Published:Updated:

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:

'ஸ்ட்ரிக்ட்டா போலீஸ் ஸ்டேஷன் மாதிரி நடத்தினா, நல்ல பள்ளிக்கூடம்’ என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். கறார்த்தனம்தான் கல்லா கட்டும் வழி என்பதைப் புரிந்துகொண்டுள்ள தனியார் பள்ளிகள், 'கட்டணம்’ என்ற பெயரில் 'மாமூல்’ வசூலிக்கின்றன. எனினும் தனியார் பள்ளிகளிடம் இருப்பது, 'கொட்டக் கொட்டக் கொள்ளாத’ விநோத அட்சய பாத்திரம். அது, நடுத்தர வர்க்கம் ரத்தம் சுண்ட உழைக்கும் வியர்வையின் கடைசித் துளியையும் ஒட்ட உறிஞ்சிவிடுகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், 'ஆமா சார். 20 ஆயிரம் முதலீடு போட்டு அயர்ன் வண்டி கடை வைச்சிருக்கிறவர், தினமும் 500 ரூபா வீட்டுக்கு எடுத்துட்டுப் போறார். 50 ஆயிரம் ரூபா முதலீடு போட்டு டீக்கடை நடத்துறவர், தினமும் 1,000 ரூபா சம்பாதிக்கிறார். நாங்க கோடிக்கோடியாக் கொட்டி ஸ்கூல் நடத்துறோம். இன்னைக்கு ஒரு கிரவுண்ட் நிலம் என்ன விலை? ஒரு கட்டடம் கட்ட என்ன செலவு? எல்லா பணத்தையும் எப்படித் திருப்பி எடுக்கிறது?’ என்று பட்டவர்த்தனமாகக் கேட்டார் கல்வித் தந்தை ஒருவர்.

'கல்வி ஒரு சேவை’ என்பது எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. இது பெரிய மீனைப் போட்டு, அதைவிடப் பெரிய மீனைப் பிடிக்கும் தொழில். இந்தத் தொழிலில் யார் தங்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்திக்கொள்கிறார்களோ, அவர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3

வழக்கமாகத் தனியார் பள்ளி முதலாளிகளைப் பற்றிப் பேசும்போது, ஒருகாலத்தில் சாராயக் கடை நடத்தியவர்களும், கந்துவட்டி வசூலித்தவர்களும் இன்று கல்வித் தந்தைகளாகி விட்டார்கள் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், இவர்கள் கல்வியை ஒரு பாரம்பரியத் தொழில் போல நினைத்தார்கள். மாறிவிட்ட புதிய உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை, தங்கள் 'தொழிலை’ மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் இத்தகைய பின்னணியில் இருந்து பள்ளிக்கூடம் நடத்துபவர்கள், இன்று போட்டியின் பின் வரிசையில் இருக்கிறார்கள். எனில், முன் வரிசையில் இருப்பது யார்?

அவர்களுக்குச் சாராயப் பின்னணியோ, கந்துவட்டிப் பின்னணியோ கிடையாது. சொல்லப்போனால் பல தலைமுறைகளாகக் கல்விபெறும் வாய்ப்புப் பெற்ற, படித்த வர்க்கத்தினரின் வாரிசுகள் அவர்கள். கல்வி என்பது ஒரு வர்த்தகப் பண்டம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை, தங்களின் கல்வியறிவால் முன்கூட்டியே ஊகித்தவர்கள். மிகவும் நாகரிகமான இந்த மேட்டுக்குடியினர், நகர்ப்புறங்களில் தொடங்கிய தனியார் பள்ளிக்கூடங்கள்தான் இன்று தர வரிசைப் பட்டியலில் முதலில் இருக்கின்றன. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் 90 சதவிகிதம் இவர்களுக்குச் சொந்தமானவையே.

இப்படிச் சொல்வதன் நோக்கம், சாராயம் மற்றும் கந்துவட்டிப் பின்னணியுடன் கல்விக்கூடம் நடத்துபவர்கள் மீது பரிதாபத்தைக் கோருவது அல்ல. மாநிலம் முழுவதும் நகரங்களிலும், சிறுநகரங்களிலும், ஊராட்சி அளவிலும் சின்னச் சின்ன தனியார் பள்ளிகளை நடத்தி சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உறிஞ்சுவது இவர்கள்தான்.

ஆனால், பெற்றோர்களைப் பொறுத்தவரை வேறு வழியின்றியே இந்தப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பெரிய பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்பதால் இங்கு வருகின்றனர். மற்றபடி பெரும்பான்மை மக்களின் மனங்களில் மோகம் கொண்டிருப்பது புகழ்பெற்ற 'பிராண்ட்’ பள்ளிகளே. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் இப்போது 'ஃப்ரான்சைஸ்’ (Franchise) முறைப்படி தங்கள் பள்ளியின் பெயர் உரிமைகளை விற்கத் தொடங்கியுள்ளன.

நாமக்கல்லில் புகழ்பெற்ற பல பள்ளிகளின் பெயர்களை, நீங்கள் மாநிலம் முழுக்கவும் பல இடங்களில் பார்க்கலாம். நாமக்கல் பள்ளி ஒன்று, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் தனது பள்ளியின் கிளைகளை விஸ்தரித்துள்ளது. கல்வி என்பது 100 சதவிகிதம் வியாபாரம் ஆகிவிட்டது என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது 'ஃப்ரான்சைஸ்’ அணுகுமுறை.

தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, 'என் பேரனுக்கு இந்தப் பள்ளியில் ஒரு சீட் தர மறுத்துவிட்டனர். அதனால் என் மனைவி வருத்தப்பட்டார்’ என்று வெளிப்படையாக மேடையிலேயே பேசினார். ஒரு மாநில முதலமைச்சரின் பேரனுக்கே சீட் மறுக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்த இத்தகைய பள்ளிகள்தான், இன்று பெற்றோர்களின் மோகத்துக்கு உரியவை. இத்தகைய கெடுபிடி அணுகுமுறை குறித்த பேச்சு பரவுவதும், கறார்த்தனத்தைப் பராமரிப்பதும்கூட, இந்தப் பள்ளிகளின் சந்தை மதிப்பை அதிகரிக்கவே உதவி செய்கின்றன!

னியார் பள்ளிகளின் கட்டண விகிதத்தை முறைப்படுத்த, 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’வை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான இந்தக் குழு, அப்போது மாநிலம் முழுவதும் இருந்த சுமார் 10,500 பள்ளிகளுக்கான கட்டணத்தை வரையறுத்து அறிவித்தது. அப்படி அரசாங்கம் வரையறுத்த கட்டணமே அதிகமாக இருக்கிறது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளோ, 'இது மிகக் குறைவான கட்டணம்’ என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இறுதியில் அந்த வழக்கில், 'கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த தொகை சரியானதுதான்’ என்று தீர்ப்பு வந்தது.

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3

2010 நவம்பரில், இந்தக் கட்டண நிர்ணய குழுவுக்கு நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை மறுசீரமைத்து அறிவித்தது. ஒருசிலவற்றைத் தவிர்த்து, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏற்கெனவே இருந்ததைவிட 40 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தித் தந்தது இந்தக் குழு.

அதன் பிறகு, 2012-ல் நீதிபதி சிங்காரவேலர் இந்தக் குழுவுக்குத் தலைவர் ஆனார். ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு என்ற சராசரி அளவின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும் தொகை தான் அதிகாரபூர்வமானது என்றாலும், அதுவே இறுதியானது அல்ல. நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்று பள்ளி நிர்வாகம் கருதினால், குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம். கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், கட்டணம் உயர்த்தித் தரப்படுகிறது. இப்படி கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 387 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் உயர்த்தித் தரப்பட்டது. இப்போதும் கட்டண உயர்வுக்கு மேல் முறையீடு செய்ய சிங்காரவேலர் குழுவை தனியார் பள்ளிகள் மொய்த்தபடியே இருக்கின்றன.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், இந்த ஆண்டு 100 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் இரண்டு மடங்கு உயர்வு. கடந்த ஆண்டில் இருந்ததைவிட இந்த ஆண்டு அந்தப் பள்ளியின் தரம் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது என இதைப் புரிந்துகொள்ள முடியுமா?

சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சிங்காரவேலர் கமிட்டி எல்.கே.ஜி-க்கு நிர்ணயித்த தொகை ஆண்டுக்கு 6,500 ரூபாய். ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு பருவத்துக்கு 6,500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை வசூலித்தது. விஷயம் வெளியில் தெரிந்து இப்போது விசாரணை நடைபெறுகிறது. இப்படித்தான் இருக்கிறது யதார்த்த நிலைமை. ஆனால், ஏதோ இந்தக் குழு முடிவு செய்தால்தான் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்க முடியும் என்பதுபோல் இந்தப் பள்ளிகள் மேல் முறையீடு செய்வது எதனால்?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, குழுவே தொகையை அதிகரித்துத்தந்தால், 'வெள்ளைப் பணத்தின்’ அளவு அதிகமாகும். இரண்டாவது, ஓர் ஊரில் எந்தப் பள்ளிக்கு அதிகக் கட்டணமோ, அதுதான் நம்பர் 1 பள்ளி என்று மக்கள் நினைக்கின்றனர். ஆகவே, முதல் வரிசையில் இருந்தால்தான், பெற்றோர்களிடம் பேரம் பேசும் உரிமையைத் தக்கவைக்க முடியும்.

பிள்ளையைப் பள்ளியில் சேர்த்த பின்பு 'நான் குழு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் கட்டுவேன்’ என்று எந்தப் பெற்றோரேனும் அடம்பிடித்தால், அடுத்து வரும் காலங்களில் அவர்களுக்குக் கடும் மன உளைச்சல் உறுதி. பலர் இப்படி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக் கட்டணம் மட்டும் கட்டிய மாணவனுக்குப் பாடப்புத்தகம் தருவது இல்லை. சமச்சீர்க் கல்வி என்பதால், வெளிச் சந்தையில் புத்தகம் கிடைக்காது. அதனால் முதலில் இதில் கை வைக்கிறார்கள். வகுப்பறையில் தனியே அமரவைப்பது, வெளியில் நிற்கவைப்பது, வருகைப் பதிவேட்டில் பெயர் அழைக்கும்போது அந்த மாணவனின் பெயரை மட்டும் விட்டுவிடுவது, பேருந்தில் அழைத்துவராமல் வேண்டும் என்றே விட்டுவிட்டு வருவது... என்று ஒரு காவல் நிலையத்தைப் போல விதம்விதமாகத் தண்டிக்கிறார்கள்.

சிதம்பரத்தில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு இப்படி ஏழெட்டு மாணவர்களுக்குப் புத்தகங்கள் தரவில்லை. பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்து, அவர் சென்றுதான் புத்தகம் வாங்கித் தந்தார். பாடப்புத்தகம் வாங்கித்தர டி.எஸ்.பி. வர வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில், இந்தக் கட்டண நிர்ணயக் குழு என்பது, மேலோட்டமான பார்வையில் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவை போலத் தோன்றினாலும், நடைமுறையில் அவ்வாறு இல்லை. குழு, ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கிறது. ஆனால், பள்ளிக்கூட நிர்வாகிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனில், இந்தக் குழுக்களைப் பொருளற்ற வெறும் சடங்கு என்று கருத முடியுமா? நிச்சயம் முடியாது.

கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய உரிமை என்ற நிலையை மாற்றி, 'கல்வி என்பது பணம் கொடுத்துப் பெற வேண்டிய பண்டம்’ என்பதைச் சட்டபூர்வமாக நிலைநிறுத்திய வகையில் இந்தக் கட்டண நிர்ணயக் குழுக்களுக்கு ஆழமான பாத்திரம் உள்ளது. எந்தப் பள்ளிக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் என்று அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது, வெறுமனே தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் ஏற்பாடு மட்டுமல்ல; தன் குடிமக்களுக்குக் கல்வி தரும் அடிப்படை கடமையில் இருந்து அரசு விலகிக்கொள்கிறது என்பதுதான் இதில் முக்கியம்.

அரசு இடைவெளி விடும் இடங்களை தன்னியல்பாகத் தனியார் பள்ளிகள் நிரப்புகின்றன அல்லது தனியார் பள்ளிகள் நிரப்புவதற்காகவே அரசு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!

- பாடம் படிப்போம்...

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3

''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''

''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது. மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள். அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!'' என்கிறார் கல்வியாளர் மாடசாமி.