Published:Updated:

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

Published:Updated:

'உங்க வீட்ல இருந்து அரிசி கொண்டு வா... எங்க வீட்ல இருந்து உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி, ஊதித் தின்போம்’ என்பார்களே... அது இங்கு அப்படியே பொருந்தும். 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership) என்ற முறையில், மத்திய அரசு நாடு முழுவதும் 2,500 புதிய பள்ளிகளை அமைக்கப்போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு 358 பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் வேகவேகமாக நடைபெற்றுவரும் நிலையில், உண்மையிலேயே இதன் மூலம் ஆதாயம் அடையப்போவது யார்?

 'நமது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. மக்கள், தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்து மக்களும் செலுத்தக்கூடியதாக இல்லை. இந்தப் பிரச்னையைச் சரிசெய்து, தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளவைத்தான் இந்த 'பி.பி.பி பள்ளிகள்’ என்கிறது இந்தத் திட்டம் குறித்த மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கை. ஆனால், உண்மை நிலையோ வேறாக உள்ளது.

இந்தத் திட்டத்துக்கான அதிகபட்ச நிதியைச் செலவிடப்போவது அரசு. ஆனால், அதன் பலனை அறுவடை செய்யப்போவது தனியார் நிறுவனங்கள். 'அரசு-தனியார்-கூட்டு’ என்ற பெயர், வெளித்தோற்றத்தில் ஜனநாயகத்தன்மை உடையது போல தோன்றினாலும், 'லாபம் வந்தால் தனியாருக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு’ என்பதுதான் இதன் உண்மையான பொருள். முக்கியமாக, முழுமையான தனியார்மயம் என்றால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது என்பதால், இத்தகைய குறுக்குவழியைக் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே பி.பி.பி முறைப்படி இந்தியாவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள், ரயில், விமானம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல்... என எந்தத் துறையும் மீதி இல்லை. நம் திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோகமும், சென்னை - ஆலந்தூர் நகராட்சியின் கழிவு அகற்றலும்கூட பி.பி.பி முறையில்தான் செயல்படுகின்றன. இங்கு எல்லாம் தனியார் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தின் ருசியை அனுபவித்து வருகின்றன. அதனால்தான் கல்வியில் எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் என்று ஒரே பாய்ச்சலாகப் பாய்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளைக் கேட்டால், ரத்தம் கொதிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5

மைக்கப்படப்போகும் புதிய பள்ளிகளுக்கு 'ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்று பெயர். சி.பி.எஸ்.இ. முறைப்படி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல இவை செயல்படும். நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறைப்படி ஒருவர் பள்ளி தொடங்க விரும்பினால், புதிதாக ஆரம்பிக்கலாம் அல்லது தற்போது உள்ள பள்ளியையே இதன்படி மாற்றிக்கொள்ளலாம். ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயருக்கு முன்பாக வேறு பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டுமான செலவின் 25 சதவிகிதத்தை ஆண்டுதோறும் அரசு வழங்கும்.

மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை 40 சதவிகிதம் இடங்களை அரசு நிரப்பும். 60 சதவிகிதம் இடங்களை தனியார் நிர்வாகம் நிரப்பிக்கொள்ளும். அரசு நிரப்பும் இடங்களைப் பொறுத்தவரை, ஒரு வகுப்புக்கு 140 மாணவர்கள் வீதம் ஏழு வகுப்புகளுக்கு மொத்தம் 980 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கான கல்வித்தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டியது இல்லையே தவிர, அது இலவசம் இல்லை. அந்தத் தொகையை அரசு, பள்ளிக்கு வழங்கிவிடும். அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல... மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு எவ்வளவு ரூபாய் செலவிடப்படுகிறதோ அதைக் கணக்கிட்டு அதே அளவு வழங்கப்படும். கே.வி. பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 2,500 ரூபாய் செலவிடப்படுகிறது. எனில், ராஷ்ட்ரிய ஆதர்ஸ் பள்ளியில் படிக்கும் 980 மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 25 லட்சம் ரூபாய். இந்தப் பணமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு உரியது, மொத்தமாக முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும்.

தனியார் நிர்வாகமே நிரப்பிக்கொள்ள வேண்டிய 60 சதவிகித சீட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். நிபந்தனைக்கு உட்பட்ட சில இடங்களில் இந்த 60 சதவிகிதம் உயர்த்தித் தரப்படும். தமிழ் மீடியம் எல்லாம் கிடையாது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மட்டும்தான் இருக்கும். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2,500-க்குள் இருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 350 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்பட உள்ள இந்தத் திட்டம், அதன் பிறகு இரு தரப்பும் விரும்பினால் நீட்டிக்கப்படும்.

ஏற்கெனவே பள்ளிக்கூடம் நடத்தி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் இணைந்துகொள்ளலாம். முதலில் தொடங்கும் மூன்று பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், அதன் பிறகு தொடங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்சம் ரூபாயும் வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். இந்த வைப்பு நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகத் திருப்பி அளிக்கப்படும். மாநில அரசைப் பொறுத்தவரை பள்ளிக்குத் தேவைப்படும் நிலத்தை மானியமாகவோ, நீண்ட காலக் குத்தகையாகவோ வழங்க முயற்சிக்க வேண்டும் (குறைந்தபட்சம் மூன்று ஏக்கர்). 10 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கான நிதி உதவியை மாநில அரசு செய்ய வேண்டும் (எத்தனை ஆண்டுகள் வரை என்ற எந்த வரையறையும் இல்லை!). மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம், மதிய உணவு, இலவச பஸ்பாஸ் போன்றவற்றை மாநில அரசு தர வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு வரை இந்தத் திட்டத்துக்கான உத்தேச செலவு மதிப்பு 21,225 கோடி ரூபாய். இதில் அரசின் பங்களிப்பு 17,650 கோடி ரூபாய். தனியார் பங்களிப்பு 3,575 கோடி ரூபாய். அதாவது அரசுடையது ஐந்து மடங்கு; தனியாருடையது ஒரு மடங்கு!

இனிவரும் காலத்தில் நாடு முழுக்க உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் சாத்தியம் இப்போதே தென்படுகிறது. பி.பி.பி திட்ட ஆய்வறிக்கை, 2030-ம் ஆண்டு வரையிலும் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் சாத்தியத்தை விளக்குகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் திட்டம் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்கிறது அறிக்கை. அப்படி பள்ளிகளை அதிகரிக்கும்போது போதுமான எண்ணிக்கையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாதது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். இதனால் நாடு முழுவதும் பி.பி.பி முறையில் 50 ஆசிரியர் பயிற்சி மையங்களை உருவாக்கி, அதற்கான செலவின்

60 சதவிகிதத்தை அரசு வழங்கும். 40 சதவிகிதம் தனியாரால் செலவிடப்படும். இந்த 40 சதவிகிதத் தொகையையும் அடுத்த 15 ஆண்டுகளில் அரசு திரும்பத் தந்துவிடும். இதுவும் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. வெறுமனே தனியார் கல்வி நிறுவனம் என்றாலாவது முழு முதலீடும் அவர்களுடையதாக இருக்கும். ஆனால், இந்த பி.பி.பி முறையிலோ, முதலீடுகூட தேவை இல்லை. அதையும் அரசே வழங்கிவிடுகிறது. மிகவும் பச்சையாக அரசின் வளங்களை, அரசின் செலவில் 'மக்களின் பெயரால்’ தனியாருக்குத் தாரை வார்க்கிறார்கள். ஆனால், இதே இந்தியாவில்தான் அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்பட்டுள்ளன. வகுப்பறைகள் இல்லை; சுகாதாரமான கழிப்பறைகள் இல்லை; போதுமான ஆசிரியர்கள் இல்லை. இவற்றை செய்துதர வக்கற்ற அரசு, மக்கள் பணத்தை எடுத்து தனியாருக்கு பாதபூஜை செய்கிறது.

இவை அனைத்தும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கின்றன என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. பி.பி.பி முறையை அமல்படுத்துவது குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்தது எல்லாம் ஃபிக்கி, சி.ஐ.ஐ., விப்ரோ போன்ற கல்விக்கு அப்பாற்பட்ட முதலாளிகள்தான். தற்போது பி.பி.பி முறைப்படி பள்ளி தொடங்க விண்ணப்பித்து இருப்பதில் அதிகபட்சம் தனியார் பெரு நிறுவனங்களே!

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5

இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு - (Corporate Social Responsibility-CSR) என்பது, இன்று முக்கியமாகப் பேசப்படுகிறது. பெரு நிறுவனங்கள் தங்களது வருமானத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகநலப் பணிகளுக்காகச் செலவிடுவதை வலியுறுத்துவதுதான் சி.எஸ்.ஆர். உதாரணத்துக்கு, கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று, அங்குள்ள பள்ளிகளுக்கு தனது சி.எஸ்.ஆர். நிதியத்தில் இருந்து நிதி உதவி செய்கிறது. இதனால் அந்த நிறுவனத்துக்கு நற்பெயர் கிடைக்கிறது. ஆனால், இதன் மூலம் சிப்காட் வளாகத்தில் அந்த நிறுவனத்தால் சீரழிக்கப்பட்ட மண்வளமும் நீர்வளமும் மறக்கடிக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் சூழல் சீர்கேட்டு சர்ச்சைகளுக்குப் பெயர்போன ஒரு நிறுவனம், மதுரை கண்மாய் ஒன்றைத் தூர்வார நிதி அளித்துள்ளது. இப்படி சி.எஸ்.ஆர் என்பது, பெரு நிறுவனங்கள் தங்களின் தவறுகளை மறைத்துக்கொள்ளும் புதிய முகமூடியாக உருவெடுத்துள்ளது. தவறே செய்யவில்லை என்றாலும், தனது வரம்பற்ற லாபவெறி மக்களிடம் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களே முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர். அடாவடி மன்னன் ஆண்டுக்கு ஒரு முறை உப்பரிகையில் நின்று அள்ளி வீசும் சில்லறைக் காசுகள் என்றும் கூறலாம்.

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 499-தான். ஆனால், இந்த பி.பி.பி முறை, ஒரே ஆண்டில் புதிதாக 358 சி.பி.எஸ்.இ. பள்ளிகளை உருவாக்கி உள்ளது. எனில் மொத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை 857. அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.பி.பி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திரும்பிய திசை எங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமே நிறைந்திருக்கும். ஏற்கெனவே சமச்சீர் கல்விமுறை வந்த பிறகு அரசுப் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளுக்கும் இருந்த வித்தியாசம் ஒழிக்கப்பட்டுவிட்டது. 'நாங்கல்லாம் வேற’ என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் எப்பாடுபட்டாவது சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிவிட மெட்ரிக் பள்ளிகள் மெனக்கெடுகின்றன. அவர்களுக்கு இது ஓர் நல்வாய்ப்பு. அதுவும் அரசாங்கமே நிதியை அள்ளித் தருகிறது என்ற நிலையில் நான், நீ என்று போட்டிப்போடுகின்றனர்!

- பாடம் படிப்போம்...

வாஜ்பாயில் தொடங்கி சிங் வரை...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பல்வேறு துறைகளிலும் பி.பி.பி. முறையைக் கொண்டுவருவதற்காக ஒரு குழுவே அமைக்கப்பட்டது. பிறகு அந்தக் குழு திட்டக் குழுவுக்கு மாற்றப்பட்டது. 2004-ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதும் அதே குழு நீடித்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பரில் 'கல்வியில் அனைத்து மட்டங்களிலும் அரசு - தனியார்- கூட்டு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ மன்மோகன் சிங் அறிவித்து, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தங்குதடையில்லாமல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது!