Published:Updated:

”ட்ரம்ப்பின் முடிவால் பூமிப் பந்து கொதிக்கும்!’’ - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
”ட்ரம்ப்பின் முடிவால் பூமிப் பந்து கொதிக்கும்!’’ - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்
”ட்ரம்ப்பின் முடிவால் பூமிப் பந்து கொதிக்கும்!’’ - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்

”ட்ரம்ப்பின் முடிவால் பூமிப் பந்து கொதிக்கும்!’’ - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதிவியில் அமர்ந்தது முதல் பல அதிரடி நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் கிடைத்தப் பந்தை எல்லாம் சுத்தும் கடைசி பேட்ஸ்மேன் போல் கேம் ஆடிக் கொண்டிருக்கிறார். அவர் இதுவரை எடுத்த பல முடிவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தைவிட்டு அமெரிக்கா வெளியேறியது. "இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும். அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றெல்லாம் நாட்டுப்பற்று குறித்து பேசி விமர்சகர்களை ஓரங்கட்டினார் ட்ரம்ப். ஆனால் இந்த முறை அவரை எச்சரித்திருப்பது புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்!

பாரிஸ் ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறிய நிலையில் 'கிரீன்ஹவுஸ் கேஸ்' எனப்படும் பசுங்குடில் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றினாலும் இனி கேட்பதற்கு ஆளில்லை. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுக் குறித்து, ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த பேட்டியில், "'புவி வெப்பமாதல்' பொறுத்தவரை நாம் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விட்டோம். இதன் பின் நம் பூமியைப் பழையபடி பச்சைப்பசேல் எனவும், குறைவான தட்பவெப்பமுடைய ஸ்தலமாகவும் மாற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பின் செயல்கள் நம் பூமியை இன்னும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளிவிடலாம். வெள்ளிக் கிரகத்தை (Venus) போல் பூமியின் வெப்ப நிலையும் 150 டிகிரி செல்சியஸை தொடலாம், கந்தக அமில மழை பெய்யத் தொடங்கலாம்" என்று எச்சரித்துள்ளார்.

தன் 75வது பிறந்த நாளை ஒட்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு அண்டவியல் மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த பேராசிரியர் ஹாக்கிங், செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார். "'புவி வெப்பமாதல்' என்ற ஒரு கோட்பாட்டையே நம்பாமல், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வலுக்கட்டாயமாக அமெரிக்காவை வெளியேற்றியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். இதன் விளைவாக நிச்சயம் பெரிய அளவில் சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் அழகான இயற்கை உலகம் நம் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்ற அச்சம் எழுகிறது!" என்று வருத்தத்துடன் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே பூமியின் ஆயுளைக் குறித்து பலமுறைப் பேசியுள்ள ஹாக்கிங், "இப்போதிருக்கும் நிலை தொடர்ந்தால், நாம் இந்த பூமியில் இன்னும் 100 வருடங்கள் மட்டுமே வாழ முடியும். அதன் பின்னர் நாம் வேறு கிரகத்திற்குச் சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் இங்கேயே அழிந்துப்போக போகிறோம்!" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பேராசிரியர் ஹாக்கிங்கின் இந்தக் கருத்தைப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலநிலை நிபுணர்கள் மறுத்துள்ளனர். பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் காலநிலை விஞ்ஞானியான மைக்கேல் மாண் பேசுகையில், "வெள்ளியானது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு கோள். அங்கு அதிக வெப்பம் நிலவுவதற்கு அது மட்டுமே காரணம். நாம் வெளியேற்றும் பசுங்குடில் வாயுக்களால் அந்த அளவு நம் புவியின் வெப்பம் உயருமா என்றால் நிச்சயம் அது சாத்தியமில்லை. ஆனால், ஹாக்கிங் கூறியது போல், இப்போதைய நிலை தொடர்ந்தால், நிச்சயம் மனித இனம் வாழ முடியாத ஒரு கிரகமாக நம் பூமி மாறிவிடும். சமுதாய அக்கறையுடன் இந்த விஷயத்தை மிகைப்படுத்தி ஓர் எச்சரிகையாகவே ஹாக்கிங் தெரிவித்துள்ளார்!" என்று கூறினார்.

மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும், சமீபத்திய நிலவரப்படி, பூமியின் கார்பன் டை ஆக்ஸைடின் (CO2) அளவு இதுவரை நாம் கண்டிராத அளவு கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியே போனால் போதுமானளவு ஆக்சிஜன் இன்றி எல்லோரும் தவிக்கவேண்டியதுதான்! பிறகு அந்த ஆக்சிஜனையும் வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு