Published:Updated:

ஆறாம் திணை - 90

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 90

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:

'ஆறாம் திணை’யின் கடைசி அத்தியாயம் இது!

பாரதிதாசன் பாடியதுபோல, 'இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது? ஏகாலி வந்தானா? வேலைக்காரி சென்றாளா? கொழுக்கட்டை செய்யலாமா? செந்தாழை வாங்குவமா..?’ என ஓடிக்கொண்டிருந்த பலரை, 'நாம் ஏன் கம்பங்கூழும் குதிரைவாலி சாதமும் சாப்பிடக் கூடாது? என் குழந்தைக்கு மாசற்ற வாழ்வு, சமச்சீரான உணவு, நிம்மதியான வாழ்வியலை ஏன் என் பழைய மரபில் தேடக் கூடாது?’ என்ற விவாதங்களை, அடுப்பங்கரை முதல் அனிமேஷன் தியேட்டர் வரை விதைத்துவிட்டதில், பரிமாறிய எனக்கும் விகடனுக்கும் நிறையவே மகிழ்ச்சி.

மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் முதலான இயற்கை விவசாயிகள் பலரும், பாரம்பரிய அறிவியல் வல்லுநர்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசியும் களப்பணியும் செய்துவந்த விஷயங்கள் இப்போது மெள்ள மெள்ள ஆங்காங்கே விழிப்பு உணர்வைப் புலரவைத்திருப்பதே திருப்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 90

''எங்கள் பள்ளியில் புத்தகப்பை முதல் அடி ஸ்கேல் வரை எந்தப் பொருளும் ப்ளாஸ்டிக் கிடையாது சார். மாணவருக்கான கேன்டீனில் சிறுதானியத் தின்பண்டம் மட்டும்தான் கிடைக்கும். இதைச் சாத்தியமாக்கியதில் 'ஆறாம் திணை’க்குப் பெரும்பங்கு உண்டு!'' என சேலத்தின் கோல்டன் கேட்ஸ் பள்ளி முதல்வர் கூப்பிட்டுச் சொன்னபோதும்...

திருச்சியில் இருந்து முகம்தெரியாத நண்பர் ஒருவர் அழைத்து, ''சார்... என் திருமண விருந்து முழுக்கவே சிறுதானியங்களில் சமைக்கப்பட்டதுதான். அழைப்பிதழ் அனுப்புறேன்... அவசியம் வரணும்'' என்று சிலிர்க்கச் செய்தபோதும்...

''எங்கள் மருத்துவமனையின் 100 படுக்கையில் உள்ள உள்நோயாளிகளுக்கும் சிறுதானிய உணவுதான் வழங்குகிறோம். அது மருத்துவச் சிகிச்சைக்குப் பக்கபலமாக இருந்து சர்க்கரை கட்டுப்பட உதவுகிறது. நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவருடன் தங்கியிருக்கும் உறவுகளுக்கும் சிறுதானிய உணவுகளை மட்டுமே வழங்குகிறோம். அப்போதுதானே நாம் சொல்லும் மாற்றம் வீட்டு அடுக்களைக்கும் பரவி, நிரந்தரமாக நிலைத்திருக்கும்'' என்று கோவை நீரிழிவு மருத்துவமனையின் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் பூரித்தபோதும்...

''அண்ணா... இன்ஜினீயரிங் படிச்சிட்டு இப்போ முழு நேரமா இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். நீங்க அடிக்கடி எழுதும் மாப்பிள்ளை சம்பா விதைச்சேன். இப்போ அது விளைஞ்சு நிக்கிறதைப் பாருங்க. 'ஆறாம் திணை’ என்னை வெற்றிகரமான விவசாயி ஆக்கிருச்சு!'' என தலை சாய்ந்து சிரிக்கும் நெற்கதிர்களின் படத்தை 'வாட்ஸ்-அப்’பில் பகிர்ந்த புதிய நட்பை எண்ணும்போதும்...

300-க்கும் மேற்பட்ட இயற்கை அங்காடிகள், 100-க்கும் மேற்பட்ட இயற்கை சிறுதானிய உணவகங்கள் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாகியிருக்கின்றன என்ற செய்தியைக் கேட்கும்போதும்... பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் நிரம்பிய மனத்திருப்தி உண்டாகிறது!

ஆறாம் திணை - 90

ரு பின்னிரவில் வந்த தொலைபேசி அழைப்பில், ''சார்... சீக்கிரமே இந்தியாவுக்குத் திரும்பிடலாம்னு இருக்கேன். நம்ம ஊர்ல ஏதாச்சும் விவசாயம் செய்யணும் சார். இந்த ஐ.டி. வேலை வேண்டாம்னு நோட்டீஸ் கொடுத்துட்டேன்!'' என்று அமெரிக்காவில் இருந்து இளைஞர் ஒருவர் பேசியபோதும்...

''எங்கள் பள்ளியில் 4,500 மாணவர்களுக்குச் சமச்சீர் நல்லுணவு தர விரும்புகிறோம். உணவில் எதை, எந்த அளவில் எப்படி மாற்றலாம்?'' என திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர் விசாரித்தபோதும்...

''எங்கள் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில், மொத்தமாக 12,000 ஊழியர்களுக்குச் சத்தான சிறுதானிய உணவைச் சிற்றுண்டியாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு கொஞ்சம் வழிகாட்ட முடியுமா?'' என திருப்பூர் தொழிலதிபர் கேட்டபோதும்... இதுபோல இன்னும் பலப்பல வாசகர்கள் பாரம்பரியப் பற்றுகொண்டு கேள்விகளை அடுக்கியபோதும் சரி... ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

'ஆறாம் திணை’, தமிழர்களின் ஆதரவை மட்டும் பெறவில்லை; அவர்களின் ஆன்மாவையே தொட்டிருக்கிறது. ஏனெனில், அது பேசிய விஷயங்களும், தொடக்கிய விவாதங்களும் நம் சந்ததியினருக்கான நலன் பேசுபவை. அதனாலேயே கடந்த ஜனவரி மாத சென்னை புத்தகச் சந்தையின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில், 'விற்பனையில் நம்பர் 1’ என்ற அந்தஸ்தை 'ஆறாம் திணை’க்குக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள்!

ருத்துவமனையில் நோயாளியின் நாடியைப் பிடித்து நோயை யோசித்துக்கொண்டிருக்கும்போது தொலைபேசியில், ''சார்... நான் 'ஆறாம் திணை’ வாசகி. இந்தச் சோளப் பணியாரத்துக்கு எவ்வளவு நேரம் ஊறணும்?'' என அதிஅவசரமாகக் கேட்பார் ஒரு வாசகி. 'அட... சமையல் சம்பிரதாயங்களை எதுவும் நாம் குலைத்துவருகிறோமா... சரியான பாதையில்தான் போகிறோமா?’ என ஒரு மருத்துவனாக எனக்குப் பயமாக இருக்கும்.

ஆறாம் திணை - 90

நம்மாழ்வார் ஐயாவிடம் இதைச் சொல்லிக் கேட்டபோது, ''வைத்தியரே... சோளப்பணியாரமும் மருந்துதான். ஏன் உங்களுக்கு இந்தக் குழப்பம்? நல்லதை எப்படிச் சாப்பிட்டாலும் நல்லதுதான் செய்யும்!'' என, பொட்டில் அடித்தாற்போல் அச்சம் விலகவைத்தார்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ''மச்சான்... உன் கதை 'ஆனந்த விகடன்’ல வந்திருக்குடா!'' என நண்பன் முரளி, சைக்கிளில் புத்தகத்தோடு வேகமாக வந்து மூச்சிரைக்கச் சொன்னபோது, நான் அடைந்த சந்தோஷம் 'யுரேகா... யுரேகா...’ ஆர்க்கிமிடிஸுக்குச் சற்றும் சளைத்தது அல்ல.

சென்ற மாதம் சுவிஸ் நாட்டில், ரைன் நதியின் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ''சார்... நீங்கதானே 'ஆறாம் திணை’ எழுதுறீங்க. நல்லா இருக்கு சார். எங்க வீட்டுல இப்பல்லாம் நாங்க அடிக்கடி கம்பு தோசை சுடுறோம். ஊர்ல இருந்து கம்பு மாவை அம்மா அனுப்பிவைப்பாங்க!'' என்று ஒரு தமிழர் சொன்னபோது 25 வருடங்களுக்கு முந்தைய 'ஆர்க்கிமிடிஸ்’ மகிழ்ச்சியை மீண்டும் உணர்ந்தேன்.

ஆனால், அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நண்பன் முரளி இப்போது இல்லை. புற்று, அவனை வெற்றிகொண்டுவிட்டது. மரணப்படுக்கையில் இருந்தபோதும், ''அம்மா 'ஆறாம் திணை’ வாசிச்சுக் காட்டும்மா. படிச்சுட்டு அவன்கிட்ட பேசணும்’ என முரளி அவன் அம்மாவிடம் சொல்வானாம்.

என்னிடம் அவன் கடைசியாகச் சொன்னது, 'மாப்பிள்ள... இந்த கேன்சருக்கு என்னைக்காவது நிச்சயம் மருந்து வரும்டா. நம்பிக்கை இருக்கு. ஆனா, அது வர்ற வரைக்கும், நமக்குத் தெரிஞ்சு உணவுலயும், காத்துலயும், மண்ணுலயும் கொட்டிக் குவிக்கிற அத்தனை மாசுக்களையும், சிதைந்துபோற வாழ்வியலைப் பத்தியும் எழுதிட்டே இருடா. நம்மால முடிஞ்சவரை சில உயிர்களையாவது காப்பத்தணும்டா!’ என்பதுதான்!

கடந்த 89 வாரங்களாக இந்தப் பத்தியை அலங்கரித்த எழுத்துகளுக்கும் சிந்தனைகளுக்கும் சொந்தக்காரன் நான் மட்டுமல்ல; 'நாங்களும் டாக்டராகிட்டோம்ல...’ என வெள்ளை கோட் போட்டுக்கொண்டு கல்லூரியில் திரிந்துகொண்டிருந்தபோது, ''சித்த மருத்துவம் என்பது மருந்துச் சீட்டு கொடுக்கும் வைத்தியம் கிடையாதுலே. அதை நீ உணரணும்னா, வரலாறையும் சமூகத்தையும் புரிஞ்சுக்கணும்!'' என்று இன்று வரை அதிகம் எழுதப்படாத சித்த மருத்து வரலாற்றை படிக்கச் சொல்லி மாற்று அறிவியலையும் சிந்தனையையும் என்னுள் விதைத்தவர்கள் அண்ணன் வைகை குமாரசாமியும், மருத்துவர் மைக்கேல் ஜெயராஜும்தான்.

''மருத்துவ அறிவியல் கார்ப்பரேட் வணிகப் பசிக்கு எப்படி இரையாகிறது? அறம் இல்லா அறிவியலாக எப்படி அரங்கேற்றப்படுகிறது? இந்த அவலங்களைக் களைய முற்படாமல், அதற்கென மெனக்கெடாமல், நீங்கள் நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைப்பதிலும் அதற்கான தேடலில் மட்டும் இருப்பது எப்படி சித்த மருத்துவப் பயிற்சியாகும்?'' என்று சொல்லி, சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் Don’t get stuck  என்ற ஆங்கில நூலைப் படிக்கச் சொல்லிக்கொடுத்த மறைந்த நண்பர், 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைத் தோற்றுவித்த நெடுஞ்செழியனுக்கு என் நன்றிக் கடன் சொல்லில் தீராதது.

ன் வீட்டு மொட்டைமாடியில் உட்கார்ந்து நடு இரவு வரை 'டங்கல் திட்டமும், காட் ஒப்பந்தமும், சித்த மருத்துவத்தையும், நம் நலவாழ்வையும் எப்படி ஒடுக்கும்?’ எனச் சொல்லித்தந்த மூத்த பத்திரிகையாளர் சந்தானகிருஷ்ணன், 'தமிழர் அறிவியல் எந்த அளவுக்குக் காலத்தால் முற்பட்டது? இன்றைய உங்கள் பல கேள்விகளுக்கு இங்கிருந்து உங்கள் தேடலைத் தொடங்குங்கள்!’ எனச் சொல்லி, தன் ஆய்வுக் கட்டுரைகள் நிரம்பிய 'ஆசீவகமும் தமிழ் அணுவியமும்’ நூலைப் படிக்கக் கொடுத்த பேரா.நெடுஞ்செழியன், சித்தர் பாடலை நவீன அறிவியலை ஒப்புநோக்கி, ஒட்டுமொத்த நவீன உலகமும் ஏற்றுக்கொள்ளும் மொழியில் அறிவியல் அரங்கில் பேச முதல் முனைப்பு கொடுத்த பேரா.அன்பு கணபதி, ஒவ்வொரு நாளும் சமூக அக்கறையையும் ஆய்வையும் தமிழர் அறிவியலின் தன்னிகரற்ற வளமையையும் தன் கண்டிப்பும் கனிவுமான பயிற்சியால் எனக்குள் செதுக்கிய என் ஆசிரியர் மறைந்த பேரா.செ.நெ.தெய்வநாயகம் என எல்லோருமே 'ஆறாம் திணை’யின் ஆசிரியர்கள்தாம்.

ஆறாம் திணை - 90

இதை எழுதத் தொடங்கிய நாள் முதல் கேட்டபோதெல்லாம் பல்வேறு தரவுகளை அளித்த 'பூவுலகின் நண்பர்கள்’ குழுவும், எனது சித்த மருத்துவ நண்பர்களும், ஒவ்வொரு வாரமும் அதிகம் மெனக்கெட்டு, எழுத்தைச் சீராகச் செப்பனிட்ட விகடன் குழு நண்பர்களும் 'ஆறாம்திணை’யின் செறிவான படைப்புக்கு சக்கரமாக இருந்தவர்கள்தான்.

'ஆறாம் திணை’ சொல்ல விளைந்தது இதைத்தான். இயற்கைக்கு இணையான ஆசான் எவரும் இல்லை. மனிதனின் எண்ணம், அறிவு, வளம், எல்லாவற்றையும்விட இயற்கையின் நுணுக்கம் பெரிது. இங்கே இந்தப் பூமியில் வாழும் உயிரினங்களில் 14 சதவிகித உயிரினங்களுக்குத்தான் பெயரே வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்த ஜீவராசிகளையும் சக பயணிகளாக நினைத்து அவர்களோடு குதூகலித்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த நம் மூத்தக்குடியைப் போல் இல்லாமல், 'எனக்கானதுதானே இந்த உலகம்; என் களிப்புக்கும் சொகுசுக்கும், நான் ஐம்பூதங்களை, ஐந்திணைகளைச் சிதைப்பதுதானே என் அறிவின் உச்சம்’ என்று நகர்வதின் விளைவுதான் பெருகும் நோய்க் கூட்டமும் பேரழிவு நிகழ்வுகளும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

'மனிதன் இல்லாத பூமியில் பறவை வாழ முடியும்; ஆனால், பறவை இல்லாத பூமியில் மனிதன் வாழ முடியாது’ என்ற சூழலியலாளர் சலீம் அலியின் கூற்றும், 'கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசிச் சொட்டு நீரும் விஷமேறி, கடைசி மீனும் பிடிபட... அப்போதுதான் தெரியும் மனிதனுக்கு, பணத்தைச் சாப்பிட முடியாது என்று...’ எனச் சொல்லிய செவ்விந்தியப் பழமொழியும் நாம் மீண்டும் மீண்டும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய சிந்தனைகள்.

'ஆறாம் திணை’யின் பயணம் இங்கே நிற்கப்போவது இல்லை. இது ஒரு சின்ன இளைப்பாறல்தான். 'இங்கே என்ன நடக்கிறது? நாம் என்ன செய்யப்போகிறோம்?’ என்ற விவாதங்களுடன், மீண்டும் விகடனோடு வீட்டுக்கு வருவேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism