Published:Updated:

தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!

தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!
தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!

தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!

ஐ.பி.எல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவது ப்ரோ கபடிதான். கபடியைக் கண்டுபிடித்ததாக தமிழகம் எப்போதுமே பெருமை பட்டுக்கொள்ளும்.  ஆனால் ப்ரோ கபடியில் தமிழகத்துக்கு என ஒரு அணி இல்லை என்ற குறை இருந்தது. இதோ இந்த சீசனில் தமிழகம் சார்பில் 'தமிழ் தலைவாஸ்' ப்ரோ கபடியில் பங்கேற்கிறது. தொழிலதிபர் பிராசாத்துடன் இணைந்து தமிழக அணியை வாங்கியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாக்கூர் செயல்படுகிறார். இந்திய அணியில் சீனியர் பிளேயரான அஜய், கடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஹீரோவாக மிளிர்ந்தார். கபடி அணியில் பொதுவாக 10 முதல் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் விளையாட ஏழு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வகையில் இந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான பிளேயராகத் திகழ்கிறார் ரெய்டர் பிரபஞ்சன். 

வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரபஞ்சன். அவரிடம் பேசினேன். சொந்த ஊர், பின்னணி, கபடி விளையாட வந்த கதை, ப்ரோ கபடிக்குள் நுழைந்தது எப்படி என பல விஷயங்களைப் பகிர்ந்தார்.

"என்னோட சொந்த ஊர் சங்ககிரி, சேலம் மாவட்டம்.  குடும்பத்தில் அப்பா, அம்மா இரண்டு பேருமே லோக்கல் கபடி பிளேயர்கள். அப்பா ஊர் ஊரா போய்  சின்ன சின்ன டோர்னமென்ட்ல விளையாடுவார். அவங்க தமிழ்நாடு அளவிலோ இந்திய அளவிலோ போறதுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. நான் கபடி விளையாட ஆரம்பிச்சதே அப்பாவை பார்த்துத்தான். சின்ன வயசுல அவரோட கபடி விளையாடுற இடத்துக்கு அடிக்கடி போயிட்டு இருப்பேன். எட்டாவது படிக்கிறப்பதான் கபடி விளையாட ஆசை வந்தது. தைப்பொங்கலுக்கு  ஊர்ல நடக்குற கபடி போட்டியில் கலந்துக்கிட்டேன். 

எனக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சது. அதுக்கப்புறம் அப்பா நிறைய விஷயங்கள் சொல்லித்தந்தார். 12-வது முடிச்சதுக்குப்பிறகு நமக்கு  படிப்புலாம் பெரிய அளவில் வராதுன்னு தெரிஞ்சது.  இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) சேர்ந்து அங்கே விளையாடிக்கிட்டே இலவசமாக கல்லூரிப் படிப்பையும் முடிச்சேன். அப்போ நான் சீரியஸா கபடி விளையாட ஆரமிச்சேன். ஊர்ல நானும் கபடி பிளேயரா வளர்ந்தேன். அதே சமயம் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் தகுதிபெற்று அங்க இருந்து இந்திய அணிக்கும் தேர்வானேன். கடந்த உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேம்ப்பில் நானும் இருந்தேன். ஆனா இதுவரைக்கு இந்திய அணிக்காக மேட்ச் ஆடலை.

நடுத்தர குடும்பம்தான் எங்களோடது. அப்பா குமரவேல் கபடி விளையாடிக்கிட்டே வருமானத்துக்காக அப்பப்போ ரியல் எஸ்டேட்டும் பார்த்துட்டு இருந்தார். அம்மா பெயர் உமாநாத். தம்பி சுபாஷ், பாப்பா யாழினினு ஐந்து பேர் கொண்ட குடும்பம். கபடிக்கு மட்டும் நான் வரலைனா இந்நேரம் ஊர்ல வெட்டியாதான் சுத்திட்டு இருந்திருப்பேன். இப்போ கஸ்டம்ஸ்ல வேலை பார்க்கிறேன். ப்ரோ கபடி வாய்ப்பு எங்க குடும்பத்தோட பொருளாதார நிலைமையை உயர்த்தி இருக்கு.

சேலம் தாலையூர் கபடி அணியில் சாமியப்பன்னு ஒரு பிளேயர் இருந்தார். அவர் இந்திய அணிக்காக விளையாடிருக்கிறார். ஊர்ல நடக்குற சின்ன டோர்னமென்ட்ல சாமியப்பன் அணிக்கு எதிரணியில் என்னோட அப்பா விளையாடியிருக்கிறார். சாமியப்பன் சார்தான் என்னை ஒரு கபடி பிளேயரா மாத்தினார். ஆரம்பகட்டங்களில் கை, கால்களில் நிறைய அடிபடும். ஆனா வீட்டுல எனக்கு நல்ல ஆதரவு தந்தாங்க. கபடி விளையாட போகாதன்னு சொல்ல மாட்டாங்க. ‛சீக்கிரமா காயத்தைக் குணப்படுத்திட்டு களத்துக்குப் போ’னு உற்சாகப்படுத்துவங்க. அவர்களின் ஆதரவுதான் எனக்கு பெரும் துணை. 

ப்ரோ கபடியை பொறுத்தவரைக்கு நான் மூணு சீசனில் விளையாடிருக்கேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோ கபடி சீசனில் யூ மும்பா அணிக்காக ஆடினேன். அப்போ களத்தில் இறங்க  பெரிய வாய்ப்புகள் இல்லை. இந்திய அணிக்கு ஆடாமல் ஜுனியராவே நேரடியாக தமிழக அணியில் இருந்து  ப்ரோகபடியில் வந்ததால் எனக்கும் பதற்றம் இருந்தது. அப்போ எனக்கு வயசு 21 -22 தான். கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக ஆடினேன். அங்கே எட்டாவது பிளேயரா இருந்தேன். எல்லா மேட்சுலையும் ஏதாவதொரு தருணத்தில் களத்தில் இறக்கப்பட்டேன். அப்போதுதான் நம்பிக்கை கூடியது. போன வருஷம் நிறைய ரெய்டு பாயின்ட் எடுத்தேன். 

கடந்த ஒரு வருஷத்தில் என்னோட முன்னேற்றத்தைக் கவனிச்சு தமிழ் தலைவாஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தாங்க. தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் சார் தான் இந்திய அணிக்கும் பயிற்சியாளர். இந்திய அணியின் கேம்ப்பில் அவர் என்னோட ஸ்டெப்ஸை மாத்தினார். முன்னாடி ரெய்டு போகும்போது யாரைப் பார்த்தாலும் தொடணும்னு நினைப்பேன். இதனாலே அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டிருந்தேன். இப்போ ரெய்டுக்கு போனா எந்த பிளேயர குறிவைக்கணும், எப்படி அவரை வீழ்த்தணும்கிறதுல கவனம் செலுத்தணும்னு கத்துக்கிட்டேன். ஊர்ல எல்லோரும் நான் கபடி விளையாடுற ஸ்டைலே மாறிடுச்சுனு வாழ்த்துனாங்க. 

வீட்ல நார்மல் சாப்பாடுதான். அப்பா எனக்கு ஸ்பெஷலா பாக்கெட் மணி கொடுத்து முட்டை, சூப், பாதாம்லாம் வெளிய வாங்கி சாப்பிட சொல்வார். இப்போ நல்ல சாப்பாடு, தரமான பயிற்சி, பணம், புகழ் எல்லாம் கிடைக்குது. கடந்த சீசன்களில் விளையாடும்போது மொழி தெரியாம கஷ்டப்பட்டேன். இப்போ தமிழ்நாட்டுக்கு ஆடுறது பெருமையாக இருக்கு. நம்ம டீமுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளரும் கூட. இம்முறை பிளேயிங் செவனில் தொடர்ந்து விளையாடுவேன்னு நம்பிக்கை இருக்கு. வீட்டுக்கும் ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன் "  - என தம்ஸ்  அப் காட்டுகிறார் பிரபஞ்சன்.

படங்கள்: வேங்கடராஜ்.ஜே

அடுத்த கட்டுரைக்கு