எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா...அவரு டைய கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். சாமான்யராகப் பிறந்து வளர்ந்து, தத்துவ ஞானியாக மாறியவர் வேதாத்திரி மகரிஷி. ரகசியங்கள் எதுவும் இல்லா மல் வெளிப்படையாக வாழ்ந்தவர்! விஞ்ஞானரீதியில் ஆன்மிகத்தைக் கண்ட அவரை ஆத்திகர் என்றோ, நாத்திகர் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு 'பேந்தீஸ்ட்’ (Pantheist) என்று வேண்டுமானால் அவரை அழைக்கலாம். Pantheism என்பது அகண்ட கண்டத்தின் ஆச்சர்யங்களில் கடவுளைக் காண்பது. இதற்கு முதலில் பௌதீகத்தைப் புரிந்து கொண்டாக வேண்டும். பள்ளிக்குக்கூடச் செல்லாத அந்த ஞானி விஞ்ஞானத்தை முழு வதும் கற்றுக்கொண்டு தத்துவங்களைத் தீட்டியதுதான் விசித்திர மான ஆச்சர்யம்!
சி.என்.ரமாதேவி, சென்னை-70.
சிரிப்பு, சிந்திப்பு இவற்றில் எதற்கு முதல் இடம் கொடுப்பீர்கள்?
சிந்தனை உறவில்லாத சிரிப்பை சமூகம் எற்றுக்கொள்வது இல்லை. திடீர் என்று சிரியுங்கள். உங்கள் கூட இருக்கும் அத்தனை பேரும் 'ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்பார்கள். அதாவது, 'அடிப்படையில் எந்தச் சிந்தனை உன்னைச் சிரிக்கவைத்தது?’ என்று கேட்கிறார்கள். பதில் சொல்லாவிட்டால் ரொம்பக் கடுப்பாவார்கள். Laughter Club உறுப்பினர்களைப்போல 'நாம் எல்லோரும் காரணமே இல்லாமல் வாய்விட்டுச் சிரிக்கலாமா?’ என்றாவது காரணம் சொல்ல வேண்டும். ஆகவே, சிந்தனை இல்லாமல் நீங்கள் சிரித்துக்கொண்டு இருந்தால், உங்களை... அழைத்துக்கொண்டு போய் விடுவார்கள்!
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் எல்லாம் காதல் ஸீன்களில் வெளுத்து வாங்குவார்கள். ஆனால், 'காதல் மன்னன்’ என்ற பட்டத்தை ஜெமினி கணேசன் மட்டும் எப்படி வாங்கினார்?
படத்தில் எம்.ஜி.ஆரைப் பெண்கள் துரத்துவார்கள். அவர் கூச்சத்தோடு 'இதெல்லாம் தப்பு’ என்பதுபோல் நெளிவார். சிவாஜி 'காதல் ரசம்’ என்பதை எப்படி நுணுக்கமாக முகத்தில் காட்டுவது என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துவார். ஜெமினி மட்டுமே 'ஓஹோ, எந்தன் பேபி’ என்று பாடியவாறு, முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் பெண்ணையும் விடாமல் துரத்தி, காதலுக்காக மன்றாடுவார். பெண்களுக்கு அதுதான் ரொம்பப் பிடிக்கும். ஆகவேதான் அவர் 'காதல் மன்னன்’!
வாசுதேவன், மும்பை.

ராகுல் காந்திக்கு 41 வயது ஆகிவிட்டதே. எப்போது பிரதம மந்திரி ஆவார்?
ராகுல் காந்தி பிரம்மாஸ்திரம்! தற்போதைய பிரதமருக்கு முழுக்க கெட்ட பெயர் ஏற்பட்ட பிறகு, சமயம் பார்த்து அவரைக் கழட்டிவிட்டு, ராகுலுக்கு முடிசூட்டு விழா நடத்தப்படும். கொஞ்சம் வெயிட் பண்ணவும்!
வண்ணை கணேசன், சென்னை-110.
ஒரு கட்சி உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அந்தக் 'கட்சி’க்கு ஒரே ஒரு தலைவர், 'லெட்டர் பேடு’டன் இருக்க வேண்டும். தலைவர் பேச்சிலராக இருப்பதுகூட நல்லது!
தா.கதிரவன், திருவெண்காடு.
கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புத் தரிசனக் கட்டணம் எதற்கு?
இந்தக் கடவுள் மனிதர்களால் கன்ட்ரோல் பண்ணப்படுவதால்!
எம்.ஹரிஹரன், சென்னை-56.

கடவுள் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் எந்த மிருகமாகவும் பிறக்கலாம் என்று சொன்னால், உங்கள் சாய்ஸ்?
சிம்பன்ஸிதான். அதன் 'பர்சனாலிட்டி’க்கு நான் சுலபமாக அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வேன் என்று ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

விஜயலட்சுமி, சென்னை-34.
'மயிர்’ எப்போது அழகாகத் தெரியும்? 'முடி’ எப்போது அசிங்கமாகப்படும்?
1.டி.வி. ஷாம்பு விளம்பரங்களில் காணும்போது.
2. சூடாக டேபிளில் வைக்கப்பட்ட பொங்கலில் தென்படும்போது!