Published:Updated:

கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

பாரதி தம்பி, படங்கள்: எம்.விஜயகுமார், ரமேஷ்

கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

பாரதி தம்பி, படங்கள்: எம்.விஜயகுமார், ரமேஷ்

Published:Updated:
கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

''அரசாங்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பட்டப்பேர் வெச்சிருப்பாங்க. ஆனா, தனியார் பள்ளியில் எந்த ஆசிரியருக்காவது பட்டப்பேர் இருக்கா?’ - எழுத்தாளர் இமையம், அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிக் கேட்டார்.

உண்மைதான்! எந்தத் தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பட்டப்பெயர் பெரும்பாலும் இல்லை. ஏனெனில், ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைத்து, குறுகுறுப்புடன் பேசி மகிழும் அளவுக்கு மாணவனின் மனதில் குதூகலம் இல்லை. தனியார் பள்ளி மாணவர்களின் மனம் முழுக்க பாடம், படிப்பு, டியூஷன், தேர்வு, நுழைவுத்தேர்வு, கட்-ஆஃப் மதிப்பெண்... இவைதான் நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு நிறைய பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்ததன் மூலம் புகழ்பெற்ற தர்மபுரி தனியார் பள்ளியில்  படிக்கும் 11-ம் வகுப்பு  மாணவி, கடந்த வாரம் பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு  முயற்சித்துள்ளாள். அந்த அளவுக்கு மன அழுத்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலை 6 மணிக்கு பள்ளிப் பேருந்தில் ஏறி அமர்ந்து, பகல் எல்லாம் பள்ளியில் படித்து, மாலையில் ஒவ்வொரு பாடமாக டியூஷன் சென்று, பிறகு வீட்டுப்பாடங்கள் முடித்து, இரவின் இருளில் மயங்கிச் சரிந்து, அடுத்த நாள் அதிகாலையில் மறுபடியும் எழுந்து பள்ளிக்கு ஓடும் ஒரு மாணவனுக்கு... அந்த ஆசிரியரின் உண்மையான பெயராவது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்புறம் எங்கிருந்து அவன் பட்டப்பெயர் வைப்பது?

உண்மையில், பட்டப்பெயர் வைப்பது என்பது வெறுப்பு அல்ல; அது ஒரு வகையான அன்பு. வகுப்பறையில் தன் ஆசிரியரின் உடல் அசைவுகளைக் கவனித்து ஒரு மாணவன் அவருக்கு பெயர் வைக்கிறான் என்றால், அந்த வகுப்பறை அவ்வளவு நெகிழ்ச்சித்தன்மையுடன் இருக்கிறது என்று பொருள். இறுக்கிக் கட்டப்பட்ட முறுக்குக்கம்பியைப் போல் அல்லாமல், தாழப் பறக்கும் தாவரத்தின் கொடிபோல ஆசிரியர் - மாணவர் உறவு இருந்தால்தான் பட்டப்பெயர் எல்லாம் சாத்தியம். நமது முந்தைய தலைமுறை, இந்த மகிழ்ச்சியின் முழுமையை அனுபவித்தது. அவர்களிடம் கேட்டால், தங்கள் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அவர்கள் வைத்த பட்டப்பெயர்களை நினைவுகூர்வார்கள்.

ஆனால், இன்றைய தனியார் பள்ளியில் மாணவர்களும் பாவம்; ஆசிரியர்களும் பாவம். மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரு தொழிற்சாலை பணிக்கு ஷிஃப்ட்டில் வருவதைப் போலத்தான் வருகின்றனர். பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு எழுதி அரசு வேலைக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். இதனால் ஒரே ஆண்டில் ஒரு பாடத்துக்கு இரண்டு, மூன்று ஆசிரியர்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எந்தவித பிணைப்பும் அற்றதாக, ஒரு பேருந்து பயணத்தில் நடத்துநருக்கும் பயணிகளுக்குமான உறவைப்போல மாறிவிட்டது. நிறுத்தம் வந்ததும் இறங்கிச் செல்ல வேண்டியதுதான். தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினால், அவர்களின் உலகத்தில் இத்தகைய மென்மையான உணர்வுகளுக்கு சற்றும் இடம் இல்லை என்பது புரிந்தது.

கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

அந்தப் பையனின் பெயர் அரவிந்த் என்று வைத்துகொள்ளுங்கள். விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலிக்குச் சென்று 9-ம் வகுப்பு படிக்கிறான். தினமும் காலை 6.30-க்கு பள்ளிப் பேருந்து வந்துவிடும். அதற்கு முன்பாக 5.30-க்கு எழுந்து குளித்து, சாப்பிட்டு, தயாராக இருக்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்தே இப்படித்தான் என்பதால், இந்த அதிகாலை வாழ்க்கைக்கு அவன் பழகிவிட்டான். ''காலையில 6 மணிக்கு எப்படிச் சாப்பிட முடியும்?'' என்றால், ''பழகிடுச்சு'' என்கிறான் உணர்ச்சி இல்லாமல். இத்தகைய மாணவர்கள், வீட்டில் இரண்டு இட்லி, பள்ளிக்குச் சென்று பிரேயருக்கு முன்பாக இரண்டு இட்லி என்று காலை உணவை இரு தவணைகளாகச் சாப்பிடுகின்றனர்.

பல வீடுகளில், தூக்கத்தில் இருந்து எழும்பாத குழந்தைகளை அடித்து எழுப்பி அல்லது அப்படியே தூக்கிச் சென்று தண்ணீரில் போட்டு... துயில் எழுப்புகின்றனர். 'இன்னைக்கு ஸ்கூல் வேண்டாம்’ என்று எழ மறுத்தால், சுளீர் அடியும் உண்டு. பெற்றோர்களைப் பொறுத்தவரை 'வேன் வந்திடும், ஆட்டோ வந்திடும்’ என்ற கவலை, ஓர் அபாய அலாரம்போல அவர்களின் மண்டை முழுவதும் டிக்டிக் என ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஒருவேளை வேன் சென்றுவிட்டால், இவர்கள்தான் பள்ளியில் கொண்டுவிட வேண்டியிருக்கும். அது அன்றைய நாளின் மொத்த நிகழ்ச்சிநிரலையும் குலைத்துவிடும். இதனால் தூங்கும் பிள்ளைகளை அடித்து, எழுப்பி, குளிப்பாட்டி சாப்பிடவைக்கின்றனர்.

பிள்ளையை அடிப்பதை முன்னிட்டு பல வீடுகளில் கணவனுக்கும் மனைவிக்கும் தினந்தோறும் சண்டை வருகிறது. அடித்து எழுப்பினால்தான் பையன் எழுவான் என்பது அம்மாவின் கணக்கு. அப்பாவோ, 'பச்சப்புள்ளையை அடிச்சா அதுக்கு என்ன தெரியும்?’ என்கிறார். அப்படிச் சொல்லிவிட்டு கால் ஆட்டிக்கொண்டு அவர் காபி குடிப்பார். சமையலும் செய்துகொண்டு, பிள்ளையையும் தயார்செய்யும் அம்மாக்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? உண்மையில் அவர்களின் கோபம், கொஞ்சம்கூட வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளாத கணவர்களின் மீதுதான். கணவனை அடிக்க முடியாத இயலாமையை, அவர்கள் குழந்தை மீது காட்டுகின்றனர். இப்படி குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு வீட்டின் காலை நேரப் பொழுது பரபரப்பானதாக, பதற்றம் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இந்தக் களேபரத்தில் அந்தக் குழந்தை எப்படிச் சாப்பிடும்? பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முதலில் ஒரு டம்ளர் நிறைய ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் அல்லது பால். வாயைத் துடைத்த உடனேயே டிபனைத் திணிக்கின்றனர். பார்க்கப் பாவமாக இருக்கிறது. உங்களால் ஒரு டம்ளர் நிறைய காபி குடித்துவிட்டு உடனே சாப்பிட முடியுமா? குழந்தையால் மட்டும் எப்படி முடியும்? அதன் வயிறு என்ன இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கா... முடிந்தவரைக்கும் நிரப்பிக்கொள்ள? தங்கள் கண் எதிரே பிள்ளை சாப்பிட்டால், பெற்றோர்களுக்கு நிம்மதி. குழந்தைகளுக்கோ, அது பெரும் அவதி. இதனால் குழந்தைகள், அந்தக் காலை நேரத்தில் உடனே சமைக்க முடியாத ஓர் உணவின் பெயரைச் சொல்லி 'அதுதான் வேணும்’ என்று அடம்பிடிக்கின்றனர். 'நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கிறானே’ என்று அடுத்த நாள் செய்தால், அவன் பூரி கேட்பான். மொத்தத்தில் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து, பள்ளிக்கு அனுப்புவது என்பது குடும்பத்தின் நிம்மதியைக் காவு வாங்கிவிடுகிறது.

இளம் வயதில் இருந்து இத்தனை டார்ச்சர் செய்வதால், குழந்தைகளுக்குச் சாப்பிடவே பிடிப்பது இல்லை. எத்தனை ருசியானதாக, புதிய வகை உணவாக இருந்தாலும் நாலு வாய் சாப்பிட்டுவிட்டு வைத்துவிடுகின்றனர். உடனே பெற்றோர்கள் பதற்றம் அடைந்து பிள்ளைக்குப் பிடித்ததாகச் செய்துகொடுக்க வேண்டும் என்று ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களுக்குத் தாவுகிறார்கள். அது அவர்களின் உடம்பை மேலும் சிக்கலுக்குள் தள்ளுகிறது. இதில் இன்னொரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. பெற்றோர்கள் வேண்டுமானால் 'ஸ்கூல் வேன் வந்துவிடும்’ என்ற பதற்றத்தில் பிள்ளைகளுக்கு உணவைத் திணிக்கலாம். ஆனால், குழந்தை உடலின் செரிமான உறுப்புகளுக்கு இவை எதுவும் தெரியாது. அவை இந்தத் தாறுமாறான உணவுமுறையை நினைத்து அஞ்சி நடுங்குகின்றன.

ஏராளமான பள்ளி மாணவர்கள், மலச் சிக்கலால் கடும் அவதிப்படுகின்றனர். பலர் வீட்டில் கழிப்பறை செல்லாமலேயே கிளம்பி வந்துவிடுகின்றனர். பள்ளிகளில் போதுமான வசதியும் இருப்பது இல்லை. வசதி இருந்தாலுமே வகுப்பறையில் எழுந்து நின்று, 'டீச்சர் பாத்ரூம்’ என்று கை தூக்குவதில் மாணவர்களுக்கு ஏற்படும் மனத்தயக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி, தொடர்ச்சியாகச் செய்தால் அவர்கள் வகுப்பறையில் கேலி செய்யப்படுவார்கள். மாணவிகளின் நிலை இன்னும் பரிதாபம். இதனால் தண்ணீர் குடிப்பதையே அவர்கள் அடியோடு குறைத்துக்கொள்கின்றனர். 'தண்ணீர் குடித்தால்தானே சிறுநீர் வருகிறது?’ என்று தவிர்க்கின்றனர். அது மேலும் கடுமையான உடல் சிக்கல்களுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த மொத்த செயல்பாடுகளும் உணவு என்ற பசி தீர்க்கும் பண்டத்தின் மீது, மாணவர்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிக்கிறது. பல மாணவர்கள், பள்ளிக்குக் கொண்டுசெல்லும் உணவைக் குப்பையில் கொட்டுகின்றனர்.

கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலையோ வேறாக இருக்கிறது. அங்கு பிரேயர்களில் மாணவர்கள்... குறிப்பாக மாணவிகள் அடிக்கடி மயக்கம் அடித்து விழுவதைக் காணலாம். காரணம், பசி. வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இருக்காது. அப்பா-அம்மா அதிகாலையில் எழுந்து கூலி வேலைக்குச் சென்றுவிடுவார்கள். படிக்கும் பெண் பிள்ளைகள், எழுந்து வீட்டுவேலைகள் செய்து, தானே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும். தம்பி, தங்கச்சிகள் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து சமைத்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிளம்பி ஓடி வர வேண்டும். பள்ளி, பெரும்பாலும் அருகில் இருக்காது. சைக்கிள் மிதித்தோ, பேருந்து ஏறியோ போக வேண்டியிருக்கும். பஸ் பாஸ் கொடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் வரும் என்பதால் அவசர, அவசரமாக ஓடி வந்தாக வேண்டும். இதனால் அவர்கள் பசித்த வயிற்றுடன் படிக்க வருகின்றனர். அரசின் இலவச மதிய உணவுத் திட்டம் அவர்களின் ஒரு வேளை பசியைத் தணிக்கிறது.

அரசுப் பள்ளியின் பிரேயரில் ஒரு மாணவி மயங்கி விழுந்தால், உடனடியாக உணவு கொண்டுவந்துள்ள மற்றவர்கள் அதைப் பகிர்ந்து அளிக்கின்றனர். ஆனால், தன்னால் சாப்பிட முடியாத உணவை குப்பையில் கொட்டுகிறான் ஒரு தனியார் பள்ளி மாணவன். அங்கு பகிர்ந்து உண்ணும் பண்பு அறவே இல்லாமல் போகிறது. அப்படிப் பகிர அவசியம் இல்லாத சூழலில்தான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புப் பாடங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. காலை 7 மணிக்கு பள்ளியின் வேன் வரும். மாணவர்கள் காலை உணவுடன் ஏறிக்கொள்கின்றனர். மறுபடியும் 11 மணிபோல பள்ளி வேன் வருகிறது. ஒவ்வொரு மாணவரின் வீட்டில் இருந்தும் மதிய உணவைச் சேகரித்துக்கொண்டு செல்கிறது. ஒரு வதைமுகாமில் அடைத்து உணவுக் கொடுப்பதைப்போல கொடுக்கிறார்கள். இவர்களுக்கு சக மனிதர்களின் மீது எப்படி அன்பு பிறக்கும்?

- பாடம் படிப்போம்...

கற்க கசடற... விற்க அதற்குத் தக! - 7

பயமுறுத்தும் பிரேயர்!

டலூர் தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சொன்னது இது: ''ஸ்கூல்ல இருக்கிறதுலயே பிரேயர்தான் ரொம்ப டார்ச்சர். எப்படியும் அரை மணி நேரம் நடக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள், செய்தி, பிறந்த நாள் வாழ்த்து, பொது அறிவு செய்திகள்னு... வரிசையா சொல்வாங்க. டீச்சர்ஸ்லாம் நிழல்ல நின்னுக்குவாங்க. ஆனா நாங்க, அடிக்கிற வெயில்ல திறந்தவெளியில் நிக்கணும். வியர்த்துக் கொட்டி சட்டை நனைஞ்சிடும். தினசரி யாராவது ரெண்டு பேர் மயக்கம் போட்டு விழுவாங்க. இவங்க அப்பதான் ஏதாவது சீரியஸா கருத்து சொல்லிக்கிட்டு இருப்பாங்க. எங்களுக்கு அவங்க சொல்றது ஒண்ணும் புரியாது. என்னைக்காச்சும் மழை வந்து பிரேயர் இல்லைனு சொன்னா, செம ஜாலியா இருக்கும்'' என்று சொல்லும்போது, ஒரு மழை நாளுக்கான ஏக்கத்தை அந்த மாணவனின் கண்களில் கண்டேன்.

வெவ்வேறு ஊர்களின் தனியார் பள்ளிகளில் பயிலும் வேறு பல மாணவர்களும், பிரேயரின் மீதான அச்சத்தை உறுதிப்படுத்துகின்றனர். வெயில் தீய்க்கும் கோடையில், தகிக்கும் முன்மதிய வெயிலில் நிற்பது எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்துகொள்ள, குழந்தை மனம்தான் வேண்டும் என்பது இல்லை. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளிகள் பரவாயில்லை. அங்கு இப்போது தினசரி பிரேயர் கிடையாது; வாரம் ஒருமுறைதான்!