Published:Updated:

ஜியோ ஆஃபருக்கு அம்பானி கொடுத்த விலையும், நாம் கொடுக்கவேண்டிய விலையும்..!

ஜியோ ஆஃபருக்கு அம்பானி கொடுத்த விலையும், நாம் கொடுக்கவேண்டிய விலையும்..!
ஜியோ ஆஃபருக்கு அம்பானி கொடுத்த விலையும், நாம் கொடுக்கவேண்டிய விலையும்..!

ஜியோ ஆஃபருக்கு அம்பானி கொடுத்த விலையும், நாம் கொடுக்கவேண்டிய விலையும்..!

ம்பானி அதிரடியாகக் களமிறக்கிய ரிலையன்ஸ் ஜியோ, கிட்டத்தட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களையும் கதிகலங்கச் செய்தது; ஜியோவின் அன்லிமிட்டெட் கால்ஸ், மெசேஜ், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா என எல்லோரையும் தன் பக்கம் இழுத்தது. தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிடக் கூடாது என மற்ற நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. மற்றொரு பக்கம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு, மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கெல்லாம் `பிக் பாஸ்' ஆகவே மாறியது ரிலையன்ஸ் ஜியோ.

‘ஜியோவுக்கு நிகராக நாமும் ஆஃபரை வழங்காவிட்டால் ஃபீல்டில் நிற்க மாட்டோம்' என முடிவெடுத்த ஏர்டெல், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆஃபர்களை வெளியிட்டன. ஜியோவைப் பொறுத்தவரை, தற்போது `தன் தனா தன்' ஆஃபரில்  309 ரூபாய்க்கு மூன்று மாதம் அன்லிமிட்டெட் கால்ஸ், மெசேஜ் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவும் கிடைக்கின்றன.

பி.எஸ்.என்.எல்., தன் தரப்புக்கு  `Chaukka444' என்ற ஆஃபர் மூலம் அன்லிமிட்டெட் டேட்டா 90 நாள்களுக்குக் கொடுக்கிறது. வோடபோன் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு 786 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால் மற்றும் 25 ஜிபி டேட்டாவும் கொடுத்தது. ஐடியா நிறுவனம் 396 ரூபாய்க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்கியது. ஏர்டெல் 244 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் ஏர்டெல்-டு-ஏர்டெல் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்களை வழங்கியது. மேலும், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை 70 நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ஜிபி வரை டேட்டா வசதியை வழங்கியது. இதற்கான 899 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இவற்றில் சில, முடிவுக்கு வந்திருக்கலாம். பல புதிய ஆஃபர்கள் இப்போதும் டெலிகாம் நிறுவனங்களால் அள்ளி வழங்கப்படுகின்றன.  

இதன் விளைவு, டெலிகாம் நிறுவனங்கள் இதுவரை பார்த்துவந்த லாபம் குறைந்தது. மக்களின் செலவு குறைந்தது. ஜியோ அறிமுகமான கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை ஒரு காலாண்டுக்கு 11,600 கோடி ரூபாய் என்ற அளவிலும், ஆண்டுக்கு 46,600 கோடி ரூபாய் என்ற அளவிலும் மொபைல் யூசேஜ் கட்டணங்களால் கிடைக்கும் வருமானம் குறைந்திருக்கிறது. கடந்த சில வருடங்களைக் காட்டிலும் சுமார் 26 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இத்தனை கோடியும் மக்களுக்கு மிச்சமாகியிருக்கிறது. 

அப்படியென்றால், ஜியோ நடத்தியிருக்கும் இந்தப் போரில் வென்றது மக்களா என்றால் இல்லை. விலையைக் குறைத்து ஆஃபர்களை அள்ளி வழங்கியதால் மக்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்கு கொடுத்த விலை மட்டுமே குறைந்திருக்கிறது. `சதுரங்க வேட்டை'யில் நடிகர் நட்ராஜ் சொல்வார், `ஒருவனிடமிருந்து பணத்தைப் பறிக்க, அவனிடம் கருணையை எதிர்பார்க்கக் கூடாது; அவனது ஆசையைத் தூண்ட வேண்டும்' என்று. அதுதான் நடந்திருக்கிறது.

இன்று பெரும்பாலானோர் கைகளில் இரண்டு ஸ்மார்ட்போன்கள், நான்கு சிம் கார்டுகள் நிச்சயம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி பிரச்னைக்குள்ளாவதும் உடைவதும் சகஜமாக நடக்கின்றன. அவற்றை சரிசெய்து பயன்படுத்துவதற்கு பதிலாக, புதிதாக வாங்கவே விரும்புகிறார்கள். இப்படி மொபைல் கால், மெசேஜ் மற்றும் டேட்டா ஆகியவற்றுக்கு நாம் குறைவாக செலவு செய்திருந்தாலும் மறைமுகமாக நாம் மொபைல்களுக்கு என முன்பைவிட கூடுதலாகவே செலவு செய்துகொண்டிருக்கிறோம்.    

சரி, `அம்பானி கொடுத்த விலை' எனத் தலைப்பில் போட்டுவிட்டு, அதைப் பற்றி சொல்லாமல் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள். `ஒருவனின் உணவு மற்றொருவனுக்கு விஷமாகலாம்' என்று ஒரு சொல்லாடல் உண்டு. அம்பானி நம்மை ஜியோவை நோக்கி இழுக்க செய்த செலவு அதன் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு லட்சம் கோடி ரூபாய். அதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்தில் நான்கு பங்கு. யாருடைய பணம் இது? 

ஜியோ மட்டுமல்ல, டெலிகாம் நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கித்தான் இந்த ஆஃபர்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆஃபர்களைக் காட்டிலும் அவற்றை விளம்பரம் செய்ய அதிகம் செலவழித்திருக்கின்றன. வங்கிகள் கொடுத்துள்ள கடன்கள் அனைத்தும் திரும்பி வருமா வராத என்ற ரிஸ்க் நிறைந்த கடன்களாகவே மாறிவருகின்றன. இந்த நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் ஆஃபர்களால் தங்களின் வருமானத்தை லாபத்தை இழந்திருக்கின்றன. இதன் விளைவு விரைவில் டெலிகாம் துறையில் பிரதிபலிக்கும். 

விரைவில் இந்த ஆஃபர்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அகப்பட்டுக்கொண்ட அந்த ஸ்மார்ட்போன் சிறைக்குள்ளிருந்து நம்மால் வெளிவர முடியுமா? அல்லது வெளி உலக தொடர்பில்லாத ஸ்மார்ட்போன் இல்லாத `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குத்தான் நம்மால் போக முடியுமா? முடியாது. நாமும் இதற்கு ஒரு விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு