Published:Updated:

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

Published:Updated:
“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

''சுடு தண்ணீரைக் காலில் கொட்டிக்கொண்டது போல் பரபரவென்று மனிதர்கள் விரையும் மதுரை டவுன்ஹால் ரோட்டில், தினமும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட ஓர் இடத்தைக் கடக்கும்போது சரேலென்று ஏதாவது ஒரு ராகம் புல்லாங்குழலில் இருந்து புறப்பட்டு, இதயத்தைக் கவ்வி வழிமறிக்கும். திரும்பிப் பார்த்தால், காலடியில் ஒரு பை நிறைய புல்லாங்குழல்களை வைத்துக்கொண்டு கண் பார்வை இல்லாத ஒரு ஜீவன் வாசித்துக்கொண்டிருக்கும். வெளியூர்க்காரர்கள் - வெளிநாட்டுக்காரர்கள் யாராவது அருகில் சொக்கிப்போய் உட்கார்ந்திருப்பார்கள்.

இசைத் தவம் புரிவதுபோல் 24 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்தபடி ஏராளமான ரசிகர்களையும் சிஷ்யர்களையும் வைத்திருக் கும் இவர் பெயர் சின்னவீரன். நாம் கேள்விப்பட்ட வரையில், பார்வை இழந்த நிலையில், தானே புல்லாங்குழல்களைத் தயார் செய்து உலகம் முழுக்க விநியோகித்திருக்கும் சாதனையாளர். சாகித்தியத்துக்கும் சங்கடமான வாழ்க்கைக்கும் அப்படி என்னதான் ஒட்டுறவோ!? இதுவரை இவர் ராகத்தை ரசித்தவர்கள், இனி சோகத்தையும் கேளுங்கள்.

''என் சொந்த ஊர் காந்திகிராமம்கிட்ட இருக்கும் பெருமாள்கோவில்பட்டி. நான் சின்னப் பையனா இருந்தப்போ சாதாரண கண்ணு வலி வந்துச்சு. வீட்டில், கண்ட நாட்டு மருந்துகளை ஊத்தினாங்க. ரெண்டு கண்ணும் செப்டிக் ஆகி அவிஞ்சுபோச்சு. ஏழு வயசில், என் அம்மா இறந்துட்டாங்க. எங்கப்பா கல்யாணித் தேவருக்கு கொத்தனார் வேலை. எனக்கு ஒரு தங்கை இருந்துச்சு. கரைச்சுவெச்சிருந்த சிமென்ட் கரைசல் பட்டு அதுக்கும் ரெண்டு கண்ணும் போச்சு. எங்கப்பா வேற கல்யாணம் முடிச்சுக்கிட்டார். எங்கப்பாவும் சித்தியும் எங்களைப் படுத்தின கொடுமை இன்னிக்கு நெனைச்சாலும் அழுகை வந்திரும். அப்படி ஒரு அப்பன் யாருக்கும் வாய்க்கக் கூடாதுங்க.

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

சேலத்திலும் மெட்ராஸிலும்  அரசு பார்வையற்றோர்  பள்ளியில் படிச்சேன். அப்புறம் டாடா அக்ரிகல்ச்சுரல் டிரெய்னிங் சென்டரில் இருந்து குஜராத்துக்குக் கூட்டிட்டுப் போய், கோழி வளர்க்க டிரெய்னிங் குடுத்து, பெருமாள்கோவில்பட்டில ஒரு கோழிப் பண்ணையும் வெச்சுக் குடுத்தாங்க.

சித்தி, எனக்குத் தெரியாம கோழி முட்டைகளைத் திருடி வித்துடும். கோழிகளை ஒவ்வொண்ணாப் புடிச்சு சமையல் பண்ணிடும். ஊர்ல இருந்தவங்க பஞ்சாயத்து கூட்டி அதைக் கண்டிச்சாங்க. மறுநாள் காலையில் கோழி எதுவும் சத்தம் போடாம இருந்துச்சு. என்னன்னு தடவித் தடவிப் பார்த்தேன். 81 கோழியும் செத்துக்கெடந்துச்சு. சித்தி எல்லாத்தையும் மருந்து வெச்சுக் கொன்னுடுச்சு. 'கடவுளே’னு கதறி அழுதேன். ரெண்டு, மூணு நாள் கஞ்சித் தண்ணி குடிக்காமக்கெடந்தேன்.

ஒருநாள், என்னையும் தங்கச்சியையும் வீட்டுல விட்டுட்டு எங்கப்பாவும் சித்தியும் எங்கேயோ போயிட்டாங்க. 15 நாள் வரைக்கும் திரும்பவே இல்லை. வீட்டில் எதுவும் சாப்பிட வெச்சிட்டுப் போகலை. அவங்க திரும்பி வந்ததும் அழுதுக்கிட்டே, 'எங்களைக் கொலை செஞ்சதுபோல பண்ணிட்டீங்களே’னு கேட்டேன். வீட்டைவிட்டுப் போகச் சொல்லிட்டாங்க.

நானும் என் தங்கையும் தனியா வந்துட்டோம். என் தங்கைக்கு அப்போ 16 வயசு. அதுக்குத் துணிமணிகூட எடுத்துத் தர மாட்டாங்க. நான் மிட்டாய் வியாபாரம் பார்த்து காலையில் ஒரு டீ, சாயந்தரம் ஒரு டீ மட்டுமே சாப்பிட்டு, துட்டு சேர்த்துவெச்சு அதுக்கு ஒரு சேலையும் ஜாக்கெட்டும் எடுத்துக் குடுத்தேன். அப்புறம் என் தங்கை உடம்புக்கு முடியாமக்கெடந்து கவனிக்க வசதி இல்லாம செத்துப்போச்சு. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.

அப்புறம் மிட்டாய் வியாபாரம் பார்த்தே கை நிறையச் சம்பாதிச்சேன். கல்யாணம் முடிச்சேன். அந்தப் பொண்ணு ஆறு மாசம் வாழ்ந்துட்டு, நான் வியாபாரத்துக்குப் போயிட்டுத் திரும்பி வந்து பார்த்தப்போ, என்னை விட்டுட்டு ஓடிப்போயிருந்துச்சு. அப்பல்லாம் நான் மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணிக்காம இருக்க புல்லாங்குழல்தான் எனக்குத் துணையா இருந்திச்சு. ஒரு உடைஞ்ச புல்லாங்குழலில் மணிக்கணக்கா வாசிப்பேன். எனக்கு தாய், தகப்பன் எல்லாமே புல்லாங்குழல்தான்.

நான் மெட்ராஸ் பிளைண்ட் ஸ்கூல்ல படிச்சப்போ (1958-ல்), பல தடவை மாலியைத் தேடிப் போய் புல்லாங்குழல் வாசிக்கக் கத்துக்குவேன். நான் வாசிச்ச 'சாம்பசிவாயனவே...’ங்கிற ஒரு ஸ்வர ஜதியைக் கேட்ட புரொஃபசர் சாம்பமூர்த்தி, பிரியமா நுணுக்கங்களைச் சொல்லித்தந்தார். பிறகு, புல்லாங்குழல் சம்பந்தமா எல்லாத்தையும் நானா படிச்சுக்கிட்டதுதான்.

அந்த சமயம் கே.கே.சாமினு ஒருத்தர் திருமலை நாயக்கர் மகால்கிட்ட ஃப்ளூட் வியாபாரம் பார்த்தார். எனக்கு ஒதுங்க நிழல் இல்லாம அவர்கிட்ட போயி உட்கார்ந்து ஃப்ளூட் வாசிப்பேன். ஃப்ளூட் எப்படிச் செய்றதுனு அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். என் மேல இரக்கப்பட்டு அவர் வீட்டிலேயே எனக்கு சாப்பாடு போட்டுப் பராமரிச்சார். பணம் குடுத்தாலும் வாங்க மாட்டார். 'வேணாம்... கண்ணு தெரியாம நீ சம்பாரிச்சு எங்களுக்குத் தர வேணாம்’னு சொல்வார்.

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

ஒருநாள் கே.கே.சாமிகிட்ட, 'நீங்க கஷ்டப்படுறீங்க. உங்களுக்குப் பாரமா இல்லாம தனியா ஃப்ளூட் வியாபாரம் பார்க்கலாம்னு நினைக்கிறேன்’னேன். அவர் சிரிச்சுக்கிட்டே, பக்கத்துல இருந்த அவ்வளவு புல்லாங்குழல் களையும் அள்ளிக்குடுத்து 'இந்தா, இதை வைச்சிப் பொழைச்சுக்க. இதுக்கும்      நீ பணம் தர வேணாம்’னுட்டார். அப்ப வந்து இந்த டவுன்ஹால் ரோட்டில் உட்கார்ந்தேன். ஒரு பிட்டுகூட நகராம 24 வருஷமா இதே இடத்தில் வாசிச்சு வியாபாரம் பார்க்கிறேன்.

அஞ்சு ரூபாயில் இருந்து அம்பது ரூபாய் வரைக்கும் தரத்துக்குத் தக்கபடி ஃப்ளூட்டை வித்திடுவேன். ரோஷன் நாவல்டீஸ் கடையோட முதலாளி என்னைக் கூப்பிட்டு, 'சின்னவீரா...

நீ இன்னொரு கல்யாணம் முடிச்சுக்கடா...’ன்னார். நான் பழைய காயத்தை நினைச்சு 'வேணாங்க’னு சொன்னேன். அவரு, 'கிறுக்கா... கிறுக்கா, பூவுலகூட ஆண் பூ, பெண் பூவுன்னு இருக்கு. மரத்துலகூட ஆண் மரம், பெண் மரம்னு இருக்கு. ஆண்டவன் படைப்பில் ஆண் - பெண்னு அததுக்குரிய சிறப்போட படைச்சிருக்காரு. இயற்கையை மனுஷன் மீறப்படாது. கல்யாணம் பண்ணிக் குடும்பத்தோட இருப்பா. திடீர்னு நாலு நாளைக்கு நீ விழுந்துகிடந்தா உன்னை யார் பார்ப்பா? இசையை ரசிக்கிறவங்க 'நல்லா வாசிக்கிறே... பிரமாதம்’னுட்டுப் போயிடுவாங்க. நீ அநாதையாகிடக் கூடாது’னு எடுத்துச் சொல்லி மறுபடியும் வாழணும்னு புத்தி சொன்னார்.

எங்க சொந்தத்திலேயே ஒரு பெண்ணைத் தர்றேன்னாங்க. 'அந்தப் பொண்ணு முழு மனசோட சம்மதிக்கணும். அதுகூட தனியாப் பேசணும்’னு சொல்லி, பேசிக் கல்யாணம் முடிச்சுக்கிட்டேன். இப்ப எனக்கு மூணு பிள்ளைகள், எல்லாரையும் புல்லாங்குழல்தாங்க காப்பாத்துது. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குக்கூட வியாபாரம் ஆகும். 10, 15 நாளைக்கு ஒண்ணுகூட விக்காது. வெளிநாட்டுக்காரங்க செட்டு செட்டா வாங்கிட்டுப் போவாங்க. உலகம் முழுசும் என் புல்லாங்குழல் போயிருக்கு.

ஒருநாள் அதிசயம் நடந்துச்சு. எதிரே இருந்த தாஜ் ஹோட்டல்ல இருந்து யாரோ ஒருத்தர் வேகமா வந்து நான் விற்பனைக்கு வெச்சிருந்த புல்லாங்குழல்கள்ல ஒண்ணை சடக்குனு உருவி எடுத்து என்னோட சேர்ந்து வாசிச்சார்.

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

'ஃப்ளூட்டைத் தொடாதீங்க. எது வேணும்னாலும் எங்கிட்டே கேட்டு வாங்குங்க’னு கோவமாச் சொன்னேன். அவர் நிதானமா, 'என்னைப் புல்லாங்குழலைத் தொடாதேனு சொன்ன மொத ஆளு நீதாம்பா’னு சொல்லிக்கிட்டே ரெண்டு கையாலும் என் தாடையை ஏந்திப் பிடிச்சார். என்னை அடையாளம் தெரிஞ்சு, 'அடடே! நீயாப்பா..? நான் மாலி வந்திருக்கேன்’னார். எனக்குக் கை-கால் நடுங்கிடுச்சு. பேசறதுக்கு வார்த்தை வரலை. 30 வருஷத்துக்கு முன்னாடி நான் மெட்ராஸ்ல படிச்சுட்டு இருந்தப்ப ரெண்டு, மூணு கச்சேரி மாலிகூட வாசிச்சிருக்கேன். அப்பவே 'நீ நல்லா வருவே, விடாம சாதகம் பண்ணு’ன்னார். அப்புறம் நான் அங்கேயும் இங்கேயும் அலைக்கழிஞ்சு திசைமாறி வந்திட்டேன். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் என்னை ஞாபகம் வெச்சு மாலியே 'நீயாப்பா?’னு கேட்டதும் எனக்கு ஒண்ணுமே ஓடலைங்க.

'நான் அமெரிக்கா போறேன். நெறைய புரோகிராம் இருக்கு. ஃப்ளூட் தர்றியா..?’னு கேட்டு, ஆறு ஃப்ளூட் செலக்ட் பண்ணி எடுத்துக்கிட்டார். 'எவ்வளவு பணம் வேணும்..?’னு கேட்டார். 'எனக்குப் பணமே வேணாங்க. உங்ககிட்ட ஃப்ளூட் விலை பேச எனக்கு அருகதை இல்லீங்க. எத்தனை வேணும்னாலும் சும்மா எடுத்துக்குங்க’ன்னேன். கட்டாயப்படுத்தி 300 ரூபாய் குடுத்திட்டுப் போனார். அப்புறம் மாலி இறந்துபோனார்னு கேள்விப்பட்டு, அன்னிக்கு முழுக்க அவரை நெனைச்சே வாசிச்சேன்.

நான் யாருக்கும் அடிமை இல்லை. கஷ்டப்பட்டாலும் என்கூட புல்லாங்குழல் இருக்கு; எனக்குத் தெரிஞ்ச 300 ராகம் இருக்கு. நான் அநாதை இல்லை. என் கடைசி மூச்சும் புல்லாங்குழல் வழியாதான் போகும்'' என்றார் சின்னவீரன் பெருமையுடன்.

மேல்சட்டை இல்லாத பொடிசுகளின் புடைசூழ நின்ற சின்னவீரனின் மனைவியிடம், ''உம் புருஷன் பெரிய ஆளும்மா! அவரைப் புல்லாங்குழல் வாசிக்கச் சொல்லி ரசிப்பீங்களா?'' என்றதும் பதறிப்போய், ''அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. வெள்ளைக்காரங்க வந்து படிச்சிட்டுப் போவாங்க. தினமும் சாப்பாட்டுக்குப் பணம் குடுத்திடும். பொங்கிப் போடுவேன். அம்புட்டுத்தேன்'' என்றார் கிராமத்து வெட்கத்துடன்.

ஏனோ வாய்விட்டுச் சிரித்தார் புல்லாங்குழலின் புதல்வர்!

- சௌபா

துரை டவுன்ஹால் ரோட்டின் வசீகரமான அடையாளங்களில் ஒன்று, சின்னவீரன். அவர் புல்லாங்குழல் இசைக்கையில் அந்தப் பரபரப்பான தெருவே ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்கும். ஜனசந்தடி மிகுந்த அந்தத் தெருவில் அவரைக் கடந்து செல்லும் எவரும், அவரது இசைக்கு செவிமடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

1992-ல், நான் இந்த வீதியில் உள்ள ஒரு ரொட்டிக்கடையில் வேலை செய்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் திரும்பும்போது, பல நேரங்களில் இவரது இசையில் மயங்கி எனது கடைசிப் பேருந்தைத் தவறவிட்டது உண்டு. அப்படியாக மெள்ள மெள்ள நானும் அவரது நண்பர்களில் ஒருவரானேன். உலகிலேயே கண் தெரியாத ஒருவர் புல்லாங்குழல் தயாரிக்கிறார் என்றால், அது சின்னவீரன் மட்டுமே.

“உலகம் முழுசும் என் புல்லாங்குழல்!”

தொலைக்காட்சிகளின் வருகை, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி... எனக் குழந்தைகள் கையில் கீபோர்டுகள் வந்ததால், அவரின் புல்லாங்குழல் வியாபாரம் குறைந்துகொண்டே வந்தது. வறுமை அவரை மெள்ளத் தின்றது. ஆரப்பாளையத்தில் குடியிருந்த அவர், நகரின் விலைவாசிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களுக்கு மாறி மாறிக் குடிபோனார். கடைசியாக, அவரை நான் கொடைரோடு அருகில் உள்ள கமலாபுரத்தில் சந்தித்தேன்.

இன்று, காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிவிட்டு வரும் வழியில், அவரை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று மனதில் ஓர் ஆவல் எழுந்தது. கமலாபுரம் சென்றபோது எனக்குப் பெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகே விசாரித்தபோது, அவரது மனைவியும், தொடர்ந்து சில காலத்தில் அவரும் இறந்துபோனார்கள் என்றும், அவரது பிள்ளைகளும் இடம் மாறிப் போய்விட்டார்கள் எனவும் அறிந்து அதிர்ந்தேன். அவர்களது விலாசங்களைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். எங்கள் மதுரையின் அடையாளமாகவே விளங்கிய கண் தெரியாத ஓர் இசைக் கலைஞனின் அதிர்வுகள் இந்த டவுன்ஹால் ரோடு இருக்கும் வரை மதுரை வெளியில் கலந்திருக்கும்!

- அ.முத்துக்கிருஷ்ணன்