Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 8

பாரதி தம்பி, படம்: எம்.விஜயகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 8

பாரதி தம்பி, படம்: எம்.விஜயகுமார்

Published:Updated:

சி.பி.எஸ்.இ மோகம், ஒரு பேயைப்போல் பெற்றோர்களை ஆட்டுவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் இருந்து, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வெறிகொண்டு சேர்த்தார்கள். இப்போது அங்கிருந்து சி.பி.எஸ்.இ பக்கம் கூட்டம், கூட்டமாகத் தாவுகின்றனர். மிக மூர்க்கமானதாக மாறியிருக்கும் இன்றைய பந்தய வாழ்வில், ஓடி ஜெயிக்க சி.பி.எஸ்.இ-தான் உதவும் என்பது பெற்றோர்களின் கணக்கு. சமச்சீர் கல்வியின் வருகைக்குப் பிறகு, இது இன்னும் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது.

முன்பு அரசுப் பள்ளிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கும் வெவ்வேறு பாடத் திட்டங்கள் இருந்தன. 2011-ல் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி, மேற்கண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வகை  பாடத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது தனியார் பள்ளியில் பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படும் அதே பாடம், அரசுப் பள்ளியில் இலவசமாக நடத்தப்படுகிறது. ஒரே தரமுள்ள பொருளை ஒருவர் அதிக விலை வைத்தும் இன்னொருவர் இலவசமாகவும் விற்றால், நீங்கள் யாரிடம் வாங்குவீர்கள்? இலவசப் பொருளை வாங்குவதுதான் பொதுவாக நடக்கும். ஆனால், சமச்சீர் கல்வி விஷயத்தில் இது தலைகீழ். எல்லோரும் மெட்ரிக் பள்ளியைவிட அதிக செலவு பிடிக்கக்கூடிய சி.பி.எஸ்.சி-யின் பக்கம் ஓடினார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? அரசுப் பள்ளிகளின் மீது உள்ள ஒவ்வாமையினால் இது வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் சி.பி.எஸ்.இ மோகம் தொடங்கிவிட்டதும் ஒரு காரணம்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சூழலைத் துல்லியமாகக் கணித்த தனியார் மெட்ரிக் பள்ளிகள், இதற்கு மேலும் மெட்ரிக் பள்ளிகளாகவே நீடித்தால் மதிப்பிழந்து போவோம் என்பதைப் புரிந்துகொண்டன. ஆகவே, சமச்சீர் கல்வி வரம்புக்குள் வராத சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாறத் தொடங்கின. சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்டதில் இருந்து இதுவரை, தமிழ்நாட்டில் 1,200-க்கும் அதிகமான மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதற்கு தடையில்லா சான்று கேட்டு மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளன. அதில் 40 சதவிகிதப் பள்ளிகளுக்கு மாநில அரசு சான்று வழங்கப்பட்டுவிட்டது. அவர்கள் இப்போது மத்திய கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.

மெட்ரிக் பள்ளியாக இருந்தால், மாநில அரசின் கட்டண நிர்ணய கமிட்டியின் வரம்புக்குள் வந்துவிடும். பெரும்பாலான பள்ளிகள் அந்தக் கட்டணத்தைப் பின்பற்றுவது இல்லை என்றபோதிலும், சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்றால், வரம்புக்குக் கட்டுப்படுவதுபோல போலியாக நடிக்கவேண்டிய சுமைகூட கிடையாது. மத்திய கல்வி வாரியக் கட்டுப்பாடுகளை மட்டும் மதித்தால் போதும். இதனால் 'அதிகக் கட்டணம் கேட்கிறார்கள்’ என்று யாராவது கொடி பிடித்து முழக்கம் எழுப்புவதும் முடியாது. கல்வி உரிமை சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள் ஒதுக்க வேண்டும். இது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றாலும், அதைக் கண்காணிக்க முறையான ஓர் அமைப்பு இல்லை. இப்படி பல சௌகரியங்கள் இருப்பதால், சி.பி.எஸ்.இ பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில் புதுச்சேரி அரசுகூட, அங்குள்ள அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ முறையை அமல்படுத்தப்போவதாகக் கூறியிருக்கிறது.

உண்மையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பில் கடும் குழப்பங்கள் நிலவுகின்றன. 6-ம் வகுப்பில் இருந்துதான் சி.பி.எஸ்.இ கல்விமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அங்கீகாரம் வழங்கும்போது அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில், எந்த முறையில் அந்தப் பள்ளி நடைபெற வேண்டும் என்பதற்கு சி.பி.எஸ்.இ-ல் முறையான வரையறை இல்லை. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில் இருந்தே சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்று பள்ளி நடத்துவதைப் போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கண்காணித்து, கட்டுப்படுத்த ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஒரே ஓர் அலுவலகம்தான் செயல்படுகிறது என்பதால், இந்தப் பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்த மோகம் ஒரு பக்கம் இருக்க... ஐ.ஜி.சி.எஸ்.இ (IGCSE - International General Certificate of Secondary Education), ஐ.பி (IB - International Baccalaureate) போன்ற சர்வதேசக் கல்விமுறையைப் பின்பற்றும் பள்ளிகளும் நம் ஊரில் அதிகரித்து வருகின்றன. ஐ.ஜி.சி.எஸ்.இ என்பது, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கல்விமுறை. ஐ.பி - சுவிட்சர்லாந்து நாட்டின் கல்விமுறை. இதில் ஐ.ஜி.சி.எஸ்.இ முறை சற்று பிரபலம். இந்த முறைப்படி தமிழ்நாட்டில் 40-க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன. பிரமாண்டமான வளாகங்கள், மலைக்கவைக்கும் கட்டணம் என்று மற்ற தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் சளைக்காத இந்தப் பள்ளிகளின் பாடத் திட்டம்தான் அச்சுறுத்துகிறது.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 8

பொதுவாக ஸ்டேட் போர்டு அல்லது சி.பி.எஸ்.இ கல்வி முறையில், வரலாறு என்றால் இந்திய வரலாறு. அதை முதன்மையாகக்கொண்டுதான் மற்ற உலக வரலாறு விரியும். ஆனால், இந்தப் பள்ளிகளில் வரலாறு என்றால், அது ஐரோப்பாவின் வரலாறு. அதுதான் முதன்மை இடம் வகிக்கும். இங்கிலாந்தின் கோணத்தில் இருந்து இந்தியாவைப் பற்றியும் சில பகுதிகள் சொல்லப்பட்டிருக்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ரத்தம் தோய்ந்த வரலாறு கிடையாது. பகத் சிங்கும், திப்புசுல்தானும், கட்டபொம்மனும் யார் என்றே தெரியாது. இந்தப் பள்ளிகளில் புவியியல் என்றால், அது ஐரோப்பாவின் புவியியல்தான். அங்குள்ள நிலவளம், சுற்றுச்சூழல் பற்றிதான் படிக்கிறார்கள்; இந்தியாவைப் பற்றி அல்ல. இந்தப் பள்ளியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கோ, இங்கிலாந்துக்கோ செல்ல வேண்டியிருந்தால் IELTS (International English Language Testing System), TOEFL (Test of English as a Foreign Language)  நுழைவுத்தேர்வுகள் எழுதத் தேவை இல்லையாம். இதை ஒரு சிறப்புத் தகுதியாகச் சொல்கின்றனர். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு, இந்தத் தொலைநோக்குத் திட்டம் பிடித்திருப்பதில் வியப்பு இல்லை.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்தகைய சர்வதேசப் பள்ளிகள் படிப்படியாகக் கீழே இறங்கி பணக்காரர்களுக்கானதாக மாறின. இப்போது இவை கல்வி வர்த்தகத்தின் அங்கமாகிவிட்டன!

- பாடம் படிப்போம்...

சைட் வாங்கினால் ஸீட் ஃப்ரீ!

வேலூரில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் விளம்பரம், நகைக்கடை, ரியல் எஸ்டேட் விளம்பரம் போலவே இருக்கிறது. ஒரு மாணவனைத் தேர்வுகளில் சென்டம் எடுக்கவைக்கும் ஆசிரியருக்கு இரண்டு கிராம் தங்கம் தருகிறார்களாம். அப்படி நிறையப் பேரை சென்டம் எடுக்கவைத்த ஓர் ஆசிரியருக்கு, கார் வாங்கித் தந்திருக்கிறார்களாம். இவற்றை விளம்பரப்படுத்தி பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கச் சொல்லி அழைக்கின்றனர். இவர்களிடம் படித்தால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?

கிழக்கு தாம்பரத்தில் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்று, ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்கிறது. ஆலப்பாக்கத்தில் இவர்களுக்கு ஒரு லே-அவுட் இருக்கிறது. பள்ளியில் அட்மிஷன் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு 'அங்கு இடம் வாங்கினால், இங்கு ஸீட் ஃபிரீ’ என்று 'காம்போ ஆஃபர்’ தருகின்றனர். பெற்றோர்களுக்கு இந்த டீலிங் பிடித்துவிடுவதால், உடனே வேலை முடிந்துவிடுகிறது. இப்படி மாநிலம் முழுக்க கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில் கல்விக் கொள்ளைகள் நடக்கின்றன!

தங்கமே தங்கம்!

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல, பெற்றோர்களின் மோகத்தைப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் அடகுக்கடைக்காரர்கள். புகழ்பெற்ற நகை அடகு நிறுவனங்கள், 'கல்விக் கடன் மேளா’ நடத்துகின்றன. 'உங்கள் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லையா? கவலையைவிடுங்கள். உங்களிடம் உள்ள தங்க நகைகளை எடுத்து வாருங்கள். நாங்கள் கடன் தருகிறோம்’ என்று அழைக்கிறார்கள். ஏதோ நம் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காகவே வந்தவர்கள்போல பாசாங்கு செய்யும் இவர்கள், எரியும் வீட்டில் பிடுங்கிய வரையில் லாபம் பார்க்கின்றனர். மதுரையில் உள்ள சில தனியார் பள்ளிகளின் வாசல்களில், இந்த அடகுக்கடையின் ஊழியர்கள் துண்டு நோட்டீஸ் விநியோகிக்கின்றனர். தனியார் கல்வி மோகத்தால் லாபம் பார்ப்பது கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்ல, இவர்களும்தான்!