வேர்களில் சிக்காது சிறகுகள்!
##~## |
''நான் பிறந்தது காட்டுமன்னார்குடி அருகில் உள்ள லால்பேட்டை என்கிற கிராமம். ஆனால் படித்தது, வளர்ந்தது எல்லாம் விருத்தாசலம். பீங்கான் தொழிற்சாலை, மணிமுத்தாறு, கோனான்குப்பம் பெரியநாயகி மாதா கோயில் திருவிழா, பழமலைநாதர் கோயில், வேதமாணிக்கம் பள்ளிக்கூடம், கொளஞ்சி யப்பர் அரசு கலைக் கல்லூரி... இதெல்லாம்தான் விருத்தாசலம்!'' பால்ய கால நினைவுகள் பற்றிப் படரப் பேசத் துவங்குகிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்’ கதிர்.
''விருத்தாசலத்தில் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்தபோது தேர்வில் தோல்வியுற்றேன். அப்போது வேம்பு டீச்சர் என்னை அழைத்து, 'பள்ளிக்கூடத் தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். பள்ளிக் கல்வியில் தோற்றவர்களில் பலர் பின்னாளில் மிகப் பெரிய சாதனையாளர்களாக மாறி இருக்கின்றனர்’ என்று என்னைத் தேற்றினார். அதுவரை படிப்பின் மகத்துவத்தையே சொல்லி வந்த வேம்பு டீச்சர், படிப்பைக் கடந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதேபோல மற்றொரு சம்பவம். நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, தீபாவளிக்கு மறுநாள் என் நண்பனின் கிராமத்துக்குச் சென்று இருந்தேன். அவனது தாத்தா தோட்டி வேலை செய்பவர். நான் போய் இருந்தபோது நண்பனின் தாத்தா பெரிய கூடையில் வேட்டியைப் போட்டு, அதில் சாதி இந்துக்களிடம் இருந்து பலகாரங்களை வாங்கி வந்தார். என் நண்பன் அந்தப் பலகாரத்தை கையில் எடுத்தபோது அவனது அத்தை மூங்கில் கம்பால் அதை தட்டிவிட்டார். 'தானியங்களைத் தானமாக வாங்குவதுதான் முறையானது... சமைத்ததை வாங்கி வருவது பிச்சை. படித்த குழந்தை நீ இதை சாப்பிடாதே’ என்று கூறினார். வேம்பு டீச்சர் தன்னம்பிக்கை என்றால், என் நண்பனின் அத்தை சுயமரியாதையின் அடையாளம்!

என் நண்பன் பிரபாகரனோடு இணைந்து கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது 'சுவடுகள்’ என்கிற கையெழுத்துப் பிரதியை நடத்தினேன். ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சுவடுகளைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தது, இப்போது நினைத்தாலும் இனிக்கும் நினைவுகள். இதே காலகட்டத்தில்தான் திருமணமே செய்துகொள்ளாமல் தன் வாழ்வினைச் சமூகத்துக்கு அர்ப்பணித்த ரொட்டிக் கடை ராசு அண்ணனின் நட்பு கிடைத்தது. பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை ராசு அண்ணன்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த ஜெயகாந்த்சிங் அண்ணனின் பரிச்சயம் ஏற்பட்டது. போலீஸாரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் அவர். இவர்களைப் போன்றோரின் பணிகள்தான் சமூகப் பிரச்னைகளின் பக்கம் எனது கவனத்தைத் திசை திருப்பியது!
மணிமுத்தாறில் மீன்பிடித்தது, நாவல் பழங்களைத் திருடிச் சாப்பிட்டது, காதலைச் சொல்லாமல் தவித்தது, கவிதை எழுதியது என எல்லோரையும்போலவே பல இனிய சம்பவங்கள் இருந்தாலும், அவை எல்லாம் நினைவுக்கு வர மறுக்கின்றன. விருத்தாசலத்தைச் சுற்றி உள்ள பல கிராமங்களில் என் உறவினர்கள் இப்போதும் சாதி இந்துக்களிடம் கூலிகளாக வாழ்கிறார்கள்; தப்படிக்கிறார்கள்; சாக்கடை அள்ளுகிறார்கள். என் பெரியப்பாவுக்கு இன்னமும் டீக்கடையில் சமமான பெஞ்ச் கொடுக்கப்படவில்லை. கொடுமைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் என் வாழ்வினை விருத்தாசலம் நகர்த்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் முருகேசன் என்கிற தலித் இளைஞன் கண்ணகி என்கிற சாதி இந்துப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக, கண்ணகியின் பெற்றோர்கள் தம்பதியர் இருவரையும் எரித்துக் கொன்றனர். 13 வயது தேவி என்ற சிறுமியை மூன்று சாதி இந்து இளைஞர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக் கினர். ரதி என்கிற 15 வயது பெண்ணை மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று கெடுத்து நாசமாக்கினர். இவை எல்லாம் இல்லாத விருத்தாசலம் என்றைக்குக் கிடைக்கும் எனக்கு?
தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் பேசும்போது, 'இந்தியர்கள் எல்லோரும் ஒன்றுபோல இருக்கின்றீர்களே. எப்படி உங்களை தலித் என்று கண்டுபிடிக்கிறார்கள்?’ என்று வெளிநாட்டினர் என்னிடம் பலமுறை கேட்டுள்ளனர். ஒவ்வொரு தலித்தும் சிறு வயதில் தங்களது அடையாளத்தைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பயந்து நடுங்கிய உளவியல் உளைச்சலை அனுபவிக்காமல் இருக்க முடியாது. இதனால் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது எல்லாம் எல்லா மேடைகளிலும் 'கதிர் ஆகிய நான் தலித்’ என்று கம்பீரமாக சொல்கிறேன். அப்போது எல்லாம் சாதி இந்துக்கள் மௌனமாக தலைகுனிகின்றனர். மற்றபடி என் விருத்தாசலம் மண்ணை நேசிக்கிறேன். அதே நேரத்தில் மண்வாசனை, அழகியல் என்று வேர்களில் சிக்காமல் அவற்றின் பிடியிலிருந்து வெளியேறி பறக்கவே விரும்புகிறேன்!''
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.தேவராஜன்