Published:Updated:

ஆறாம் திணை - 86

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 86

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:

த்தாம் பன்னிரண்டாம் வகுப்பு போர்ஷனை கோடை விடுமுறையில் (?) முடிக்கணும்; கோல மாவு கோர்ஸ், கோணிப்பை தைக்கும் கோர்ஸ், செஸ் கோச்சிங், மேத்ஸ் சென்டம் கோச்சிங்... இதற்கு எல்லாம் இந்தக் கோடை விடுமுறையை செலவழிக்க வேண்டும் என யோசிக்காமல், எங்கேனும் இன்பச் சுற்றுலா செல்லலாம் என யோசித்தாலே... உங்களுக்குச் சென்னைக்கு மிக அருகில் விழுப்புரம் தாண்டி ஒரு கிரவுண்ட் பிளாட்டோ அல்லது சத்யம் தியேட்டரில் ஒரு கப்பிள் பாஸோ பரிசு அளிக்கலாம்!

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக பிரான்ஸுக்குச் சென்ற இடத்தில் விடுமுறையின்போது நிறையக் குளிரில், பாரீஸின் லூவர் மியூசியத்தில் மோனாலிசா ஓவியத்தின் ஒரிஜினலைப் பார்த்தேன். அந்த அறையில் நிலவிய நிசப்தம், ஓவியத்தைப் பாதுகாத்த புல்லட் புரூஃப் கண்ணாடி, ஓவியத்தைச் சுற்றி முழங்காலிட்டு ஏக்கமும் கண்ணீருமாக உலக மக்கள் ரசித்தது... என அனைத்தும் எனக்குள் பெரும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் விதைத்தன.

ஆறாம் திணை - 86

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1503-ல் இருந்து டாவின்சியின் அந்த ஓவியம் ஐரோப்பாவில் கடந்து வந்த பாதை, ஓவியம் ஒளித்துச் செல்லும் சர்ச்சைகள், 'உலகத்தில் அதிகம் பேசப்பட்ட, ரசிக்கப்பட்ட, புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த ஓவியம் அதன் சொந்த நாடான இத்தாலியில் அல்லவா இருக்க வேண்டும்?’ என அதை மீட்டெடுக்க நடத்திய களவு, பின் அந்தக் களவு தேசப்பற்றால்தானே நிகழந்தது எனக் களவாடியவருக்குக் குறைந்தபட்சத் தண்டனையும் மன்னிப்பும் வழங்கிய வரலாறு, பலமுறை பல இனங்கள் அந்த ஓவியம் மீது நடத்திய தாக்குதல்கள், அந்த ஓவியம் வெளிப்படுத்தும் கலையைத் தாண்டி, அழகியலைத் தாண்டி, காலங்காலமாக அது காட்டும் கற்றுக்கொடுக்கும் சமூகவியல், அரசியல், வாழ்வியல் என ஒவ்வொரு நாளும் வரலாற்று முக்கியத்துவத்தை நிரப்பிக்கொண்டே பயணிக்கிறது அந்த ஓவியம்!

மீபத்தில் புதுக்கோட்டைக்குச் சென்றபோது, கிடைத்த அரை நாள் இடைவெளியில் கொளுத்தும் வெயிலில், மூச்சிறைக்க, நிறைய வியர்த்துக்கொண்டு மலை ஏறிப் பார்த்து மலைத்துப்போன மற்றோர் இடம்... சித்தன்னவாசல் கிராமம்!

அங்கு இருந்த சமண குகைக் கோயில் ஓவியங்களுக்கு புல்லட் ப்ரூஃப் கூண்டு இல்லை; யாரும் முழங்காலிட்டு அழவும் இல்லை. புதிதாகக் கல்யாணமான கிராமத்து ஜோடியும், அவர்களின் பாதுகாப்புக்காக(?) வந்திருந்த குடும்பத்தினரும், 'எதிர்காலக் கல்யாணம்’ பற்றி விவாதிக்க வந்திருந்த இன்னொரு ஜோடியும் சேர்த்து மொத்தமாக 10 பேர் இருந்திருப்போம். குகைக்குள் சமணப் படுக்கைக்குள் செல்லும் முன்னர், உயரே பார்த்தால் உச்சி நடுங்குகிறது. அன்னப்பறவையும், தாமரைக்குளமும், அந்தத் தாமரையைக் கொய்ய வரும் பெண்ணின் கைகளும், யானையும், அரசனும், அரண்மனைக் குழாமும்... என நீளும் அந்த ஓவியம் உண்மையில் நம் தண்டுவடத்தைச் சில்லிடவைக்கும்.

அந்த ஓவியங்கள், கிட்டத்தட்ட 8-ம் நூற்றாண்டில் சமணர்களால் வரையப்பட்டவை என்கிறார்கள். வரையப்பட்ட அந்த ஓவியத்தின் அத்தனை நிறங்களும், சத்தியமாக தாவரங்களில் இருந்தும் மூலிகைகளில் இருந்தும்தான் பெறப்பட்டிருக்க முடியும். பாறை இடுக்குகளில் 'அரிப்பு நீக்க’ வந்த இரண்டு கால் மிருகங்கள் சில, ஆங்காங்கே ஆர்ட்டினில் அம்பு செருகி, காதல் ஜோடி பெயர் எழுதிப் பாழ்படுத்தியவற்றையும் தாண்டி, கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் அந்த ஓவியங்களின் எழில், தாமரையின் இதழ்களின் நிறமும், தடாகக் காட்சியின் வண்ணமும் குன்றாது உயிர்ப்புடன் இருப்பது பிரமிப்பு. இவை அனைத்தையும் தாண்டி அந்த ஓவியம் சொல்லும் கலையும் வாழ்வியலும் இன்னும் அதிகம் பிரிக்கப்படாத ஆவணம்.

ஆறாம் திணை - 86

பிரான்ஸின் லூவரில் சிறை பிடிக்கப்பட்டு உலகம் கொண்டாடும் மோனலிசா ஓவியத்துக்கு, கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் னரே பிறந்த அந்தக் குகை ஓவியங்கள் குறைந்தவையா என்ன? 'அஜந்தா ஓவியத்தை ஒட்டியவை இவை’ என்கிறார்கள் தொல்லியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குகைக்குள் சில கோணங்களில் எழுப்பும் மூச்சு ஒலி பல மடங்காக அதிரும் ஆச்சரியம் உலகின் வேறெந்த மூலையிலும் உணர முடியாதது. எத்தனை துல்லியமான ஒலி மேலாண்மைத் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தால், அந்தக் குகை மூச்சு ஒலியை பன்மடங்கு எதிரொலிக்கும். நம் மூத்தமரபின் ஆழ் நுண்ணறிவு, ஆச்சரியம் அளிக்கிறது. கோடையில் மஞ்சளாகப் பூத்திருக்கும் கொன்றைக்கும் வாகைக்கும் நடுவில் இருக்கும் சித்தன்னவாசல் மாதிரியான கிராமங்கள் இன்னும் கொஞ்சமே கொஞ்சம்தான் தமிழகத்தில் மீதம் இருக்கின்றன!

நாகரிகத் தொட்டிலாக இருந்த ஆறுகள் மணல் குவாரிகளாக மாறிவருவதில் ஆற்றங்கரையில் மணல் வீடு கட்டி, பூவரச இலையில் ஊதல் செய்து, நுங்கைத் தின்றுவிட்டு பனங்காயில் வண்டி செய்து உருட்டி, விளையாடும் கிராமங்கள் வேகமாகத் தொலைந்துவருகின்றன. சிறுதானியங்கள் மாதிரி நம் மரபோடு வாழ்ந்துவரும் சிறுதெய்வங்கள், 'பிளாட்’களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக நம் கிராமங்கள் தொலைந்துபோவதற்குள், ஒரு நடை விடுமுறையில் நம்மை வளர்த்த அந்தத் தொட்டில்களைப் போய் பார்த்து வரலாம்.

இதுபோகவும் நம் குழந்தைகளை மகிழ்விக்கும் விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் தமிழகம் முழுக்க ஏராளமாக, தாராளமாகக் கிடைக்கின்றன. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, தூத்துக்குடி மக்ரூன், மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால், சிம்மக்கல் கறிதோசை, கன்னியாகுமரி தேங்காய் சாதம் - மீன் குழம்பு, நடுக்கடை இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா, ராமநாதபுரம் கணவாய் மீன் கோலா உருண்டை, இறால் ஊறுகாய், மணப்பாறை அரிசி முறுக்கு, கீழக்கரை நொதல் அல்வா, சிதம்பரம் கொத்சு, திருவானைக்காவல் ஒரு ஜோடி நெய் தோசை, கும்பகோணம் பூரி பாசந்தி, கூத்தாநல்லூர் தம்ரூட், நீடாமங்கலம் பால்திரட்டு, திருவையாறு அசோகா, கும்பகோணம் டிகிரி காபி, அருப்புக்கோட்டை முட்டாசு, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஆம்பூர் பிரியாணி, நாகர்கோவில் அடைப்பிரதமன், சாத்தூர் காராசேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, செங்கோட்டை பார்டர் கடை நாட்டுக்கோழி வறுவல், திண்டுக்கல் வேணு கடை பிரியாணி, பண்ருட்டி முந்திரி சாம்பார், சாயல்குடி கருப்பட்டிக் காபி, பரமக்குடி சிக்கன் சால்னா, பழநி பஞ்சாமிர்தம், புதுக்கோட்டை முட்டைமாஸ்... என நீளூம் இந்தப் பட்டியலில் சில, இந்த விடுமுறையில் உங்கள் குடும்பம் ருசிக்கும் உணவாகட்டும். மரபை மறக்காதிருக்க இதன் ருசியும் மணமும் மூளைக்குள் நிச்சயம் நமக்கு எப்போதும் வேண்டும்.

விடுமுறைகள் இப்படி சிலிர்ப்பைத் தந்து, ஆச்சரியங்களை விதைக்க வேண்டும். அண்ணாந்து பார்க்கவைத்து அதன் மூலம் நம்மைச் சின்னதாக்கி நம் 'அகம்’ களைய வைக்க வேண்டும். ஆசுவாசப்படுத்தி நம் நுண்ணறிவைத் துலங்கவைக்க வேண்டும். ஆனால், அச்சமும் ஆதிக்கமும் களைய வேண்டிய நம் பகுத்தறிவோ அதை விடுத்து, நுண்ணறிவை வேகமாகத் தொலைக்கிறது. நவீனமும் துரிதமும் தரும் கேளிக்கைகளில்தான் இளைப்பாறல் என இருப்பதில், பாரதி சொன்ன 'விட்டு விடுதலையாகி’ எப்படிக் கிட்டும்?

- பரிமாறுவேன்...