Published:Updated:

ஆறாம் திணை - 89

மருத்துவர் கு.சிவராமன், படம்: ரா.சதானந்த்

ஆறாம் திணை - 89

மருத்துவர் கு.சிவராமன், படம்: ரா.சதானந்த்

Published:Updated:

தொழில்நுட்பங்கள், உச்சத்தில் கோலோச்சும் காலம் இது. வரவேற்கப்படவேண்டிய பல வசதிகளை இவை தந்தாலும், நம்மை அறியாமல் நம் உயிரையே  உறிஞ்சும் ஆபத்தையும் அதே தொழில்நுட்பங்கள்தான் தருகின்றன.

 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் சொன்ன வார்த்தைகள் அதை உணரச் செய்யும். 'நான்கு  மில்லியன் வருட மரபை மதிக்காத திமிர் உள்ள ஒரே உயிரினம், மனித இனம்தான்!’ - அவரது ஆய்வு முடிவை, இந்த ஒற்றை வரியில் கூறிவிட்டார்.

 இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், வேலை நிமித்தமாக இரவில் பணிபுரியும் ஊழியருக்கும் சாதாரண வயிற்று உபாதை முதல் மார்பகப் புற்று வரை உருவாகும் ஆபத்துகளை, தன் ஆய்வில் விவரித்திருக்கிறார். கூடவே, 'குறைந்த ஆற்றலை எடுத்துக்கொண்டு ஒளியை உமிழும் எல்.இ.டி. விளக்கு உள்ள ஸ்மார்ட் போன், டேப்லெட் வகையறாக்கள், தன் ஒளிக்கற்றையில் அதிகபட்ச நீல ஒளியைத் தந்து இரவில் நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றன’ என்கிறார். போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஸ்மார்ட் போனில் நடுநிசி தாண்டி சாட் செய்தால், காதல் வருமா தெரியாது; ஆனால், கேன்சர் வரக்கூடும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 89

பல நேரங்களில், இந்தத் தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டிவிட்டு,  ஒரு நாளில் அறவே மறந்திடச் செய்வதும்கூட வேதனையான விஷயம்தான். அப்படி நாம் மறந்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று... குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்காக நம்மிடையே இருந்த சில நல்வாழ்வு தடுப்பு முறைகள்.

இவை, தற்போது 'வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. அத்துடன்  குழந்தை நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பரியப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 தடுப்பு மருந்துகளை அதன் ஆழமும் மருத்துவக் குணமும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.

துரை மாவட்டப் பகுதிகளில், பிறந்த குழந்தைக்கு, தாய்மாமன் 'சேனை வைத்தல்’ என ஒரு சடங்கு இன்றளவும் நடைபெறும். அதில் சிலர், 'சீனிக் கரைசலை’ இப்போது கொடுக்கிறார்கள். ஆனால், 'சேனை வைத்தல்’ என்பது, குழந்தைக்கு வெறுமனே இனிப்பு ருசியைப் பழக்கும் வெறும் சீனி மருந்து கொடுக்கும் மரபு அல்ல; 'சேய் நெய்’ கொடுத்தல் என்பதே காலப்போக்கில் 'சேனை கொடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் மேலும் மருவி 'சீனி கொடுப்பது’ எனச் சிதைந்துவிட்டது. 'சேய் நெய்’ என்பது, குழந்தைகளுக்காக வீட்டிலேயே செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு தடுப்பு மருந்து.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மோசமான பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் இரு வகைப்படும். ஒன்று... சளி, இருமலைத் தருவது, இன்னொன்று வயிற்றுப்போக்கைத் தருவது. இந்த இரண்டு வகை நோய்க் கூட்டத்துக்கும் காரணமான நுண்ணுயிரிகளைச் செயல் இழக்கச் செய்யும் பல மூலிகைகளைக்கொண்டே இந்தச் 'சேய் நெய்’ தயாரிக்கப்படுவதுதான் இதில் விசேஷம். ஆடாதொடை, தூதுவளை, இண்டு, வேப்பங்கொழுந்து, கண்டங்கத்தரி... முதலான 57 வகை மூலிகைகளை வைத்து வீட்டிலேயே தயாரிக்கும் அந்தச் 'சேய் நெய்’, கைக்குழந்தைகளுக்கான அந்தக் கால தடுப்பு மருந்து எனலாம்.

தற்போது புழக்கத்தில் இருக்கும் வேக்ஸின் வகை தடுப்பூசிகளில் இரண்டு வகை உண்டு. நோய் வராமல் தடுக்க, நோய்க்குக் காரணமான கிருமியைச் செயல் இழக்கச் செய்யும் மருந்தை உடலுக்குள் செலுத்தி, அதற்கான எதிர்ப்பாற்றலை நமக்குள் வளர்ப்பது. இதை Prophylactic Vaccine  என்பார்கள். நோயைக் குணப்படுத்தும் Therapeutic Vaccine என்பது இரண்டாம் வகை. நம் ஊர் 'சேய் நெய்’யை இந்தப் பிரிவில் அடக்கலாம்.

'அட! 57 வகை மூலிகைகளைத் தேடி நான் எந்தக் காடு, மலைக்குப் போவது? கொஞ்சம் சிம்பிளா எதுவும் இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு... இன்னும் மிச்சமுள்ள கிராமங்களில் மக்களிடையே அதற்கும் ஒரு மருந்து இருக்கிறது. அது 'உரை மருந்து’ எனும் தடுப்பு மருந்து. இதனை சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், நெல்லிக்காய், வசம்பு என்ற ஒன்பது மூலிகைகளைக்கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.

சுக்கின் மேல் தோல் சீவியும், கடுக்காய், நெல்லிக்காயை அதன் விதையை நீக்கியும் வைத்துக்கொள்ள வேண்டும். வசம்பை அதன் மேல் தோல் கருகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பின் எல்லா பொருள்களையும் வறுத்து, நன்கு பொடி செய்துகொள்ள வேண்டும். இந்தப் பொடியை, அதிமதுரக் கஷாயத்துடன் சேர்த்து அரைத்து சிறுசிறு குச்சிகளாகச் செய்து காயவைத்துக்கொண்டால், உரை மருந்து தயார். இதை தாய்ப்பாலில் இழைத்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாள் முதல் கொடுக்கத் தொடங்கலாம். முதலில் ஓர் இழைப்பு, இரண்டு இழைப்பு எனத் தொடங்கி குழந்தை வளர வளர இழைப்பை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். ஜீரணத்தையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வழங்கும் இந்த உரை மருந்து, காலங்காலமாக வழக்கில் உள்ள மருந்து. இது, அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி.

''வசம்பா..? அது அமெரிக்காவில் நல்ல பொருள் இல்லையே!’ எனச் சொல்வார்கள் சில இணையப் புலிகள். கடந்த வருடம் இந்த ரீதியில் ஒரு விவாதத்தையும் கிளப்பினார்கள்.

ஆறாம் திணை - 89

வசம்பில் உள்ள நறுமண எண்ணெயில், 'பீட்டா ஆசரோன்’ எனும் நச்சுப்பொருள் இருப்பதாக வாதிடும் அவர்கள், வசம்பின் அடிப்படை குணத்தை மறந்தேவிட்டார்கள். முதலில், வசம்பின் நறுமண எண்ணெயை நாம் பிரித்து உபயோகிப்பது இல்லை. அடுத்தது வசம்பில் இருக்கும் அந்த எண்ணெயின் அளவும் மிகக் குறைவானது. அப்படிப் பிரித்த எண்ணெயிலும் மிக நுண்ணிய அளவே பீட்டா ஆசரோன் உள்ளது. அந்த ஆசரோனும், நாம் வசம்பைச் சுடுவதில் வரும் வெப்பத்தில் 100 சதவிகிதம் ஓடிப்போய்விடும் என்பது, அறிவியல் உலகில் அத்தனை பேருக்கும் தெரியும். ஒருவேளை, வசம்பைச் சுட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது வெள்ளை கோட் விஞ்ஞானிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கண்டாங்கிப் புடவை கட்டியிருக்கும் நம் ஊர் ஆத்தா - அப்பத்தாக்களுக்கு நிச்சயம் தெரியும்.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த வசம்பை அவசர அவசரமாகப் பழிக்கும் கூட்டம், இன்றளவும் சில தடுப்பூசிகளில் அதன் ஸ்திரத்தன்மைக்காகச் சேர்க்கப்படும் Thiomersal–ன் நச்சுத்தன்மையால் ஆட்டிச நோய் வருகிறதா எனும் பெரும் சர்ச்சை வந்தபோது, அதுகுறித்து எப்போதுமே பேசியது இல்லை.

'ஆட்டிச நோய்க்கு, இந்த Thiomersal காரணம் இல்லை’ என்று அமெரிக்காவின் Center for disease Control மருத்துவரீதியாக மறுத்துவருகிறது!

தடுப்பு குறித்த அறிவும் புரிதலும், எட்வர்டு ஜென்னருக்கு முன்னரே நம்மவருக்கும் தெரியும். ஜென்னர் கொண்டுவந்த தடுப்பூசியை நாம் கண்டறியவில்லை என்றாலும், அதே கருத்தாக்கத்தை நாமும் பெற்றிருந்தோம் என்பதற்கு ஹோல்வெல் என்கிற அறிஞரின் நூல் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு.

இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனியின் ஆளுகையில் இருந்தபோது, வங்காளத்தின் ஆளுநராக இருந்த ஹோல்வெல், இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி படித்த முதல் ஐரோப்பியர். அவர் தன் நூலில், இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டு மக்கள், சின்னம்மைக்கு எதிராகக் குத்தூசி முறையில் (inoculation - variolation) நோய்த் தடுப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை 1760-களிலேயே ஆவணப்படுத்தியிருக்கிறார். குடல்பூச்சியில் இருந்து குடல்புற்று வரை நோய்த் தடுப்புக்குப் பாரம்பரியம் சுட்டிக்காட்டுவது, வேப்பங்கொழுந்தைத்தான். இப்போது, சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் (CNCRI) வேம்பில் இருந்து ஒரு கிளைகோ புரோட்டினைப் பிரித்தெடுத்து, குடல்புற்றைத் தடுக்கும் வேக்ஸினைக் கொண்டுவருவதில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

நலவாழ்வு குறித்த புரிதலும், அக்கறையும், அதற்கான மெனக்கெடலும் நம் சமூகத்துக்கு மிக அதிகம். அதனை 'ஆத்திசூடி’யிலும் 'ஆசாரக்கோவை’யிலும் சொல்லி, நம் வாழ்வியலோடு பிணைத்ததும் நம் சமூகத்தின் தனித்துவம். தொழில்நுட்பத்தில் அதை எல்லாம் தொலைத்திடாமல், அதே தொழில்நுட்பத் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் காலத்தின் கட்டாயம்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism