மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 33

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##

ம்மன் சந்நிதியில்தான் 'பழனிஆச்சியம்மாள் அன்னதானச் சத்திரம்’ இருந்தது. பழனிஆச்சியம்மாள், எனது தாத்தாவின் தாயார் பெயர். 11 மணிவாக்கில் சத்திரத்தில் சாப்பிடுவதற்கான சீட்டு பெற்றுக்கொள்ள எங்கள் வீட்டுக்கு வருபவர்களில் கணபதியும் ஒருவர். 'எம்மா, சத்திரத்து சீட்டு வேணும்’ கையில் உள்ள கம்பைக்கொண்டு தரையில் லேசாகத் தட்டி, தான் வந்திருப்பதைத் தெரிவிப்பார். அந்தக் கம்புதான் கண் பார்வை இல்லாத கணபதியின் வழித்துணை. எப்போதும் மொட்டை அடித்து லேசாக முடி வளர்ந்திருக்கும் தோற்றம். மீசை இல்லாத, கனத்த சரீரம்.

மூங்கில் மூச்சு! - 33

நான்கு முழ வேட்டிக்கு மேலே இடுப்போடு இடுப்பாக ஒரு சிறிய துண்டைக் கட்டியிருப்பார். திருநெல்வேலியில் அவரை 'கண்ணு தெரியாத கணவதி’ என்பார்கள். சத்திரத்தில் போய்ச் சாப்பிட்டுவிட்டு சில சமயங்களில் மீண்டும் வாசலுக்கு வந்து கம்பைத் தரையில் தட்டுவார், கண்ணு தெரியாத கணவதி. 'செத்த நேரம் படுக்கணும்’ என, ஓலைப் பந்தல் போட்ட நீண்ட வாசலில் கல் சுவரின் ஓரத்தில் கம்பைச் சாய்த்துவிட்டு, இடுப்பில் இருந்து துண்டை அவிழ்த்துத் தரையைத் தட்டிச் சுத்தம் செய்து, 'நெல்லையப்பா’ என்று படுத்துக்கொள்வார். தூங்கி எழுந்து 'போய்ட்டு வாரென்யா’. யாராவது கேட்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, பதிலை எதிர்பாராமல் காம்பவுண்ட் கதவைத் திறந்து, மறக்காமல் மீண்டும் சாத்திவிட்டு, தெருவில் இறங்கிச் செல்வார். செக்கடியை அவர் தாண்டும் வரை அவருக்கு வழிகாட்டும் கம்பின் 'டக் டக்’ சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து பின் காணாமல் போகும்.

மூங்கில் மூச்சு! - 33

'கணவதிக்குப் பொறக்கும்போதே கண்ணு தெரியலியோ?’ ஒருமுறை கொத்தனாரான ராமையா பிள்ளையிடம் கேட்டேன். 'சே சே... அவன் கொத்து வேலைக்குல்லாம் வந்துக்கிட்டு இருந்தாம்லா? காய்ச்சல்னு ஒரு நாலு நாளாப் படுத்தான். பார்வ போயிட்டு. என்ன மாயக் காச்சலோ?’

பெரும்பாலும் நெல்லையப்பர்கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தை ஒட்டிய வெளிப் பிராகாரத்தில்தான் நெற்றி நிறைய திருநீற்றுடன் கண்ணு தெரியாத கணவதி உட்கார்ந்து இருப்பார். பார்வை இல்லாதவர்களின் முகத்தில் இருக்கும் நிரந்தரப் புன்னகை அவரது முகத்திலும் அமர்ந்துஇருக்கும். பக்கத்தில் போய் பேச்சுக் கொடுத்தால், புன்னகை மாறாமல் பேசுவார். 'எல்லா எடத்தையும் எப்பிடி அண்ணாச்சி கரெக்டாக் கண்டுபிடிக்கிய?’ சிறு வயதில் அசட்டுத்தனமாக அவரிடம் கேட்டு இருக்கிறேன். 'பொறந்து வளந்து  நடமாடுன ஊருதானெ? அம்மஞ்சன்னதியத் தாண்டின நாலு எட்டுலயே கூனன் கட சுக்கு வெந்நி வாட. அப்பிடியே மார்க்கெட் சத்தம் பூத்தான் முக்கக் காமிச்சுக் குடுத்துரும். ரத்னா ஸ்டோர்ல ஆட்கள் நெய் டின்ன எறக்கிட்டு இருப்பாங்க. சப்பாத்தி ஓட்டலும் நெருக்கி வந்துரும். அதத் தாண்டுனா வாகையடி முக்கு. அப்பிடியே திரும்பி நேரே போயி திருநீறு வாடயும் அடிச்சு, மணிச் சத்தமும் கேட்டுதுன்னா... சந்திப் பிள்ளையார் கோயில் வந்துட்டுன்னு தெரிஞ்சிரும். இது பெரிய கஷ்டமா?’ என்பார். தெளிவாக அவர் சொன்ன அத்தனை இடங்களைப்பற்றியும், கண் தெரிந்த அசல் திருநெல்வேலிக்காரனான எனக்கு இன்று வரை குழப்பம் உண்டு. ஒருமுறை ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொல்லியிருந்தார். தனது 'ராஜபார்வை’ திரைப்படத்துக்காகக் பார்வை அற்ற ஒரு வயலின் கலைஞரை கமல்ஹாசன் சந்தித்தபோது அவர் சொன்னாராம்... 'ஒங்க படமெல்லாம்

மூங்கில் மூச்சு! - 33

நான் பாத்திருக்கேன்!’

திருநெல்வேலியின் நான்கு ரத வீதிகளிலும் மற்ற தெருக்களிலும் கண்ணு தெரியாத கணவதியின் கம்பொலி கேட்காமல் போன பிறகு 'ஆமா, அப்பிடி ஒருத்தரு நடமாடுனாருல்லா?’ என்று எல்லோரும் மனதுக்குள் ஒருமுறை கேட்டுக்கொண்டதோடு சரி.

அதற்குப் பிறகு, பத்துக்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களை நான் படித்த ஷாஃப்டர் பள்ளியில் ஒருமுறை பார்த்தேன். எங்கள் பள்ளியின் பெரிய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு எல்லா மாணவர்களும் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யூனிஃபார்ம் இல்லாமல், கலர் டிரெஸ்ஸில் வரலாம் என்றொரு விசேஷச் சலுகையும் அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் இருந்து வந்திருந்த அந்த இசைக் குழுவினர் முதலில் சில கிறிஸ்துவ ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடிவிட்டு, பின் சினிமாப் பாடல்களுக்கு வந்தார்கள். கீரவாணி ராகத்தில் இளையராஜா அற்புதமாக மெட்டமைத்த 'கீரவாணி’ என்ற பாடலை இசைக்கத் தொடங்கினார்கள். மேடையில் பாடுவதற்குச் சிரமமான, Multi track முறையில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பாடலை, 'ஸ, நிஸரிஸநி’ என்று அவர்கள் தொடங்கியபோது, மாணவர்களின் சலசலப்பு அடங்கியது. காட்டாற்று வெள்ளம்போல எங்கெங்கெல்லாமோ பயணித்துவிட்டு, அந்தப் பாடல் முடிந்த போது, பலத்த கரவொலி கிளம்பியது. கூச்சம் கலந்த புன்னகையுடன் அந்த இசைக் குழுவைச் சேர்ந்த பாடக,பாடகி களும், இசைக் கருவி இசைத்தவர்களும் கூட்டத்தின் திசை நோக்கி வணங்கி னார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட பார்வை இல்லை.

சிறு வயதில் பார்த்துப் பழகிய கணபதி யைத் தவிர, பார்வை இழந்தவர்களுடன் நேரடிப் பழக்கம் ஏற்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலரைப் பார்த்ததோடு சரி. அம்மன் சந்நிதியில் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் குடிவந்தது. அந்த வீட்டில் இருந்து ஒரு சிறுமி ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்தாள். 'எண்ணே, என் தம்பி ஊஞ்சல்ல ஆடணும்னு ஆசப்படுதான். தூக்கிட்டு வரட்டுமாண்ணே?’ ஐந்து வயது நிரம்பிய பாலாஜியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு தினமும் வருவாள், அவனுடைய 10 வயது அக்காள். உள்ளே நுழையும்போதே தன் அக்காவின் இடுப்பில் இருந்து சந்தோஷத்தில் குதிக்க முயலும் பாலாஜி, பிறக்கும்போதே பார்வை இல்லாமல் பிறந்தவன். பாலாஜியை ஊஞ்சலில் உட்காரவைத்துக் கவனமாக ஆட்டினால், அவனுக்குத் திருப்தி ஏற்படாது. 'வேகமா ஆட்டுங்கண்ணே’ என்று சத்தம் போட்டுச் சிரிப்புடன் சொல்வான். 'பயப்படாதீங்கண்ணே. விள மாட்டேன். கம்பிய நல்லாப் புடிச்சுக்கிடுதென்’ என்பான். எவ்வளவு வேகமாக ஊஞ்சல் ஆடினாலும், பாலாஜிக்குச் சந்தோஷம்தான். தன் அக்காவை ஒருபோதும் ஊஞ்சலை ஆட்ட பாலாஜி சம்மதித்தது இல்லை. 'இவ ஆட்டுனா, கூட்ஸ் ரயில் மாரி ஸ்லோவா ஆட்டுதா. நீங்க வாங்கண்ணே’. ஏதோ ஞாபகத்தில், 'கூட்ஸ் ரயில் பாத்திருக்கியாடே?’ என்று கேட்டுத்தொலைத்து விட்டேன். தவறை உணர்ந்து சமாளிக்க முயல்வதற்குள் பாலாஜி உதட்டைக் குவித்து, அதன் மேல் தன் ஒரு கையை வணங்குவதுபோல் வைத்து, 'கூஊஊஊஸ்ஸ்ஸ்’ என்று சத்தம் எழுப்பினான். 'இதானெண்ணே கூட்ஸு?’ வீடு மாறி பாலாஜியின் குடும்பம் சேரன்மகாதேவிக்கோ, கல்லிடைக்குறிச்சிக்கோ போன பின்னும், என்னால் அவனது கூட்ஸ் ரயில் ஒலியை மறக்க முடியவில்லை.

மூங்கில் மூச்சு! - 33

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நான் பார்த்த ஓர் இரானியத் திரைப்படம், பாலாஜியின் ஞாபகத்தை மீண்டும் கிளறி, பல நாட்களுக்கு என்னைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தது. 'The Colour of Paradise’ என்கிற அந்தத் திரைப்படம், பார்வை அற்ற குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளி விடுதியில் இருந்து துவங்கும். படம் துவங்கிய சில நிமிடங்களில், விடுமுறைக்காக விடுதியில் இருந்து தத்தம் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களின் பெற்றோர் வருவர். தாங்கள் வந்ததை அறியாத அந்தக் குழந்தைகளைத் தொட்டுத் தாங்கள் வந்துவிட்டதை அவர்களுக்கு உணர்த்தி, தூக்கி, அணைத்து, அழைத்துச் செல்வார்கள். படத்தின் மையக் கதாபாத்திரமான சிறுவன் மொகம்மத், தனது வெற்று விழிகளை வழி மேல் வைத்து, தன் தந்தைக்காகத் தனியே காத்துக்கொண்டு இருப்பான். அந்தக் காட்சியில் விம்மத் தொடங்கிய என் மனது, படத்தின் இறுதிக் காட்சி வரை பாடாய்ப்படுத்திவிட்டது.

ஒரு காட்சியில் கிராமத்தில் உள்ள தன் பாட்டியைப் பார்க்க சிறுவன் மொகம்மத் செல்வான். பாட்டியை அவனது சகோதரி போய் அழைத்து வருவாள். அதற்குள் தன் பாட்டிக்குத் தெரியாமல் ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்துகொள்வான் மொகம்மத். தனது உருவம் மரத்துக்குப் பின் முற்றிலுமாக மறைந்து இருப்பதாக நம்புவான் அவன். ஆனால், அவன் நிற்பது தூரத்தில் இருந்து வரும் அவன் பாட்டிக்குத் தெரிந்துவிடும். ஒரு சில நிமிடங்கள் அவனுக்காக நின்று அவனையே பார்ப்பார் அவனது பாட்டி. மரத்துக்குப் பின் இருந்து வெளியே வந்து, சுருக்கங்கள் நிறைந்த தன் பாட்டியின் முகத்தைத் தன் சின்ன கைகளால் தடவிப் பார்த்து மகிழும் அந்த இரானியச் சிறுவனை, 20 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி அம்மன் சந்நிதியில் பாலாஜி யாக நான் பார்த்திருக்கிறேன்.

உலகப் புகழ் பெற்ற 'Children of Heaven, Father, Baran’ போன்ற படங்களை இயக்கிய இரானிய இயக்குநர் Majid Majidi யின் 'The Colour of Paradise’ படத்தை மறக்க முயன்று இன்று வரை தோற்று வருகிறேன். வாழ்க்கையில் நாம் மறக்க நினைக்கிற விஷயங்கள், மறக்க முடியாத சம்பவங்களாக மனதின் ஓரத்தில் தங்கி நம்மை வதைப்பதில் இருந்து நம்மால் தப்ப முடியாதுதான். இன்றைக்கும்  பார்வை அற்ற யாரையாவது பார்க்க நேர்ந்தால் உடனே எனக்கு திருநெல்வேலி  கண்ணு தெரியாத கணவதியும், கூட்ஸ் ரயில் சத்தம் எழுப்பிய பாலாஜியும், 'கீரவாணி’ பாடல் இசைத்த பாளையங்கோட்டை இசைக் குழுவினரும், 'The Colour of Paradise’ படத்தின் சிறுவனும் ஒருவர் பின் ஒருவராக மனதில் தோன்றுகிறார்கள்.

சமீபத்தில் தற்செயலாக 'The Colour of Paradise’ படத்தின் ஸ்டில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. முன்பு எப்போதோ பார்த்த அந்தப் படத்தின் மொத்தக் காட்சிகளும் நினைவுக்கு வந்தன. 'மனசே சரியில்லலெ’. வழக்கம்போல இந்த விஷயத்தைக் குஞ்சு விடம் பகிர்ந்துகொண்டேன். அப்போது குஞ்சு சொன்னான்,

மூங்கில் மூச்சு! - 33

'அத ஏன் கேக்கெ? போன வாரம் கோயமுத்தூர்ல ரெண்டு நாளு தங்கியிருந்தேம்லா? ராத்திரி சாப்பாடு முடிஞ்சு ஒரு சாரத்தக் கட்டிட்டு பளம் சாப்பிட்டு வரலான்னு அப்பிடியே வெளிய வந்தென். பத்துப் பதினஞ்சு வயசுப் பையன் ஒருத்தன்... பாவம், பார்வ இல்ல. கைல ஒரு தட்ட வச்சுக்கிட்டு, 'காசி’ படத்துல ஒரு பாட்டு உண்டுல்லா. 'நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்’னு. அந்தப் பாட்டப் பாடுனான் பாத்துக்கொ. நீ என்ன நெனச்சாலும் சரி... கொஞ்சம்கூட யோசிக்காம நூறு ரூவாத் தாள அவன் தட்டுல போட்டுட்டென்.

'நூறு ரூவாவா?’

'சட்டப்பைல அவ்வளவுதாம்ல இருந்துது’ என்றான்!

மூங்கில் மூச்சு! - 33