Published:Updated:

செய்தித்தாள்/வார இதழ்கள் பி.டி.எஃப், ஃபிரான்ஸ் தமிழர், கூகுள் உதவி! - சைபர் க்ரைமின் கிடுக்கிப்பிடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செய்தித்தாள்/வார இதழ்கள் பி.டி.எஃப், ஃபிரான்ஸ் தமிழர், கூகுள் உதவி! - சைபர் க்ரைமின் கிடுக்கிப்பிடி
செய்தித்தாள்/வார இதழ்கள் பி.டி.எஃப், ஃபிரான்ஸ் தமிழர், கூகுள் உதவி! - சைபர் க்ரைமின் கிடுக்கிப்பிடி

செய்தித்தாள்/வார இதழ்கள் பி.டி.எஃப், ஃபிரான்ஸ் தமிழர், கூகுள் உதவி! - சைபர் க்ரைமின் கிடுக்கிப்பிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களின் செய்திகளை இணையத்தளத்தில் திருடி வெளியிட்ட சென்னை மென்பொறியாளரை, கடந்த சனிக்கிழமை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ‘பிரபல பத்திரிகைகளின் செய்திகளைத் திருடி, இணையத்தளத்தில் வெளியிட்டு, மிகப் பெரிய அளவில் வருமானம் பார்த்துள்ளனர். இதன் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம்' என அதிர வைக்கின்றனர் போலீஸார். 

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்துக்குக், கடந்த வாரம் புகார் ஒன்றைக் கொண்டுசென்றுள்ளனர் ஊடக உலகத்தினர். அதில், ‘பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தளத்தின் வழியாகத் திருடி, தனி நபர்கள் சிலர் லாபம் பார்க்கின்றனர். இதனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. செய்தி நிறுவனங்களின் உழைப்பைக் குறுக்கு வழியில் அபகரிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். கூடவே, 'எந்தெந்த இணையத்தளங்களின் வழியாக இந்த நூதன மோசடி நடக்கின்றது?' என்கின்ற விவரத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், ஆனந்த் என்ற மென்பொறியாளரைக் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், 'மேக்னட் டாட் காம்' என்ற இணையத்தளத்தின் மூலம், செய்தி நிறுவனங்களின் செய்திகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சிகர தகவல்களும் வெளிவந்தன. 

“தூத்துக்குடியில் உள்ள மிகப் பிரபலமான மருத்துவர் ஒருவரின் மகன்தான் இந்த ஆனந்த். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், இணையத்தளப் பக்கங்களை வடிவமைத்துக் கொடுக்கும் வேலையில் இறங்கினார். கூடவே, செய்தி நிறுவனங்களின் பரபரப்பான செய்திகளை இணையத்தளத்தில் வெளியிடுவதன் மூலம் அதிக வருமானம் கிடைப்பதை அறிந்தார். இதற்கென தனியாக, 'மேக்னெட் டாட் காம்' என்ற இணையத்தளத்தை உருவாக்கினார். இந்தத் தளத்துக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு பிரபல நிறுவனங்களின் செய்திகளை, விற்று லாபம் பார்த்தார். மிக முக்கியமான செய்திகள் அனைத்தும், பி.டி.எஃப் பைல்களாக இணைய உலகில் உலவியது. இதனால், சில செய்தி நிறுவனங்கள் பொருளாதாரரீதியான இழப்பை சந்தித்தன" என விவரித்த சைபர் கிரைம் போலீஸார்,  

“மென்பொறியாளர் ஆனந்தை நெருங்குவதற்கு முன்பு, அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்தோம். 'மேக்னெட் டாட் காம்' இணையத்தளத்தில் பிரபல செய்தி நிறுவனங்களின் செய்திகள் அனைத்தும், இந்த இணையத்தள முகவரியின் வாட்டர் மார்க்குடன் இருந்தன. இதனை நடத்துபவரின் பின்னணி, வரவு செலவுகள், வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்குகள் என அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்தோம். மேக்னெட் டாட் காமுக்கு அனுப்பப்பட்ட பணம் அனைத்தும், தூத்துக்குடியில் உள்ள பொதுத்துறை வங்கியில் வரவு வைக்கப்பட்டு வந்தது. அந்தக் கணக்கு ஆனந்தின் பெயரில் இருந்தது. அந்த வங்கிக் கணக்கில் பல லட்ச ரூபாய்கள் வரவு வைக்கப்பட்டிருந்தன. தவிர, மேக்னெட் டாட் காம் தளத்தின் வாடிக்கையாளர்களுக்கான யூஸர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அனைத்தும் ஆனந்தின் இமெயில் முகவரியில் இருந்தே சென்றுள்ளன. இந்த ஆதாரத்தை வைத்து காப்பி ரைட் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தோம்" என்றார் விரிவாக. 

‘இதுபோன்ற இணையத்தள திருடர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது?' என்ற கேள்வியை காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “வீடு புகுந்து கொள்ளையடிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. செய்தி நிறுவனங்களின் கடின உழைப்பை, ஓரிரு நிமிடங்களில் இணையத்தளம் வழியாகத் திருடும் சைபர் கிரைம் கில்லாடிகள் பெருகிவிட்டனர். இப்படியொரு குற்றத்தின்கீழ் மென்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்தக் கைதுக்குப் பிறகு செய்திக் கட்டுரைகளைத் திருடும் போக்கு குறைந்துள்ளது" என்றவர், “இதன் பின்னணியில் இன்னும் பலர் உள்ளனர். 'மேக்னெட் டாட் காம்' இணையத்தளத்தை ஆனந்த் வடிவமைத்துக் கொடுத்தாலும், அந்த இணையத்தளம் வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர் ஒருவருக்கும் இதில் தொடர்பிருக்கிறது. அவரிடம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தூதரகம் வழியாக விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதுதொடர்பாக, கூகுள் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறோம். கூகுளிடம் இருந்து வரப் போகும் கூடுதல் தகவல்களை வைத்தே, இதன் பின்னணியில் இயங்கிய ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் வளைக்க முடியும். இதுநாள் வரையில் ஆனந்த் உருவாக்கிக் கொடுத்த இணையத்தளங்களைப் பற்றியும்  வெளிநாட்டுத் தொடர்புகளைப் பற்றியும் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறோம்" என்றார் நிதானமாக. 

“பொதுவாக, இந்தியாவில் சைபர் கிரைம் சட்டங்கள் வலுவாக இல்லை. இதனாலேயே குற்றவாளிகள்  தப்புவதற்கான வழிவகைகள் இருக்கிறது. எனவே, வரும் காலங்களில் சைபர் கிரைம் சட்டங்களை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும்" என்ற குரல்களும் ஊடக உலகில் எதிரொலிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு