Published:Updated:

நாசா கப்ஸா முதல் கலவர போட்டோக்கள் வரை... ஃபேக் செய்திகளைக் கண்டறிவது எப்படி?

நாசா கப்ஸா முதல் கலவர போட்டோக்கள் வரை... ஃபேக் செய்திகளைக் கண்டறிவது எப்படி?
நாசா கப்ஸா முதல் கலவர போட்டோக்கள் வரை... ஃபேக் செய்திகளைக் கண்டறிவது எப்படி?

டைசியாக நீங்கள் வாட்ஸ்அப்பில் ஃபார்வர்டு செய்த செய்தி என்ன என உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி நினைவிருந்தால் அதைப்பற்றிய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லுங்களேன்.

1. அந்த செய்தி 100 % உண்மையானது என நீங்கள் அறிவீர்களா?

2. அந்த செய்தி மிகவும் நம்பகமான நபர்களிடம் இருந்துதான் உங்களுக்கு வந்ததா?

3. அந்த செய்தியை நீங்கள் ஃபார்வர்டு செய்த நபர், அதனால் பயன்பெறுவாரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் பதில் 'ஆம்' என்றால் பிரச்னை இல்லை. கட்டுரையைத் தொடருங்கள். 'இல்லை' என்பவர்களுக்கு மட்டும் இன்னும் சில கேள்விகள்.

1. அந்த செய்தி தனிநபர்கள் யாரையாவது இழிவாக சித்தரிக்கிறதா?

2. சாதி / மதம் / இனம் / மொழி / அரசியல் கட்சிகள் போன்றவற்றை கேலி செய்யும், இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளனவா?

3. இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செய்திகள் அதில் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் பதில் 'ஆம்' என்றால், நிச்சயம் நீங்கள் செய்திருப்பது ஒரு குற்றம். "இல்லை' என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் ஃபார்வர்டு செய்த மெசேஜ் வீணான ஒன்று. பிறகு ஏன் இதை செய்தீர்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம். ஒரு நாளில் உங்களுக்கு வரும் ஏகப்பட்ட மெசேஜ்களில், ஏதேனும் சிலவற்றை மட்டும் ஃபார்வர்டு செய்ததற்காகவா இத்தனை கேள்விகள் என்கிறீர்களா? உங்களுக்கு வேண்டுமானால் வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ வரும் ஒரு செய்தி சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதனைப் படிப்பவர்கள் அனைவருமே அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்பதில்தான் இங்கே பிரச்னையே உருவாகிறது. வெறும் பொழுதுபோக்குக்காகவோ அல்லது ஏதேனும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ திட்டமிட்டு பரப்பப்படும் போலியான செய்திகளால் சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அமெரிக்க தேர்தல் தொடங்கி, இந்திய கலவரங்கள் வரை பல முக்கியமான சம்பவங்களுக்குப் பின்னால் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் செய்த வேலைகள் இருக்கின்றன. இதற்கு உதாரணம், சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது பரப்பப்பட்ட புகைப்படங்கள். சினிமா காட்சிகள், பழைய வன்முறை காட்சிகள் என பல்வேறு விஷயங்களை ஏதோ தற்போது நடந்தது போலவே அங்கிருப்பவர்கள் பரப்ப, உடனே கொல்கத்தா போலிஸ் அவற்றைப் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தியது. 

ஜன கன மண பாடல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது, அனுமனின் கதை கண்டுபிடிக்கப்பட்டது என பழையச் செய்திகளை இன்னும் பரப்பிக்கொண்டிருப்பவர்களை விடவும் ஆபத்தானது இதுபோன்ற திட்டமிட்டு பரப்பப்படும் புகைப்படங்கள். வெறும் புகைப்படங்கள் மட்டுமல்ல; தேசியத் தலைவர்கள் பற்றிய அவதூறுகள், கட்சிகள் பற்றிய பொய்யான செய்திகள் என பல்வேறு வழிகளில் ஏதேனும் சுயநலத்துடன்தான் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அது தொடர்பான விழிப்புணர்வே இல்லாமல்தான் அவற்றை மற்றவர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறோம். ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற போலி செய்திகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் கூட தனிநபர்களின் பங்களிப்பு இன்றி அவற்றை செய்தவது அசாத்தியமான ஒன்றாகும். அவையனைத்தையும் கூட விட்டுவிடுவோம். நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலமாகவே பெரும்பாலான செய்திகளின் உண்மை தன்மையை உறுதி செய்துவிட முடியும்.

1. ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங்:

இணையத்தில் ஒரு புகைப்படத்தின் உண்மை தன்மையை சோதிக்க உதவும் வசதிகளில் ஒன்று இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங். கூகுள் இமேஜ், டைனிஐ போன்ற சேவைகள் மூலமாக இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங்கை செய்ய முடியும். எப்படி கூகுள் இமேஜ் சென்று, நமக்கு தேவையான பட விவரங்களைக் கொடுத்து தேடுகிறோமோ அதைப்போலவே ஒரு இமேஜை கொடுத்து அதற்கு நிகரான படங்களைத் தேடுவதுதான் இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங். கூகுள் க்ரோமில் ஏதேனும் ஒரு படத்தின் மீது ரைட் க்ளிக் செய்து, "Search Google For this Image' என்பதைக் கொடுத்தாலே இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சிங் வேலை செய்யும்.

இல்லையெனில் கூகுள் இமேஜ் பகுதிக்கு சென்று, உங்களுடைய இமேஜை அப்லோட் செய்தும் படங்களைத் தேடலாம்.

சரி.... இதற்கும், ஃபேக் நியூஸுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? போலியாக போட்டோஷாப் செய்து அனுப்பப்படும் பல இமேஜ்களை இந்த ரிவர்ஸ் சர்ச் மூலம் நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். சோதிக்க வேண்டிய புகைப்படங்களை இதில் அப்லோட் செய்தாலே, அது தொடர்பான இமேஜ்களை நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் நீங்கள் இணையத்தில் பதிவேற்றும் படங்கள், வேறு ஏதேனும் தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

2. நம்பகமான செய்தி இணையதளங்கள்:

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் நம்பகமான செய்தி ஊடகங்களில் மட்டுமே செய்திகளை தெரிந்துகொண்ட காலம் எல்லாம் தற்போது மலையேறிவிட்டது. இணையதளங்கள், சமூக வலைதளங்கள், ஆப்ஸ் என எத்தனையோ வழிகளில் செய்திகள் நம்மை வந்தடைகின்றன. எனவே சர்ச்சைக்குரிய செய்திகள் வரும்போது அவற்றை நம்பகமான ஊடகங்கள் மூலம் உறுதி செய்துகொள்வதே சிறந்தது. எனவே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் என எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.

3. ஃபேக் நியூஸ்களைக் கண்டறியும் சமூக வலைதளங்கள்:

மேற்கு வங்க மாநிலத்தில் வீண் வதந்திகள் பரவிய போது, கொல்கத்தா போலீஸின் ட்விட்டர் அக்கவுன்ட் மூலமாகவே நிறைய வதந்திகள் தடுக்கப்பட்டது. இதுபோல நிறைய ட்விட்டர் ஹேண்டில்கள் போலி செய்திகள் பற்றிய உண்மைகளை சோதித்து சொல்கின்றன.

SmHoaxslayer, Altnews, Boom Factcheck போன்றவற்றின் ட்விட்டர் கணக்குகளை நீங்கள் பின்தொடருவதன் மூலமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இவை அனைத்தும் உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறைய இணையதளங்கள் போலி செய்திகளைத் தடுப்பதற்காகவே இயங்கிவருகின்றன. உதாரணத்திற்கு தமிழில் இந்த ஃபேஸ்புக் பக்கத்தைக் குறிப்பிடலாம். 

4. ஃபார்வர்ட் செய்யவே வேண்டாம்!

தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி தனிமனிதர்களின் பங்களிப்பு தேவைப்படும் இடம் இதுதான். நீங்கள் சமூக வலைதளங்களில் பகிரும் செய்திகள் வதந்திகளாகவோ அல்லது போலி செய்திகளாகவோ இருக்கும் பட்சத்தில் அதனை ஏன் தேவையில்லாமல் பகிர வேண்டும்? மேலும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கு ஏதோ துப்பறியும் நிபுணர் அளவிற்கெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. அவற்றின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை நமக்குள் எழுப்பினாலே போதும். விடை தெரிந்துவிடும்.

'உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகையே சுற்றிவந்துவிடும்' என்பார்கள். இந்த வேக வித்தியாசம்தான் போலிகளுக்கு சாதகமாகிவிடுகிறது.