Published:Updated:

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

''எம்.ஜி.ஆரை டி.வி-யில பார்த்திருப்பே... தியேட்டர்ல பார்த்திருப்பே... டீக்கடையில பார்த்திருக்கியா? பார்த்துக்கோ நான்தான் ஓட்டேரி எம்.ஜி.ஆர்'' என சிரிக்கிறார் ஆதி பத்மநாபன். சென்னை அயனாவரம் டெப்போ ஓட்டேரி ஏரியாவில் 'வாத்தியார் வீடு’ என்றால் உடனே அட்ரஸ் சொல்கிறார்கள்.  35 வருடங்களாக எம்.ஜி.ஆரைப் போல உடை அணிந்து வளையவரும் ஆதி பத்மநாபனின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை.

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

''வாத்தியார் இன்னும் கொஞ்ச நேரத்துல டீயும் போண்டாவும் சாப்பிட ஜோரா வந்திருவார். வெயிட் பண்ணு தலைவா... வருவார் பாரு'' என அவர் வீட்டுக்கு அருகே இருக்கும் டீக்கடைக்காரார் பில்டப் ஏற்றுகிறார். டீ குடித்து முடிக்கும் நேரத்தில் வந்தேவிட்டார் ஓட்டேரி எம்.ஜி.ஆர்.

''நான் பொறந்தது சென்னைதாங்க. வாத்தியார் படம்னா உசிரு. 15 வயசுல இருந்து இப்படித்தான் டிரெஸ் போட்டுக்கினு திரியுறேன். என்கிட்ட வேற உடுப்பே இல்லை. வீட்டம்மாவும் தலைவர் ரசிகை. அதனால எந்தப் பிரச்னையும் இல்லாம வாழ்க்கை போகுது. எப்பவும் தலைவர் மாதிரி பேன்ட், சட்டை போட்டுக்கினுதான் வெளில போவேன்'' சொல்லியபடி போண்டாவைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்கிறார்.

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

''பஸ்ல போறப்போ 'தலைவர் வர்றாருப்பா...’, 'வாத்தியாருக்கு சீட்டு கொடு’னு சொல்வாங்களே தவிர, யாரும் கலாய்ச்சதே இல்லை. இந்த உடுப்புக்கு அவ்ளோ மரியாதை. வீட்டம்மாகூட டிரெஸ் வாங்குறப்போ, 'இதயவீணை’ காலர் வெச்ச சொக்கா வாங்கலையா நீயி? மஞ்சள் சொக்கா மட்டும்தான் பாக்கி’ னு எடுத்துக் கொடுக்கும். அவ்ளோ மேட்சிங் எங்க ரெண்டு பேருக்குள்ள. நான் இப்படி தலைவர் மாதிரி கிராப் வெட்டிக்கினு உடுப்பு போட்டுக்கினு திரியுறதை சின்ன வயசுல இருந்தே பார்த்துப் பழகிட்டாங்க. காலையில எழுந்ததும் முதல் வேலையா தலைவர் டிரெஸ் போட்டுக்கினுதான் வெளியில கிளம்புவேன். அந்த உடுப்பைப் போட்டாலே, அவ்ளோ சந்தோஷமா இருக்கும்'' என்று சொல்லும் ஓட்டேரி எம்.ஜி.ஆர் பேச்சை வெட்டி அவர் மனைவி கலா தொடர்கிறார்.  

''இதுக்கோசரம் கடன் வாங்கியாவது டிரெஸ் எடுத்துக்குவோம். அவரை வாத்தியார் கணக்காப் பார்க்கிறதுலதான் எனக்குப் பெருமை. எங்க வூட்டுக்காரர் தலைவர் மாதிரி... குடிக்க மாட்டார். சிகரெட், பீடி வலிக்க மாட்டார். அப்படி ஒரு நல்ல மனுஷன். தலைவர்போல வாழணும்னு வைராக்கியமா வாழ்ந்துக்கினு இருக்காரு. அவரு இப்படி உடுப்புப் போடுறதை சில பேரு, 'ஏன் உங்க வூட்டுக்காரரு காசை உடுப்புக்கே செலவு பண்றாரு?’னு கேட்பாங்க. அவங்களுக்கோசரம் ஒண்ணு சொல்லிக்கிறேன். கால் காசு சம்பாதிச்சாலும் கரெக்ட்டாக் கொண்டாந்து கொடுத்திடுவாரு. நல்லா சாப்பிடுவாரு. தலைவர் மாதிரி உடம்பை நல்லா மெயின்டெய்ன் பண்ணுவாரு. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை....'' சொல்லும்போதே பெருமிதத்தில் அவர் முகம் பூரிக்கிறது.

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

''என்னைப் பார்த்துக்கினே போயி ஆக்சிடென்ட் பண்ணிக்குவாங்களோனு தான் எப்பவும் பயம்.

தப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்!

மத்தபடி யாரும் எங்கிட்ட தப்பா சொன்னதில்லை.  இதுல ஒரே ஒரு சிரமம் என்ன தெரியுமா? எங்கேயாச்சும் பொண்ணுங்களை ஈவ்டீசிங் பண்றப்போ தட்டிக்கேட்கணும்னு தோணுது. ஆனா, தலைவர் மாதிரி ஃபைட் பண்ண நான் ஆள் இல்லையே. அப்படியே ஃபைட் பண்ணி ஜெயிச்சுட்டா ஓ.கே. அடி வாங்கினா தலைவருக்கே அசிங்கமில்லையா? அதனால பல்லைக் கடிச்சுக்கினு கோபத்தை கன்ட்ரோல் பண்ணி அந்த இடத்தைவிட்டு போகப் பார்ப்பேன். ஆனா, 'ஏய் வாத்தியாருய்யா’னு அந்தப் பசங்களே என்னைப் பார்த்துட்டு கவனத்தை என் பக்கம் திருப்பி என்கிட்ட பேச ஆரம்பிச்ச கதையெல்லாம் உண்டு'' - விழுந்து விழுந்து சிரிக்கும் ஓட்டேரி எம்.ஜி.ஆர், கோடம்பாக்கம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார்!

- ஆர்.சரண்

படங்கள்: ப.சரவணக்குமார்

அடுத்த கட்டுரைக்கு