Published:Updated:

காதல் ததும்பும் ரகசியம்!

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

சண்முகசுந்தரம் நல்லப்பன், ஃபேஸ்புக்.

''உங்கள் குரல் கடவுளின் கொடை. ஆனால், உங்கள் நடிப்பு... நாங்கள் எதிர்பார்க்காத மேஜிக். ரொம்ப கேஷ§வலா நடிக்கிறீங்க. உங்களுக்குள் இருக்கும் நடிகனை எப்ப கண்டுபிடிச்சீங்க? ஆனா, தொடர்ந்து ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க?''

''ஸ்கூல் நாள்கள்ல பாடுற அளவுக்கு நாடகங்கள்லயும் நடிப்பேன். நடிப்புக்காக நிறையப் பரிசுகளும் வாங்கியிருக்கேன். ஆனா, 'நாடகத்துல இப்படி எல்லாம் சகஜமா இயல்பா நடிக்கக் கூடாது. சத்தம் போட்டு நடிக்கணும். அப்பத்தான் ஆடியன்ஸுக்கு ரீச் ஆகும்’னு நாடகத்தை இயக்கும் என் நண்பர்கள் திட்டுவாங்க. என்னமோ தெரியலை... அப்படி என்னால நடிக்கவே முடியாது. எழுதிக்கொடுக்கிற வசனத்தை அப்படியே சொல்ல மாட்டேன். ஸ்கிரிப்ட்டை உள்வாங்கிட்டு அந்தச் சூழ்நிலைக்கு என் மனசுல என்ன தோணுதோ, அதை நானாப் பேசுவேன். அந்த வகையில் நான் நல்ல நடிகன்னு எனக்குத் தெரியும். ஆனா, குட், பெஸ்ட், பெட்டர்ல எந்த ரேங்க்னு நீங்கதான் சொல்லணும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம்னு சுமார் 70 படங்கள் நடிச்சிருப்பேன். 'பாடகர்’ என்பதுதான் என் மெயின் ரோல். நேரம் கிடைக்கும்போது மட்டும்தான் நான் நடிக்க முடியும். அதுவும்போக, ஒரு நல்ல அப்பா, ஒரு நல்ல அண்ணன், ஒரு நல்ல கணவர்னு வழக்கமான கேரக்டர்களிலேயே நடிக்க எனக்குப் பிடிக்கலை. நடிச்சா அதுல எனக்கே ஒரு திருப்தி இருக்கணும். நான் அனுப விச்சு ரசிச்சு நடிக்கணும். அப்பத்தான் என் நடிப்பை மத்தவங்க என்ஜாய் பண்ணுவாங்க. அப்படியான கதாபாத்திரங்கள் வந்தா நிச்சயம் தவிர்க்க மாட்டேன்.

தெலுங்குல 'மிதுனம்’னு ஒரு படம். நான், திருமதி லட்சுமினு ரெண்டே கேரக்டர்கள்தான். அழகான வித்தியாசமான படம். ஆனா, அப்படியான கேரக்டர்கள் கிடைக்கிறதுதான் கஷ்டம்!''

காதல் ததும்பும் ரகசியம்!

ராமச்சந்திரன், ஃபேஸ்புக்.

''நீங்கள் பாடிய 'அய்யயயோ நெஞ்சு அலையுதடி...’ - 'ஆடுகளம்’ பாடல் செம கிளாசிக். அது மாதிரியான பாடல்களை ஜஸ்ட் லைக் தட் பாட முடியாது. எஸ்.பி.பி-க்குள் இருக்கும் காதலனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..!''

''ஒவ்வோர் இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அந்தப் பாட்டைக் கேட்ட உடனே எந்த இசையமைப்பாளர் கம்போஸ் பண்ணதுனு தெரியணும். அந்த ஃப்ளேவர் கெட்டுப்போகாமப் பாடுறதுதான் ஒரு பாடகனுக்கு சவால். 'அய்யயயோ நெஞ்சு அலையுதடி...’ பாட்டு டிபிக்கல் ஜி.வி.பிரகாஷ் ஸ்டைல். அதனால் அவர் பாடினா எப்படிப் பாடுவாரோ, அந்த மாதிரி பாடினேன். நான் பாடின பிறகு சரண் பாடியிருக்கார். இது முதல்ல எனக்குத் தெரியாது. ரெண்டு பேர் குரல்லயும் பாட்டைக் கேட்டப்ப சந்தோஷமா இருந்தது.

அப்புறம்... எனக்குள்ள இருக்கிற காதலனைப் பத்தி கேட்டிருக்கீங்கள்ல..! ஒரு பாடகன் என்பவன், கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். ரொமான்டிக் பாடல்களைப் பாடுறதுக்கு எனக்குள்ள தாக்கத்தை உண்டாக்கிறது லெஜண்ட் முகமது ரஃபி சார். அவர் பாடிய பாடல்களை கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுப் பாருங்க... அவர் ஏதோ தன் காதலிகிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரியே தோணும். அவரோட பாதிப்புதான் என்கிட்ட இருக்கு. அதனாலகூட ரொமான்டிக் பாடல்களில் என் குரலில் காதல் நிரம்பி வழியலாம்!''

என்.ஷஃபாத், அதிராம்பட்டினம்.

''டி.வி. ரியாலிட்டி ஷோக்களில் இளம் பாடகர்களுக்குத் தகுதிக்கு மீறிய பாராட்டுதல்களை வழங்கப்படுவதாக உணர்கிறீர்களா?''

''சின்னப் பசங்கதானே... கொஞ்சம் கூடுதலா உற்சாகப்படுத்துறதுல என்ன தப்பு? அவங்க பண்ற சின்னத் தப்புகளுக்கு ரொம்பக் கோபமா ரியாக்ட் பண்றப்போ, சின்ன சாதனையையும் பெருசா எடுத்துக்காட்டணும்தானே? ஆனா, எவ்வளவுதான் ஜாஸ்தியாப் பாராட்டினாலும் அவங்களுக்குத் தகுதி இருந்தாத்தான் கடைசில சக்சஸ் ஆகமுடியும்.

அந்தக் காலத்துல நாங்கள்லாம் சினிமாவுக்கு வந்தப்போ எலெக்ட்ரானிக் மீடியா கிடையாது. எப்பயாவது சினிமா பத்திரிகைகள், நாளிதழ்கள்ல, 'எஸ்.பி.பி. அந்தப் பாடலைப் பாடும்போது எடுத்த படம்’னு ஒரு போட்டோ போடுவாங்க. அதை வெட்டி வெச்சுக்கிட்டு பொக்கிஷம் மாதிரி ரொம்பக் காலத்துக்குப் பாதுகாத்துட்டு இருப்போம். ஏன்னா, அப்ப அதுவே எங்களுக்குப் பெரிய பப்ளிசிட்டி. சினிமாவுல பாட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எத்தனை மேடைகள்ல நாங்க பாடியிருந்தாலும், அது மத்தவங்களுக்குத் தெரியவே தெரியாது. நாங்களாவே ஒவ்வோர் இசையமைப்பாளரிடமும் போய் பாடிக் காமிச்சாத்தான் உண்டு.

ஆனா, இன்னைக்கு யாரும் யாருக்கும் அட்ரஸ் கொடுக்காமலே, கவிஞர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் பலரும், 'ரொம்ப நல்லாப் பாடுறாங்களே..! இவங்களுக்கு நம்ம படத்துல வாய்ப்பு தரலாம்’னு திறமைசாலிகளை அழைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கு. அது நல்ல விஷயம்தானே! சமயங்கள்ல அது கொஞ்சம் ஓவர் பப்ளிசிட்டியா இருக்கலாம். ஆனா, அதுக்குக் காரணம் பாடகர்கள் கிடையாது. அது நிகழ்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட வியாபாரம். முதல் நாளே ஃப்ளாப் ஆன படத்துக்கு 'அமர்க்களமான வெற்றி’னு ரெண்டாவது நாள் பப்ளிசிட்டி பண்றது இல்லையா? அந்த மாதிரி சில இடத்துல சில நேரங்கள்ல அப்படி நடக்கலாம். அதுக்காக ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோக்களையும் எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?!''

காதல் ததும்பும் ரகசியம்!

வினோகுமார், ஃபேஸ்புக்.

''உங்களுடைய பார்வையில் இந்தியாவின் டாப் 5 இசையமைப்பாளர்கள் யார்?''

'''உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாட்டு சொல்லுங்க’னு கேட்கிற மாதிரி இருக்கு. நான் பாட்டுனு கேட்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரை இந்தியாவில் எனக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்கள் குறைந்தபட்சம் 30 பேராவது இருப்பாங்க. இதுல வித்தியாசமா, அழகா, இனிமையான பாடல்களை இசையமைச்ச எல்லாருமே எனக்கு ரொம்பப் பிடிச்ச இசையமைப்பாளர்கள்தான். இவங்கள்ல யார் நம்பர் ஒன், டூனு எப்படிச் சொல்ல முடியும்? பிசினஸ் வேல்யூ வெச்சுப் பார்த்தா, சில நேரத்தில் சிலர் நிறையப் படங்கள் பண்ணியிருக்கலாம். இன்னும் சிலர், வருஷத்துக்கு ஒரு படம், ரெண்டு படம் மட்டுமே பண்ணுவேன்னு நௌஷத் சாஹிப் மாதிரி இருந்திருக்கலாம்.

இந்தியாவின் பல மொழி இசையமைப்பாளர்கள் சுமார் 500 பேர்கிட்ட நான் பாடியிருக்கேன். இதில் ஐந்து பேரை மட்டும் எப்படி தேர்ந்தெடுக்கிறது? அது ரொம்பக் கஷ்டம். இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்கிறதுக்காகச் சொல்ற வார்த்தைகள் கிடையாது. ஏன்னா, அவங்கவங்க ஸ்டைல்ல ரொம்ப அழகா இசையமைத்த நிறைய இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தருமே அவங்க கிளாஸ்ல நம்பர் ஒன்தான்!''

மெர்லின், சென்னை.

''நீங்கள் பாடியதில் உங்களுக்குப் பிடிக்காத பாட்டு எது?''

''பிடிக்காத பாட்டுனு சொல்ல முடியாது. ஆனா, இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடிச்ச 'பாயும் புலி’ படத்துக்காக 'ஆடி மாசம் காத்தடிக்க...’னு ஒரு பாட்டு பாடினேன். எஸ்.ஜி.கிட்டப்பா மாதிரியே பாடணும்னு கேட்டுக்கிட்டதால, ரொம்பக் கஷ்டப்பட்டுப் பாடினேன். அப்படிப் பாடினதால, அந்தப் பாடலைப் படம்பிடிக்கும்போது வித்தியாசமா ஏதாவது பண்ணுவாங்கனு நினைச்சேன். ஆனா, வழக்கமான பாணியிலேயே ரஜினி பாடுற மாதிரி படம்பிடிச்சிருந்தாங்க. குறை சொல்றதுக்காக இதைச் சொல்லலை. அந்த மாதிரி ஒரு வித்தியாசமான குரல்ல பாடினப்ப, பிக்சரைசேஷனும் வித்தியாசமா அமைஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணும்.

ஆனா, அப்படிப் பண்ணாததுக்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். சில பாடல்களைக் கேட்கும்போது மியூசிக்ல டிரெய்ன் ஒலி வரும்.ஆனா, படக் காட்சியில் டிரெய்ன் இருக்காது. அதுக்குச் சரியான சமயத்துல ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கிடைக்கலை, அப்படியே கிடைச்சிருந்தாலும் டிரெய்னை வெச்சு படம்பிடிக்க அனுமதி கிடைச்சிருக்காது, அனுமதி வாங்கின நாள்ல மழை பெய்ஞ்சிருக்கலாம்னு பல காரணங்கள் இருக்கலாம். அது மாதிரி ஏதாவது ஒரு பிரச்னைகூட 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாட்டு சமயம் வந்திருக்கலாம். அப்படிச் சொல்லித்தான் சமாதானப்படுத்திக்கிட்டேன்!''

என்.ஷஃபாத், அதிராம்பட்டினம்.

''உங்களை 'பாலசுப்ரமணியம்’ என்று முழு பெயர் சொல்லி அழைப்பவர்கள் யார்... யார்?''

''சினிமா இண்டஸ்ட்ரியில் யாருமே என்னை அப்படிக் கூப்பிடுறது இல்லை. தமிழ்நாட்ல 'எஸ்.பி.பி.’ம்பாங்க, 'பாலு சார்’ம்பாங்க. இல்லைனா 'பாலு’ம்பாங்க. மலேசியா, சிங்கப்பூர்ல 'எஸ்.பி.பாலா’ம்பாங்க. ஆந்திராவுல 'பாலுகாரு’, இல்லைனா 'பாலு’. ஜானகியம்மா மட்டும் என்னை எப்பவுமே 'சுப்ரமணியம்’னுதான் கூப்பிடுவாங்க. வீட்ல, நண்பர்கள் வட்டத்தில் 'மணி’னு கூப்பிடுவாங்க. பொது நிகழ்ச்சிகள்ல கண்ணியமா 'மிஸ்டர் பாலசுப்ரமணியம், டாக்டர் பாலசுப்ரமணியம்’னு கூப்பிடுவாங்க. மத்தபடி சினிமா துறையில் யாரும் என்னை முழுப் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க!''

தண்டபாணி, நாகர்கோவில்.

'ஆயிரம் கனவு காணும் மனது...’, 'ஓ மைனா... ஓ மைனா...’, 'வான் நிலா நிலா...’, 'மடை திறந்து தாவும் நதியலை நான்...’ போன்ற பாடல்களை உங்களைத் தவிர மற்றவர்களால் பாட முடியாது என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?''

''சில பாடல்களை ஒரு குரல்ல கேட்டு பரிச்சயமான பிறகு, வேற குரல்ல கேட்டா நமக்குப் பிடிக்காம போகலாம். ஹிட்டான பாடல்களை, 'வேற யாரு இதைப் பாடியிருந்தாலும் இப்படி இருந்திருக்காது’னு பலர் நினைப்பாங்க. ஆனா, ஏன் அப்படி நினைக்கணும்? அதே பாடலை வேற ஒருத்தவங்க என்னைவிட இன்னும் ரொம்ப ரொம்ப நல்லா பாடியிருக்கலாமே! நமக்கு ஒருத்தர் மேல ப்ரியம் இருந்தா, அவரை கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடிடுறோம். அது சரி கிடையாது. ஒரே பாடலை ரெண்டு பேர் பாடியிருந்தா, அப்ப யார் நல்லா பாடியிருக்காங்கனு தெரியும். ஆனா, இந்த ஒப்பீடு எதுக்குங்க..? நல்ல பாடலை யார் பாடினாலும் கேட்டு ரசிப்போமே!''

- நிலாவுடன் பேசலாம்...

• '' பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவு களைப் பகிர்ந்துகொள்ளுங் களேன்?''

• ''இன்றைய இளம் பாடகர் களிடையே நீங்கள் உணரும் ப்ளஸ், மைனஸ் குணங்கள் எவையெவை?''

• ''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்?''

- அடுத்த வாரம்...

காதல் ததும்பும் ரகசியம்!

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு