Published:Updated:

இரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்? #SafeDriving

இரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்? #SafeDriving
இரவுநேரப் பயணத்தில் ஒரு ‘பல்பு’ என்ன செய்யும்? #SafeDriving

கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் இயங்குகிற வாகனங்களே நெடுஞ்சாலைகளின் இரவு நேர அடையாளங்களாக இருக்கின்றன. இரவுக்கு இன்னொரு கண்ணாக இருப்பது விளக்குகள்தான். சாலையில் இருக்கிற எச்சரிக்கை விளக்குகள் தொடங்கி வாகனங்களின் விளக்குகள் வரை ஒரு இரவின் ஒட்டு மொத்த உயிர் நாடியே விளக்குகள்தான். எந்த விளக்கு பயணத்திற்கு உதவியாய் இருக்கிறதோ அதே விளக்குகள்தான் விபத்துகளுக்கும் காரணமாய் இருக்கிறது. கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கொரியர் வாகனங்கள் என இரவு நேர வாகனங்களின் போக்குவரத்து அபாயமான ஒன்றாக மாறிவிட்டது.

சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிற நாளில் காவல்துறையினர்  வாகனத் தணிக்கை செய்து வருகிற எல்லா வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவிலும் ஒரு கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். எதிர் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு முகப்பு விளக்குகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இப்போது வருகிற வாகனங்களின் முகப்பு வெளிச்சம் என்பது எதிர் வரும் வாகனங்களுக்குக் கண் கூச செய்கிற ஒன்றாகவே மாறிவிட்டது. விளக்குகளின் வெளிச்சத்தில் தடுமாறி போகிற ஒரு சில நொடிகளில்தான் பல விபத்துகள் நடந்து விடுகின்றன. எதிரில் வாகனங்கள் வரும் போது முகப்பு விளக்கை டிம் செய்யவேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை.

காய்கறிகள், அரிசி, சிமென்ட், என்று அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள்தான் எப்போதும் நெடுஞ்சாலைகளில் அரசன். ஆனால் சில லாரி ஓட்டுநர்களின் தவறுகளால் நெடுஞ்சாலைகளில் அரக்கன் என்கிற  பெயரைப் பெற்றுவிடுகிறது. லாரிகளின் போக்குவரத்துப் பற்றி நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களிடம் விசாரித்த போது " நமக்கு முன்னாடி ஒரு வண்டி போகுதுனு அந்த வண்டியில இருக்க டேஞ்சர் லைட்ட வச்சுத்தான் கணிக்க முடியும்,  நெறய லாரியைப் பாத்திங்கனா பின்னாடி இருக்க அந்த டேஞ்சர் லைட் இருக்காது, இருந்தாலும் எரியாது.  நல்ல வேகத்துல கார்ல போகும்போது திடீர்னு ஒரு லாரி 100 மீட்டர்  இடைவெளியில்தான் தெரியவரும், டேஞ்சர் லைட்  இல்லாததால லாரிக்குப் பக்கத்துல போனாதான் லாரி தெரிய வரும். உடனே சுதாரிச்சிட்டா தப்பிச்சோம், ரெண்டு செகண்ட் தாமதிச்சாலும் என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இண்டிகேட்டர் போடாம திடீர்னு லாரிய திருப்பிடுவாங்க, பின்னாடி வர வண்டிகளைப் பத்தி யோசிக்கவே மாட்டாங்க " என்கிறார். 

அதி வேகத்தில் பயணிக்கிற காருக்கு முன்னால் 100  மீட்டர் தொலைவில் திடீரென கிராபிக்ஸ் காட்சிகள் போல ஒவ்வொரு லாரியாகத் தோன்ற ஆரம்பிக்கிறது. காரணம் அநேக லாரிகளில் எச்சரிக்கை விளக்குகள் என்பது இல்லாமலே இருப்பதுதான். ரிஃப்ளக்டர் ஸ்டிக்கரும் இருப்பதில்லை. லாரியைக் கவனித்து சுதாரித்து காரைத் திரும்புவதற்குள் இரண்டொரு வினாடிகளில் விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. 

இது குறித்து லாரி ஓட்டுநர் ராஜாவிடம் கேட்ட போது " எனக்குச் சொந்த ஊர் நாமக்கல்.  நான் போனவாரம் மங்களூர்ல கெளம்புனேன் இப்போ மஹாராஷ்டிரா போயிட்டு இருக்கேன், வீட்டுக்குப் போக பதினஞ்சு நாளுக்கு மேல ஆகும், எல்லா ஊர்லயும் கார ஒரே மாதிரி தான் ஓட்டுறாங்க. நெடுஞ்சாலைல எந்தப் பக்கம் ஓவர்டேக் பண்ணுவாங்கனே தெரியாது, மரணக் கெணறுல வண்டி ஓட்டுற மாதிரிதான் ஓட்டிட்டு இருக்கேன். லாரியில் எச்சரிக்கை விளக்கு பழுதானால் எங்களால உடனே மாற்றி விட முடியாது. திரும்ப எப்போ திரும்பி ஊருக்கு போகிறோமோ அப்போதான் பழுதுபாக்க முடியும் என்கிறார். 

சில லாரிகள் பழுது காரணமாக சாலையின் ஓரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமல் லாரியைச் சுற்றி கல்லை மட்டும் வைத்து விடுவதால் வருகிற வாகனங்கள் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகிவிடுகின்றன. சில லாரிகள் எந்த முன்னெச்சரிக்கை  விளக்குகளும் இன்றி திடீரென சாலையில் லாரியைத் திருப்பிவிடுகிறார்கள். பின் தொடர்ந்து வரும் வாகனங்களின் வேகம், சூழ்நிலைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. அப்படியான நேரங்களில் நிகழ்கிற விபத்துகள் உயிர்களைப் பறித்து விடுவதுதான் வேதனை தருவதாய் இருக்கிறது. யுடியூபில் இருக்கிற நெடுஞ்சாலை விபத்து குறித்த காணொளிகளில் லாரிகளின் சாலை விதிமுறை மீறல்கள் அதிகமாகக் காணக்கிடைக்கிறது 

இரு சக்கர வாகனத்தில் தொடங்கி கன்டெய்னர்கள் வரை எச்சரிக்கை விளக்குகளின் பழுதைப் பெரிய பிரச்னையாக யாரும் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. எச்சரிக்கை விளக்குகள் என்பது ஒரு வாகனத்தின் மிக முக்கியமான ஒன்று. இண்டிகேட்டர், பிரேக் லைட், பார்க்கிங் லைட் என்பதெல்லாம் நெடுஞ்சாலை பயணத்திற்கு முக்கியமான விஷயங்கள். ஆனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகனங்களைக் கவனத்தில் கொண்டால் பத்தில் மூன்று வாகனங்கள் விளக்குகள் இல்லாமல்தான் பயணிக்கின்றன. வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன் எந்த விளக்குகள் எதற்காக இருக்கிறது என்கிற விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். சாலையில் வாகனம் ஓட்டுகிற பத்தில் ஒருவருக்கு வாகன விதிகள் பற்றிய விவரங்கள் தெரியாமலே இருக்கிறது என்பதுதான் உண்மை. அவர்களைப் பொறுத்தவரை இண்டிகேட்டர் என்பதெல்லாம்  ஒரு கலர் பல்ப் அவ்வளவுதான். 

பயணம் தொடங்குவதற்கு முன்பு எந்த சாலையில் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதன் நிறை குறைகளை முடிந்த அளவுக்குக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இந்தியச் சாலைகளில் சாலை சந்திப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றன. கிராம மக்கள்  சைக்கிளில் சாலையைக் கடப்பது என்பது புறவழிச் சாலைகளில் தவிர்க்க முடியாத ஒன்று. சாலைச் சந்திப்புகள் இருக்கிற பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில் புதியசாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவாகச் செல்வதே சிறந்தது. நெடுஞ்சாலைப் பயணங்களைப் பொறுத்தவரை கவனம் மட்டுமே மிக முக்கியமான விஷயம்.  இயன்றவரை  இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள். 

ஒரு பல்பில் என்ன இருக்கிறதென எளிதில் கடந்து விடலாம், இரவு நேரப் பயணங்களைப் பொறுத்தவரை பல்பில்தான் எல்லாமே இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு