Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 29

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 29

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

ஆனந்த யாழின் அடிநாதம் 

'நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்தானே வெயில் விழும். ஆனால், இங்கே மட்டும்தான் விழும் என்பதுபோல் ஒவ்வொருத்தரும் கொடியில் ஓர் இடத்தில் தொங்கப்போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா?’

- எழுத்தாளர் வண்ணதாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

('ஒரு சிறு இசை’ தொகுப்பில் இருந்து)

ப்போதும் காற்றில் மிதக்கும் இறகாக இவன் தன்னை நினைத்துக்கொள்வான். காற்றில் மிதக்கும் இறகுக்கு, இலக்கும் இல்லை; எந்தவித முன் தீர்மானமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அதற்கென்று தனிப்பட்ட திசையும் இல்லை. காற்றின் திசையே அதன் திசை.

காற்றின் போக்கில் அலைந்து திரிவதில்தான் எத்தனை சுகம். தூரத்துக் கண்களுக்கு அந்த இறகு தரை இறங்குவதைப் போல் தென்பட்டாலும், மீண்டும் லயமான சிறு காற்றின் மோதலில் தத்தித்தாவி விண்ணில் அலைவதைப் போல் இவன் பயணம் ஓடிக்கொண்டிருந்தது.

பாலுமகேந்திரா, தமிழ்நாடு திரைப்படப் படைப்பாளிகள் சங்கத் தொடக்க விழாவில் இவனின் 'தூர்’ கவிதையை வாசித்த சம்பவமும், பாரதிராஜா இவனது 'பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்டு நெகிழ்ச்சியாகப் பேசிய சம்பவமும் திரையுலகினர் மத்தியில் இவனை நேசமிக்கக் கவிஞனாக நெருக்கப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய அத்தனை உதவி இயக்குநர்களும் இவனைத் தங்களில் ஒருவனாக அடையாளம் கண்டார்கள்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஐந்துகோவிலான், பாலசேகரனிடம் உதவி இயக்குநராக இருந்த அஜயன் பாலா, அகத்தியனிடம் உதவி இயக்குநராக இருந்த வீரபாண்டியன்... எனப் பல நண்பர்கள் இவன் கவிதைகளை   நெஞ்சில் சுமந்து தங்களுக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் இவன் பாடல் எழுத சிபாரிசு செய்தார்கள்.

வேடிக்கை பார்ப்பவன் - 29

ந்த நாட்களில் எத்தனையோ ஆச்சரியங்களை, எத்தனையோ அனுபவங்களை, எத்தனையோ இடர்ப்பாடுகளை இவன் சந்தித்தான். இவனின் கவிதைகளை வாசித்துவிட்டு, சிலர் இவனைப் பாடல் எழுத அழைப்பார்கள். ஒல்லியாக, கட்டம் போட்ட சட்டையுடன், இயல்பான கூச்சத்துடன் பேசும் இவனுடைய தோற்றத்தைப் பார்த்ததும், ''கவிஞருக்கு எந்த ஊரு?'' என்ற முதல் கேள்வி எழும்.

இவன், ''காஞ்சிபுரம்'' என்பான்.

''மதுரை, தஞ்சாவூரு, கோயம்புத்தூரு, நாகர்கோவில் பக்கம்தான் கவிஞர்கள் உருவாகியிருக்காங்க. காஞ்சிபுரத்துக்காரங்களுக்கு வாழ்க்கை அனுபவம் கம்மிதானே... என்ன சொல்றீங்க கவிஞர்?'' என்று சீண்டுவார்கள்.

''தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்ற பழமொழியை நீங்க கேள்விப்பட்டது இல்லையா சார்?'' என்று இவன் புன்னகையோடு பதில் சொல்வான்.

''டியூன் இன்னும் ரெடியாகலை. அடுத்த வாரம் சொல்லி அனுப்புறோம்'' என்ற பதிலுடன் உரையாடல் முடியும்.

இவன் தோற்றத்தில் இருந்த எளிமையே, இவனுடைய பலமாகவும் பலவீனமாகவும் அந்தக் காலத்தில் இருந்தது. இன்று வரை இவன் வரிகளிலும் வாழ்க்கையிலும் எளிமையையே கடைப்பிடித்து வருகிறான். அதற்குக் காரணம் இவன் அறிந்த மாமனிதர்கள் எளிமையாகவே வாழ்ந்து, எளிமையாகவே இறந்தும்போனதுதான்.

'மக்களுக்குப் புரியாத வகையில் இலக்கியம் செய்கிறவன், அந்தப் படைப்பை திரைச்சீலை போர்த்தி மூடிவிடுகிறான். இயற்கை, மக்களுக்குத் தேவையான அனைத்தையும் எளிமையாகவே படைத்திருக்கிறது. மண் எளிது; விண் எளிது; காற்று எளிது; தீ எளிது!’ என்னும் மகாகவி பாரதியாரின் வார்த்தைகள்தான் இன்று வரை இவன் பாடல்களின் தாரக மந்திரம்.

றிவுமதி அண்ணன் அலுவலகத்தில் பாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருநாள், அறிவுமதி அண்ணன் இவனைத் தன் அறைக்கு அழைத்து, ''தம்பி சீமான் தொலைபேசில இருக்கான். உங்கிட்ட பேசணுமாம்'' என்று சொல்ல, இவன் தொலைபேசியை வாங்கி ''ஹலோ'' என்றான்.

வேடிக்கை பார்ப்பவன் - 29

''தம்பி, நான் இயக்குநர் சீமான் பேசறேன். தம்பி ஐந்துகோவிலான் உன்னோட 'பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தைக் கொடுத்தான். எங்கடா இருந்த இவ்வளவு நாளு? அண்ணன் இப்ப 'வீர நடை’னு ஒரு படம் இயக்கிட்டு இருக்கேன். இன்னிக்குத்தான் பாடலுக்கான மெட்டு அமைச்சோம். நாளைக்குக் காலையில அலுவலகத்துக்கு வா. உன் முதல் பாடலை அண்ணன் படத்துக்கு எழுதிக் குடு'' என்று உரிமையோடு சொல்லிவிட்டு தொலைபேசியை அவர் வைத்ததும், இவன் அன்பின் காற்றில் அலையும் இறகு ஆனான். இப்படித்தான் நண்பர்களே... இவனுடைய பாட்டுப் பயணம் மிக இயல்பாகத் தொடங்கியது.

சீமான் அண்ணனை இவன் ஓரிரு முறை சந்தித்து இருக்கிறான். அப்போது அவர் 'பாஞ்சாலங்குறிச்சி’ என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு 'இனியவளே’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அந்தப் படத்தில் கவிஞர் தாமரையைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்தார்.

சீமான் அண்ணனிடம் இருந்து இப்படி உரிமையும் அன்பும் கலந்த அழைப்பை இவன் எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்று இவன் பொய் சொல்ல விரும்பவில்லை. அண்ணனைச் சந்திக்கும் ஆவலில் அமைதியாக உறங்கிப்போனான்.

வழக்கமான சினிமா அலுவலகம் போல் இல்லாமல், சீமான் அண்ணனின் அலுவலகம், இவன் வீட்டைப் போலவே எளிமையாக இருந்தது. ஒரு பக்கம் நாட்டுக்கோழிகளை உறித்து, ராமநாதபுரக் கைப்பக்குவத்தில் உப்புக்கறி தயாராகிக்கொண்டிருக்க, மறுபக்கம் சுற்றிலும் தம்பிகள் புடைசூழ சீமான் அண்ணன் படம் பார்ப்பதைப் போலவே கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்ததும், ''என்ன... இப்படி எழுதிப்புட்ட? இவ்வளவு நேரம் உன் கவிதையைப் பத்தித்தான் பேசிட்டு இருந்தோம். முதல்ல சாப்புடு. அப்புறம் பாட்டுக்கான சூழல் சொல்றேன்'' என்றார்.

கதாநாயகி அறிமுகப் பாடல் அது. பட்டியல் போடும் பாடல் உத்தி அப்போது பிரபலமாக இருந்ததால், தனக்குப் பிடித்தவற்றைக் கதாநாயகி பட்டியலிட வேண்டும். அதற்கடுத்த இரண்டு வாரங்களும் இவன் சீமான் அண்ணனை, பாடல் வரிகளுடன் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறிச் சந்தித்தான்.

எல்லோரும் செங்கல் அடுக்கி வீடு கட்டுவார்கள். சீமான் அண்ணனின் வீடு அன்பால் கட்டப்பட்டிருந்தது. கம்யூன் வாழ்க்கையைப் பற்றி இவன் கேள்விப்பட்டிருக்கிறான். உண்மையில் அதை அங்குதான் சந்தித்தான். சீமான் அண்ணனின் தம்பி ஜேம்ஸ், அவரிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள், பி.சி.ஸ்ரீராமிடம் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செழியன் மற்றும் வேறு சில இயக்குநர்களிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள்... என 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். காசு இருந்தால் சமையல் தடபுடலாக நடக்கும். இல்லாவிட்டால், கவிதைகளும் கதைகளும்தான் அவர்களை அடுத்த நாளை நோக்கி நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லும். அன்று தொடங்கி வெற்றிபெற்ற பாடலாசிரியராகி, இவனுக்கு என்று தனி அலுவலகம் ஒன்று அமையும் வரை, சீமான் அண்ணன் வீட்டில் இருந்துதான் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தான். அந்தக் காலங்கள் மறக்க முடியாதவை.

சீமான் அண்ணனின் 'வீரநடை’ படத்தில் இடம்பெற்ற இவனது முதல் பாடல் 'முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’ என்று இவன் பெயருடனே தொடங்கும். அந்தப் பாடலில் இவன் பல உவமை, உருவகங்களைக் கையாண்டான். இன்று வரை தமிழ்த் திரைப்பாடல்களில் அதிக உவமை, உருவகங்கள் கொண்ட பாடல் அதுதான் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அணுஅணுவாக அந்தப் பாடலின் வரிகளை ரசித்து சீமான் அண்ணன் தேர்ந்தெடுத்தார். ''டேய்... தம்பி பிரமாதமா எழுதியிருக்கான்டா. நூறு ரூவா அவனுக்குக் குடுடா'' என்று சீமான் அண்ணன் சொல்ல, தயாரிப்பு நிர்வாகி நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். ''டேய்... அதைவிட இந்த வரி சிறப்பா இருக்குடா. கணக்குப் பார்க்காம 500 ரூவா எடுத்துக் குடுடா'' என்று சீமான் அண்ணன் அதட்ட, இவன் முதல் பாடலுக்குப் பெற்ற சன்மானம் அன்றைக்கு உச்சத்தில் இருந்த கவிஞர்கள் வாங்கிய தொகையைவிட அதிகமாக இருந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 29

பாடல் பதிவின்போது இவன் எழுதிய வரிகளைப் படித்துப் பார்த்த அந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, ''எங்க இருந்தாலும் இந்த ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னாடி வந்துதான் ஆகணும். திறமைக்குத் திரை போட முடியாது'' என்று பரவசப்பட்டார்.

அந்தப் பாடலில் இவன் எழுதிய, 'நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம் புடிச்சிருக்கு,’ 'காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு,’ 'மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் மலையருவி புடிச்சிருக்கு, 'கைப்பிடி நீண்ட குடை போன்ற பனைமரம் புடிச்சிருக்கு’... எனப் பல வரிகளை அடுத்தடுத்து அவரிடம் இசையமைக்க வந்த பல இயக்குநர்களிடம் பாடிக்காட்டி, இவன் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதவைத்தார் தேவா.

முதல் பாடலுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா தொடங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை பாடல் எழுதிய அனுபவங்களை 'கண் பேசும் வார்த்தைகள்’, 'ஹிட் ஸாங்’ என இரண்டு தொகுப்புகளின் வழியாக இவன் பதிவு செய்திருக்கிறான்!

'தங்கமீன்கள்’ படத்தின் 'ஆனந்த யாழை...’ பாடலுக்காக தேசிய விருது பெறும் இந்த வேளையில் இவன் ஆனந்த யாழைத் தொடர்ந்து மீட்ட உதவிய அனைத்து இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், வாராவாரம் 'வேடிக்கை பார்ப்பவன்’ வாசித்துவிட்டு நெகிழ்ச்சியோடு தொடர்புகொண்ட வாசகர்கள், கோடுகளால் வாழ்க்கையை வரைந்த ஓவியர் செந்தில், அனைவருக்கும் இவன் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறான்.

இவனாகவும், அவனாகவும், நானாகவும் வாழ்வதற்கான நொடிகளைத் தன் புன்னகையால் அள்ளி இறைத்துக்கொண்டிருக்கும், தந்தையாகி வந்த தனையன் ஆதவன் நாகராஜனுக்குத் தனிப்பட்ட அன்பு!

இவன் இந்தத் தொடரில் என்ன வேடிக்கை பார்த்தான்? இவன் எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

சுடலையிலே வேகும் வரை
சூத்திரம் இதுதான் கற்றுப்பார்!
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப்பார்!

ஆனால், அப்படியெல்லாம் போகிறபோக்கில் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துவிட முடியுமா?

பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனை சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!

(நிறைந்தது)