Published:Updated:

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:

டித்தவன் சூதும் வாதும் செய்தால்
வான் போவான் அய்யோன்னு போவான்

- பாரதியார்

ண்ணாச்சி கடையில் சோப் வாங்கும்போது ஷாம்பு ஆஃபர் தருவதுபோல, முதல் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது குழந்தையையும் சேர்த்தால் கட்டணத்தில் சலுகை வழங்குகின்றன சில பள்ளிகள். இப்படிச் சலுகை வழங்கி 'வள்ளல்’ பெயர் எடுத்து முதல் மாங்காயை அடிக்கும் இவர்கள், பெற்றோர்களை ஈர்த்து இழுத்து இரண்டாவது மாங்காயை அடிக்கின்றனர். 'முதல் குழந்தைக்கு வாங்கிய கடனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது குழந்தைக்காவது கொஞ்சம் கட்டணம் குறைகிறதே!’ என்பது பெற்றோர்களுக்கு சிறு ஆசுவாசம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், 'கல்வி வணிகம்’ செய்யும் தனியார் பள்ளிகள், இந்தச் சலுகையை எப்படி வழங்குகின்றன?

அவை போணி ஆகாத சீட்டுகள். விற்காத பொருளை நமக்குப் பெருந்தன்மையுடன் வழங்கி ஒரே கல்லில் மூன்றாவது மாங்காயையும் அடிக்கின்றனர். இந்தக் கட்டண சலுகையும் வெகுசில பள்ளிகளில் மட்டுமே. பெரும்பாலான பள்ளிகளில், மூன்றாவது குழந்தையையும் அங்கேயே சேர்த்தாலும்கூட எந்தக் கட்டணச் சலுகையும் கிடையாது. வேண்டுமானால் சீட் கிடைப்பது உறுதியாகலாம். அதுவும்கூட உங்களின் கடந்த கால 'ட்ராக் ரெக்கார்டை’ப் பொறுத்தது. உங்களின் முந்தைய குழந்தைக்கு முறையாகக் கட்டணம் செலுத்தி, உங்கள் குழந்தை நல்ல ரேங்க் வாங்கி, நீங்கள் பணிவன்புடன் நடந்துகொள்பவராக இருந்தால், உங்களைச் சிறந்த 'கஸ்டமர்’ என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஆகவே, இரண்டாவது சீட் கிடைக்கிறது. ஒருவேளை, கடந்த காலத்தில் கட்டணம் செலுத்துவதில் கால தாமதம் செய்திருந்தால், நிச்சயம் உங்களுக்கு இரண் டாவது சீட் அந்தப் பள்ளியில் கிடைக்காது.

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

பெற்றோர்களைப் பொறுத்தவரை இரண்டு குழந்தைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்து விட்டால் அலைச்சல் மிச்சம். அழுது அடம் பிடிக்கும்போது ஒருவரைக் காட்டி ஒருவரை பள்ளிக்கு அனுப்பலாம். விடுமுறை என்றாலும், தேர்வு என்றாலும் ஒன்றாகவே வரும். இதனால்தான் பெற்றோர் எப்பாடுபட்டேனும் ஒரே பள்ளியில் சீட் வாங்க மெனக்கெடுகின்றனர். ஆனால், இது நிறைவேறுகிறதா?

பெற்றோர்கள், தங்களின் முதல் குழந்தைக்கு அதிகம் செலவழித்து, புகழ்பெற்ற பெரிய பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அடுத்த குழந்தையையும் அதேபோன்ற பள்ளியில் சேர்க்க பொருளாதாரம் இடம் தருவது இல்லை. போதாக்குறைக்கு, இரண்டாவது குழந்தைக்கும் அதே பள்ளியில் இடம் வாங்குவது சிரமம் என்ற நிலை வரும்போது, வேறு வழியின்றி கட்டணம் குறைவாக உள்ள பள்ளியைத் தேர்வு செய்கின்றனர். இது, குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு வித்தியாசமாகத் தெரிவது இல்லை. சற்றே வளர்ந்த பிறகு 'அவனுக்கு மட்டும் பெரிய ஸ்கூல். எனக்கு மட்டும் சின்ன ஸ்கூலா?’ என்று நினைக்கின்றனர்; அல்லது கேட்கின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் ஆகிவிடுகிறது. இது பெற்றோருக்கு வாழ்நாள் கவலையாக உருவெடுக்கிறது.

இப்படி 'ஒஸ்தி பள்ளியில்தான் படிக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் அடம்பிடிப்பதன் பொருள், அவர்கள் வறட்டுப் பிடிவாதம் பிடிக்கின்றனர் என்பது அல்ல. அங்கு படித்தால்தான் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர். அந்தப் பள்ளி, கடந்த காலங்களில் பெற்ற கவர்ச்சியான தேர்ச்சி விகிதங்களும், எத்தனை பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கையும் பெற்றோர்களைச் சுண்டி இழுக்கின்றன. அங்கு சேர்த்துவிட்டால், தன் பிள்ளைகளும் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று எண்ணுகின்றனர். இதன் பொருட்டே பள்ளி நிர்வாகம் செய்யும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக்கொள்கின்றனர்.

படித்த பெற்றோராயினும் படிக்காத பெற்றோராயினும் இந்தப் பள்ளிகள் அவர்களை நடத்தும்விதம் அநாகரித்தின் உச்சம். ''11 மணிக்குள்ள வரணும்னு சொன்னாங்கல்ல... இப்போ என்ன மணி? இப்போ வந்து நிக்கிறீங்க? கௌம்புங்க, கௌம்புங்க...'' என்று விண்ணப்பப்படிவம் கொடுக்க வந்த ஒரு தந்தையை, பள்ளியின் வாட்ச்மேன் விரட்டி அடித்தபோது நேரம் 11.15. கால் மணி நேர தாமதம், தன் சுயமரியாதையை காலில் போட்டு நசுக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பிறகு வாழ்நாள் எல்லாம் அவர் படப்போகும் அவமரியாதைக்கான முன்னோட்டம் அது. ஆனால், இவற்றை பெற்றோர்கள் தெரிந்தே ஏற்றுக்கொள்கின்றனர் என்பதுதான் முக்கியம். தனியார் பள்ளிகள் அநீதியாகக் கட்டணம் வாங்குகிறார்கள் என்பது எந்தப் பெற்றோருக்குத்தான் தெரியாது?

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

''வீட்டுல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலதான் ஸ்கூல். இருந்தாலும் தினமும் கொண்டுபோய் விட சிரமமா இருக்குமேனு ஸ்கூல் பஸ்ஸுக்குப் பணம் கட்டினேன். வருஷத் துக்கு 16 ஆயிரம் ரூபா. ஆனா, அந்த பஸ் எங்க வீடு இருக்கிற தெருவுக்குள்ள வராது. அரை கிலோமீட்டர் அந்தப் பக்கம் இருக்கிற மெயின் ரோட்டுலயே வந்துட்டுப் போயிடும். நான் குழந்தையை வண்டியில கொண்டுபோய் அந்த ரோடு வரைக்கும் விடுறேன். இன்னும் அரை கிலோமீட்டர் போனா ஸ்கூல்லயே கொண்டுவிட்டுருவேன். இதுக்கு எதுக்கு ஸ்கூல் பஸ்?'' என்று பொருமுகின்றனர், சேலம் நகரத்தில் வசிக்கும் பழனிச்சாமி-கோமதி தம்பதியினர்.

மழைக் காலத்தில் இது இன்னும் கொடுமை. காலை 6.30 மணிக்குப் பேருந்து வரும் என்றால், 5 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். அந்தக் காலைக் குளிர் தரும் இதத்தில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, வலுக்கட்டாய மாகக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, புத்தகப் பையுடன் வண்டியில் உட்காரவைத்து அழைத்துச்செல்ல வேண்டும். மழை பெய்கிறதே என்று மெதுவாகப் போக முடியாது. பள்ளிப் பேருந்து, 10 விநாடிக்கு மேல் நிற்காது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்கச் செல்லும் பதற்றத்துடன்தான் பெற்றோர்கள் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க ஓடுகின்றனர். இதை எதிர்த்து பள்ளியில் சென்று கேட்க முடியுமா? பள்ளிப் பேருந்தின் டிரைவரிடம்கூட கேட்க முடியாது. மீறி கேட்டால் என்னவாகும்?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் வேன், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வரும். 'அப்படி வருகிற பள்ளிக்கூட வேன், முந்தைய ஊர் வரையிலும் வருகிறது. அதை எங்கள் ஊருக்கும் வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சுமார் 20 பெற்றோர்கள் ஒன்றுகூடி பள்ளி நிர்வாகத்திடம் முறையிடச் சென்றனர். அங்கிருந்த ஊழியர் மிகுந்த அவமரியாதையாகப் பேச, கோபம் அடைந்த பெற்றோர்கள், 'அப்படின்னா எங்க குழந்தைங்க எல்லோரையும் வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறோம்’ என்றனர்.

அவர்கள் நினைத்தது, ஒரே நேரத்தில் இத்தனை பேர் டி.சி. வாங்குவதாகச் சொன்னால், பள்ளிக்கூடத் தரப்புக்கு நஷ்டம்; அதனால் பயந்துபோய் தங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் என்று. ஆனால் நடந்தது, அந்த ஊழியர் யாரையோ அழைத்து, 'இந்த 20 பேரையும் ஹெச்.எம். ரூமுக்கு அழைச்சிட்டுப் போய், இவங்களோட குழந்தைங்க எல்லோருக்கும் டி.சி. கொடுத்து அனுப்புங்க’ என்றார். பெற்றோர்கள் கதிகலங்கிப்போனார்கள். கொஞ்சம் நஞ்சம் இருந்த கடைசித் துளி மரியாதையையும் கடாசிவிட்டுக் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டுவிட்டுக் கிளம்பி வந்தனர்.

அவர்கள் கேட்டது என்ன? 'நாங்களும் ஸ்கூல் வேனுக்குப் பணம் கட்டுகிறோம். அது எங்கள் ஊருக்கு வருவது இல்லை. வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்பது. இது மிக, மிக நியாயமான கோரிக்கை. ஆனால், பள்ளி நிர்வாகம் இதை அராஜகமாக மறுக்கிறது. என்ன செய்ய முடிந்தது பெற்றோர்களால்?

இந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர்கள் பொறுமை காப்பதற்குக் காரணம், 'நாம் ஏதாவது சண்டை போடப்போய், பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ?’ என்ற அச்சம்தான். பெற்றோர்களின் இந்த அச்சம்தான் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கான அச்சாணி. அதை வைத்துதான் அவர்கள் மிரட்டுகின்றனர்.

எனில், நமது குழந்தைகள் என்ன பணயக் கைதிகளா? யாராவது புதியவர்கள் குழந்தையைக் கொஞ்சினால்கூட சந்தேகத்துடன் பார்க்கும் பெற்றோர், எதிர்த்துப் பேசினால் ஏதாவது செய்துவிடக்கூடிய சாத்தியம் உள்ளவர்களை நம்பி எப்படிப் பிள்ளைகளை அனுப்புகின்றனர்? இத்த னைக்கும் பள்ளிகள் தங்களின் அராஜகத்தை மிகவும் வெளிப்படையாகவே நடத்துகின்றன.

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

ன்கொடை, பருவக் கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை கட்டணம், ஸ்மார்ட் க்ளாஸ் கட்டணம் என்று ஏராளமான கட்டணங்கள்.

சென்னை, ராயப்பேட்டையின் நெருக்கடி யான தெரு ஒன்றில் உள்ள ஒரு பள்ளியில், எல்.கே.ஜி. குழந்தையிடம் 'பிணையத் தொகை’ (Caution Deposit) என்ற பெயரில் 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். ''எதுக்கு இது?'' என்று கேட்டால், ''மேஜை, நாற்காலியை உங்க குழந்தை உடைச்சிட வாய்ப்பு இருக்குல்ல... அதுக்காக'' என்று பதில் வருகிறது. எல்.கே.ஜி. குழந்தை உட்கார்ந்து நாற்காலி உடைந்துவிடுமாம். அதற்கு 30 ஆயிரம் பிணையத் தொகையாம். 12 கிலோ உள்ள குழந்தை உட்கார்ந்து உடையும் அளவுக்குத்தான் நாற்காலி இருக்கிறது என்றால், முதலில் உங்கள் பள்ளிக்கான உரிமத்தையே ரத்து செய்ய வேண்டும்.  

அந்த வகுப்பில் குறைந்தது 50 மாணவர்கள் இருக்கிறார்கள் எனில், பிணையத் தொகை வசூல் மட்டுமே மொத்தம் 15 லட்சம் ரூபாய். எல்.கே.ஜி-யில் மொத்தம் ஐந்து செக்ஷன்கள். அதையும் கணக்கிட்டால் மொத்தம் 75 லட்சம். எவ்வளவு இலகுவாக, போகிறபோக்கில் முக்கால் கோடியை விழுங்குகிறார்கள் பாருங்கள்!

இந்த ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு மட்டும் இவ்வளவு ரூபாய் என்றால், மாநிலம் முழுக்க உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்துக் கணக்கிடுங்கள். அந்தத் தொகை 10 ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குச் சமமானதாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலாவது ஒரு முறை நடந்தது. இது ஆண்டுதோறும் நடக்கிறது!

- பாடம் படிப்போம்...

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

என் குழந்தை...  யார் உரிமை?

விளையாட்டு தினம், ஆண்டு விழா போன்ற சமயங்களில் தனியார் பள்ளிகளில் புராஜெக்ட் செய்வது ஒரு கலாசாரம். காய்கறி, பழம், பறவை, விலங்கு... என்று ஏதேனும் ஒன்றின் உருவத்தைச் செய்து எடுத்து வர வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் இந்த உருவங்களைச் செய்து தருவதற்கு என்று ஒருவரை ஏற்பாடு செய்து விடுகின்றனர். பணத்தை பள்ளியில் செலுத்திவிட்டால் புராஜெக்ட் தயார்.

சில ஊர்களில், வெளிச் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தெருவுக்குச் சென்றால், இந்த உருவங்கள் ரெடிமேடாகவே கிடைக்கும். பள்ளிக்கூடங்களில் இப்படி புராஜெக்ட் செய்யப்படுவதன் நோக்கம், மாணவர்களின் கற்பனைத் திறன் பெருக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதையும் பணமாக மாற்றிவிடுகின்றன பள்ளிகள். இந்த 'புராஜெக்ட்’ செய்ய, சுமார் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு பெற்றோரும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

''அது மட்டுமல்ல... அறிவியல் உபகரணங்களின் உருவத்தைச் செய்து எடுத்து வரச் சொல்கின்றனர். அது நீளமாக, அகலமாக, அடக்க முடியாத உருவத்தில் இருக்கிறது. அதை வேலை மெனக்கெட்டு நம் குழந்தை செய்யும். டூ-வீலரில் எடுத்துக்கொண்டு நாம் போய் இறங்கினால், பெரிய பெரிய கார்களில் வந்து இறங்கி டிக்கிகளில் இருந்து சினிமா செட் போல எடுத்துவைப்பார்கள். 'அது சூப்பரா இருக்கு. அதுபோலத்தான் எனக்கு வேணும்’ என்று நம் குழந்தை அழ ஆரம்பிக்கும். சமாளிப்பது மிகவும் சிரமம்'' என்கிறார் அனுபவப்பட்ட தந்தை ஒருவர்.

'மாறுவேடப் போட்டி’ என்ற பெயரில், இந்தத் தனியார் பள்ளிகள் அடிக்கும் கூத்து தாங்க முடியாத துயரங்களில் ஒன்று. ஏதாவது 'தீம்’ கொடுத்து அதே போல உடை அணிந்து வரச் சொல்கின்றனர் அல்லது அவர்களே உடைகளைத் தயார்செய்துவிட்டு பணத்தை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். வெறும் அரை மணி நேரம் ஆடிவிட்டுக் கழற்றி வீசப்போகும் அந்த உடைக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் என்று மனச்சாட்சியே இல்லாமல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 'என் குழந்தைக்கு மாறுவேடப் போட்டி வேண்டாம்’ என்று எந்தப் பெற்றோரும் மறுக்க முடியாது. ஏனெனில், அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism