Published:Updated:

‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் #YourName

‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் #YourName
‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் #YourName

‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் #YourName

ஜப்பானிலிருந்து உருவாகும் மரபுச் சார்ந்த அனிமேஷன் திரைப்படங்களை அனீமி ஃபிலிம்ஸ் (Anime films) என்பார்கள். அந்த வகையில், உலகெங்கும் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பெற்ற படம், யுவர் நேம் (Your Name). இதன் திரைக்கதை வித்தியாசமானது. வெவ்வேறு இடங்களில் மூன்று வருட இடைவெளியில் வசிக்கும் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் நினைவுகள், பரஸ்பரம் இடம் மாறுகின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பான, நெகிழ்ச்சியான சம்பவங்களே திரைப்படம்.

ஜப்பானின் மலையோர சிற்றூரில் வாழும் மாணவி, மிஷூவா (Mitsuha). அங்குள்ள சிறிய வாழ்க்கை அவளுக்குச் சலிப்பூட்டுகிறது. தான் ஒரு பையனாக இருந்தால் விரும்பியவாறு நகரத்துக்குச் சென்று ஊர் சுற்றலாமே என்று நினைப்பாள். தான் ஒரு பையனாகிவிட்டோம் என்கிற உணர்வும் அவளுக்குள் அவ்வப்போது உருவாகிறது. தன் உடலைத் தினமும் பரிசோதித்துக்கொள்கிறாள்.

டோக்யோ நகரத்தில் உள்ள மாணவன் டாகி (Taki). பள்ளி முடிந்ததும் ஓர் உணவகத்தில் பகுதி நேரமாகப் பணிபுரிகிறான். மிஷூவா மற்றும் டாகி ஆகிய இருவருக்குமே விநோதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. மிஷூவா சமயங்களில் தன்னை ஒரு பையனாக உணர்கிறாள். டாகியும் தன்னை ஒரு பெண்ணாக உணர்கிறான். ஆனால், இவை குறித்த நினைவுகள் அவர்களுக்கு மங்கலாகவே இருக்கின்றன. மற்றவர்கள் சொல்லித்தான் குறிப்பிட்ட சில நாட்களில் அவர்கள் விநோதமாக நடந்துகொண்டது புரிகிறது. அவர்கள் பரஸ்பரம் எழுதிவைக்கும் குறிப்புகள்மூலம் அவர்களைக் குறித்த எதிர் அடையாளங்களை உணர்கிறார்கள். டோக்கியோவில் இருக்கும் பையனின் நினைவுகள், தன் மனதில் புகுந்துகொள்வதை மிஷூவா உணர்கிறாள். அப்படித்தான் டாகியும். இந்த விநோத அனுபவம், தங்களின் அன்றாட வாழ்க்கையை அதிகம் பாதிக்காத அளவில் அவர்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

அவர்களின் மனங்கள் இடமாறும் சமயங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதை பரிமாறிக்கொள்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். டாகி பணியாற்றும் அதே உணவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் மீது, டாகி காதல்கொள்ள மிஷூவா உதவி செய்கிறாள். அவள் டாகியின் உடம்பில் இருக்கும்போது, இந்த உதவியைச் செய்யமுடிகிறது. அதுபோல, மிஷூவாவின் பள்ளியில் அவள் புகழ்பெற டாகி உதவுகிறான்.

திடீரென மிஷூவாவிடமிருந்து டாகிக்கு எந்தவிதமான செய்தியும் வருவதில்லை. அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. கூடுவிட்டு கூடு பாயும் இந்த விநோதமான அனுபவம் எதனால் ஏற்படுகிறது என்கிற ஆவலும் உண்டாகிறது. எனவே, மிஷூவா இருக்கும் ஊருக்குச் சென்று அவளை நேரிலேயே சந்தித்துவிடுவது எனப் புறப்படுகிறான் டாகி. அழையா விருந்தாளியாக அவனுடைய காதலியும் நண்பனும் அவனோடு செல்கிறார்கள். தன் நினைவில் பதிந்திருந்த மங்கலான சித்திரங்கள் யோசித்து மிஷூவா வசிக்கும் பிரதேசத்தை ஓவியமாக வரைகிறான் டாகி. அதன்மூலம் அவளுடைய ஊரைக் கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால், அது அத்தனை எளிதானதாக இல்லை. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அந்த ஊரின் பெயரை கண்டுபிடித்துவிடுகிறான்.

ஆவலுடன் அங்குச் சென்றால், மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, வால்நட்சத்திரங்களின் தாக்குதலால் அந்த ஊர் அழிந்துபோயிருக்கிறது. அந்த ஊரில் வசித்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது. இறந்துபோனவர்களில் மிஷூவாவும் ஒருத்தி. பிறகு என்னவெல்லாம் நிகழ்கிறது, டாகியால் மிஷூவாவை சந்திக்க முடிந்ததா என்பதை விநோத காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கும் உருவாக்கம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் இருக்கும் வேறுபாடுகளை இந்தத் திரைப்படத்தின் வழியே அறியலாம். காட்சியின் அசைவுகள், வண்ணங்கள் என்று பலவிதங்களில் ஜப்பானின் அனீமி திரைப்படங்கள் வேறுபடுகின்றன. ஜப்பானின் பாரம்பர்யமும் மரபும் திரைக்கதை நெடுக நினைவூட்டப்படுகிறது. குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் ஜப்பானின் பழைய கிராம மரபும், நகரத்தின் பின்புலத்துக்குமான வேறுபாடும் துல்லியமான முறையில் சித்தரிக்கப்படுகிறது. கிராமம் மற்றும் சிற்றூர்களில் வாழும் இளைய மனங்களுக்கு, நகரத்தின் மீதான கவர்ச்சி தங்கியிருக்கிறது. அது சார்ந்த மனோபாவத்தின் பிரதிபலிப்பை, மிஷூவா கதாபாத்திரத்தின் மூலம் உணரமுடிகிறது. இதுபோலவே இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சந்தித்த அழிவு, அவர்களின் ஆழ்மனங்களில் பதிந்து அவர்களது கலைகளில் வெளிப்படுவதையும் உணரமுடிகிறது.

டாகியின் உடம்பில் இருப்பதன்மூலம் தன் ஊருக்கு ஏற்படவிருக்கும் அழிவை முன்கூட்டியே உணரும் மிஷூவா, அதைத் தடுப்பதற்காக செய்யும் முயற்சிகள் கவர்கின்றன. காலையும் மாலையும் சந்திக்கும் அந்தி நேரத்தில் மட்டுமே மிஷூவாவும் டாகியும் தங்களின் அசலான நினைவுகளோடு உரையாட முடியும். அந்தச் சொற்ப நேரத்தில் தன் பெயருக்குப் பதிலாக 'உன்னை விரும்புகிறேன்' என்று டாகி எழுதும் காட்சி நெகிழ்வானது. மிஷூவா வசிக்கும் சிற்றூரின் பின்புலம், மிக அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வானின் வழியாக ஏற்படும் விபரீதங்கள், மிஷூவாவின் தலையில் கட்டியிருக்கும் கயிறு, தொப்புள்கொடி உறவாக டாகியுடன் இணைவது போன்ற காட்சிகள் அற்புதம். இதில் வரும் பாடல்களின் இசை, அந்நியமாக ஒலிக்காமல் இந்திய மனங்களுக்கு நெருக்கமாக அமைந்திருப்பது ஆச்சர்யம்.

தாம் எழுதிய நாவலைத் தானே படமாக்கியுள்ள இயக்குநர் Makoto Shinkai அற்புதமான பணியைச் செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், அனிமேட்டர், வரைகலை கலைஞர் எனப் பல பரிமாணங்களால் ஜொலிக்கும் கலைஞர் இவர். வெறுமனே பார்த்து ரசிக்கும் கொண்டாட்டமான அனிமேஷன் திரைப்படமாக மட்டுமில்லாமல், யோசிக்கவைக்கும் உணர்வுபூர்வமான படைப்பாகவும் உருவாகியிருக்கும் 'Your Name' திரைப்படத்தைக் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு