டு வரலாம்'' என்றார் அப்பா. மதிய நேரத்துக் கடல் மதிய நேரத்து கடல் போலவே இருந்தது.

'எப்போது கடற்கரைக்குச் சென்றாலும்
குறிப்பிட்ட தூரத்துக்கு மேல்
சென்றதே இல்லை.
அலைகளிடம் பயம் இல்லை
பயம் அப்பாவிடம்தான்!’

என்று சிறு வயதில் இவன் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. இருவரும் முடிவிலா அலைகளில் நின்றார்கள். அப்பா வழக்கம் போல் இவன் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

வேடிக்கை பார்ப்பவன் - 28

திரும்பி வந்து பேருந்துக்காகக் காத்திருக்கையில், ''நல்லாதான்டா கிளாஸ் எடுக்கிற'' என்றார் அப்பா.

'நீங்க லைப்ரரியிலதானே இருந்தீங்க. நான் கிளாஸ் எடுத்ததை எப்ப பார்த்தீங்க?'' என்றான் ஆச்சரியத்துடன்.

''நான் எங்கடா லைப்ரரிக்குப் போனேன். நான் வந்தா நீ டென்ஷன் ஆயிடுவேனு உன் கிளாஸ் ஜன்னலுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னு பார்த்திட்டு இருந்தேன்'' என்றார் அப்பா.

கை விரல்களிலும், மூக்கின் நுனியிலும், காதோரத்து முடிகளிலும் சாக்பீஸ் துகள் படிந்த இவன், அப்பாவுக்கு இன்னும் நெருக்கமாகி இருப்பான் என்று தோன்றியது!

- வேடிக்கை பார்க்கலாம்...