Published:Updated:

வெறும் விளையாட்டு அல்ல!

Vikatan Correspondent
வெறும் விளையாட்டு அல்ல!

''என்னது...? ஆண்ட்ராய்டு போன் வெச்சுக்கிட்டு 'கேண்டி கிரஷ்’ விளையாடினதில்லையா?’ என்பதும் நம்மை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிற வார்த்தைகள் ஆகிடுச்சு. 'மவுலிவாக்கத்துல 11 மாடிக் கட்டடம் விழுந்துடுச்சாம்ல?’ என்றவன் அடுத்த நொடியே கேண்டி கிரஷ்ஷில் 'கலர்ஸ் பால்’ வந்ததைப் பார்த்து 'செமடா’ என்று உற்சாகமாகும் சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 'யூத்’களின் உலகங்களில் ஒன்றாக இணைந்துவிட்ட 'கேண்டி கிரஷ்’ விஷேச கிளிஷேக்கள் இவை!

'துரத்தும் மிருகத்திடம் இருந்து தப்பிக்கணும்னா, தடைகளைத் தாண்டி ஓடிக்கிட்டே இருக்கணும். தப்பு பண்ணாலும் மன்னிப்பு ஒருமுறைதான்’ இது டெம்பிள் ரன்னர் ஃபார்முலா. ஆனா, ஒவ்வொரு முறையும் ஐந்து வாய்ப்பு கொடுத்து, அது முடிந்ததும் 'அழுதுக்கிட்டே இரு’னு யதார்த்த வாழ்க்கையைச் சொல்றதுதான் 'கேண்டி கிரஷ்’னு அந்த விளையாட்டைப் பெருமையா புரமோட் பண்ணிக்கிட்டு இருந்தார் ஒருத்தர்.

லண்டனில் இயங்கிவரும் 'கிங் டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தால் 2012-ல் ஃபேஸ்புக், ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கேண்டி கிரஷ்’ஷை மாதம்தோறும் குறைந்தபட்சம் 46 மில்லியன் மக்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய ரசிகர்கள் 'கேண்டி கிரஷ்’ஷ§க்கு அளித்துள்ள ரேட்டிங் 4.4/5.

வெறும் விளையாட்டு அல்ல!

பேஸ்புக்கில் அதிகம் 'ரெக்வெஸ்ட்’ அனுப்பப்படும் விளையாட்டாக மாறியிருப்பது சாட்சாத். 'கேண்டி கிரஷ்’ மட்டும்தான். அவங்கவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க மறந்தாலும் 'கேண்டி கிரஷ்’ ரெக்வெஸ்ட் அனுப்புறதுக்கு மட்டும் மறக்கவே மாட்டேங்கிறாங்க. 'அடிப்படை லெவல் தாண்டி 'டிக்கெட் ரவுண்ட்’டில் இருக்கும் என்னிடம் ஐந்து லைஃப் கேட்பதுபோல...’னு மொக்கையாகக் கவிதை எழுதும் ரசிகர்களை அதிகம் உருவாக்கிவிட்டிருக்கிறது கேண்டி கிரஷ்.

நம் ஊரில்தான் இப்படி என்றில்லை... இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது கேண்டி கிரஷ் ஃபேஷன். நெயில் பாலிஷ், டி-ஷர்ட், 'கேண்டி’களாலாலேயே உருவாக்கப்பட்ட பேன்ட்கள் என ஒரு பக்கமும், 'கேண்டி கிரஷ்’ கேக்குகள், மிட்டாய்கள், கீ செயின்கள் என இன்னொரு பக்கமும் பரவிக்கொண்டிருக்க, 'கேண்டி கிரஷ்’ஷ§க்காகவே தயாரிக்கப்பட்ட ரிங்டோன்கள் இப்போது பெரும்பாலான மொபைல்களில் ஒலிக்கிறது.

சரி.. இதெல்லாம் இருக்கட்டும்.

'டபுள் கேண்டி, கலர்ஸ் பால், ட்வின் கலர்ஸ் பால்’னு சீரியஸா விளையாடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கும், ஐந்து லைஃப் முடிஞ்சு 'இன்னும் 2.30 மணி நேரம் வெயிட் பண்ணணுமே?’னு அழுதுட்டு இருக்கிறவங்களுக்கும் ஒரு ஹேப்பி நியூஸ். லைஃப் முடிஞ்சிடுச்சேனு இடிஞ்சுபோய் உட்காராம, உங்க மொபைல்ல இருக்கிற 'டைம் அண்ட் டேட்’ செட்டிங்ல வருஷத்தை மட்டும் மாத்திவிட்டு, திரும்ப கேண்டி கிரஷ்ஷ§க்கு வந்தீங்கனா, ஐந்து லைஃப் ஃபுல்லா இருக்கும். அந்த வாய்ப்பிலேயும் ஜெயிக்க முடியாம, 'இன்னொரு ஐந்து லைஃப் உடனே வேணும்’னு தோணுச்சுனாலும் பரவாயில்லை. மறுபடியும் ஒரு வருஷத்தைக் கூட்டிக்கிட்டா போதும். அடுத்த லைஃப் ரெடி. 'அட இது தெரியாம நான் வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி விளையாடிட்டு இருக்கேனே?’னு சிரிக்கிறீங்கதானே?

- கே.ஜி.மணிகண்டன்