Published:Updated:

குப்பையில் இருந்து புதிய கார்... டெஸ்லாவுக்கே சவால் விடும் அமெரிக்கர்!

குப்பையில் இருந்து புதிய கார்... டெஸ்லாவுக்கே சவால் விடும் அமெரிக்கர்!
குப்பையில் இருந்து புதிய கார்... டெஸ்லாவுக்கே சவால் விடும் அமெரிக்கர்!

குப்பையில் இருந்து புதிய கார்... டெஸ்லாவுக்கே சவால் விடும் அமெரிக்கர்!

வீட்டிலிருக்கும் குப்பைத் தொட்டிகளில் காய்கறி தோல்களிலிருந்து, பிளாஸ்டிக் குப்பைகள் வரை கொட்டுகிறோம்.  அதிகபட்சம் அந்தக் குப்பைகளை தெருவிற்கு வரும் வண்டியில் போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக இருப்போம். ஆனால், அந்தக் குப்பைகள் எங்கு போகிறது, என்ன ஆகிறது என்று யோசித்ததுண்டா? அதிலும் நாம் வீட்டிலிருந்து தூக்கி எறியும் பழைய பேட்டரிகள், டிவி ரிமோட்கள், செல்போன்கள், டார்ச் லைட்... என எத்தனையோ எலக்ட்ரானிக் பொருட்கள் என்ன ஆகின்றன?, எங்கு போகின்றன ?. இந்த "இ - வேஸ்ட்கள்" எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் இன்று மொத்த உலகிற்குமே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது குறித்து பலரும் பல விழிப்புஉணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், முழுக்க முழுக்க " இ - வேஸ்ட்களை" கொண்டு எலக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் லண்ட்க்ரென். 

அமெரிக்காவில் " மறு சுழற்சி"பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் எரிக். பொருட்களின் மறு சுழற்சியும், மறு உபயோகமும் தான் இந்த உலகில் சேரும் குப்பைகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்பதில் திடமான நம்பிக்கையைக் கொண்டவர்.  இவர் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒரு " எலக்ட்ரிக் காரை " உருவாக்கியுள்ளார். " ஹைப்ரிட் மறுசுழற்சி " எனும் புது சொல்பதத்தை அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையிலேயே இந்தக் காரை வடிவமைத்ததாகச் சொல்கிறார்.  நம் வீட்டில் ஒரு டிவி ரிமோட் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம்? அதை அப்படியே தூக்கி குப்பையில் போட்டுவிடுகிறோம். ஆனால், அந்த ரிமோட்டில் ஏதோ ஒரு பாகம் பழுதாகியிருக்கலாம். மற்ற பல பாகங்கள் நன்றாக வேலை செய்யும் நிலையில் தான் இருக்கும். அப்படியான பாகங்களை எடுத்து மறு சுழற்சி செய்து, மறு உபயோகம் பண்ணுவதைத் தான் " ஹைப்ரிட் மறுசுழற்சி " என்கிறார் எரிக்.

குப்பைகளிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் தன் காருக்கு " ஃபீனிக்ஸ்" எனப் பெயரிட்டுள்ளார் எரிக். இந்தக் காரின் 88 % பாகங்கள் முழுக்கவே குப்பைகளிலிருந்து எடுக்கப்பட்டவை தான். முதலில் ஒரு குப்பைக் கிடங்கிற்கு சென்றார் எரிக். அங்கு அவருக்குக் கிடைத்தது 1977 E39 528i BMW காரின் சேஸி. அதோடு சேர்த்து அங்கு சில மோட்டார்களும், இன்னும் சில பாகங்களும் கிடைத்தன. மொத்தமாக இந்திய ரூபாய் மூன்றாயிரம் மதிப்பில் குப்பைகளை அள்ளி வந்தார். காய்லாங்கடையில் நசுக்குவதற்கு தயாராக இருந்த ஒரு ஆக்ஸிலை வாங்கி வந்தார். வீட்டு டிவி கனெக்‌ஷனுக்கு வரும் பழைய கேபிள் பெட்டியிலிருந்து 18,650 சிறு பேட்டரிகளை சேமித்தார். பின்னர், சில பழைய லேப்டாப்களிலிருந்தும் பேட்டரிகளை எடுத்துக் கொண்டார். இப்படி பல பேட்டரிகளைச் சேர்த்து, 130 கிலோவாட் பேட்டரி சக்தியை உருவாக்கினார். காரின் உள்ளே இரண்டு பேர் பயணிக்கும் வகையில் சீட்களை அமைத்தார்.  AC - 51 மோட்டாரைப் பொருத்தினார். இப்படியாக, தன்னைச் சுற்றியிருந்த குப்பைக் கிடங்குகளிருந்து மட்டுமே தனக்கு தேவையான பொருட்களை வைத்து காரை உருவாக்கினார்.

"ஃபீனிக்ஸ்" எனப்படும் இந்தக் காரை உருவாக்க எரிக்கிற்குத் தேவைப்பட்ட நாட்கள் வெறும் 35. இந்தக் காரை உருவாக்க செலவான மொத்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 8,40,000 ( எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ) . குறைந்த செலவில், மறு சுழற்சிப் பொருட்களை உபயோகப்படுத்தி ஒரு காரை உருவாக்கியது மட்டும் எரிக்கின் சாதனை கிடையாது. காரின் மைலேஜ் அளவில் உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விட அதிக மைலேஜ் கொடுத்து உலக சாதனையைப் படைத்துள்ளது எரிக்கின் ஃபீனிக்ஸ்.
எரிக் சொந்தமாக  அமெரிக்காவைச் சேர்ந்த சிறு கம்பெனிகளின் இரண்டு எலக்ட்ரிக் கார்களை வைத்திருக்கிறார். அவை ஒரு சார்ஜிற்கு 140கிமீ தூரம் மட்டுமே போகும். அதே போல், இந்திய ரூபாய் மதிப்பில் 95 லட்சம் ரூபாய் டெஸ்லா காரையும் வைத்துள்ளார். அது 400கிமீ வரை மைலேஜ் தருகிறது. ஆனால், எரிக்கின் "ஃபீனிக்ஸ்" 550கிமீ மைலேஜ் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளது. 

இனி எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்பதை உணர்ந்து, பல உலக நாடுகளும் அதை நோக்கிய முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இந்த சமயத்தில் எரிக்கின் இந்தக் கண்டுபிடிப்பு உலக கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது. டெஸ்லாவுக்குப் போட்டியாக கார் நிறுவனத்தை தொடங்குவீர்களா என்ற கேள்வி எரிக்கின் முன் வைக்கப்பட்ட போது...

" நான் யாருக்கும் போட்டியாக கார் நிறுவனத்தைத் தொடங்கப் போவதில்லை. என்னுடைய இந்த முயற்சி முழுக்கவே, ' ஹைப்ரிட் மறுசுழற்சி' திட்டத்தை உலக மக்களிடையே பரவலாக கொண்டு செல்ல வேண்டுமென்பது தான். நான் டெஸ்லாவின் அபிமானி. எலன் மஸ்கின் ரசிகன். ஆனால், எலன் மஸ்கிற்கு ஒரு வேண்டுகோள், தன் நிறுவனத்திலும் அவர் ஹைப்ரிட் மறுசுழற்சித் திட்டத்தை பின்பற்ற வேண்டும்..." 

பேரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பூமியைக் காக்க, இது போன்ற முயற்சிகள் இன்னும், இன்னும் அவசியமாகின்றன. அதைப் பரவலாக எல்லா மக்களும் உபயோகப்படுத்த வேண்டியது அத்தியாவசமாகின்றன. 
 

அடுத்த கட்டுரைக்கு