என்னமோ விவசாய நாடு விவசாய நாடுன்னு சொல்றாகளே... உழுது போறவன்தான் முன்னப் போறவன்... மத்தவகல்லாம் அவன் முதுக மோந்து பாத்துக்கிட்டே பின்னப் போறவுகதான்னு பெருமை பேசறாகளே... நாங்க சேத்துல கால் வைக்கலேன்னா, நீங்க சோத்துல கை வைக்க மாட்டீகன்னு கண்டமேனிக்குக் கவி கட்டறாகளே... புட்டுப் பாத்தாவுல்ல தெரியும், அத்திப் பழத்துல புழு எத்தன, பூச்சி எத்தனைன்னு.

கருமாயப்பட்ட பொழப்பய்யா கலப்பை புடிச்சவன் பொழப்பு. களத்துல செத்தவன் கணக்கிருக்கு; நெலத்துல செத்தவன் கணக்கிருக்கா நாட்ல?

கருத்தமாயி அவுக அப்பன் கதையக் கேட்டா, இன்னைக்கும் அந்த ஊரு அழுகும்; உறவு அழுகும்; தெரு அழுகும்; திண்ணை அழுகும்; ஊரக் கடந்து போற காத்து ஒரு ஓரமா ஒக்காந்து அழுதுட்டுத்தான் அடுத்த ஊரு போகும்.

அந்த ஊருல ஒரு பெரிய மனுசன் சீனிச்சாமி - சத்தியவந்தன்; தர்மவான். தானுண்டு தன் வேலை உண்டு; வீடு உண்டு; விவசாயம் உண்டுன்னு ஒதுங்கிப் பொழைக்கற ஆளு. பழி பாவத்துக்குப் பயப்படற உசுரு.

சின்னக் குடும்பம். 'கெணத்துல குதி’ன்னா அதுல தண்ணி இருக்கா, இல்லையான்னு பாக்காமக் கூடக் குதிக்கிற ஒரு பொண்டாட்டி. ரெண்டு பயக. பெரியவன் சுழியன்; வாய்க்கு வெளிய முளைச்ச பல்லு மாதிரி அடங்காத பய. சின்னவன் கருத்தமாயி; அம்மிக்கேத்த குழவி மாதிரி அப்பனுக்கு ஏத்த பய. அருவகமாப் பெறந்த பொண் ணுக்கு 'அத்திப்பூவு’ன்னு பேரு வச்சுப் பொத்திப் பொத்தி வளத்து வந்தாக. மொத மொதலாப் பூவெடுத்து நிக்கும் பாருங்க பூவரசங்குட்டி... அப்படிப் பளபளன்னு நிக்கிறா பதினாலு, பதினஞ்சு வயசுல.

மூன்றரை ஏக்கரும் பதினாலு சென்ட்டு புறம்போக்கும்தான் பூர்வீகச் சொத்து.

காலுக்குப் பொத்துனா தலைக்குப் பத்தல; தலைக்குப் பொத்துனா காலுக்குப் பத்தலங்கற கதையா இழுத்துக்க பறிச்சுக்கன்னு போய்க்கிட்டிருக்கு அவுக பொழப்பு.

அப்பத்தான் -

கடன்ங்கற காத்து கருப்பு ஒண்ணு அடிச்சது சீனிச்சாமி குடும்பத்துல.

கடன்ங்கறது ஒண்ணும் குத்தமில்ல; ஊரு ஒலகத்துல உண்டானது தான். உடம்பு உசுருங்கறதே ஒரு கடன்தானே! போறபோது பூமியிலேயே போட்டுட்டுப் போயிடறமா இல்லையா? கடன் வாங்குறவன் முயற்சி பண்றான்; கடனைத்திருப் பிக் கட்டறான் பாருங்க... அவன் தான் முன்னேர்றான்.

விவசாயி பாவம் தங்கத்துல தார்க்குச்சியும் வைரத்துல கலப்பை யும் வாங்கியா கடன்படுறான்?

வானமும் பூமியும் எப்பப்ப ஏய்க்குதோ, அப்பப்பக் கடன் படுறான்.

ஒரு சித்திரை மாசம் மழை பொத்துக்கிட்டுப் பேஞ்சிருச்சு. 'கண்ணைத் தொறந்திருச்சுரா சாமி’ன்னு கலப்பையப் பூட்டிட்டாரு சீனிச்சாமி. தகப்பனும் மக்களுமா மூணு ஏரு கட்டி உழுது போட்டாக; கடலை நடலாம்னு முடிவு பண்ணுனாக.

விதைக்கடலைக்குக் காசில்ல. 'நான் இருக்கேன் நான் இருக்கேன்’னு கூப்புடுது காதுல ஆடுன பொண்டாட்டி தண்டட்டி; அடகு வச்சுக் கடலை நட்டாக. ஒரே மாசத்துல செம்மண்ணே தெரியாமப் பசபசன்னு பச்சை கட்டி நிக்குது கடலைச் செடி.

புரட்டாசியில ஒரு மழை பேஞ்சாப் பூவெடுத்துரும்; மழையக் காணோம். நாக்கு நனைக்கவே எச்சி ஊறாத கெழடு மாதிரி உசுரு வத்தி நிக்குது கெணறு.

அண்ணாந்து பாத்து அண்ணாந்து பாத்து உருமா விழுந்து போச்சு; மழை ஏச்சிருச்சு. புரட்டாசி கடைசிக்குக் காஞ்சு கருகிப் போச்சு கடலைச் செடி. அரிச்சுப் போட்டா, ஆடு திங்காது. 'குடலைக் காயப்போட்டுருச்சே கடலைச் செடி’ன்னு எதுகை மோனையோட வருத்தப்பட்டதுதான் மிச்சம்.

ஐப்பசியில புடிச்சிருச்சு அடைமழை.

நச்சு மழையாப் பேஞ்சு உள் தண்ணி ஊறிப்போச்சு. கிறங்கி நின்ன கெணறு ஓரஞ்சாரம் ஒழுகுது. சலசலன்னு பேஞ்ச மழையில சலம்பி நிக்குது காடு கரைஎல்லாம்.

நெல்லு நடலாம்னு நோங்கிட்டாரு சீனிச்சாமி. சகட்டு மேனிக்குத் தொழி கலக்கி உழுது பரம்படிச்சிட்டாரு. தசகூலிக்கு என்ன பண்றது? அடகு வச்சாரு அண்டாவ; பத்தல.

''உன் கால் கொலுசக் கழட்டிக் கொடு தாயி! அப்பன் வட்டி போட்டு வளவி தாரேன்.'' அடுத்த நாளே அத்திப்பூவு கால்ல கெடந்தது வட்டிக் கடைக்காரன் கையில கெடந்துச்சு.

நெல்லு நட்டாச்சு.

விடிஞ்சும் விடியாத செங்கருக்கல்ல, சேத்து மணமும் நாத்து மணமும் கலந்து வர்ற காத்து, மூக்குல ஏறி நெஞ்சுல எறங்கி 'இன்னும் ஒண்ணும் பாக்கி இல்லையே’ன்னு இருதயக் கூட்டுல எல்லா எடத்தையும் தடவிக்கொடுத்து, 'இப்ப சந்தோசமா’ன்னு கேட்டுட்டு, உசுர ஒரு ஓரமாக உரசிக்கிட்டு வந்த வழியாத் திரும்பும் பாருங்க - அந்த ஒத்த சொகத்துக்குத்தான இத்த பொழப்ப இறுக்கிப் புடிச்சு வெந்தும் வேகாமக் கெடக்கான் விவசாயி.

அடுத்த கண்டம் ஆரம்பமாயிருச்சு சீனிச்சாமிக்கு, மார்கழி மாசத்துலேயே.

கடலைச் செடியக் காஞ்சு கெடுத்த சாமி, நெல்லுப் பயிரைப் பேஞ்சு கெடுத்திருச்சு.

பூமி தலைகீழாச் சுத்துதா? இல்ல சந்திரசூரியருக்குக் கிறுக்குப் புடிச்சிருச்சா?

மார்கழி மாசத்துல அந்தச் சவட்டு சவட்டிருச்சு மழை.

மழைன்னா மழை நிக்காத மழை; தெக்கு வடக்குத் தெரியாத மழை.

தலையாத்துல தண்ணி விழுந்து, மஞ்ச ளாறு பெருகி, மஞ்சளாறு ஓடிச் செங்குளத்துக் கம்மா பெருகி, அந்தத் தண்ணி ஓடி மத்துவார்குளம் மறுகா போயி, வத்தலக் குண்டு பெரிய கம்மா தள்ளாடி நிக்குது உடையலாமா வேணாமான்னு. பாவம் அதுக்கு முடிவெடுக்க முடியல; மண்டையில மண்ணு.

இந்த லட்சணத்துல என்னாகும் சீனிச்சாமி நட்ட நெல்லு நாத்து? தலை சாஞ்சு ஒடிஞ்சு சடைசடையா மெதக்குது தண்ணியில. 'தண்டழுகல்’ நோய் வந்து நட்ட நாத்தெல் லாம் செத்துப்போச்சு.

மழை அடிச்ச அடியில மண்ணுமேடு சரிஞ்சு ஒரு கமலைக் கல்லு உருவி ஓடி விழுந்துபோச்சு கெணத்துக்குள்ள. குடும்பமே ஒடிஞ்சு ஒடுங்கி நிக்குது; ஓட்டுவீட்டுக் கூரையும் ஒரு ஓரமா அழுகுது.

பழைய இருங்கச் சோளத்தைத் தட்டோட்டுல போட்டு வறுத்து, உரல்ல போட்டு ஒருத்தியா நின்னு உலக்கை குத்திக் கஞ்சி காச்சி ஊத்திக் காப்பாத்துனா ஆத்தாகாரி.

நொக்குப் பெத்து நொந்து நூலாப் போன வனுக்கெல்லாம் இந்த மாதிரி நேரத்துல ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கு: 'ஊருக்குண்டா னது நமக்கு.’

இந்தா இந்தான்னு ஓடி முடிஞ்சுபோச்சு ஒரு வருசம்.

இப்ப மழையில்ல; ஆனா கிணத்துல தண்ணி இருக்கு.

ஊர்ல ஆள் செத்துப்போச்சேன்னு அழுதுகிட்டா இருப்பான் வெட்டியான்? வெட்டியானும் வெவசாயியும் ஒண்ணுதான்; யார் செத்தாலும் மண்ணத் தோண்டித்தான் ஆகணும்.

அடுத்த வெள்ளாமைக்கு ஆசை கொடுக்குது சீனிச்சாமிக்கு. முக்கி முக்கி யோசிச்சுக் கடைசியிலே கடன் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டாரு.

அந்தக் கடன்தான் அவர் பொழப்பையே பொளந்து போட்டுட்டுப் போன கோடாலி.

சுத்தி முத்தி இருக்கிற அஞ்சாறு ஊரு களும் கடன் வாங்குறது கவட்டைக்காலன்கிட்டத்தான்.

அது மூணு தலைமுறையாக் களவாண்டு கஞ்சி குடிச்ச குடும்பம். கருது கசக்கியே கஞ்சி குடிச்சவன் அவங்க தாத்தன். அதனாலேயே அவனுக்குக் 'கோணிச் சாக்கு’ன்னு பேரு. அவங்கப்பன் பேரு மொளக்குச்சி. திருடிட்டு வந்த தேங்காய வீட்டுக்குள்ளயே மொளக்குச்சி நட்டு அதுல உரிச்சு விக்கிறவன். ஊர் மந்தையில கவட்டைக்கால்ல சம்மணம் போட்டு ஒக்காந்துகிட்டுத் தொடை மடிப்புல 'சரக்க’ வச்சு இடுக்கிக்கிட்டு ஆள் பாத்து அரவம் பாத்துக் கஞ்சா வித்தே காசு சேத்தவன் கவட்டைக்காலன்; கறாரான ஆளு.

''யோவ் சீனிச்சாமி, நீ பெரிய மனுசனா இருக்கலாம். ஆனா தொழில் தொழிலா இருக்கணும். பத்திரத்தக் கொண்டா; பணம் வாங்கிட்டுப் போ. வருசத்துக்குப் பதினைஞ்சு மூட்டை நெல்லு வட்டி. அசல்ல கடைசி ரூபா கழியிற வரைக்கும் வட்டி வட்டிதான்; ஒரு மூட்டை நெல்லும் கொறையாது. மூணே வருசத்துல அசல் வந்தாகணும். வரலேன்னு வச்சுக்க, பாதிக் கிரயம் போட்டு நெலத்த எடுத்துக்கிருவேன். இது மட்டும் எழுத்துல வராது. வாய்மொழி மட்டும்தான். சம்மதமா?

''சம்மதம்யா.''

கவட்டைக்காலன்கிட்ட வாங்குன கடன் காசை வச்சு, சரிஞ்சு விழுந்த கெணத்தச் சரிசெஞ்சாரு சீனிச்சாமி. மழையில அழிஞ்ச பூமிய மேடுகோடு பாத்தாரு. வெள்ளச் சோளம் வெதைச்சாரு; அடகு கிடந்த அண்டா-தண்டட்டி-கொலுசு மீட்டுக்கொடுத்தாரு. சாப்பாட்டுக்கு தானியம் வேணுமே, தேவதானப்பட்டிச் சந்தைக்குப் போயி நெல்லுஞ் சோளமும் வாங்கி உள் வீட்டுல அடஞ்சுவச்சாரு.

ஒரு நாள் நெலா வெளிச்சத்துல வீட்டு வெளித் திண்ணையில தட்டாவரங்கா அவிச்சுத் தானும் தின்னுக்கிட்டுப் பிள்ளைகளுக்கும் உரிச்சு உரிச்சுக் கொடுத்துக்கிட்டுப் பெருங்குரலெடுத்து ஒரு பாட்டும் பாடுனாரு.

நம்ம ஊரு விவசாயிக் கடைசியாப் பாட்டுப் படிச்சது எப்பன்னு கேட்டுப் பாருங்க... மேலயும் கீழயும் முழிப்பாக. பல ஆளுக பாடுனதே இல்ல; சில பேரு பாட்டுப் படிச்சுப் பல வருசம் இருக்கும்.

பொழப்பு செத்துக்கிடக்கற எடத்துல, பாட்டு பொழச்சுக்கெடக்கறதில்ல.

சீனிச்சாமி அன்னைக்குப் பாட்டுப் படிச்சாரு.

பிள்ளைகளோடு சேந்து மாடு கன்டு களும் பஞ்சாரத்துக் குள்ளயிருந்து கோழிகுருமானுங்களும் அண்ணாந்து அண்ணாந்து பாத்ததுக.

அதுதான் சீனிச்சாமி கடைசியாப் படிச்ச பாட்டு.

வெள்ளச் சோளம் விதைச்ச நாள்ல இருந்து நாலு வருசம் மழை இல்ல நாட்டுல.

நாலு வருசத்துக்குள்ள பெறந்த பிள்ளைக யாரும் மழைன்னா என்னான்னு கண்ணக் கொண்டு கண்டதில்ல. மழைன்னு சொன்னாலும் புரியாதுக; முழிக்குங்க பாவம்.

வறட்சின்னா கடும் வறட்சி. ஆத்துல ஊத்துல ஈரமில்லன்னாப் பரவாயில்ல - காத்துல ஈரம் இல்ல. காடுகளாத் தெரிஞ்ச மலைகளெல்லாம் மரம் மட்டை காஞ்சதுல மொட்டைப் பாறைகளா நிக்குதுக.

தங்கப் பூண் போட்டு வச்சாலும் வெடிக் காமப் போகுமா வெள்ளரிப் பழம்? வத்திப் போன கம்மா குளம் எல்லாம் வெயில்ல வெடிச்சுக்கிடக்குதுக பாளம்பாளமா.

'பூமி பொறுக்காது சாமி... ஒரு மழையக் கொடுத்துட்டுப் போ’ன்னு வருண பகவானப் பாத்துக் கையெடுத்துக் கும்பிடறதுக்கும் எலை இல்ல எந்த மரத்துலயும். இன்னொரு பத்து வருசப் பஞ்சத்தையும் சமாளிப்பேன்னு பச்சை கட்டி நிக்குது புளிய மரம் ஒண்ணு மட்டும். கப்பைக் கெழங்கும் மக்காச்சோளமும் சனங்களுக்குக் கடவுளாத் தெரியிற காலமாகிப்போச்சு.

உசுரையும் மானத்தையும் மட்டும் கையில புடிச்சு வறுமையில சிக்கிச் சீரழிஞ்சு நிக்குது சீனிச்சாமி குடும்பம்.

நெருக்கடி பண்றான் கவட்டைக்காலன்.

''நாலு வருச வட்டி அறுவது மூட்டை நெல்லாம். ஒரு மூட்டையும் வரலையாம். அப்பிடியே நிக்குதாம் அசலு. கெடு முடிஞ்சு வருசம் ஒண்ணாச்சாம். இதுக்கு மேலயும் வட்டி, அசல் வரலேன்னா, ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிப்போகுமாம். சொல்லிவிட்டானப்பா கவட்டைக்காலன். அவன் கெட்ட சாதிப் பயலப்பா. சீனிச்சாமி! பாம்போட பகை வேணாமப்பா. சொல்லுறதச் சொல்லிப்புட்டேன்; குடுக்கற வழியப் பாரு.''

அஞ்சாறு தடவை கவட்டைக்காலன் ஆளுக படியேறி வந்து திருப்பித் திருப்பி ஒண்ணையே சொல்லவும் சீனிச்சாமியும் ஒரே பதிலைத்தான் சொல்லி அனுப் புனாரு:

''யப்பா... நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன். மழை தண்ணிபேயட்டு மப்பா. கவட்டைக்காலன் கடனைக் குடுத் துட்டு நான் குடிக்கறதுதான் கஞ்சி.''

ஆனா, அதுக்குப் பிறகுதான் நடக்கக் கூடாத அந்தக் கேவலம் நடந்துபோச்சு.

சித்திரை மாசம். குறுக்கு மலையில வெறகெடுத்துக்கிட்டு அந்தி மசங்க அட்டணம் பட்டிக்குள்ள நுழையறாரு சீனிச்சாமி. வீட்டுக்குள்ள வெக்கை தாங்காம ஊர்ச் சனத்துல பாதி ஒக்காந்திருக்கு அரச மரத்தடி மந்தையில. ரெண்டு மூணு வெறும் பயலுகளச் சேத்துக்கிட்டு சீனிச்சாமிய ஊர் மந்தையில வழி மறிக்கிறான் கவட்டைக்காலன்.

''ஏய் சீனிச்சாமி! எப்பத் தரப்போற வட்டிமொதல?''

''உசுர வித்தாச்சும் உன் கடனைக் கொடுத்துருவனப்பா. பஞ்சம் கழியட்டும் பொறு.'' தலைச்சுமை விறகை எறக்காமத் தணிஞ்சு பேசுனாரு சீனிச்சாமி.

''சரி... பஞ்சம் கழியல. என்ன பண்ணுவ?''

''பத்திரம் உன்கிட்டத்தான இருக்கு?''

''பத்திரத்த வச்சுப் பல்லுப்பொடி மடிக்கிறதா? நாக்கு வழிக்கறதா?''

ஊரே வேடிக்கை பாக்குது.

சீனிச்சாமிக்கு உடம்பு கூசுது; உசுரு ஓடுங்குது.

''வேணாமப்பா. வார்த்தைய விட்டுறக் கூடாது; திருப்பி வாங்க முடியாது. பொறு உன் கடனை எப்படியும் குடுத்திர்றேன்.''

''எப்பிடியும்னா... எப்பிடிக் குடுப்ப? உன் மகள ஒரு வாரத்துக்கு உப்பந்தரிசுல* கூட்டிவிட்டுக் குடுத்துருவியா?''

அந்த வார்த்தையில செத்தேபோனாரு சீனிச்சாமி. தலை ஒரு சுத்துச் சுத்தனதுல தவறிருச்சு வெறகுக் கட்டு; கவட்டைக்காலன் கால்ல விழுந்து போச்சு ஒரு கட்டை.

''ஏய் கடங்காரா! வெறகுக் கட்டைப் போட்டு என்னையே கொல்லப் பாக்குறியா?''

சீனிச்சாமி இடுப்புல இருந்த வேட்டிய இழுத்து உருவி, அவரு கழுத்துல போட்டு ஒரு முறுக்கு முறுக்கிட்டான் கவட்டைக் காலன்.

அன்னைக்கின்னு பாத்து உள்கோவணம் வேற கட்டித் தொலைக்கல பாவம்.

''ஏ கவட்டக்காலா! விடப்பா! உன் கடனைக் கட்டாமச் செத்தா போவாரு சீனிச்சாமி? எவன் கழுத்துல எவன் வேட்டி போடறது? மனுசன் மானத்தை வாங்கிட்டியேப்பா.''

ஊர்ப் பெருசுக போட்ட சத்தம் காதுல விழுகுது ஆனா, மூளைக்கு ஏறல சீனிச்சாமிக்கு. பொணம் நடந்து போற மாதிரி போய்ச் சேந்தாரு வீட்டுக்கு.

மந்தையில விழுந்த வெறகுக்கட்டை யாரோ தூக்கிட்டுப் போயி அவர் வீட்டு வெளித் திண்ணையில போட்டுட்டுப் போனாக.

பெரியகுளம் ராவுத்தர் மாந்தோப்புல வேலை பாத்துட்டு, ஒரு சாக்கு மாங்காயோட சைக்கிள் மிதிச்சு வந்து சேந்த கருத்தமாயி காதுல, நடந்த கேவலத்த அரையும் குறையு மாச் சொல்லி வச்சாக ஊராளுக.

ஊர் ஒடுங்கிருச்சு.

மாடு கன்டு கத்தறதும் நாய் ஊளையிடறதும் தவிர ஒரு சத்தமும் இல்ல ஊருக்குள்ள. சீனிச்சாமி வீட்டுக்குள்ள இருக்கலாமா அணையலாமான்னு கண்ணச் சிமிட்டிச் சிமிட்டி முழிக்குது சீமத்தண்ணி வெளக்கு.

புருசன் - பொண்டாட்டி - மக மூணு பேரும் வடிச்ச குறுணைய வடிகஞ்சியில அள்ளிப் போட்டுக் குடிச்சு முடிச்சுட்டாக.

பயக ரெண்டு பேரும் வரட்டும்னு ரெண்டு கும்பாவுல கஞ்சி ஊத்திவச்சிருக்கா ஆத்தா. மூத்தவன் சுழியன் மொதல்ல வந்தான். ''இன்னைக்கும் இந்த இத்துப்போன கஞ்சிதானா?'' எடது கால்ல ஒரு எத்து எத்தவும் சுவர்ல முட்டிக் கஞ்சியக் கொட்டிக் கவுந்து விழுகுது கும்பா.

''இந்த வீட்டுல மனுசன் இருப்பானா?'' வெளியில ஓடி இருட்டுல கரைஞ்சு காணாமப் போனான் சுழியன்.

இளைய பய கருத்தமாயி வந்தான். ''ஆத்தா! இந்த மாங்காய நாளைக்கு மந்தையில வித்துக்க.'' மாங்காச் சாக்கைத் தூக்கி ஒரு ஓரமா வச்சுட்டுக் கஞ்சி குடிக்க ஒக்காந்தவன் கும்பாவ இழுத்தான்.

''ஏலே கருத்தமாயி! கயிற அத்துக்கிட்டு ஓடுதுடா கன்டுக்குட்டி.'' ஒத்த வீட்டு மூளி காக்காத் தொண்டையில கத்தவும் கஞ்சியத் தள்ளிட்டு ஓடுனான் கருத்தமாயி.

அலஞ்சு கண்டுபுடிச்சு, வெளியெல்லாம் விரட்டிக் கயித்தக் கட்டைவிரல் கால்ல மிதிச்சு, கன்டக் கொண்டாந்து கட்டி வச்சிட்டு வீட்டுக்குள்ள நுழையறான்.

வெளித் திண்ணையில் செத்துக்கிடக்கு பூனை.

உள்ள போயிப் பாத்தா -

அப்பன் செத்துக்கெடக்கான் கட்டில்ல.

ஆத்தா சுவத்துல சாஞ்ச மேனிக்குத் தன்னைத் தானே சாத்திவச்சிருக்கா.

கட்டிலுக்குக் கீழே பாயில வெள்ளை வெள்ளையா நுரை தள்ளி வாய 'ஆ’ன்னு தொறந்துகிடக்கா தங்கச்சி.

''யாத்தே... யப்பே...'' கருத்தமாயி கத்துன சத்தத்துல ஒருக்களிச்சுப் படுக்கப் போன ஊரு விசுக்குன்னு எந்திரிச்சு வெளிய வந்து கூடிருச்சு.

மூணு பொணத்தையும் தூக்கி - நிமித்தி - செவக்கி - சிங்காரிச்சுச் சாத்தி வைக்கிற நேரத்துக்குள்ள - கவட்டைக்காலன் கையி வேற - காலு வேற - தல வேறன்னு ஒண் ணொண்ணா வந்து விழுகுது தெருவுல; நாறப்பய உறுப்ப ஒரு நாய்கூட மோந்து பாக்கல.

வெளித் திண்ணையில கிடந்த வெறகுக்கட்டையில மூணு பொணங்களும் வெந்து அடங்கற நேரத்துல, கருத்தமாயப் புடிச்சு வேன்ல ஏத்தி, தெச காணாத ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போய்க்கிட்டிருக்கு தேவ தானப்பட்டி போலீசு.

- மூளும்