Published:Updated:

வௌவால், ஃபன் பீஸ், DSLR பாய்... இந்த கேரக்டர்கள் உங்க காலேஜ்லயும் இருக்காங்களா..?

வௌவால், ஃபன் பீஸ், DSLR பாய்... இந்த கேரக்டர்கள் உங்க காலேஜ்லயும் இருக்காங்களா..?
வௌவால், ஃபன் பீஸ், DSLR பாய்... இந்த கேரக்டர்கள் உங்க காலேஜ்லயும் இருக்காங்களா..?

வௌவால், ஃபன் பீஸ், DSLR பாய்... இந்த கேரக்டர்கள் உங்க காலேஜ்லயும் இருக்காங்களா..?

இப்போ எல்லோருக்கும் காலேஜ் ஆரம்பிச்சிருக்கும், நீண்ட விடுமுறைக்குப் பிறகு காலேஜ் போறது பலருக்கும் வெறுப்பாத்தான் இருக்கும். இன்னும் ஜூனியர்ஸ் வேற பல காலேஜ்கள்ல வந்திருக்கமாட்டாங்க. அதனால இந்த சில நாள்கள் பலருக்கும் கொஞ்சம் வறட்சியாத்தான் இருக்கும். இந்த நேரத்துல உங்க கிளாஸ்லயே  பல விதமான என்டர்டெயினிங்கான கேரக்டர்கள் இருப்பாங்க. எல்லா காலேஜ்லயும் அப்படி இருக்கும் பொதுவான கேரக்டர்களைப் பார்ப்போம்.

முதல் பெஞ்ச் மக்கள்:

இதுல முக்கியமா சொல்லணும்னா எல்லா வகுப்புகளிலும் படிக்குறதுக்குனே முதல் பெஞ்ச்ல மூணு பேர் இருப்பாங்க. என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாங்க. அப்பப்போ காமெடி பண்ண ட்ரை பண்ணுவாங்க. நமக்கு சிரிப்பே வரலைனாலும் பொண்ணுங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அப்படி கரெக்டா குறிவச்சி காமெடி பண்ணுவாய்ங்க. எல்லாத்துக்கும் மேல பங்க், ஸ்ட்ரைக்னு எதுலயும் கூடச் சேர மாட்டாய்ங்க. எல்லாத்துக்கும் மேல ஆசிரியர்களோட செல்லப்பிள்ளையா இருப்பாங்க. லேட்டா கிளாஸ் விட்டா அதையும் சந்தோஷமா ஏத்துக்குவாங்க, டெஸ்ட் சொல்லிருந்தா அவங்களே மறந்தாலும் இவங்க ஞாபகப்படுத்துவாங்க. இவங்களுக்குலாம் கும்பிபாகம் உறுதி.

கடைசி பெஞ்ச் மக்கள்:

மேல சொன்னவங்களுக்கு நேர்மறையானவங்க லாஸ்ட் பெஞ்ச் மக்கள். காலேஜ்ல என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க. சின்ன டெஸ்ட்க்குலாம் படிக்கமாட்டாங்க. நேரா செமஸ்டர் எழுதி பாஸ் பண்ணிப்பாங்க. என்னலாம் கொடுமை பண்ண முடியுமோ அத்தனையையும் பண்ணுவாங்க. என்ன பிரச்னை வந்தாலும் இவங்க மேலதான் கேஸ் விழும். அதையும் பெருசா கண்டுக்கமாட்டாங்க.

நடு பெஞ்ச் மக்கள்:

இது ரெண்டுக்கும் நடுவுல இருக்கிறவங்க 'கடவுள் பாதி மிருகம் பாதி' மாதிரி ஓரளவு படிக்கவும் செய்வாங்க கலாட்டாவும் பண்ணுவாங்க. சிக்காம பிரச்னை பண்றதுல்ல இவங்கள அடிச்சிக்க முடியாது. சொல்லப்போனா இந்த மூணுலேயே ஒரு கிளாஸ் மக்கள் எல்லாத்தையும் பிரிச்சிடலாம். இதுக்கு மேல தனிப்பட்ட முறையில வித்தியாசமான கேரக்டர்கள் சில பேர் இருப்பாங்க.

ஷார்ட்ஃபிலிம் டைரக்டர்:

நான் ஒரு கார்த்திக் சுப்புராஜ்னு சொல்லிட்டு சுத்துறவன் க்ளாஸுக்கு ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். முதல் வருஷத்துல இருந்து படம் எடுக்குறேன் படம் எடுக்குறேன்னு சொல்லி இப்போ வரை எதுவும் பண்ணிருக்கமாட்டான் அதுலயும் எக்குத்தப்பா ஒரு படம் எடுத்தாலும் அதுக்கப்புறம் ஆள் காணாமலே போயிருப்பான். 

டி.எஸ்.எல்.ஆர் பாய்:

மேல சொன்ன டைரக்டர் இவனை நம்பித்தான் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருப்பான். இவனும் கேமரா வெச்சிருக்க ஒரே காரணத்துக்காக ஒரு போட்டோகிராபி பக்கத்தை ஃபேஸ்புக்ல ஆரம்பிச்சிருப்பான். மொத்த கிளாஸ்க்குமே ப்ரொபைல் போட்டோ இவன்தான் எடுப்பான்.

மீம் மாம்ஸ்:

நானும் மீம் கிரியேட்டர் தான்னு சொல்லிட்டு மீம்ங்கற பேர்ல எதையாவது போட்டுப் படுத்தியெடுக்குறதுக்குனு ஒருத்தன் எல்லா கிளாஸ்லயும் இருப்பான். அவன் போட்ட மொக்க மீம்க்கு ஹார்ட்டின் சிம்பல் போடணும்னு வேற இன்பாக்ஸ்ல நச்சரிப்பான். டெம்ப்ளேட் திருடி மீம் போட்டுட்டு அவ்ளோ பில்டப் கொடுப்பான்.

சிங்கர் ஷண்முகம்: 

தான் ஒரு பெரிய பாடகர்னு யாரோ அடிமனசுல இறங்கி பதியவெச்ச மாதிரி எதையாவது பாடிட்டே இருப்பான். பக்கத்துல இருக்கிறவன் தான் பாவம். இதுல நிமிஷத்துக்கு ஒரு முறை வாய்ஸ் நல்ல இருக்கானு வேற கேட்பான். சரி ஏதோ நண்பனா போய்ட்டானேனு நல்லா இருக்குனு சொன்னா எக்ஸ்ட்ராவா ரெண்டு பாட்ட நமக்கு டெடிகேட் பண்ணுவான்.

அங்கிள் ஜான்:

ஏதாவது காரணத்தினால லேட்டா காலேஜ் சேர்ந்த ஒருத்தன் இருப்பான். அவன்தான் பாவம். அங்கிள்னு கூப்பிடறது, கல்யாணம் எப்போன்னு கேட்குறது, குழந்தைகள ஸ்கூல்ல விட்டச்சானு கேட்கிறதுனு படுத்தி எடுத்துருவாங்க. அவரும் எல்லாம் விதின்னு பொறுமையா இருப்பார்.

எடுபிடி ரெப்:

கண்டிப்பா கிளாஸ் ரெப்ரசென்டேடிவ் பதவியை யாரும் விருப்பப்பட்டு வாங்க மாட்டாங்க. ஏன்னா எல்லாருக்குமே தெரியும் அது ஆசிரியர்களின் கையாள் வேலைனு. பாதி நேரம் முன்னாடி சொன்ன முதல் பெஞ்ச் மக்கள்ல ஒருத்தன் தான் ரெப்பா இருப்பான். அவங்களுக்குத்தான் இது செட் ஆகும். ரெப்பா இருக்குறவங்களை வேணும்னே வெறுப்பேத்துறதுதான் மத்தவங்க வேலை. பிளேஸ்மென்ட் ரெப் பதவி இன்னும் மோசம்.

காதல் பறவைகள்:

இந்த லவ் பண்ற பசங்க இல்லாம ஒரு கிளாஸ் இருக்க வாய்ப்பே கிடையாது. அதுவும் வேற கிளாஸ் பொண்ணுனா கூட பரவாயில்ல ஒரே கிளாஸ்ன்னா அவ்வளவுதான். கண்ணால பேசுறேன்னு நம்மள கொன்னுருவாங்க. நைட் ஆகிருச்சுனா போன்ல மூழ்கிருவாங்க. நம்ம கூட வெளிய வரமாட்டாங்க ஆனா, பிரச்னைனா மட்டும் நம்மகிட்ட வருவாங்க.

ப்ளேபாய் பெருமாள்:

இந்த ஃபேஸ்புக்ல ப்ளேபாய் பதிவுல இன்னொருத்தன டேக் பண்ணி ஷேர் பண்றவன்தான் உண்மையிலயே ப்ளேபாயா இருப்பான். கிளாஸ்ல இருக்குற பொண்ணுங்க நம்பர் எல்லாம் அவன்கிட்ட இருக்கும். எந்நேரமும் யார் கூடயாவது பேசிட்டே இருப்பான். ஒரே நேரத்துல பலபேரோட பேசுறதால மாத்தி மாத்தி மெசேஜ் அனுப்பவும் வாய்ப்புண்டு.

வௌவால்கள்:

இரண்டு பேருக்கு நடுவுல சண்டை நடந்தா 'என்னடா உன்னையவே அடிச்சிட்டான்'னு உசுப்பேத்தி அதைப் பெருசாக்குறது, 'மச்சான் அவ உன்னையத்தான் பாக்குறா'னு சும்மா இருக்குறவனையும் உசுப்பிவிடுறது, ஒரு பையனும் பொண்ணும் சும்மா பேசிட்டு இருந்தாலே, 'அவங்க ரெண்டு வருஷமா லவ் பண்றாங்க'னு புரளியைக் கெளப்புறதுனு கொளுத்திபோடுற வேலையப் பார்க்குறதுக்குனே ஒரு 'வௌவால்' கும்பல் கண்டிப்பா இருப்பாங்க. அவங்கள சமாளிச்சிட்டாலே காலேஜ்ல பாதிப் பிரச்னை வராது.

ஃபன் பீஸ்:

எல்லாத்துக்கும் மேல கலாய்க்கிறதுக்குனே அளவெடுத்த மாதிரி ஒருத்தன் இருப்பான். பேச்சு, நடை, உடை, நடவடிக்கைனு எதையுமே விட்டுவைக்காம கலாய்க்கிற மாதிரி இருப்பான். அவனைத்தான் ஃபன் வறட்சியைப் போக்க வந்த குலவிளக்கா கிளாஸ் மொத்தமும் பார்க்கும். 

இதையும் தாண்டி இன்னும் பல கேரக்டர்கள் ஒவ்வொருத்தர் காலேஜ்லயும் இருப்பாங்க. உண்மையிலயே காலேஜ் வாழ்க்கையைப் பசுமையாக்குவது இந்த வித்தியாசமான கேரக்டர்கள்தான். உங்கள் காலேஜ்ல இந்த மாதிரி என்னென்ன கேரக்டர்கள்லாம் இருக்காங்கனு யோசிச்சுப் பாருங்க... ஜாலியா இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு