Published:Updated:

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

Published:Updated:

வாசுதேவன், மதுரை.

''பாடல் போட்டி ஒன்றில் ஒரு பெண் குழந்தை, 'டாடி மம்மி வீட்டில் இல்லை...’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்ததுமே கடுமையாகக் கண்டித்தீர்கள். 'ஆயிரம் நிலவே வா...’ உள்ளிட்ட உங்கள் ஆரம்பகாலப் பாடல்கள் பலவும் இரட்டை அர்த்தப் பாடல்கள்தானே... இப்போது மட்டும் ஏன் இந்தக் கோபம்?''

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

 ''வாசு... என்ன பேசுறீங்க நீங்க? 'டாடி மம்மி வீட்டில் இல்லை... விளையாட வாடா...’-வையும் 'ஆயிரம் நிலவே வா...’-வையும் எப்படி ஒப்பிட முடியும்? சினிமா ஒரு வியாபாரம்தான். நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக என்ன வேணும்னாலும் எதை வேணும்னாலும் விக்கலாமா என்ன? முன்னாடி எல்லாம் சிருங்காரத்தை அப்படியே வெளிப்படையா இல்லாம, கவிநயத்தோட அழகாச் சொல்லிருப்பாங்க. 'ஆயிரம் நிலவே வா...’கூட அந்தத் தொனியில் அமைஞ்ச பாட்டுத்தான். 'டாடி மம்மி வீட்டில் இல்லை...    நீ வீட்டுக்கு வா. நாம ஏதாவது பண்ணலாம்’னு பட்டவர்த்தனமா அழைக்கிற பாட்டையும், 'இதழோரம் சுவை தேட... புதுப் பாடல் விழி பாடப் பாட...’ங்கிற வரிகளையும் ஒப்பிடுறதுல அர்த்தமே கிடையாது. உங்க ஒப்பீடே தப்பு. அதனால என் கோபம் நியாயமானதுதான்!''

அமுதா, விருத்தாசலம்.

''அதட்டாமல் திட்டாமல் ஏ.ஆர்.ரஹ்மான் வேலை வாங்குவாராமே... அது எப்படி?''

''அந்த ஜென்டில்மேன்கூட வொர்க் பண்றது அவ்வளவு சந்தோஷமான அனுபவம். ரஹ்மானை சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். அவங்க அப்பா வீட்டுக்குப் போய் நான் மலையாள பாட்டெல்லாம் பாடும்போது இவர் ஒன்பது, பத்து வயசுல ஸ்கூல் போற பையன்.

ரஹ்மான் மியூசிக் டைரக்டரா அறிமுகமாகிறதுக்கு முன்ன நிறைய தமிழ், தெலுங்கு இசையமைப்பாளர்களுக்கு கீ-போர்டு வாசிச்சிருக்கார். அப்பவே அவருக்காக நாங்க காத்திருப்போம்.

ராஜ்கோட்டிகிட்ட வேலை செய்யும்போது நான் ஒரு பாட்டு முடிச்சிட்டு இன்னொரு தியேட்டருக்குப் போகணும். ஏன்னா, அப்ப ஒரு நாளைக்கு நாலைஞ்சு பாட்டு பாடுவேன். மியூசிஷியன்ஸ் எல்லாம் 7 மணிக்கு வரணும்னா, ரஹ்மான் மட்டும் எட்டரைக்கு வருவார். அவருக்கு மட்டும் அதுக்கு அனுமதி உண்டு. காரணம், அப்ப அவர் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தார். அதுபோக ராத்திரி எல்லாம் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் பண்ணிட்டு அதிகாலை 4 மணிக்குத்தான் தூங்கப் போவார். தியேட்டருக்கு வந்ததும் நொட்டேஷன்ஸ் எடுத்துட்டார்னா பேசவே மாட்டார்.

அப்புறம் மியூசிக் டைரக்டர் ஆனபிறகு இன்னும் அமைதி, இன்னும் சாஃப்ட் ஆகிட்டார். ரிக்கார்டிங்ல எதுவுமே நல்லா இல்லைனு சொல்லவே மாட்டார். நாம ரிகர்சல் பாடுறோமா, டேக் பாடுறோமானு தெரியாது. நாம கொஞ்சம் இம்ப்ரூவைஸ் பண்ணிப் பாடினால், 'அது நல்லா இருந்துச்சே... இன்னொரு தரம் இம்ப்ரூவைஸ் பண்ணுங்க’ம்பார். அடுத்து, 'இதுவும் நல்லா இருக்கு. இப்ப நான் சொல்ற மாதிரி ஒரு தடவை பாடுங்க’னு சொல்லி அதையும் எடுத்துப்பார். அதுல எது பெட்டர்னு தேர்ந்தெடுத்து எடிட் பண்ணி அவர் பிளே பண்ணும்போது, நாமதான் பாடினோமானு ஆச்சரியமா இருக்கும்.

எந்த சிங்கருக்குப் பாட்டு கொடுத்தாலும் அவங்களைத் தட்டிக்கொடுத்து சோர்ந்துபோக விடாம, பயந்துடாம பாடவைப்பார். இதுல 'பயந்துடாம’ங்கிறது ரொம்ப முக்கியம். ஏன்னா, அவர் நிறைய புதுப் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். புதுப் பாடகர்கள் முதல்முறை பாடும்போது ரொம்பப் பயத்துல இருப்பாங்க. அந்தப் பயம் அவங்களோட ஒரிஜினல் திறமையை ஒளிச்சுவெச்சிரும். அப்போ அவங்களை ஒரு கம்ஃபர்ட் ஜோன்லயே வெச்சு தனக்குத் தேவையானதை வாங்கிடுவார் ரஹ்மான். அவரால யாருக்கும் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரு துன்பமும் இருக்காது.

'கோச்சடையான்’ல ஒரு பாட்டு நான் பாடணும்னு ரொம்ப நாள் காத்திருந்தார். ஒரு மேடையில்கூட, 'நீங்கள்லாம் சார்கிட்ட சொல்லுங்க. ஒன்றரை வருஷமா வெயிட் பண்றேன். அந்தப் பாட்டு வாய்ஸ் மிக்ஸ் பண்ணணும். டைம் கொடுக்க மாட்டேங்கிறார்’னார். 'அவர் இல்லைனா என்ன... இன்னொருத்தரைப் பாட வெச்சுக்கலாம்’னு நினைக்கக்கூட மாட்டார். இதுக்காகத்தான் நான் அவரை 'ஜெம் ஆஃப் தி ஜெம்’னு சொல்வேன். வொண்டர்ஃபுல் பெர்சன்!''

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

பாலகிருஷ்ணன், ஒரகடம்.

''புதிய தலைமுறைப் பாடகர்களில் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்கள் யார்... யார்?''

''ஒரு உண்மையைச் சொல்லிடுறேனே... இப்போ பாடுற நிறையப் பாடகர்கள், பாடகிகள் பத்தி எனக்கு அவ்வளவாத் தெரியாது. ஏன்னா நிக்க, நடக்க நேரம் இல்லாம ஓடிட்டே இருக்கேன். நடுவுல எங்கேயாவது நேரம் கிடைச்சா, நிறையப் படிப்பேன்; கொஞ்சம் டி.வி. பார்ப்பேன். அதனால புதுப்புதுக் குரல்களைப் பரிச்சயம் பண்ணிக்கவே முடியலை.

அதே சமயம் இன்னொரு விஷயமும் சொல்லணும். ரசிச்சு சிலாகிக்கிற மாதிரி பாடல்கள் வர்றதும் குறைஞ்சுட்டே இருக்கு. காரணம், எல்லாக் குரல்களும் ஒரே மோடுல இசையமைக்கப்பட்டு வருது. 'மெலோடைன்’னு ஒரு கருவி இருக்கு. அது பிட்ச் கரெக்ஷன் கருவி. அதை எந்தளவுக்கு உபயோகிக்கணுமோ அந்தளவுக்கு மட்டுமே உபயோகிக்கணும். ஜாஸ்தியா உபயோகிச்சா ஒரு ரோபோ பாடுற மாதிரிதான் குரல் இருக்கும். அப்படி இருக்கும்போது யார் பாடுறாங்கனு கண்டுபிடிக்கவே முடியலை! அதுவும் பெரும்பாலான பாடகிகள், 'ஃபால்ஸ் வாய்ஸ்’லயே பாடுறாங்க. எவ்வளவு மேல் நோட்டையும் டச் பண்ணிடலாம்னு பண்ற பயிற்சியே, அவங்களுக்கு சாபமா மாறிடுது. அப்படி எப்பவும் பாடுறது தொண்டையை ரொம்பச் சிரமப்படுத்துற விஷயம்.

நம்ம பசங்ககிட்ட திறமைக்குக் குறைச்சலே இல்லை. ஆனா, எங்களுக்குக் கிடைச்ச மாதிரி பாட்டெல்லாம் அவங்களுக்குக் கிடைச்சாத்தான், வருங்காலத்துல யார் ரொம்ப நல்லா வருவாங்கனு சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். எங்களுக்கு மலைமலையா குவிஞ்ச மாதிரி அழகழகான வரிகள், அற்புதமான ஸ்வரங்கள் இப்போ அந்தளவுக்குக் கிடைக்கிறது இல்லை. அதனால இந்தக் கேள்விக்கு எவ்வளவு யோசிச்சாலும் என்னால சட்டுனு பதில் சொல்ல முடியலை!''

கங்கா விக்னேஷ், ஃபேஸ்புக்

''ரஜினிகாந்தின் இன்ட்ரோ ஸாங்குகளை நீங்கள்தான் பாடுகிறீர்கள். இது ரஜினி சென்ட்டிமென்ட் என நினைக்கிறேன். அதன் சுவாரஸ்யப் பின்னணி என்ன?''

''ஆரம்பத்தில் அப்படி ஒண்ணு ரெண்டு பாடல்கள் சக்சஸ் ஆகியிருக்கும். சில படங்களில் அது சக்சஸ் ஆகாமலும் இருந்திருக்கலாம். ஆனா, எனக்கு அந்த சென்ட்டிமென்ட்ல நம்பிக்கை கிடையாது. சினிமாவில் ஒரு சக்சஸ் ஃபார்முலா கிடைச்சா, அதை மாத்தவே மாட்டாங்க. அப்படித்தான் அது தொடர்ந்துட்டே இருக்கு. மத்தபடி இது ரஜினி சார் விருப்பம், என் ஆசை, இசையமைப்பாளரோட முடிவுனு எல்லாம் எதுவும் கிடையாது. முதல் தடவை ஹிட்... ரெண்டாவது தடவையும் ஹிட். அதனால தொடர்ந்து அந்த மாதிரி நடக்குதே தவிர, ஒரு கட்டத்துக்கு மேல அது பழக்கமாயிருச்சு... அவ்வளவுதான்!''

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

ம.பிரபு, மன்னார்குடி.

''திரை உலகில் ஒருவருக்கு 'மிஸ்டர் பண்பு’ பட்டம் கொடுக்க வேண்டுமென்றால், போட்டியே இல்லாமல் உங்கள் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. ஈகோ யுத்தம் மல்லுக்கட்டும் இசைத் துறையில், நீங்கள் மட்டும் எப்படி இத்தனை காலம் 'மிஸ்டர் ஜென்டில்மேன்’ ஆகவே வலம் வர முடிந்தது?''

''நான் தப்பு பண்ணியிருந்து, 'ஏன் தப்பு பண்ணீங்க?’னு கேட்டா பதில் சொல்லலாம். 'ஏன்         நீ நல்லவனா இருக்கே?’னு கேட்டா நான் என்ன சொல்றது மிஸ்டர் பிரபு! எனக்குத் தெரிஞ்சு கொடுத்த வேலையை நான் அனுபவிச்சு ரசிச்சு செய்வேன். 100-க்கு 125 சதவிகிதம் நியாயம் பண்றதுக்கு முயற்சி பண்ணுவேன். பெரிய இசையமைப்பாளரா இருந்தாலும் சின்ன இசையமைப்பாளரா இருந்தாலும் பாடுறதுக்கு ஒரே மாதிரிதான் கஷ்டப்படுவேன். ஒவ்வொரு நாளும் மைக் முன்னாடி நிக்கும்போது, அதுதான் என் முதல் பாட்டுனு நினைச்சுக்குவேன்.

யார் கூடவும் சண்டை, சச்சரவு போடுறது கிடையாது. ஏன்னா, எனக்கு வாழ்க்கை மேல் காதல் அதிகம். அந்த வாழ்க்கையை முழுசா அழகாக அனுபவிக்கணும். அதனாலேயே நான் உண்டு, என் வேலை உண்டுனு போயிருவேன். விமர்சனத்திலோ வீண் விவாதத்திலோ என் நேரத்தைச் செலவழிக்கிறது கிடையாது.

இந்த மாதிரியான குணங்களை என் ஆசான் திருவாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கே.வி.மகாதேவன் சார் மாதிரியான பெரியவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். இவர்கள் எல்லாம் மகா கலை சொரூபங்கள்; சரஸ்வதி புத்திரர்கள். இவங்க வேலை செய்றதைப் பார்க்கும்போது, அப்பேர்ப்பட்ட இசை மூர்த்திகளே ரொம்பச் சாதாரணமா இருக்கும்போது நாம எம்மாத்திரம்னு தோணிட்டே இருக்கும். இசை ஞானம் மட்டும் இல்லை, அவங்களோட நடவடிக்கைகள், அவங்க பேசுற விதங்கள்ல இருந்தும் நான் நிறையக் கத்துக்கிட்டேன். நீங்க கொடுத்த இந்த 'மிஸ்டர் பண்பு’ சர்ட்டிஃபிகேட் எனக்கு ரொம்பப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. 100 பாரத ரத்னா அவார்டு கிடைச்ச மாதிரி இருக்கு. நன்றி... நன்றி... உங்கள் அன்புக்கு நான் அடிமை!''

த.பிரியா, கும்மிடிப்பூண்டி.

''இப்போதெல்லாம் பாடல் ஒலிப்பதிவின்போது அந்தப் பாடல் எழுதிய கவிஞர்களையும் உடன் இருக்கச் செய்யும் பழக்கம் அரிதாகி வருகிறதே!''

 ''உண்மைதான்! ஏ.பி.நாகராஜன் சார்கூட வேலை செய்யும்போது தசரதன்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் இருப்பார். ஒரு ரிக்கார்டிங்ல லைவ் ஆர்க்கெஸ்ட்ராவோட 25 டேக் எடுத்த பிறகு, 'இதுக்கு மேல என்ன பண்றது... உச்சரிப்புல ஒரு 'ச்’ வரலைன்னா பரவாயில்லை... விட்ருப்பா’னு சொல்வாங்க. ஆனா, தசரதன் என்கிட்ட வந்து, 'பாலாண்ணே இந்த 'ச்’ வரலைனா இலக்கணமே கிடையாது. அதுக்காக 26-வதா ஒரு டேக் எடுக்கலாம்ணே’ம்பார். ஆனா, இப்ப யார் இப்படி இருக்காங்க... சொல்லுங்க!

வைரமுத்து சார் இதே மாதிரிதான். ரிக்கார்டிங்ல இருந்தார்னா விடவே மாட்டார். ஆனா அவரே, 'பாலு சார், நீங்களாவது சொல்லுங்களேன். என்னை யாரும் ரிக்கார்டிங்குக்குக் கூப்பிடவே மாட்டேங்கிறாங்க’னு சொல்வார். கவிஞர்கள் பக்கத்துல இருந்தாங்கன்னா, பாடும்போது அதை இம்ப்ரூவைஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் இப்போ அநாவசியமான விஷயமாகிடுச்சு. ஹ்ம்ம்..!''

- நிலாவுடன் பேசலாம்...

•  ''உங்கள் குரல் கடவுளின் கொடை. ஆனால், உங்கள் நடிப்பு... நாங்கள் எதிர்பார்க்காத மேஜிக். ரொம்ப கேஷ§வலா நடிக்கிறீங்க. உங்களுக்குள் இருக்கும் நடிகனை எப்ப கண்டுபிடிச்சீங்க? ஆனா, தொடர்ந்து ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க?''

• '' 'ஐயய்யோ நெஞ்சு அலையுதடி...’ -'ஆடுகளம்’ பாடல் செம க்ளாசிக். அது மாதிரியான பாடல்களை ஜஸ்ட் லைக் தட் பாட முடியாது. எஸ்.பி.பி-க்குள் இருக்கும் காதலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்..!''

•  '' 'இந்த இசை ராட்சஷன் இப்படி கம்போஸ் பண்ணி இருக்காரே இதை விட நாம பிரமாதமாப் பாடணும்’னு இளையராஜா இசையில் ஃபீல் பண்ண வெச்ச பாடல் எது?''

- அடுத்த வாரம்...

“ ‘டாடி மம்மி’யும் ‘ஆயிரம் நிலா’வும் ஒன்றா!?”

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.