சுவாசிக்கச் சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அப்பால், மின்சாரம், சாலைகள் உள்ளிட்ட பயண வசதிகள், கருத்துரிமை போன்றவற்றை சமூக உரிமைகளாக உலகின் சில சமூகங்கள் கருதுகின்றன. இணைய வசதி இந்த இரண்டாவது வகையான உரிமைகளில் சேர்க்கப்பட்டு வருவதை சென்ற சில வருடங்களில் பார்க்கிறேன். உதாரணத்துக்கு, பின்லாந்து.

இந்த நாட்டில் இருக்கும் ஐந்து மில்லியன் மக்களுக்கு, குறைந்தது ஒரு மெகாபைட் அளவில் இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்பதை அடிப்படை உரிமையாக்கி நான்கு ஆண்டுகளாகின்றன. அடுத்த வருடத்துக்குள் இந்த வேகத்தை 100 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று சட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஃபிரான்ஸ், ஸ்பெயின், எஸ்டோனியா போன்ற நாடுகளும் இதே கோணத்தில் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. இன்னும் பல நாடுகளில் இதுகுறித்த விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இணையம் என்பது தகவல் பரிமாற்றத்துக்கு என்று இருந்த காலம் மாறிப்போய், வணிகத்துக்காகப் பயன்பட ஆரம்பித்து, சமூக ஊடகத்தின் அடிப்படைக் கூறாக உருவாகி, இன்றைய நாள்களில் மேகக் கணினியம் என்ற தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பை இயக்கி, நம் வாழ்வின் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியபடி இருக்கிறது. இணைய உலகில் சில வருடங்களுக்கு முன்னால் பரபரப்பாகப் பேசப்பட்ட வலை சமத்துவம் (Net Neutrality) சென்ற சில வாரங்களில் மீண்டும் விரிவாக அலசப்படுகிறது.
இணையம் இடைத்தரகர்களால் கட்டுப்படுத்தப் படாமல், அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே வலை சமத்துவத்தின் அடிப் படை. நுகரப்படும் தகவல்களைப் பொறுத்து, இடையில் இருக்கும் இணைப்புச் சேவை நிறுவனம், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முனைந்தால் என்ன ஆகும்? உதாரணத்துக்கு, நீங்கள் இருக்கும் பகுதியில் இணைப்புச் சேவை நிறுவனம், கூகுளுடன் பார்ட்னராகச் சேர்ந்துகொள்கிறது என வைத்துக்கொள் வோம். கூகுளுக்குச் சொந்தமான யூ-டியூப் தளத்துக்குச் செல்லும்போது வீடியோக் கள் வேகமாக இயங்கும். அதே நேரத்தில் கூகுளுக்குப் போட்டியாளரான யாஹூ தளத்தில் வீடியோக்களைப் பார்க்க விரும்பினால், அது மிகத் தாமதமாக இயங்கி, உங்களது பயனீட்டு அனுப வத்தைக் குலைத்தால் எப்படி இருக்கும்? வலுவான பெருங் கணினிகள் உள்பட தொழில்நுட்பக் கட்டமைப்பின் உதவியால், யாஹூவைவிட கூகுள் பலமான வீடியோ டெலிவரி சேவையை அளித்தால், அதில் குறை சொல்ல எதுவும் இல்லை. யாஹூவைவிட கூகுளுக்கே நீங்கள் நாடிச் செல்வீர்கள். ஆனால், செயற்கையாக உங்களது இணைய இணைப்பு நிறுவனம் உங்களுக்குச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்கள்தானே!
அமெரிக்க அரசின் அங்கமான Federal Communications Commission (FCC), என்ற அமைப்பு பொதுமக்கள் தகவல் தொடர்புக்கான ஊடகங் களுக்கான விதிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறது. வலை சமத்துவம் என்பது தங்களது தாரக மந்திரமாக இதுவரை சொல்லிவந்த FCC, சில வாரங்களுக்கு முன்னால், குறிப்பிட்ட விதி ஒன்றில் மாற்றம் கொண்டுவரும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இதன்படி, வணிக நிறுவனங்கள், இணைய இணைப்பு நிறுவனங்களுடன் இணைந்து பயனீட்டாளர்களுக்கான, 'வேக வழி இணைப்பை’ உருவாக்கிக்கொள்ளலாம். இது ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் ஆபத்துகொண்டது என கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
'வெய்ட்... கூகுள் போன்ற பெரும் பணம் படைத்த நிறுவனங்களுக்கு இது நல்லதுதானே. தங்களிடம் இருக்கும் பணத்தைப் பயன்படுத்தி அவர்கள் 'வேக வழி இணைப்பை’ உருவாக்கி, போட்டியாளர்களைத் துவம்சம் செய்துவிடலாமே! ஏன் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்?’ என்ற இயல்பான கேள்வி தோன்றலாம். காரணம் இருக்கிறது.

FCC எப்படி இதைக் கையாளப்போகிறது என்பதில் இருக்கிறது பதில். இணையத்தில் இருந்து உங்கள் வீட்டுக்குள் வரும் தகவலின் அளவை இணைப்பு நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியும் என FCC அனுமதி கொடுத்துவிட்டால், அமெரிக்காவில் இருக்கும் Comcast போன்ற இணைய நிறுவனங்கள் பயனீட்டாளர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு, கூகுள் போன்ற இணைய தகவல் நிறுவனங்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு கொழுத்து வளரும். இந்த முன்னுதாரணத்தைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் இணைய இணைப்பு நிறுவனங்களும் மேற்படி கோட்டில் ரோடு போடப் போட்டியிடும்.
அல்லது இப்படி ஒரு சாமான்ய ஒப்பிடுதலைக் குறிப்பிடலாம். மின்சாரம் என்பது தயாரித்து, விநியோகிக்கப்படுவது. அது தயாரிக்கப்படுவதன் அளவுக்கு ஏற்ப விநியோக நிறுவனம் கட்டுப்படுத்துவதும், சில தருணங்களில் முழுதாகத் துண்டிப்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், சுவாசிக்கும் காற்று அனைவருக்கும் பொதுவானதாக, யாராலும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமல்லவா? இந்த இரு உதாரணங்களில், இணையம் காற்றுக்கு நிகரானது என்பேன். வலை சமத்துவத்தை எளிதாக விளக்கும் ஒரு பக்க வலைதளத்தைப் பாருங்கள் www.theopeninter.net/
'இதெல்லாம் அமெரிக்காவில்தானே நடக்கிறது... நம்மை எங்கே பாதிக்கப்போகிறது?’ என்று சிம்பிளாக எடுத்துக்கொள்ளாதீர்கள். முழுதும் வெளிப்படையான, இலவசமான இணையம் என்பது சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கும், அனைவரும் சமமாகப் போட்டியிடும் ஆடுகளத்தை அளிப்பதற்கும், உலகளாவிய விதத்தில் புதுமையாக்கல் சார்ந்த தொழில்முனைவுகளுக்கும் மிக முக்கியம். இணையம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அது சமமாக அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது வணிக லாபங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். www.fightforthefuture.org தளத்தில் அதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். ட்விட்டரில் # FCCNetNeutrality ஹேஷ்டேக்குடன் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்!
- விழிப்போம்...