Published:Updated:

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்

Published:Updated:
“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

படம்: 'ஸ்டில்ஸ்’ ரவி

அர்ஜுன், கும்பகோணம்.

''நீங்கள் பாடகராக அறிமுகமான காலத்தில் உங்களை டி.எம்.எஸ். கடுமையாக விமர்சித்தார் என்று சொல்கிறார்களே... உண்மையா சார்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டி.எம்.எஸ். ஐயா, ஒரு குழந்தை மாதிரி. கறை இல்லா மனசு. அப்போ அவரும் நானும் சேர்ந்து பாடவேண்டிய பாடல் வந்தா, அவர் எனக்கு முன்னாடியே வந்துடுவார். நான் ஆர்கெஸ்ட்ரா எல்லாம் தயாரான பிறகு வருவேன். அவருக்குப் பயங்கரக் கோபம் வரும்... 'சீனியர் காத்துட்டு இருக்கிறப்ப, இவன் தாமதமா வர்றானே!’னு. அது ரொம்பவே நியாயமான கோபம்.

ஒருமுறை, மாலை 4 மணிக்கு முதல் பாட்டு நான் பாடணும். அதுக்கு அப்புறம் 6 மணிக்கு மேல டி.எம்.எஸ். சார் வந்து பாடணும். அவர் 3.30 மணிக்கெல்லாம் வந்துட்டார். நான் இன்னொரு ரிக்கார்டிங் முடிச்சிட்டு 5 மணிக்குத்தான் வந்தேன். 'முதல் பாட்டு பாடுற நீயே 5 மணிக்கு வந்தா, எனக்கு லேட் ஆகும் இல்லையா?’னு கேட்டார். நான் எதுவும் பேசலை. ஆனா, 5.45  மணிக்கு என் போர்ஷனை முடிச்சிட்டு ஸ்டுடியோவை அவர்கிட்ட கொடுத்துட்டேன்.

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

அப்ப என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, 'புரியுது... புரியுது... உன் பின்னால ஏன் இத்தனை பேர் சுத்துறாங்கனு இப்ப புரியுது’னு சொன்னார். கோபமோ, பாராட்டோ... ரொம்ப ஓப்பனா இருப்பார். அதுதான் டி.எம்.எஸ்.

அவர் காலமாகிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அவரை மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தேன். 'நல்லா வந்துடுவிங்கப்பா...’னு சொன்னேன். 'வந்துடுவேன் தம்பி. நாம ரெண்டு பேரும் திரும்பச் சேர்ந்து பாடணும். 'நாளை நமதே...’ மாதிரி. உன்னைவிட நான் எவ்வளவு இளமைப் பூரிப்போட பாடுறேன் பாரு’னு சிரிச்சிட்டே என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். எனக்குக் கண்ல தண்ணி வந்திடுச்சு. அப்பா-மகனுக்கு இடையில சண்டை வந்தாலும் கோர்ட்டுக்குப் போவோமா? அந்தச் சண்டைக்குப் பின்னால எவ்வளவு அன்பு இருக்குனு புரிஞ்சுக்கணும்!''

சாயாதேவி, சென்னை.

''நீங்கள் பின்னணி பாடிய 'ஹம் ஆப்கே ஹைன் கோன்’ படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்; படமும் பெரிய வெற்றி. அந்தப் பாடல்கள் இன்றைக்கும் இனிக்கின்றன. அந்தப் படத்தின் பாடல் பதிவின் சுவாரஸ்யங்களைச் சொல்லுங்களேன்?''

''அந்தப் படத்துல ஏறத்தாழ 14 பாட்டு. ஒரு நாளைக்கு 'ஏழு’னு, ரெண்டு நாள்ல மொத்தமும் பாடி முடிச்சேன்.

அந்தப் படத்தோட இயக்குநர் சூரஜ் ஆர். பர்ஜாட்டியா, ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் வரும் பின்னணி இசைக்கான ஒவ்வொரு பிட்டுக்கும் எப்படி சீன் வைக்கப் போறேன், எந்த லென்ஸ் பயன்படுத்துவோம்னு அவ்வளவு டீடெய்ல் சொன்னார். 'ஆர்வக் கோளாறா இருக்காரா... இல்லை நம்மளை இம்ப்ரெஸ் பண்றதுக்காக இப்படிப் பேசுறாரா?’னு நினைச்சேன். ஆனா, படம் பார்க்கும்போது, அவர் சொன்னதுல இருந்து ஒரு ஷாட்கூட மாறுபட்டு எடுக்கவே இல்லை. எந்தளவுக்கு ஹோம்-ஒர்க் பண்ணியிருந்தா, எந்தக் குறிப்பும் இல்லாம மனசுல இருந்து அப்படிப் பேசியிருப்பார்னு தோணுச்சு.

கே.விஸ்வநாத் சார், அந்தப் படம் பார்த்துட்டு இப்படிச் சொன்னார்... 'அக்கா மகனைக் கவனிச்சுக்கிறதுக்காக, மாதுரி தீட்ஷித் தன் அக்கா கணவனையே கல்யாணம் பண்ணிப் பாங்களா? இல்லை, காதலன் சல்மான்கானை கல்யாணம் பண்ணிப்பாங்களாங்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ். அந்த ஆர்வத்தோட ரசிகர்கள் இருக்கிறப்ப, கேமரா, தம்பதியின் பாதங்கள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து முகத்தைக் காட்டுறப்பதான் யார் யாரைக் கல்யாணம் பண்ணிட்டாங்கனு தெரியும். அப்ப மாதுரி தீட்ஷித்தும் சல்மான்கானும் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்போ அந்தப் பொண்ணு, தன் அக்கா குழந்தையை இடுப்புல வெச்சுக்கிட்டே ஹோமத்தைச் சுத்தி வந்திருந்தா இன்னும் நெகிழ்ச்சியா இருந்திருக்கும்டா’னு சொன்னார்.

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

பிறகு, சூரஜ் ஆர்.பர்ஜாட்டியாகிட்ட இதை நான் சொன்னப்ப, ஒரு நிமிஷம் அவர் எதுவுமே பேசலை. அப்புறம் மெதுவா, 'அதனாலதான் அவர் கிரேட்டஸ்ட் டைரக்டர். இந்த எண்ணம் எனக்கு வரலையே. அது வந்திருந்தா, படம் இன்னொரு 25 வாரம் ஜாஸ்தி ஓடியிருக்கும்’னார்!''

சிதம்பரம், கோவில்பட்டி.

''சேட்டிலைட் சேனல்களின் சூப்பர் சிங்கர் ஷோக்கள் பற்றி உங்கள் நேர்மையான விமர்சனம் என்ன?''

''அது 20 - 20 மேட்ச் மாதிரி. ஐ.பி.எல்-ல பெரும் பணம் கொடுத்து வாங்கின பிளேயர் கிறிஸ்கெயில். இந்த சீஸன்ல இப்ப வரை அவர் பெருசா விளையாடலை. இந்தியன் டீம்ல விளையாடுறப்ப கலக்கின விராட் கோஹ்லி, பெங்களூரு டீம் லீடரா சரியா விளையாட முடியலை. அது போலத்தான¢ இந்த சூப்பர் சிங்கர் ஷோக்களும்.நிகழ்ச்சியின் விறு விறுப்புக்காக ஏதேதோ பண்றாங்க. யார் மனசையும் எதிர்காலத்தையும் பாதிக்காத வரை அதை அனுமதிக்கலாம்.

அதுல எனக்குப் பிடிக்காதது, செல்போன் மூலமா போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்கச் சொல்றதுதான். அது, தொலைபேசி நிறுவனத்துக்கும் டி.வி. சேனலுக்குமான வியாபாரம். எனக்குப் பிடிச்ச ஒரு நபருக்கு ஆதரவா நானே, 1,000, 2000 எஸ்.எம்.எஸ்-களை அனுப்பலாமே! இதைத் தவிர்த்துட்டு அங்கே இருக்கிற ஜட்ஜஸ் மனசுல என்ன நினைக்கிறாங்களோ, அதன் அடிப்படையில் போட்டியாளர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இது என் அபிப்பிராயம்!''

நிஷாந்த், பழநி.

''இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களைப் பற்றி அடிக்கடி கூறுவீர்கள். தங்களின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குக்கூட அவர் பெயர்தான் வைத்திருந்தீர்கள். ஏன் அவருக்கு அவ்வளவு முக்கியத்துவம்?''

''சினிமாவுல எனக்கு ஓர் இடம் கிடைச்சதுக்கு முக்கியமான காரணம் கோதண்டபாணி அவர்கள்தான். இசைப் போட்டி ஒன்றில் என் அமெச்சூர் குரலைக் கேட்டுட்டே எனக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுக்கணும்னு தீர்க்கமா இருந்தவர் அவர். அப்பதான் அவரும் பிரபலமாகிட்டு இருந்தார்.

தான் இசையமைச்சிட்டு இருந்த தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கிட்ட என்னை அறிமுகப்படுத்திப் பாடச் சொன்னார். ரெண்டு பாட்டு பாடினேன். அவருக்கும் பிடிச்சது. ஆனா, 'சின்னப் பையன் வாய்ஸா இருக்கு. மெச்சூர் ஆன பிறகு வாய்ப்புக் கொடுக்கலாம்’னு சொல்லிட்டார். 'இன்னொரு டூயட் இருக்குல்ல, அதை மைக்குல கேட்டா வாய்ஸ் நல்லா இருக்கும்; கொடுக்கலாம்’னார் கோதண்டபாணி. 'அது பி.பி.எஸ். சாருக்குச் சொல்லிட்டோம். அடுத்த படத்துல பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டார். 'நான் அப்புறமா வந்து பார்க்கிறேன் சார்’னு நான் எந்திரிச்சப்ப, 'நீ ஒண்ணும் மனசு ஒடிஞ்சிப் போயிடாதப்பா. எனக்கு நாலு படங்கள் இருக்கு. நிச்சயமா அதுல ஏதோ ஒண்ணுல வாய்ப்பு தர்றேன். என்னை வந்து பாரு’னார். 'சரி’னு சொல்லிட்டு வந்தவன்தான். பிறகு போகவே இல்லை. என் முகவரியையும் அவருக்குக் கொடுக்கலை. அதனால அவர் என்னை ஒரு நாள், ரெண்டு நாள் இல்லை... ஒன்றரை வருஷமாத் தேடியிருக்கார். நான் படிச்ச இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி வகுப்பறையில் வெச்சு என்னைக் கண்டுபிடிச்சிட்டார்.

'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா’னு ஒரு தெலுங்குப் படம். சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீநிவாஸ் சார் பாடின பாட்டுல ஒரு சரணம் கொடுத்துப் பாட வெச்சார். அந்த ஒரு வாய்ப்பு கொடுத்தார், பிறகு விட்டுட்டார்னு இல்லாம தெலுங்கு சினிமாவில் ஒவ்வோர் இசையமைப்பாளரிடமும் அவரே என்னை அழைச்சிட்டுப் போய் அறிமுகப்படுத்திவெச்சார். 'இந்தப் பையனுக்கு நீங்க நிச்சயமா வாய்ப்பு கொடுக்கணும். ரொம்ப நல்லாப் பாடுறான். அவன் பாடின டேப், விஜயா கார்டன் சுவாமிநாதன்கிட்ட இருக்கு. அதை அழிக்காம அப்படியே வெச்சிருக்கச் சொல்லியிருக்கேன். நீங்க ஒரு தடவை கேட்கணும்’னு சொல்லுவார். எனக்காக ஒவ்வொரு வீடா, ஒவ்வொரு புரொடக்ஷன் ஆபீஸா ஏறி இறங்கினவர் அவர். இதுமட்டும் இல்லாம, என் வாழ்க்கையில் எல்லா கஷ்டத்திலும் சுகத்திலும் எனக்கு ஓர் அண்ணனா, அப்பாவா, அம்மாவா இருந்து என்னை வழிநடத்தினவர்.

“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”

அந்த கோதண்டபாணி இல்லைனா, இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கிடையாது. எஸ்.பி.பி. குடும்பமே கிடையாது. இதுல நான் ஒரு ரிக்கார்டிங் தியேட்டருக்கு அவர் பேர் வெக்கிறதுல பெரிய விசேஷம் ஒண்ணும் கிடையாது. நான் தினமும் காலையில் வணங்கும் முதல் தெய்வம் கோதண்டபாணி சார்தான்!''

நாராயணன், ஸ்ரீரங்கம்.

''ரசிகர்களின் அன்புத் தொல்லைகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''அது தொல்லை இல்லை; மழை... அன்பு மழை!

திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சி முடிச்சிட்டு ராத்திரி 12 மணிக்கு ஹோட்டலுக்கு வர்றேன். 10, 15 காலேஜ் பசங்க, ஒவ்வொருத்தர்கூடவும் தனித்தனியா போட்டோ எடுத்துக்கணும்னு சொல்லிக் காத்துட்டு இருந்தாங்க. 'ரொம்ப அசதியா இருக்கேன். நாளைக்கு மதியம் 2 மணிக்கு மேல்தான் ஃப்ளைட். காலைல வந்துடுங்க’னு சொல்லிட்டு உள்ளே போயிட்டேன். உண்மையில் எனக்குக் காலையில 8 மணிக்கு ஃப்ளைட். அவங்ககிட்ட இருந்து தப்பிக்கப் பொய் சொன்னேன்.

தூங்கிட்டு அதிகாலை 4.30 மணிக்குக் கிளம்பி வெளியே வந்தா, ஹோட்டலுக்கு எதிரே ஒரு மூடின கடை வாசல் படிக்கட்டுல அந்தப் பசங்க எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க. ராத்திரி குளிர்ல அங்கேயே காத்துட்டு இருந்திருக்காங்க. 'ஃப்ளைட் மதியம் 2 மணிக்கு’னு நான் சொன்னது பொய்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா, 'அசதியா இருக்கு’னு நான் சொன்ன உண்மையை மதிச்சு, எனக்குத் துன்பம் தரக் கூடாதுனு ராத்திரி முழுக்கக் காத்திருக்காங்க. என் முகத்தை எங்கே வெச்சுக்கிறதுனு தெரியாத சூழ்நிலையில அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டேன்.

இப்படிப்பட்ட ரசிகர்களின் அன்பு மழை, சமயங்கள்ல ஜலதோஷம் கொடுக்கத்தான் செய்யும். அதுக்காக, மழை பிடிக்காமப் போயிருமா என்ன?''

சுஜாதா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

''பாரதிராஜா உங்கள் ஆத்ம நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... அப்படியா?''

''அப்படியேதான்! எனக்கு முதல்ல அறிமுகமாகி நண்பன் ஆனது பாரதிராஜாதான். அவரோட நாடகங்கள்ல பாடல்கள் பாடுவேன்; பேத்தாஸ்ல ஹம்மிங் பண்ணுவேன்; ஃப்ளூட் வாசிப்பேன். எனக்கு, பாவலர் சகோதரர்கள் அறிமுகமானதே அவர் மூலமாத்தான். குறும்புப் பசங்க நாங்க. அப்ப பாரதிராஜா டைரக்டர் ஆகலை; இளையராஜாவும் இசையமைப்பாளர் ஆகலை.

சிதம்பரத்துல ஒரு கல்லூரியில் புரோகிராம். சாயங்காலம்தான் நிகழ்ச்சிங்கிறதால, சும்மா உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். அப்ப பாரதிராஜா, 'இப்ப எல்லாரையும் அரட்டுற மாதிரி ஒண்ணு பண்ணுவோம். ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போடுற மாதிரி நடிப்போம். எல்லாரும் பயந்துடுவாங்கள்ல?’னு கேட்டார். சரினு சண்டை போட ஆரம்பிச்சோம்.

'பெரிய சிங்கராடா நீ? நான் ஆகப்போறேன் பார்... பெரிய டைரக்டர்!’னு ஆரம்பிச்சு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டு கீழே விழுந்து புரள்றோம். இளையராஜா, பாஸ்கர், அமர்சிங்னு எல்லாரும் ஓடி வந்துட்டாங்க. 'யோவ் விடுங்கய்யா... ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு இப்படியா அடிச்சிப்பீங்க? காலேஜ் பசங்கள்லாம் பார்க்கிறாங்க... விடுங்க’னு விலக்கினாங்க.

10 நிமிஷத்துக்குப் பிறகு, 'என்னடா பாரதி... நான் நல்லா நடிச்சேனா?’ - கேட்டப்பதான் அது விளையாட்டுனு தெரிஞ்சது அவங்களுக்கு.

கோபம் வந்து, 'நடிச்சீங்களா..?’னு கேட்டு அடிச்சாங்க பாருங்க அடி. அதுதான் ரியல் தர்ம அடி. இப்படி... அப்போ நிறைய வால்தனம் பண்ணியிருக்கோம்!''

ராம்குமார், சென்னை.

''உங்களின் நிறைவேறாத ஆசை என்ன?''

''நான் பாட ஆரம்பிச்சு 48 வருஷம் ஆகுது. என் பேட்டிகள் நிறைய வந்திருக்கு. ஆனா, வாசகர்கள் கேட்டு நான் பதில் சொல்ற மாதிரி வந்த முதல் பேட்டி இதுதான். அதுக்குத் தளம் அமைச்ச விகடனுக்கு என் நன்றிகள். சினிமாவுக்கு நன்றி. என்னை வாழவெச்ச எல்லாருக்கும் நன்றி.

இப்போ வரை ஆசைப்பட்டதுக்கும் மேலதான் எனக்கு எல்லாமே நடந்திருக்கு. இந்த ஜென்மத்துக்கு இது போதும். இன்னொரு ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, திரும்ப எஸ்.பி.பி-யாகவே பிறந்து, உங்க காது குளிரப் பாடி, என் கடனைத் தீர்த்துக்கணும். அதுக்குக் கடவுள் வாய்ப்பு தருவார்னு நினைக்கிறேன்.

வணக்கம். ஜெய்ஹிந்த்... ஜெய்பாரத்!''

- நிறைந்தது -

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism