Published:Updated:

ஆறாம் திணை - 87

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 87

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:

ளியின் வேகத்தை, ஒரு விநாடிக்கு 1,86,282 மைல்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி ரோமர் கணக்கிட்டுச் சொன்ன ஆண்டு 1676. அதை மிக்கல்சனும் மார்லியும் உறுதிப்படுத்திய ஆண்டு 1887. இது அனைவரும் அறிந்த அறிவியல். ஆனால், '2202 யோசனை தூரத்தை, அரை விநாடியில் கடக்கும் சூரியனை வணங்குகிறோம்’ எனப் போகிறபோக்கில் சயனாச்சாரியா என்கிற இந்திய அறிஞர் சொன்னது பலருக்கும் தெரியாத செய்தி.

கரும்பலகைப் பள்ளிக்கூடமும் கால்குலேட்டரும்கூட இல்லாத 14-ம் நூற்றாண்டில், 'யோசனை தூரம்’ எனும் அந்தக் கால கணக்கை வைத்து ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் வரும் மதிப்பு, விநாடிக்கு 1,85,016 மைல்கள் என்ற, ஏறத்தாழ அறிவியலின் அதே துல்லிய விவரம்தான்.

  பேராசிரியர் இரா.சிவராமன் சமீபத்தில் எழுதிய 'பை கணித மன்றம்’ வெளியிட்டுள்ள 'இணையில்லா இந்திய அறிவியல்’ எனும் புத்தகத்தில் இதுபோன்ற ஏராளமான முன்னோடிச் செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. 'பித்தகோரஸ் தியரி முதல் துத்தநாகம் பிரித்தெடுக்கும் உத்தி வரையில் அறிவியலின் மிகச் சவாலான விஷயங்களை முதலில் சொன்னவர்கள் வாழ்ந்த பூமி இது!’ என்கிறது அந்த நூல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 87

அணுவைப் பற்றியும் அதன் அளவு, செயலைப் பற்றி எல்லாம் ஐன்ஸ்டீன், ஓப்பன் ஹெய்மர் ஆகிய விஞ்ஞானிகள் பேசும் காலத்துக்கு மிகவும் முன்னரே, பக்குடுக்கை நண்கணியனாரும், மற்கலி கோசலானாரும் பேசியது, ஆராய்ந்தது குறித்து பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய 'ஆசிவகம்’ எனும் ஆய்வு நூல், மிக முக்கியமானது.

றிவியல் என்பது, ஆழ்ந்த நுட்பமான பார்வையில், நுண்ணறிவிலோ (observation) அல்லது சோதனையிலோ (experimental) விளைவது. இரண்டில் எந்த வடிவில் அறிவியல் பெறப்பட்டாலும், எப்போது கணக்கிட்டாலும், சோதித்தாலும் ஒரே முடிவைத் தரக்கூடியதாக (REPRODUCIBILITY) இருக்க வேண்டும்.

நம்மவரின் நுண்ணறிவுக்கு இன்னோர் உதாரணம் ராமானுஜனின் எண்கணித நுட்பம். உலகப் புகழ்பெற்ற கணித மேதை ஹார்டி, நோய்வாய்ப்பட்டிருந்த ராமானுஜனை மருத்துவமனையில் சந்தித்தபோது, 'தான் வந்த கார் எண் 1729 அவ்வளவாக ராசி இல்லாத எண்’ எனச் சொல்ல, அடுத்த கணத்தில், ’No. It is the smallest number expressible as the sum of two cubes in two different ways!’ என ராமானுஜன் சொன்னதை, மாபெரும் விஞ்ஞானி ஹார்டி புரிந்துகொள்ளவே சில மணி நேரங்கள் ஆனது. இதற்குக் காரணம், கணிதமேதை ராமானுஜனின் அசாத்தியமான நுண்ணறிவுதான்.

இப்படி, நம் மூத்த மரபுக்குடி அத்தனை அறிவியலையும் அன்று தந்தது நுண்ணறிவினால் தான். பல்லாயிரம் ஆண்டு வயதான மலையைப் பிளந்து அணுவைக் கணக்கிடவும், பல மில்லியன் வயதான நமக்கு இருக்கும் ஒரே சோற்றுக்கழனியைப் பிளந்து எண்ணெயை உறிஞ்சவும், கடலில் அணுநீர் கக்கி ஆற்றல் பெறவும் 'சோதனை அறிவியல்’ (Experimental Science) முன்வரும். ஆனால், அப்படியான விநோத பரிசோதனைகளை நுண்ணறிவு அனுமதிக்காது.

  நுண்ணறிவு, அறம் சார்ந்தது; பல்லுயிர் நலன் காக்கும் மனம் சார்ந்தது. ஆனால் சோதனைகளால் பெறும் அறிவியல், பெரும்பாலும் வணிகமும் காப்புரிமையும் சார்ந்தது. அறமும் பல்லுயிர் பாதுகாப்பும் சோதனை அறிவியலுக்கு எப்போதும் கடைசிக் கரிசனமாக மட்டுமே அமைந்திருக்கும்!

ல்லாம் சரி. ஆசிவகரும் ஆரியப்பட்டாவும் கணிக்கப் பயன்பட்ட அந்த நுண்ணறிவு, நவீன யுகத்தில் எங்கே போனது? 2,400 வருடங்களாகத் துருப்பிடிக்காத இரும்புத் தூணைத் தந்த நுண்ணறிவின் தொழில்நுட்பம் எங்கே தொலைந்தது? யானை கட்டிப் போரடித்த உழவு, ஏன் இன்றைக்கு வரப்பு ஓரத்து வாகை மரத்தின் கிளையில் விவசாயி யைத் தூக்கில் தொங்கவைத்தது? பசியில் அழும் குழந்தையையும், சோகையில் சாகும் பெண்ணையும் ஊரின் இன்னோர் ஓரத்தில் ஏன் இன்னும் வைத்திருக்கிறது?

இந்தக்  கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னே நிச்சயமாக ஒளிந்திருப்பது, சகமனிதனை நேசிக்காத, சகபயணியாகப் பார்க்காத சமூகமாக நாம் மாறிப்போன அவலம்தான். இது, இன்றைக்கு நேற்று நடந்த மாற்றம் அல்ல... நாம் பல நேரம் சிலாகிக்கும் சங்க இலக்கியக் காலத்தில் இருந்தே இந்த ஆதிக்க உணர்வும் வேற்றுமை மனமும் நம் கூடவே ஒட்டிவந்துள்ளன.

வேத மரபுக்கும் சாங்கிய மரபுக்கும் நடந்த பிணக்குகள், சமணத்துக்கும் சைவத்துக்கும் நடந்த கடும் போர், சைவத்துக்கும் வைணவத்துக்கும் நடந்த கொலைவெறித் தாக்குதல்கள் எனத் தொடங்கி, இன்றைக்கு நடக்கும் அத்தனை சாதிமதச் சண்டைகள் நமக்குள் ஆழமாக விதைத்த பிணக்குகள்தாம், நம் நுண்ணறிவின் பயனை நம் சகமனிதரின் வாழ்வின் நலனுக்குத் தரவிடாது தடுத்தன.

நாம் உருவாக்கிய இந்தச் சாதிமதப் பிணக்குகளின் நீட்சிதான், ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட நம்மால், பக்கத்தில் இருக்கும் நம் சகமனிதனின் சங்கடங்களைக் கணக்கிட முடியாமல் வைத்தது.

நீள்கடலையும், நெடுவயலையும், வான் மலையையும் காக்க மட்டும் நுண்ணறிவு பயன்படாது. 'என் சாதி... என் மக்கள்...’ என்னும் பேதமை போற்றும் அரசியல்வாதியையும், 'உனக்கேன் வம்பு?’ சித்தாந்தம் போதிக்கும் கல்வியையும், 'எனக்கு எதுக்குப்பா வம்பு?’ என நகரும் சுயநல வாழ்வியலை விலக்கவும் வீழ்த்தவும்கூட இந்த நுண்ணறிவு கண்டிப்பாகத் தேவை!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism