Published:Updated:

அறிவிழி - 61

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 61

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 61

850 மில்லியன் மக்களைக்கொண்ட இந்திய வாக்காளர் தொகை, இந்தியாவுக்கு அடுத்த பெரிய நாடான அமெரிக்காவின் மக்கள்தொகையைப் போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். வியக்கவைக்கும் இந்த எண்ணை மிஞ்சும் எண் ஒன்றை, சில தினங்களுக்கு முன் படித்தேன். உலகம் முழுவதும் நொடியில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல் அளவின் எண்தான் அது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், நொடிக்கு 30 டெராபைட்டுகள் இருந்த இந்த அளவு, சென்ற மாதத்தில் கிட்டத்தட்ட 300 டெராபைட்டுகளாக அதிகரித்துள்ளது.

ஒரு டெராபைட் என்பது, கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு நிகரான அளவுகொண்டது. இதன்படி பார்த்தால், 30,000 திரைப்படங்களைப் பார்ப்பதற்கு நிகரான தகவல் பரிமாற்றம் உலகளாவிய வலையில் ஒவ்வொரு நொடியும் நடந்தபடி இருக்கிறது. இந்தத் தகவலில் பெரும்பான்மையான அளவு தகவல் பரிமாற்றம் 'இன்டர்நெட்டின் பின்னெலும்பு’ (Backbone) என அழைக்கப்படும் உள்கட்டமைப்பில் இருக்கிறது. கண்டங்களைத் தாண்டிக் கட்டப்பட்டி ருக்கும் இந்தப் பின்னெலும்பு நாடுகளையும், அவற்றில் இருக்கும் இணைய சேவை நிறுவனங்களையும் (Internet Service Providers) இணைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்குப் பயன்படும் ராட்சத கேபிள்களும், இணைப்புச் சாதனங்களும் பெரும்பான்மையாக அந்தந்த நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சொந்தம் கொள்ளப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. தரை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கப்பட முடியாத இடங்களை வானில் இருந்து இணைக்கும் முயற்சிகளை கூகுள், ஃபேஸ்புக் இரண்டுமே எடுத்து வருவதை சென்ற சில வாரங்களில் பார்த்தோம்.

இந்த வாரத்தில் வெளியாகியிருக்கும் ரிப்போர்ட், இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கான பிரத்யேக இணையப் பின்னெலும்பைக் கட்ட முயற்சி செய்து வருவது தெரிகிறது. இதற்கான காரணத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தங்களது பயனீட்டாளர்களின் தகவல் பரிமாற்றத் தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்க, இணையச் சேவை நிறுவனங்களை நம்பி இருக்காமல், தங்களுக்கே சொந்தமான நெட்வொர்க்கை கட்டி சொந்தமாக்கிவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் குறிக்கோள்.

ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் ஃபேஸ்புக் ஐரோப்பாவிலும், கடல் வழியாக இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் தனது நெட்வொர்க்கைக் கட்ட கூகுளும் தலைப்பட்டிருப்பது தெரிகிறது.

அறிவிழி - 61

இது ஒருபுறம் இருக்க, இந்த நிறுவனங்கள் வளைத்து எடுத்துச் சேமித்துக்கொள்ளும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், பிரைவசி பற்றிய விழிப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தகவல்களைப் பத்திரமாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள உதவும் Wickr  போன்ற தொழில்நுட்பங்கள் பிரபலமாகி வருவது உண்மைதான் என்றாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் இயங்க, இணையத்தின் பின்னெலும்பும் உள்கட்டமைப்பும் தேவைப்படுகின்றன. இந்தப் பிரிவில், புதுமையான, ஏன், புரட்சிகரமான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் வலைப்பின்னல் (Mesh) நெட்வொர்க்.

இத்தாலி நாட்டின் மின்விநியோக நிறுவனங்கள், மின்சார மீட்டரில் இருந்து உபயோக விவரங்களை சில நிமிடங்களுக்கு ஒரு முறை சேகரித்துக்கொள்ளவும், பயனீட்டாளர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான விலையை நிகழ்நேரத்தில் வெளியிட்டுக் காட்டவும் உதவும் வகையில், வலைப்பின்னல் சார்ந்த தொழில்நுட்பம்கொண்ட மின்சார மீட்டர்களைப் பயன்படுத்தத் தொடங்கின.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை, ஒவ்வொரு மீட்டரும் நெட்வொர்க்கில் இணைந்திருக்க வேண்டும் என்பது இல்லை. மாறாக, ஒவ்வொரு மீட்டரும் தனக்கு அடுத்த மீட்டருடன் இணைந்திருந்தால் போதும். ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குத் தாவி, குவித்துச் செல்லும் தகவல் பொட்டலங்களை, நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சில மீட்டர்கள் மூலமாகச் சேகரித்துக்கொள்ள முடியும். இது மிகவும் பயனுள்ள மாடல். ஒவ்வொரு மீட்டரையும் இணையத்தில் இணைக்க வேண்டுமானால், அந்த வசதியுள்ள மீட்டரை வடிவமைக்க அதிக செலவாகும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான தகவல் பரிமாற்ற முனைகளைப் பராமரிப்பது என்பது மிகவும் சிக்கலான வேலை. அதற்குப் பதிலாக, ஒன்றுடன் ஒன்று வலைப்பின்னலாக அமைந்திருக்கும் இந்த மாடல் மின்விநியோக நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமாக அமைந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக, நெருக்கமாக வீடுகள் இருக்கும் நகர்ப்புறங்களில் இந்த மாடல் நன்றாகவே செயல்படும். ஆனால், நமக்குப் பரிச்சயமற்ற மாடல் இது. காரணம் கணினி, அலைபேசி, டேப்லெட் என்றெல்லாம் நாம் இணையத்தில் இணைந்துகொள்ளும்போது, நமது சாதனம் நேரடியான தொடர்பில் இருக்கிறது; உங்களுக்கு அடுத்து இருக்கும் இன்னொருவரின் சாதனத்துடன் நேரடியாகத் தொடர்பில் இல்லை.

'அட, அப்படி இருந்தால்தான் என்ன?’ என்ற தொழில்நுட்பச் சிந்தனை, இந்த நாட்களில் வடிவுக்கு வந்தபடி இருக்கிறது. அதன் எளிய தொடக்கமாக, ஆப்பிள் தனது சாதனங்களிலும், iOS மென்பொருளிலும் கொண்டுவந்திருக்கும் பல்மக்கள் இணைப்புக் கட்டமைப்பு (Multipeer Connectivity Framework) என்ற வசதி. இதைப் பயன்படுத்தி எந்த நெட்வொர்க்கிலும் இணையாமல் அலைபேசி சாதனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள முடியும்.

மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி Firechat  என்ற மென்பொருள், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு மென்பொருள் கடைகளில் இலவசமாகக் கிடைக்கிறது. அதைத் தரவிறக்கம் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதன் பின்னர் நீங்கள் இணைப்பைத் துண்டித்துக்கொண்டாலும், மென்பொருளைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க இயலும்.

இது சின்ன தொடக்கமே. இந்தப் பிரிவில் எடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு முயற்சி இன்னும் வித்தியாசமானது; உபயோகமானதும்கூட. அதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism